ஸ்பாட் லைட்-கன்னியாகுமரி காங்.வேட்பாளர் விஜய்வசந்த் பேட்டிஅப்பா விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வேன்!

‘‘அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறியவர் என் அப்பா வசந்தகுமார். இந்திய அளவில் முக்கியமான தொழில் முனைவோர்களில் ஒருவராக அவர் உயர்ந்தபிறகும், தான் ஏறி வந்த படிக்கட்டையோ, தன் கடந்த காலத்தையோ அப்பா மறக்கவில்லை. எளிமையான வாழ்க்கையையே இறுதி வரை வாழ்ந்தார்.அதுமட்டுமல்ல... மக்களும் தன்னைப் போல் உழைப்பால் உயர வேண்டும் என்று அப்பா நினைத்தார். அதற்காகவே தன் வாழ்நாளைச் செலவிட்டார்.

தன்னால்முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர் அரசியலுக்கு வந்தார். அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்டங்களையும் தன் தொகுதிக்குக் கொண்டு வந்து, அடித்தட்டு மக்கள் அனைவரும் அதனால் பலனடையும்படி செய்தார்.

அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளத்தின் மகன் நான். மக்கள் சேவையில் தன் வாழ்நாளைக் கழித்தவரின் வளர்ப்பு நான். அதனால்தான் அப்பாவைப் போலவே நானும் ஆடம்பரமாக வாழாமல் எளிமையாக வாழ்கிறேன். அப்பாவைப் போலவே தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்வேன். அரசாங்கம் அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று பாடுபடுவேன்...’’ உறுதியுடன் சொல்கிறார் விஜய்குமார் என்கிற விஜய் வசந்த்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் விஜய் வசந்த், தொகுதியை மேம்படுத்த தன் தந்தை மேற்கொண்ட முயற்சிகளே தனக்கு வெற்றியைத் தேடித் தரும் என்கிறார்.‘‘அந்தளவுக்கு என் அப்பா, மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்தார். கன்னியாகுமரி மக்களின் பிரச்னைகள் அனைத்தும் அவருக்குத் தெரியும். அவற்றையெல்லாம் தீர்ப்பதற்காகவே அப்பா அரசியலுக்கு வந்தார். அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தொகுதி மக்களுக்கு சேதாரமின்றி கொண்டுபோய்ச் சேர்த்தார்.

அப்பாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அரசியலுக்கு வந்திருக்கும் நான், அப்பாவைப் போலவே கன்னியாகுமரி தொகுதி முன்னேறவும், தொகுதி மக்களின் வாழ்க்கை மேம்படவும் தொடர்ந்து பாடுபடுவேன். அப்பா விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வேன்...’’ என்று சொல்லும் விஜய் வசந்த், இப்போது கன்னியாகுமரி மக்களை அச்சுறுத்தி வரும் சரக்குப் பெட்டக துறைமுகத் திட்டத்தை இப்பகுதிக்குக் கொண்டுவர விடமாட்டோம் என்கிறார்.
‘‘சரக்குப் பெட்டக துறைமுகத் திட்டம் கன்னியாகுமரியில் வராது. தூத்துக்குடியில் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் மோடி ஏற்பாடு செய்துள்ளார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால், இதற்கு என்ன ஆதாரம் என்று சொல்லவோ காண்பிக்கவோ மறுக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி, தூத்துக்குடி துறைமுகக் கழகம் சார்பில் இதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதில் பசுமைத் துறைமுகம் கன்னியாகுமரி அருகே வரும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.இது குமரி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டம். இதற்கு எதிராக நிச்சயம் குரல் கொடுப்பேன். சரக்குப் பெட்டக துறைமுகத் திட்டம் கன்னியாகுமரியில் வராது.

தொகுதி மக்கள் சார்பாக அரசிடம் இதுகுறித்து பேசுவேன். குமரி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக என் அப்பாவைப் போலவே அல்லும் பகலும் உழைப்பேன்.எப்படி என் அப்பாவை மக்கள் நம்பினார்களோ அப்படி அவரது மகனான என்னையும் நம்புகிறார்கள். மக்களின் நம்பிக்கையை கண்டிப்பாகக் காப்பாற்றுவேன். நான் வேறு, என் தொகுதி மக்கள் வேறு அல்ல. மக்களில் ஒருவன்தான் நான்...’’ என்கிறார் விஜய் வசந்த்.