ஆன்லைன் காதல் மோசடியில் டாப் 5 நாடுகள்!



‘‘நான் தில்லி வந்துட்டேன். அமெரிக்க டாலர் நிறைய கொண்டு வந்துட்டேன். கஸ்டம்ஸ் ஃபைன் கேட்கறாங்க. இந்தில வேற நிறைய கேள்வி கேட்கறாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல...’’

‘‘நீ பயப்படாத... இந்தியா வந்துட்ட இல்லையா? இனி நான் பார்த்துக்கறேன். இனி நீ என் சொத்து...’’அங்கே போன் கைமாறுகிறது. 
‘‘சார்... இவங்க பல மில்லியன் டாலர்கள் கொண்டு வந்திருக்காங்க. இவ்வளவு பணம் அனுமதிக்க முடியாது. ரூ.3 லட்சம் அபராதம் கட்ட வேண்டி இருக்கும்...’’‘‘சார்! அவங்க எனக்கு மனைவி ஆகப் போறவங்க. என்னைப் பார்க்கதான் இந்தியா வந்திருக்காங்க. அந்த அபராதத் தொகையை நான் கட்டுறேன்.  என்கிட்ட ரூ.3 லட்சம் இல்ல. ஏதாவது சலுகை தர முடியுமா?

பல கட்ட போன் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ரூ.1.70 லட்சம் அபராதம் என ஒப்பந்தம் முடிவானது.‘‘எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க. தில்லி விமான நிலையம் வாங்க...’’ பெண் குரல் இன்னும் தழுதழுக்கிறது. 

அங்கே இங்கே கடனை வாங்கி, கையில் இருந்த நகைகளை எல்லாம் விற்று அல்லது அடமானம் வைத்து ரூ.1.70 லட்சம் அக்கவுண்டில் போடப்பட்டுவிட்டது. தகவல் தெரிவிக்க அழைத்தால் போன் சுவிட்ச் ஆஃப். அந்தப் பெண்ணின் ஆன்லைன் தொடர்புகள் அனைத்தும் பிளாக்.

இப்படி ஆன்லைனில் வெளியூரில் இருப்பதாக சொல்லி, கொடுமைக்கார கணவன், காமக்கொடூரன் பிடியில் சிக்கி இருக்கிறேன்... என்னைக் காப்பாற்றி கூட்டிச் செல், வேலைக்கு வந்த இடத்தில் முதலாளியிடம் மாட்டிக் கொண்டேன்... என பல நெகிழ்ச்சியான கதைகளைச் சொல்லி பொறுமையாகப் பேசிப் பழகி பல மாதங்கள் நம்ப வைத்து நேரம் பார்த்து கிடைப்பதை எல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்ட பல்லாயிரம் வழக்குகள் சைபர் கிரைம் துறையில் நிலுவையில் உள்ளன.

எந்த மோசடிக்கும் தக்க ஆதாரம் இல்லை, வங்கி கணக்கை பின்தொடர்ந்து சென்றால் கூட அங்கே இருக்கும் நபரோ வேறொருவர். அத்தனையும் போலி. இது இங்கே மட்டுமல்ல... உலகம் முழுக்கவே இந்த டிஜிட்டல் காதல் மோசடிக்கு பலர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் டாப் 5 ஃப்ராட் நாடுகள் இவைதான்!   

அமெரிக்கா

2024ம் ஆண்டு அமெரிக்காவில் மட்டும் 59,000 பேர் ஆன்லைனில் காதல் மோசடியில் சிக்கி, மொத்தம் 697.3 மில்லியன் டாலர் இழந்துள்ளனர். அதாவது இந்திய மதிப்பில்
ரூ. 60,000 கோடி!இது உலகளவில் டிஜிட்டல் காதல் மோசடிக்கு அதிகப் பண இழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்காவை மாற்றியுள்ளது.

