இவர் சினிமா நடிகர் மட்டுமல்ல... தேசிய நாடக நடிகர்!



நாடகக்கலைஞர், எழுத்தாளர், நடிகர், திரைப்படத் திறனாய்வாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமை பேராசிரியர் மு.ராமசுவாமி. நவீன நாடகச் செயல்பாடுகளை முன்னெடுத்தவர்களில் ஒருவர். 
1990களில் நடிகர் நாசரின் இயக்கத்தில் வெளிவந்த ‘தேவதை’ படத்தில் தொடங்கியது இவரின் சினிமா பயணம். பின்னர், ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘சண்டக்கோழி’, ‘களவாணி, ‘கிடாரி’, ‘கே.டி. என்கிற கருப்புத்துரை’ உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய நடிப்பின் வழியே முத்திரை பதித்தார்.

இதையெல்லாம்விட 2000களின் ஆரம்பத்தில், ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ என்ற நாடகத்தில் அவர் பெரியாராக நடித்தது அத்தனை கவனம் பெற்ற ஒன்று. சமீபத்தில் ‘ஃப்ரீடம்’, ‘மாயக்கூத்து’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளவர், ஒரு படப்பிடிப்பிற்காக சென்னை வந்திருந்தார். ‘‘1978ம் ஆண்டு மதுரையில் ‘நிஜ நாடக இயக்கம்’ ஆரம்பிச்சோம். 
அதிலிருந்து என் நாடகப் பயணம் தொடங்கியது. 47 ஆண்டுகளாக இந்தப் பயணமும் போகுது. இதுக்கிடையில் சினிமாவில் வாய்ப்புகள் வந்து முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள்  பண்ணினேன். இன்னும் நாடகங்கள் இயக்கணும்னு ஆசையிருக்கு...’’ புன்னகைக்கும் பேராசிரியர் மு.ராமசுவாமி, பிறந்தது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரத்தில்.

‘‘என் அப்பா வணிகவரித் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். நான் பாளையங்கோட்டை, எட்டயபுரம், சென்னைனு வெவ்வேறு ஊர்கள்ல உள்ள பள்ளிகள்ல படிச்சேன். பியூசி சென்னை லயோலா கல்லூரியில் முடிச்சேன். பிறகு மறுபடியும் பாளையங்கோட்டைக்கு வந்து தூய சவேரியார் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியல் படிச்சேன். இதுக்கிடையில் தமிழ் மீது மிகுந்த பற்று வந்தது. அதனால், எம்.ஏ தமிழ் முடிச்சேன்.

எனக்கு இலக்குவனாரிடம் தமிழ் படிக்கணும்னு ஆசை. அவர் நாகர்கோவில், இந்து கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக இருந்தார். ஆனா, நான் டிகிரி முடிக்கிற சமயம் அவர் கல்லூரியில் இருந்து விலகிட்டார். 

அதனால் பாளையங்கோட்டையில் தூய சவேரியார் கல்லூரியிலேயே தமிழ் படிச்சனே். அப்புறம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துல தோல்பாவைக் கூத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். பின்பு, 1975ம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்துல நாட்டுப்புறவியல் துறை விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தேன். 

இந்நேரம்தான்மதுரையில், ‘நிஜ நாடக இயக்கம்’ ஆரம்பிச்சோம். 1982ம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துல இணைப் பேராசிரியராக என்னை நியமிச்சாங்க. அப்படியாக எனக்கு தில்லிக்குப் போறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. இதன்மூலம் தேசிய நாடகப் பள்ளி, சங்கீத நாடக அகடமி போன்ற நாடகம் தொடர்பான அமைப்புகளுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திட்டு வரச்சொன்னாங்க.

அந்த சமயம் சங்கீத நாடக அகடமியில் இருந்த பாற்காபா என்பவரைச் சந்திச்சேன். அவர் ‘இளம் நாடக இயக்குனர்களை ஊக்குவிக்கக் கூடிய ஒரு திட்டம் இருக்கு’னு சொன்னார். ‘இந்தத் திட்டத்துல தமிழ்நாட்டுல இருந்து யாரும் பங்கெடுக்கல. நாங்களும் யாருக்கும் பங்கெடுத்துக்க சொல்ல வாய்ப்பு அமையல’னு சொன்னார்.

‘உங்களுக்கு நல்ல நாடக அமைப்புகள் தெரியுமா’னு கேட்டார். ‘நாங்க நிஜ நாடக இயக்கம் ஆரம்பிச்சு செயல்பட்டுட்டு வர்றோம்’னு சொன்னேன். அந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க மூணு விண்ணப்பங்கள் வாங்கிட்டு வந்தேன்.
ஒரு விண்ணப்பத்தை கூத்துப்பட்டறைக்குக் கொடுத்தேன்.

