Must Watch



சர்சாமீன்

‘ஜியோ ஹாட்ஸ்டாரி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்திப்படம், ‘சர்சாமீன்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. மிகுந்த தேசபக்தியுடன் இருக்கும் இராணுவ அதிகாரி, விஜய் மேனன். ஜம்மு காஷ்மீர் பகுதியில் அவருக்கு வேலை. புதிது புதிதாக விஜய்க்கு நெருக்கடிகள் உருவாகின்றன. அவரது மகனைக் கடத்திவிடுகின்றனர். மகனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தால், கொன்றுவிடுவோம் என்று அவரை எச்சரிக்கை செய்கின்றனர்.

மகனை யார் கடத்தியிருப்பார்கள் என்று தீவிர விசாரணையில் இறங்கும்போதுதான், தனது மகனுக்கும் தீவிரவாத கூட்டத்துக்கும் தொடர்பு இருப்பதை விஜய் கண்டுபிடிக்கிறார்.
ஆனால், மகனைக் காணவில்லை என்று விஜய்யின் மனைவி உடைந்துபோகிறாள். ஒரு பக்கம் தேசம் சார்ந்த பொறுப்பு, இன்னொரு பக்கம் மனைவிக்காக மகனைக் கண்டுபிடிக்க வேண்டிய சூழல் என இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொள்கிறார் விஜய். 

மகனைக் காப்பாற்ற அம்மாவே களத்தில் இறங்க, சூடுபிடிக்கிறது திரைக்கதை.வழக்கமான இராணுவ மசாலா கதையையே கொஞ்சம் சென்டிமென்ட் கலந்து கொடுத்திருக்கின்றனர். இராணுவக் கதைகளை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு உகந்த படம் இது. இதன் இயக்குநர் கயோஸ் இரானி.

ஜுனா ஃபர்னிச்சர்

‘அமேசான் ப்ரைமி’ல்  பார்வைகளை அள்ளி வரும் மராத்தி படம், ‘ஜுனா ஃபர்னிச்சர்’. வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கும் முதியவர், கோவிந்த் பதக். அவருடைய மகன் அபய், புகழ்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறார். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்கிறார். 

மாநிலத்தின் முதலமைச்சருக்கு முதன்மை செயலாளராகப் பதவு உயர்வு பெறுகிறார் அபய். தந்தை கோவிந்தின் நலனுக்காக, அவர் பெயரில் முதலீடு செய்து, பணப் பரிவர்த்தனைகளையும் பார்த்துக்கொள்கிறார் அபய்.

இருந்தாலும் கோவிந்துக்கு அடிக்கடி பணம் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதனால் அடிக்கடி பணம் கேட்டு மகனைத் தொந்தரவு செய்கிறார். இந்நிலையில் ஓர் அவசரத் தேவைக்காக கோவிந்துக்குப் பணம் தேவை. 

ஒரு கொண்டாட்டத்தில் அபய் இருந்ததால், கோவிந்தால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மகனின் புறக்கணிப்பால் உடைந்துபோகும் கோவிந்த் என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை. சமகாலத்தில் ரத்த உறவுகளாலே புறக்கணிப்புக்கு உள்ளாகும் முதியவர்களின் நிலையைக் கோடிட்டுக் காட்டுகிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேக்கர்.  

நோவோகைன்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலை அள்ளிய ஆங்கிலப்படம், ‘நோவோகைன்’. இப்போது  இந்தப் படம் ‘அமேசான் ஃப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. எவ்வளவு அடிப்பட்டாலும், காயம் ஏற்பட்டாலும் வலியே தெரியாத ஒரு கோளாறால் பாதிக்கப்பட்டவர் நாதன் கைன். பெரிதாக யாருடனும், பேசிப் பழகாதவர். 

ஒரு நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை செய்து வருகிறார் நாதன். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் ஷெர்ரி என்ற பெண்ணுக்கு நாதன் மீது ஈர்ப்பு உண்டாகிறது. தன்னுடைய உடல்நிலை காரணமாக காதலை நிராகரிக்கிறார் நாதன். அத்துடன் அவருக்கு பெண்களுடன் எப்படி பேசுவது, பழகுவது என்று தெரியாது.

கிறிஸ்துமஸ் மாலையில் சாண்டாகிளாஸ் போல வேடமிட்ட ஒரு கொள்ளைக்கூட்டம் நாதனின் நிறுவனத்துக்குள் கொள்ளையடிக்க நுழைகிறது. நாதனின் பாஸைக் கொன்றுவிட்டு, ஷெர்ரியைப் பணயக்கைதியாக கொண்டு செல்கிறது. 

இப்படியான இக்கட்டான சூழலில் நாதன் என்ன செய்கிறார் என்பதை ஆக்‌ஷனும், காமெடியும் கலந்து சொல்லியிருக்கிறது திரைக்கதை.வித்தியாசமான கதையம்சத்துடன் ஒரு படத்தைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு நல்ல சாய்ஸ், இந்தப் படம்.  டான் பெர்க்  மற்றும் ராபர்ட் ஆல்சன் சேர்ந்து படத்தை இயக்கியிருக்கின்றனர்.

ஹேப்பி கில்மோர் 2

இருபத்தியொன்பது வருடங்களுக்கு முன்பு வெளியாகி, வசூலை அள்ளிய ஆங்கிலப்படம், ‘ஹேப்பி கில்மோர்’. இதன் இரண்டாம் பாகம் இது. சமீபத்தில் நேரடியாக ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது இந்தப்படம். கோல்ஃப் விளையாட்டில் தலைசிறந்த ஆட்டக்காரர், ஹேப்பி கில்மோர். 

1996ம் வருடம் தனது முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்கிறார். அன்றிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று கோல்ஃபில் அசைக்க முடியாத வீரராகத் திகழ்கின்றார்.

ஹேப்பிக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். மனைவி வர்ஜீனியா, குழந்தைகள், கோல்ஃப் விளையாட்டு என்று ஹேப்யின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக வர்ஜீனியாவின் மரணத்துக்குக் காரணமாகிறார் ஹேப்பி. தன்னால்தான் வர்ஜீனியா இறந்துவிட்டாள் என்ற குற்றவுணர்வுக்கு ஆளாகி, கோல்ஃப் விளையாட்டிலிருந்து முற்றிலும் விலகிவிடுகிறார். 

தவிர, மதுவுக்கு அடிமையாகிறார். ஹேப்பியின் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. இதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார்? ஹேப்பி குழந்தைகள் என்னவாகின்றனர் என்பதே மீதிக்கதை. சுவாரஸ்யமாக செல்லும் இப்படத்தின் இயக்குநர் கெய்ல் நேவாசெக்.

தொகுப்பு: த.சக்திவேல்