சிறுகதை - அகிலா
கலிபோர்னியா மாகாணத்தில், உலகின் ‘டெக் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் சன்னிவேல் நகரம். 22 மாடிக் கட்டடத்தின் 13வது மாடியில் உள்ள தனது அறையிலிருந்து, எஸ்.என்.சாரி என்று பரவலாக அறியப்பட்ட வீடியோ ஸ்ரீரங்கம் நரசிம்மாச்சாரி வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் ஐஐடி மற்றும் ஐஐஎம்-மில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவரான சாரி, அமெரிக்காவுக்கு வந்து கூகுளில் பணியாற்றி, படிப்படியாக அதன் தலைமைப் பதவி வரை உயர்ந்தவர்.

இப்போது, அவர் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். ஆசியாவின் நான்கு நகரங்களில் உள்ள தனது குழுவினருடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார். கேட்டுக் கொண்டிருக்கும் குழு உறுப்பினர்கள், புத்திசாலிகளில் முதன்மையானவர்கள்.“இந்தக் கண்டுபிடிப்பில் நாம் வெற்றி பெற்று, தயாரிப்பை அறிமுகப்படுத்தினால், டெக் உலகின் முதலிடம் நமக்கே.
ஒரே ஆண்டில் நம் நிறுவனம் பல மில்லியன் டாலர்களை ஈட்டிவிடும். அடுத்த சில ஆண்டுகளில், இந்தத் தயாரிப்பு உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும்...” என்று உற்சாகமாகத் தொடங்கி, தனது திட்டங்கள், குழு செய்யவேண்டிய பணிகள், முடிக்க வேண்டிய காலக்கெடு ஆகியவற்றை விளக்கி, தன் நீண்ட பிரசன்டேஷனை முடிக்கிறார். கணினி நிபுணர்களுக்கே உரிய தொழில்நுட்பச் சொற்களால் நிரம்பியிருந்தத அவரது ஒரு மணி நேரப் பேச்சு நமக்குப் புரியாது என்பது மட்டுமல்ல, கதைக்கு அது அவசியமும் இல்லை.
அவர் சொன்ன விஷயம் இதுதான். இன்றைய உலகில், குறிப்பாக பணிபுரியும் இளம் தாய்மார்கள், தங்கள் சிறு குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிட முடியாமல் தவிக்கின்றனர்.
அவர்களுக்கு உதவ, ஒரு ரோபோவை உருவாக்கப்போகிறோம்... இந்த ரோபோ, தாயின் கட்டளைகளின்படி குழந்தையின் அன்றாடத் தேவைகளைக் கவனிக்க வேண்டும். குழந்தையின் இயல்பு மற்றும் அறிவுத் திறனுக்கு ஏற்ப, அன்புடன் பழக வேண்டும்.
அது வெறும் இயந்திரமாக இருக்கக் கூடாது; ஒரு மனிதக் குழந்தையாகவே இருக்க வேண்டும். முதற்கட்டமாக மூன்று முதல் ஐந்து வயது குழந்தைகளைப் பராமரிக்கும் ரோபோக்கள் உருவாக்கப்படும். பின்னர், மற்ற வயதுகளுக்கான மாதிரிகள்.
இதற்காக, பல நாடுகளில் தாய்மார்கள் மற்றும் குழந்தை உளவியலாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.“இது மிகப் பெரிய சவால். ஆனால், கூகுளின் பல முக்கியத் தயாரிப்புகளை உருவாக்கிய நீங்கள், இதை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். உடனே பணிகளைத் தொடங்குங்கள்!” என்று உற்சாகப்படுத்தினார். இந்தியாவில் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குஹன். அவரது டீம் மேட், அவரது மனைவி சுபா. இருவரும் கணினித் துறையில் செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள்.
குஹன், தனது தலைவரின் கனவுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் மூழ்கிவிட்டார்.