அமெரிக்காவின் எஃப்.பி.ஐ., இணைய குற்றச்செயல் புகார் மையம் கொடுத்திருக்கும் கணக்கீட்டின்படி கடந்த ஆண்டு மட்டும் 18,000க்கும் மேற்பட்ட காதல் மற்றும் நம்பிக்கையை பயன்படுத்தும் மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒரு நபருக்கு சராசரியாக $2,000 (சுமார் ரூ.1.7 லட்சம்) இழப்பு ஏற்படுகிறது. ஆனால், இதுவும் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட புள்ளி விபரங்கள்.
ஏனெனில் இந்த காதல் மற்றும் கள்ளக்காதல் விவகாரங்களில் பலரும் சுயமதிப்பு, குடும்ப மரியாதை காரணமாக புகார் கொடுக்க முன்வருவதில்லை. அல்லது உண்மையான பண இழப்பை சொல்வதில்லை.

ஐரோப்பா

குறிப்பாக பிரிட்டன் இரண்டாவது இடத்தில் உள்ளது; ஆண்டுக்கு £106 மில்லியனை இழக்கிறது. 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023ம் ஆண்டு இதுபோன்ற புகார்கள் 22% அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலியாஆண்டுக்கு $33 மில்லியனுக்கும் அதிகமான பண இழப்பீட்டில் உலகின் மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. கடந்தாண்டு 3,400க்கும் மேற்பட்ட டிஜிட்டல் காதல் மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சராசரியாக $10,000 இழந்திருக்கிறார்கள். இது உலகளாவிய சராசரி இழப்பை விட மிக அதிகம். ஆஸ்திரேலியாவில் பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும் மோசடிகள்  கிரிப்டோகரன்சி அல்லது ஃபாரெக்ஸ் (வெளிநாட்டு நாணய) முதலீடுகளில் பணம் செலுத்தும் வழியில் இழக்கப்படுகிறது.

கனடா

நான்காம் இடத்தில் கனடா. கனடாவில் பெரும்பாலும் ராயல் குடும்பத்தில் அல்லது பணக்கார வயது முதிர்ந்தவர்களிடம் இந்தக் காதல் பெயரால் நடக்கும் பணத்திருட்டு நிகழ்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் காதல் மோசடிகளால் சுமார் $25 மில்லியன் பண இழப்புகள் ஏற்படுகின்றன என்று கனடா மோசடித் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் இவர்கள் டேட்டிங் செயலிகள் மற்றும் போலி Linkdin ப்ரொபைல்கள் மூலம் பணத்தை அதிகம் இழக்கிறார்கள்.

ஜெர்மனி

ஆண்டுக்கு 20 மில்லியன் டாலர்கள் பண மோசடி ஜெர்மனியில் நிகழ்கிறது. ஐந்தாம் இடத்தில் இருக்கும் ஜெர்மனியில் பொதுவாக ஓரிரு மாதங்களில் பழகி பணம் பறிப்பது கிடையாது. பொறுமையாக ஓரிரு வருடங்கள் உறவைப் பலப்படுத்தி அவர்களை மிகப்பெரிய நம்பிக்கை வளையத்துக்குள் கொண்டு வந்து ஒருவரின் மொத்த வாழ்நாள் சேமிப்பையும் திருடும் அளவிற்கு திட்டமிடுகிறார்கள். இங்கே மோசடிக்காரர்கள் குறி வைப்பது விவாகரத்தான வயதான முதியவர்கள், தனிமையின் துயரத்தில் இருக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட பணக்காரர்களைத்தான்.

சரி... ஃப்ராடு செய்பவர்களின் இணையதள ப்ரொபைல் எப்படி இருக்கும் ?

இவர்களின் புகைப்படங்கள் பெரும்பாலும் எங்கிருந்தோ திருடப்பட்ட அடையாளங்களுடன் அல்லது மாடல்கள் அல்லது AI உருவாக்கிய கதாபாத்திரங்களாக இருக்கின்றன.
ஆண்களில் பெரும்பாலும் மருத்துவர்கள், ஃபிட்னஸ் மாடல்கள், ராணுவ அதிகாரிகளின் புகைப்படங்களை, வீடியோக்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

பணம் பறிக்க என்னென்ன அவசர உதவிகள் சொல்லப்படுகின்றன..?