 மற்றொன்றை பத்திரிகையாளர் ஞாநியின் நாடக கம்பெனியான பரீக்‌ஷா குழுவிற்கு வழங்கினேன். மூன்றாவது விண்ணப்பம் எனக்கானது. இதில் அவங்க ரெண்டு பேரும் சரியான நேரத்துல விண்ணப்பிக்கல.

நான் விண்ணப்பிச்சதும் கிடைச்சுது. அதுல கிரேக்க நாடகமான சோபோகிள்ஸ் எழுதின ‘ஆன்டிகோன்’ (Antigone) என்ற நாடகத்தை என்னுடைய இணையர் செண்பகம் மொழிபெயர்த்து ‘துர்கிரா அவலம்’னு எழுதினாங்க. நான் அந்த நாடகத்த அரங்கேற்றினேன். அது பெங்களூருல பெரிய அளவில பேசப்பட்டது. 

இந்த நாடகம் தில்லிக்கு போனது. இந்திய அளவுல இந்த நாடகத்தை சிலர் பார்த்துட்டு ‘யார் இவர்’னு கேட்டாங்க. எனக்கு நல்ல அடையாளம் கிடைச்சது. தொடர்ந்து நாடகங்கள் இயக்கி வந்தேன்...’’ என்கிறவர், சினிமாவிற்குள் வந்ததை தற்செயலானது என்கிறார்.   

‘‘எனக்கு திரைப்படத் துறைக்குள் போகணும்னு எண்ணமே கிடையாது. எனக்கும் சினிமாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சினிமாவுல எனக்கு யாரையும் தெரியவும் தெரியாது. செய்யாறு அருகே புரிசை கிராமத்துல ‘ஸ்பார்ட்டகஸ்’ என்ற நாடகத்தை சாதாரண மண் தரையில் உருண்டு புரண்டு நடத்தினோம். இந்த நாடகத்தை இளையபாரதி என்ற போட்டோகிராபர் பார்த்துட்டு இருந்தார்.அவர் இதனை வித்தியாசமான நாடகம்னு ‘சுபமங்களா’ இதழில் எழுதினார்.

பிறகு இளையபாரதி என்னை சந்திச்சப்ப, ‘‘தென் பாண்டிச் சிங்கம்’ படத்துல ஒரு ரோல் இருக்கு. நீங்க பண்ணணும்’னு சொன்னார். நான் அப்ப ஒண்ணும் சொல்லல.கொஞ்சநாள் கழிச்சு என் வீட்டுக்கு இளைய பாரதியும், ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தியும் வந்தாங்க. ‘அவரை நடிக்கச் சொல்லுங்க’னு என் மனைவியிடம் கேட்டுட்டு போனாங்க. 

அந்த சமயத்துல வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை தஞ்சாவூர்ல பணி. சனி, ஞாயிறு மட்டும்தான் மதுரைக்கு வருவேன். அதனால், ‘எனக்கு நேரமில்ல, நடிக்க மாட்டேன்’னு என் மனைவியிடம் சொன்னேன்.

என்னுடைய மனைவி, ‘வீடு தேடிவந்து கேக்குறாங்க, நீங்க மாட்டேன்னு சொல்லக்கூடாது’னு கடிஞ்சு பேசினாங்க. சரினு சம்மதிச்சேன்.

அப்ப, ‘தென்பாண்டிச் சிங்கத்’துல முக்கியமான கதாபாத்திரத்தை நடிகர் நாசர் பண்ணினார். அவருக்கு எதிர் கதாபாத்திரத்துல நான் நடிச்சேன். அப்ப அவருடன் எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டுச்சு. அந்நேரம் நாசர், ‘நீங்க நடிக்க கூப்பிட்டா வருவீங்களா’னு கேட்டார். ‘என்னால முடியும்னு நீங்க நம்புனீங்கன்னா நான் வரேன்’னு சொன்னேன். அந்நேரம் நாசர் ‘தேவதை’னு ஒரு படம் எடுத்துக்கிட்டு இருந்தார். இதன் ஷூட்டிங் செஞ்சியில் நடந்தது. நான்  தஞ்சாவூருல இருந்து போய் நடிச்சுக் கொடுத்தேன்.