நீண்ட வீடியோ அழைப்புகள், ஆசியாவின் பிற நாடுகளில் உள்ள நண்பர்களுடனான விவாதங்கள், வாரமொருமுறை தலைவருடனான ரிவ்யூ கூட்டங்கள் என இரவு பகல் காலண்டர், கடிகாரம் எல்லாம் மறந்து உழைத்தார். சுபா அவருக்கு குறிப்புகள் எடுத்துக் கொடுத்து உதவினார்.
ஒரு வருட கடின உழைப்புக்குப் பின் அவர்கள் பிரசவித்த ‘குழந்தை’ - ‘அகிலா’ என்ற ஆறு வயது பெண் குழந்தை வடிவில் ஒரு ரோபோ.
அகிலாவின் தோற்றம், உயிருள்ள குழந்தையைப் போலவே இருந்தது. பளபளக்கும் கருவிழிகள், மென்மையான கன்னங்கள், புன்னகையில் மலரும் குழிவிழுந்த கன்னங்கள்... எல்லாமே மனிதக் குழந்தையைப் போலிருந்தன. அதன் நடை, உடல் அசைவுகள் இயல்பாக அமைக்கப்பட்டிருந்ததால் அது ஒரு ரோபோ என்று பார்ப்பவர்களால் எளிதில் கண்டறிய முடியாது.
அகிலாவின் நோக்கம் எளிது. ஆனால், புரட்சிகரமானது. பரபரப்பான பெற்றோருக்கு உதவியாக, மூன்று வயது குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை அகிலா ஏற்கும். உணவு ஊட்டுதல், விளையாடுதல், கதை சொல்லுதல், பாட்டு பாடுதல், தூங்க வைத்தல் - இவை அனைத்தையும் செய்ய அகிலா புரோகிராம் செய்யப்பட்டிருந்தாள்.
குழந்தைகள் பேசும் எந்த மொழியையும், அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் திறன் அவளுக்கு இருந்தது. அகிலாவை உருவாக்கிய குஹனின் கனவு, அவளை ஒரு குடும்பத்தின் நம்பகமான உறுப்பினராக மாற்றுவதே.அகிலா, அன்புடன் குழந்தைகளைப் பேணும் ‘அக்கா’வாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தாள்.
அடுத்த ஒரு மாதத்தில், அவளது திறன்களைச் சோதிக்க, சிறு வயது குழந்தை உள்ள நம்பகமான குடும்பத்தில் அவளை அறிமுகப்படுத்தி தினசரி அறிக்கைகளைப் பெறுவது என்று டீம் முடிவு செய்தது.அகிலாவின் செயல்பாட்டைச் சோதிக்க, குஹனும் சுபாவும் தங்கள் மூன்று வயது மகள் நிவியுடன் அகிலாவை விட முடிவு செய்தனர்.
“நிவி, இது அகிலா. என் நண்பரின் மகள். சில நாட்கள் உன்னுடன் இருப்பாள்...” என்று கூறி, அகிலாவை நிவியின் உலகில் அறிமுகப்படுத்தினர். குஹனும் சுபாவும் அகிலாவின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, தினசரி தங்கள் ஐ பேட்டில் குறிப்புகள் எடுத்தனர்.
அகிலாவின் பதில்களும், நிவியின் புன்னகையும் அவர்களுக்கு நம்பிக்கை அளித்தன.நாட்கள் செல்லச் செல்ல, நிவியும் அகிலாவும் பிரிக்க முடியாத நண்பர்களாகினர். அகிலா, நிவிக்கு பிடித்த கதைகளைச் சொன்னாள். அவளது பொம்மைகளுடன் விளையாடினாள். சரியான நேரத்தில் பால், உணவு கொடுத்தாள். டாய்லட் போவது, தனியே குளித்தல் போன்றவற்றை நிவிக்கு கற்றுக் கொடுத்தாள். தினமும் ஒரு புதுக் கதை சொல்லி, மெல்லிய குரலில் தாலாட்டுப் பாடி, நிவியைத் தூங்க வைத்தாள்.
நிவி, அகிலாவை ‘அக்கா’ என்று அழைத்து, அவளை உயிருள்ளவளாகவே கருதினாள். குஹனின் மனம் பெருமிதத்தில் நிறைந்தது.