இதுவரை பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அதிகம் சொல்லப்பட்ட அவசர உதவி காரணங்கள் இவைதான்:அம்மாவுக்கு / அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, இதற்கு மேல் என் துணையுடன் நான் இருக்க முடியாது, அவன் / அவள் என்னை கொடுமைப்படுத்துகிறாள்/ ன், என்னிடம் பணம் டாலர்களில் உள்ளன அல்லது அவர்கள் இருப்பதாக சொல்லப்படும் நாட்டின் பணத்தின் பெயரைச் சொல்லி அதில்தான் என்னிடம் பணம் உள்ளது எனவும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வருகிறேன், உனது நாட்டில் மாற்றிக்கொள்ளலாம்...

பெண்கள் பொதுவாக என் கணவன் காமக்கொடூரனாக என்னை தினமும் பாலியல் பலாத்காரம் செய்கிறான், கல்லூரி மாணவியாக படிப்பதற்கும் சாப்பிடுவதற்குமே கஷ்டப்படுகிறேன்... இப்படியான காரணங்கள்தான் அதிகம் சொல்லப்படுகின்றன. 

இவர்கள் வாழும் நாட்டிலிருந்து இவர்கள் ஏமாற்றப் போகும் நபர் வேறு ஒரு நாட்டில் இருக்கிறார் எனில் அவரை சந்திக்க தாங்கள் வருவதை நிரூபிக்கும் விதமாக விமான பயணச்சீட்டு உட்பட தேவையானதை எல்லாம் எடுத்து அதை போனில் படம் எடுத்து அனுப்புவார்கள்.

இப்படியான விமான டிக்கெட்டுகளை உடனே ரத்து செய்தால் எவ்வித இழப்பும்  இல்லாமல் புக் செய்த பணம் திரும்பி வந்துவிடும் என்பதுதான் ஏமாற்றுபவர்களின் புத்திசாலித்தனம்!
எல்லாமே குரல் அழைப்பாக மட்டுமே இருக்கும், face swap மூலம் சிலர் வீடியோ கால் வசதிகளையும் பயன்படுத்துவதுண்டு. ஒரு சிலர் பெரிய மாஃபியா கும்பலாக செயல்பட்டு கூலிக்காக மாடல்களை வைத்து பணத்தை பறிக்கிறார்கள்.

ஆண்களே ஏமாளிகள்

உலக அளவிலே இப்போதும் வருமானம் ஈட்டும் பொறுப்பு ஆண்கள் வசம்தான் இருக்கிறது. ஒருவேளை மனைவி சம்பாதித்தால் கூட அதை பராமரிப்பவர்கள் ஆண்கள்தான்.
எனவே காதலின் பெயரால் அதிகம் பணத்தை இழப்பதும் ஆண்கள்தான். ‘‘எங்களிடம் புகார் தெரிவிக்கும் பலரும் 50- 50 நம்பிக்கையின் அடிப்படையில்தான் பணத்தைக் கொடுத்ததாக தெரிவிக்கின்றனர். அதாவது நாம் ஏமாறப்போகிறோம் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில்தான் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள்.

50% சந்தேகம் இருந்தும் கூட எப்படி இவர்கள் ஏமாறுகிறார்கள்... எப்படி இவர்களை மோசடிக்காரர்கள் மூளைச்சலவை செய்கிறார்கள் என்பது புரியாத புதிர்...’’ என்கிறார்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள சைபர் க்ரைம் துறையைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவுக்கு எந்த இடம்?