அதுல நான் பேசுன டயலாக் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதைப் பார்த்துட்டு பலர் கூப்பிட்டாங்க. நான் இப்பவரை யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்ல. என்னுடைய நடிப்புதான் எனக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கு. நான் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு முழுநேரமாக நடிக்கிறேன்...’’ என்கிறவர், பெரியார் நாடகம் குறித்து பேசினார்.  
‘‘2000ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களை டிவியில் பேட்டி எடுத்தாங்க. அவரிடம், ‘நீங்க நினைச்சு நடிக்க முடியாம போன கதாபாத்திரம் எது’னு கேட்டாங்க. அதுக்கு அவர், ‘ஐயா பெரியார் மாதிரி நடிக்கணும்னு நெனச்சேன். முடியல’னு வருத்தப்பட்டார்.

அது எனக்குள்ள பெரிய பாதிப்பை ஏற்படுத்தினது. அந்தச் சமயத்துல பெரியார் மேல் அதிகமான விமர்சனங்களும் வந்துட்டு இருந்தது. அதனால் பெரியாரைப் படிக்க ஆரம்பிச்சேன். 

அவர் பத்தி படிக்கும்போதுதான் அது ஒரு வேற உலகமாக இருந்தது. அதனால், பெரியார் நாடகத்தைப் பண்ணலாம்னு யோசனை வந்துச்சு.என் மனைவி செண்பகம் 1998ல் மார்ச் 14ம் தேதி காலமானாங்க. அன்னைக்குதான் கார்ல் மார்க்ஸின் நினைவுநாளும்கூட. அதனால், ஒவ்வொரு வருஷமும் அவங்க நினைவாக உதவிகள் பண்றது, புத்தகங்கள் வெளியிடறதுனு இருந்தேன்.

அப்படியாக 2003ம் ஆண்டு என் மனைவியின் ஐந்தாவது நினைவு நாள்ல மதுரையில், ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகத்தை நடத்தினேன். இந்த நாடகத்துக்கு பெரிய ஆதரவும் கிடைச்சது. அதேநேரம், கடுமையான எதிர்ப்பும் வந்தது.

ஏன்னா அதுல பெரியாருக்கு சிவப்பு சட்டையை மாட்டியிருந்தேன். கம்யூனிஸ்ட்கள் பெரியார் வேறமாதிரி காட்டுறாங்கனு எதிர்த்தாங்க. பிறகு சென்னை ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துல ஆகஸ்ட் 8ம் தேதி நாடகம் நடத்தலாம்னு முடிவு பண்ணினாங்க.

அப்ப, ‘கலகக்காரர் தோழர் பெரியார்’னு வைக்காதீங்க. கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பாங்க. அதனால், ‘பெரியார்’னு வையுங்கனு சொன்னாங்க. இதனை ஒருநாள் மட்டும் விளம்பரப்படுத்தி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்துல ஏற்பாடு செஞ்சாங்க.கட்டுக்கடங்காத கூட்டம். தரையில் உட்கார்ந்துதான் எல்லோரும் நாடகம் பார்த்தாங்க. 

அந்த சமயத்துல டிக்கெட் 50 ரூபாய்னு நினைக்கிறேன். அப்ப டெஸ்மா சட்டம் அமலாக்கப்பட்ட நேரம். அந்தச் சட்டத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு நிதி திரட்ட இந்த நாடகத்தைப் பயன்படுத்தினாங்க. தமிழ்நாடு முழுக்க அவங்கதான் இந்த நாடகத்தை எடுத்திட்டு போனாங்க.

அதுக்குப் பிறகு ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ வந்தாங்க. அவங்களும் இந்த நாடகத்தை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு போனாங்க. அடுத்து ‘கலை இலக்கிய பெருமன்றமும்’ வெவ்வேறு இடங்கள்ல நாடகத்தை நடத்தினாங்க. 

நல்ல வரவேற்பும் கிடைச்சது. இதுவரை ‘துர்கிரா அவலம்’, ‘ஸ்பார்ட்டகஸ்’, ‘ரௌத்திரம் பழகு’, ‘கலிலியோ கலீலி’, ‘கட்டுண்ட பிரமோதியஸ்’, ‘நந்தன் கதை’, ‘தோழர்கள்’, ‘ஏகன் - அநேகன்’, ‘கங்கையின் மைந்தன்’, ‘பண்டிதர் மூவரும் மாண்டதொரு சிங்கமும்’, ‘படுகாவலன்’, ‘சாப விமோச்சனம்’, ‘கலகக்காரர் தோழர் பெரியார்’, ‘பொன்னியின் செல்வன்’னு 32 நாடகங்கள் செய்திருக்கேன்...’’ என நெகிழ்ந்தபடி மகிழ்ச்சியுடன் சொல்லும் பேராசிரியர் மு.ராமசுவாமிக்கு, கார்ல் மார்க்ஸ், ஜென்னி மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரைப் பற்றி ஒரு நாடகம் அரங்கேற்ற வேண்டும் என்பதே ஆசை!

ஆர்.சந்திரசேகர்