அவரது படைப்பு வெற்றி பெற்றுவிட்டதாக அவர் உறுதியாக நம்பினார்.ஒரு நாள் காலை, நிவி, அகிலாவுக்கு கட்டளைகள் கொடுத்துக் கொண்டிருந்தாள். “இன்று நான்தான் அகிலா அக்கா, நீ நிவி. நான் சொல்வதை எல்லாம் நீ கேட்க வேண்டும்!” என்று சொல்லி, தான் உட்காரும் நாற்காலியில் அகிலாவை உட்கார வைத்தாள். “அக்கா, சாக்லேட் பால் குடி! ரொம்ப டேஸ்ட்டா இருக்கு!” என்று சொல்லி, தான் பால் குடிக்கும் கிண்ணத்தை அகிலாவின் உதடுகளுக்கு அருகில் கொண்டு சென்றாள். அகிலா, புரோகிராம் செய்யப்பட்டபடி, பாலைக் ‘குடிப்பது’ போல நடித்தாள். ஆனால், பால் உள்ளே செல்லாமல், அவளது முகத்தில் வழிந்து, தரையில் சிந்தியது. நிவிக்கு ஒரே ஆச்சரியம். அவள் தன் சிறிய கைகளைத் தட்டி, சிரித்தபடி கத்தினாள், “அப்பா! நான் கண்டுபிடிச்சுட்டேன்! அகிலா ஒரு பொண்ணு இல்லை! அது ஒரு பொம்மை!”
குஹனின் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது. மெதுவாக நிவியை நோக்கி நடந்தார். ஆனால், அவரது மனம் குழம்பியிருந்தது. இரண்டாண்டு உழைப்பு, நவீன தொழில்நுட்பம், உயிருள்ள குழந்தையைப் போல வடிவமைக்கப்பட்ட நேர்த்தி... இவை அனைத்தையும் ஒரு மூன்று வயது குழந்தை ஒரு நொடியில் கண்டறிந்துவிட்டதா? அவர் மனம் தோல்வியை உணர்ந்தது.
சுபாவும் அதிர்ந்து போனார். மனிதர்களின் இயற்கையான நுண்ணறிவுதான் எவ்வளவு மகத்தானது? தங்கள் படைப்பை ஒரு குழந்தை இப்படி ஒரு காரியம் செய்து சோதிக்கும் என்று எதிர்பார்க்காததுதான் தங்கள் தோல்விக்குக் காரணம் என்று செயற்கை நுண்ணறிவு பொறியாளரின் மனம் எண்ணினாலும், “என் குழந்தை புத்திசாலி!” என்று அந்தத் தாயின் உள்ளம் மகிழ்ந்தது.அடுத்து, நிவி என்ன செய்யப் போகிறாள் என்று கவனித்துக் கொண்டிருந்த குஹனையும் சுபாவையும் ஓர் ஆச்சரியம் தாக்கியது.
நிவி, அகிலாவின் கையைப் பிடித்து, “அக்கா, நீ ரொம்ப ஸ்வீட்டான பொம்மை!” என்று சொல்லி, மீண்டும் விளையாடத் தொடங்கினாள். குஹன், அந்தக் காட்சியைப் பார்த்தபடி நின்றார். அகிலா ஒரு ரோபோவாக இருக்கலாம். ஆனால், நிவியின் இதயத்தில் அவள் அன்பான தோழியாகவே இருக்கிறாள்.
அந்த நிமிடத்தில், குஹனுக்கு ஒரு புதிய உண்மை புரிந்தது. தொழில்நுட்பத்தின் வெற்றி, அதன் முழுமையில் இல்லை; அது மனிதர்களின் உணர்வுகளைத் தொடுவதில் இருக்கிறது. இப்போது, அவரது இலக்கு மாறியிருந்தது. அகிலாவை இன்னும் உயிரோட்டமாக மாற்றுவது மட்டுமல்ல, அவளை மனிதர்களுக்கு மேலும் நெருக்கமான தோழியாக, குழந்தைகள் சொல்லுவதையும் கேட்டு சமாளிக்கும்படி மாற்றுவதே அவரது புதிய கனவு.
- ரமணன்
|