War Game Apps மூலம் தீவிரவாதிகள் CHAT!
ஆம் என்கிறது தகவல்.ஆன்லைன் வார் கேமிங் செயலிகள் மூலம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கேமிங் செயலிகள்தான் இப்போது தீவிரவாதிகளுக்கு தகவல் தொடர்பு சார்ந்து முக்கியமானதாக அமைந்துள்ளதாம்.  எல்லை தாண்டிய பயங்கரவாத குழுக்கள் தகவல் தொடர்புக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வழக்கமான வழிகளைத் தவிர்த்து, பாதுகாப்பு அமைப்பின் அதாவது கண்காணிப்பு வளையத்தில் இருந்து தப்பிக்கும் நோக்கில் ஆன்லைன் கேமிங்கில் உள்ள லைவ் சாட் அம்சத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இந்த வகையில் சுமார் நான்கு வழக்குகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.ஒரு வழக்கில் எல்லைக்கு அப்பால் உள்ள கேமிங் பார்ட்னரிடமிருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறுவன் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த சிறுவனை தீவிரவாதம் நோக்கி ஈர்க்கும் வகையில் அவருடன் சாட் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முறையான ஆலோசனை மற்றும் அறிவுரைகளை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.  10,000 கோடி!
சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலரை கடந்துள்ளது என்கிறது ப்ளூம்பெர்க் பணக்காரர்களின் பட்டியல்.அவரது சொத்து மதிப்பு உயர்வதற்கு காரணம், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகளின் விலை பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டதுதான்.இதனால், முதலீட்டாளர்களும் பலன் அடைந்துள்ளனர். ஆல்பாபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கணிசமாக அதிகரித்தது இதற்கு காரணம் எனத் தெரிகிறது.
இதன் மூலம் நிறுவனர் அல்லாத சிஇஓ பிரிவில் 10 இலக்க சொத்து மதிப்பைக் கொண்டுள்ளவர்களின் பட்டியலில் ஒருவராக சுந்தர் பிச்சை இணைந்துள்ளார். தற்போது இந்திய ரூபாய் மதிப்பில் அவரது சொத்து மதிப்பு ரூ.10,000 கோடி.
தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டாக இயங்கி வருகிறது கூகுள். அதன் தலைமை செயல் அதிகாரியாக இயங்கி வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. 53 வயதான அவர் படித்து, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான். பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடியிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தவர். கடந்த 2004ல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். 2015 முதல் சிஇஓ பொறுப்பை கவனித்து வருகிறார்.
அமெரிக்கா,இங்கிலாந்தைவிட இந்தியா முன்னிலை!
நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது. அதில்தான் இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி 2025ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக ஃபிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பிரனீஸ் மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் ஆகிய 3 மத்திய கிழக்கு நாடுகள், உலகின் மிகக் குறைந்த குற்ற விகிதம் மற்றும் வலுவான பாதுகாப்பு உள்கட்டமைப்பு கொண்ட முதல் ஐந்து நாடுகளில் இடம்பெற்றுள்ளன.
பாரம்பரியமாக பாதுகாப்பான நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியா இதில் முன்னிலையில் உள்ளது.147 நாடுகளில், இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66வது இடத்தை பிடித்துள்ளது.
இங்கிலாந்து 51.7 புள்ளிகளுடன் 87வது இடமும், அமெரிக்கா 50.8 புள்ளிகளுடன் 89வது இடமும், பிடித்துள்ளன.தெற்காசிய நாடுகளில், சீனா 76.0 புள்ளிகளுடன் 15வது இடத்தில் உள்ளது. இலங்கை 59வது இடத்தையும், பாகிஸ்தான் 65வது இடத்தையும், வங்கதேசம் 126வது இடத்தையும் பிடித்துள்ளன.
தொகுப்பு: காம்ஸ் பாப்பா
|