8வது இடம். ஆனால், புகார்கள் முழுமையாக வந்தால் முதல் ஐந்து இடங்களில் நிச்சயம் இந்தியா இடம்பெறும் என எச்சரிக்கிறது இந்திய சைபர் குற்றப்பிரிவு. ஏனெனில் ஆசிய நாடுகளில் பெரும்பாலும் குடும்ப கவுரவம், சுயமரியாதை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இவற்றை இழக்க பயப்படுவதால் நடந்த ஏமாற்றத்தை வெளியில் சொல்வதற்கு தயங்குகிறார்கள்.

ஏனெனில், மேலே குறிப்பிட்ட ஐந்து நாடுகளைக் காட்டிலும் ஆசிய நாடுகளில் அதிகம் டிஜிட்டல் காதல் மோசடி நடப்பதாக தெரிவிக்கிறது இன்னொரு ஆதாரம். இந்த மோசடியில் குறிப்பாக ஏன் இந்தியர்கள் டாப் மூன்றில் வருவார்கள் என்பதற்கு AI ஆய்வுகள் கொடுக்கும் புதிய ஆதாரம் போலி சமூக வலைதள பக்கங்களின் உருவாக்கம்தான். 

சமூக வலைதளங்கள், டேட்டிங் செயலிகளில் அதிகம் போலிக் கணக்குகளை உருவாக்கும் நாடுகளின் சராசரி விகிதத்தை கணக்கிட்டால் இந்தியா அதில் மூன்றாம் இடம் வருகிறது. எனில் ஏமாறும் சதவீதமும் இங்கே அதிகமாக இருக்கலாம் என்கிறது சைபர் குற்றப் பிரிவு.

இதில் வீட்டில் இருக்கும் 40+ வயது பெண்கள்/விவாகரத்தாகி நல்ல வேலையில் தனியாக இருக்கும் பெண்கள் அதிகம் என்பதை அலட்சியப்படுத்த முடியாது. ஆண்களில் அதிகம் 35 - 60 வயதினர் ஏமாறுகிறார்கள் எனில் மோசடிக்காரர்கள் சுமாராக 17 - 30 வயது ஆண்கள்; 17 - 40 வயது பெண்களாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

மோசடிகள் அதிகரிக்க முதன்மையான காரணம் உடல் தேவை. அத்துடன் இணைந்து யாராவது நம்மிடம் அக்கறை காட்டுவது போல் அன்பாக பேசினால் மனித மனம் மிகச் சுலபமாக மயங்கிவிடும். இதுதான் மோசடி கும்பல்களின் டிரம்ப் கார்ட்.

இவர்கள் ஒரே நேரத்தில் மூன்றுக்கும் மேலான நபர்களை தொடர்பு கொள்வார்கள். பேசும் நபரில் யாரேனும் ஒருவர் சொதப்பினால் கூட அல்லது சந்தேகத்துடன் ஒரு வார்த்தை கேட்டால் கூட அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட நபருடனான அத்தனை ஆன்லைன் தொடர்புகளையும் துண்டித்து விடுவார்கள்.அதேபோல் மூன்று ப்ராஜெக்ட்டுகள் எனில் அதில் ஒருவரைத்தான் முதன்மை டார்கெட்டாக வைத்திருப்பார்கள். அந்த முதல் ஏமாளி நிச்சயம் பணக்காரராகத்தான் இருப்பார்.

ஆன்லைனிலேயே இவர்களைக் கண்டுபிடிக்கலாம் Video Search, Image Search உள்ளிட்ட எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. உங்களிடம் பேசும் நபரின் புகைப்படங்களை சாதாரணமாக கூகுள் தேடலில் இமேஜ் தேடல் கொடுத்தாலே புகைப்படத்திற்கு சொந்தக்காரரின் உண்மையான சமூக வலைதள கணக்குகள் கிடைத்துவிடும். 

பணம் குறித்து பேசத் துவங்கினால்... உடனே வீடியோ கால் செய்யச் சொல்லுங்கள். விமான டிக்கெட் புக்கிங் அனுப்பினால் மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பயணச் சீட்டை கேளுங்கள். வங்கிக் கணக்குகளை வாங்கி ஆராயுங்கள். மொத்தத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ஷாலினி நியூட்டன்