மெரினாவுக்கு ‘நீலக் கொடி’ கிடைக்குமா?



‘ஈக்கோ டூரிஸ்ம்’ என்ற கான்சப்ட் உலகம் முழுதும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இடங்களை மக்கள் தேடித்தேடிப் போய்ப்பார்க்கிறார்கள்.
இது சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதோடு, ஒரு நாட்டின் பொருளாதார வளத்துக்கும் உதவுகிறது. அப்படி சுற்றுச்சூழலுக்கு பலவிதங்களில் நன்மை பயக்கும் கடற்கரைகளுக்கு ‘நீலக் கொடி’ (Blue Flag) எனும் பட்டத்தைக் கொடுத்து கெளரவிக்கிறது டென்மார்க் நாட்டில் உள்ள ஒரு தன்னார்வ  நிறுவனம்.

இந்தியாவில் இப்படி நீலக் கொடி விருது பெற்ற 13 கடற்கரைகளில் சென்னை கோவளம் பீச்சும் இடம்பெற்றிருப்பது சர்வநிச்சயமாக தமிழகத்துக்குப் பெருமைதான்.

2021ம் ஆண்டு கோவளம் இந்த விருதை வாங்கியபின் தமிழகத்தின் சென்னை மெரினா உட்பட மேலும் பல பீச்சுகள் இந்த விருதுக்காக கட்டமைப்புகளை மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

அதாவது ‘யூசர் ஃப்ரெண்ட்லி’ என்பதுபோல் மக்கள் ஃப்ரெண்ட்லியாக கடற்கரைகள் இருக்கவும், எவ்வித முகச்சுளிப்பும் இன்றி அவர்கள் பீச்சுகளில் நடமாடவும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதையே கட்டமைப்பு என்கிறார்கள்.

ஆனால், மற்ற கடற்கரைகளைவிட மெரினா கடற்கரை லட்சக்கணக்கான மக்கள் கூடுமிடம். எனவே இந்த விருதை மெரினா கடற்கரையால் பெற முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

அது என்ன நீலக் கொடி? டென்மார்க் நாட்டிலுள்ள ஒரு தொண்டு நிறுவனம் உலகில் உள்ள கடற்கரைகளை சுமார் 33 பிரிவுகளில் தரம் பார்த்து அந்தக் கடற்கரைகளுக்கு இந்த நீலக் கொடி விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அந்த 33 பிரிவுகளுமே சுற்றுச்சூழல் தொடர்பானவை.

உதாரணமாக ஒரு சிறப்பான கடற்கரை என்றால் அந்தக் கடற்கரை சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டும், சுகாதாரத்தைப் பேணவேண்டும், குளிக்க நன்னீர் வேண்டும், குப்பைகளை அகற்ற தனிப்பகுதி வேண்டும், மக்களின் பாதுகாப்பு வேண்டும், தூய்மை பகுதியாக இருக்கவேண்டும், நீச்சல் அடிப்பதற்கான வசதிகள் இருக்கவேண்டும் போன்ற தகுதிகளை இந்த நிறுவனம் வரையறுத்திருக்கிறது. 

இந்த அடிப்படையில்தான் 2021ம் ஆண்டு அந்த நிறுவனம் சென்னை கோவளம் பீச்சுக்கும் அந்த நீலக் கொடி விருதை வழங்கியது. இந்தியாவில் இருக்கும் சுமார் 13 நீலக் கொடி பீச்சுகளில் கோவளமும் சேர்ந்தது முன்பே குறிப்பிட்டுள்ளதுபோல் தமிழகத்துக்கு கிடைத்த பெருமைதான்.

இந்தியாவில் பாண்டிச்சேரியில் உள்ள ஈடன், குஜராத்தில் உள்ள சிவ்ராஜ்பூர், தியூவிலுள்ள கோக்லா, கர்நாடகாவில் உள்ள காசர்கோடு மற்றும் டுபித்திரி, கேரளாவில் உள்ள கப்பாட் மற்றும் சால், ஆந்திராவில் உள்ள ருஷிகொண்டா, ஒடிசாவில் உள்ள கோல்டன், அந்தமானில் உள்ள ராதாநகர் பீச், லட்சத்தீவில் உள்ள மினிகொய் துண்டி மற்றும் கர்மத் பீச்சுகள் இந்த நீலக் கொடி சான்றிதழைப் பெற்று முன்னிலையில் இருக்கின்றன.

கோவளம் இந்த விருதை 2021ல் பெற்றதன் மூலம் தமிழகத்துக்கு கிடைத்த முதல் விருதாக இது இருக்கிறது. மேலும் தமிழகத்தில் சில பீச்சுகளை இந்த விருதுக்காக தயார்படுத்தும் வேலையிலும் தமிழக அரசு முனைப்புகாட்டி வருகிறது.

சென்னை மெரினா பீச், ராமநாதபுரத்தில் உள்ள அரியமான் பீச், நாகையில் உள்ள காமேஸ்வரம், கடலூரில் உள்ள சில்வர் பீச்சுகளையும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி உருவாக்க தமிழக அரசு முயன்றுவருகிறது. இன்னும் 3 மாதத்தில் இந்த வேலைகள் முடிந்து இந்த விருதுக்காக பரிசீல னைக்குஅனுப்பி வைக்கப்படும் என்றும் செய்திகள் சொல்கின்றன.

இத்தோடு சென்னை நீலாங்கரை பீச், நாகையின் நெய்தல்நகர் பீச், விழுப்புரம் மரக்காணம் பீச் மற்றும் தூக்குக்குடியின் காயல்பட்டினம் பீச்சுகளும் விரைவில் இந்த விருதுக்காக சுற்றுச்சூழலக்கு தகுதியானபடி மாற்றும் திட்டத்திலும் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

விருது கிடைக்கிறதோ இல்லையோ... பீச்சுக்குப் போனால் நிம்மதியாக காத்து வாங்க கடற்கரைகளை அமைக்கவேண்டும் என்பதே மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக இருக்கும் என நிச்சயம் சொல்லலாம்.

டி.ரஞ்சித்