அதிகரிக்கும் குடும்ப வன்முறை...தீர்வு என்ன?



ஒருவரின் இல்வாழ்க்கை அன்பையும், அறத்தையும் கொண்டிருந்தால் அதுவே பண்பும், பயனும் ஆகும் என்கிறார் வள்ளுவர். ஆனால், சமீபமாக இந்தியாவில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறையோ அன்பையும், அறத்தையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.  கடந்த ஐந்தாண்டுகளில் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் 785 கணவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி. இவர்களைக் கொன்றவர்கள் வேறு யாருமில்லை, அவர்களின்  அன்புக்குரிய மனைவிகளேதான்.

இதேபோல் அன்புக் கணவர்களும், தங்கள் மனைவிகளைக் கொலை செய்யும் போக்கு இதைவிட அதிகம். கடந்த ஆண்டு ஐநா வெளியிட்ட ஓர் ஆய்வின் தரவு, உலகளவில் சுமார் 50 ஆயிரம் பெண்களும், சிறுமிகளும் தங்கள் துணைவர்களால் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்படுகிறார்கள் என்கிறது. 
இது குடும்ப அமைப்பு சிதைந்து வருவதையே காட்டுகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதுகுறித்து பேசும் வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான செல்வகோமதி, இதன்பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறார்.

‘‘குடும்ப வன்முறை அதிகரித்து வருவது கவலையளிக்கக்கூடிய உண்மை. நாங்க பல்வேறு வழக்குகளை பார்க்கிறோம். இதுக்குப் பின்னால் ஆணாதிக்க மனப்பான்மை, பொருளாதார சிக்கல்கள், மது மற்றும் போதைப் பழக்கங்கள், மனநலப் பிரச்னைகள், போதிய சட்ட விழிப்புணர்வு இல்லாததுனு பல காரணங்கள் இருக்கு. 

 ஆணாதிக்க மனப்பான்மையில் பெண்களை மதிப்பு குறைவாகப் பார்ப்பது, திருமணம் முடிந்தவுடன் பெண்கள் கணவரின் சொத்துனு நினைப்பது உள்ளிட்ட பழமையான நம்பிக்கைகள் பெண்களின் உரிமைகளை நசுக்கும் நிலையை உருவாக்குது.

அப்புறம் வேலையிழப்பு, வறுமை, குறைவான சம்பளம், கடன் சுமை போன்றவை குடும்பங்களில் மன அழுத்தத்தையும், அவமான உணர்வையும் ஏற்படுத்தி, அது வன்முறையாக வெளிப்படுது.

அடுத்ததா, அதிகமாக மது மற்றும் போதை பழக்கம், பல நேரங்களில் பெண்கள் மீது கட்டுக்கடங்கா கோபமாகவும், தாக்குதலாகவும் மாறுது. அப்புறம், குழந்தைப் பருவ வன்முறை அனுபவம், மன அழுத்தம், மனநோய்கள் போன்றவையும் வன்முறையைத் தூண்டும் காரணங்களாக உள்ளன. இதுதவிர பெண்கள், தங்களுக்கான சட்ட உரிமைகள் குறித்து அறியாததும் ஒரு முக்கிய காரணம்னு சொல்லலாம். சமூக அழுத்தம் காரணமாக சட்ட உதவிகளை நாடாமல் பாதிக்கப்பட்டவர்கள் மெளனமாக இருப்பாங்க.

அதனால் குடும்ப வன்முறை தனிப்பட்ட விஷயமல்ல. அது ஒரு சமூக நோய். அதைத் தடுக்கிற பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கு...’’ என்கிறார் செல்வகோமதி. தொடர்ந்து குடும்ப வன்முறை குறித்து மருத்துவ உளவியல் நிபுணரான சுனில்குமார், தன்னுடைய அனுபவங்களிலிருந்து விவரித்தார். 

 ‘‘கிட்டத்தட்ட 30 சதவீத திருமணமான பெண்கள் ஏதோ ஒருவிதத்தில் வன்முறைக்கு ஆளாவதாகச் சொல்லப்படுது. இந்த வன்முறை என்பது உடல்ரீதியானது மட்டுமல்ல, உளவியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக இருக்கு. அடிக்கிறது, உதைக்கிறது மட்டும் வன்முறையல்ல. திட்டுறது, எமோஷனலாக பெண்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குறது, செக்ஸுவலாக அவங்கள வன்முறைக்கு ஆளாக்குறதுனு எல்லாம் அடங்கும்.

இதில் நிலவரம் என்னனா, எந்த கேஸும் ரிப்போர்ட் ஆகுறதில்ல. இப்ப ரிப்போர்ட் ஆகியிருப்பது ரொம்ப கொஞ்சம்தான். எங்ககிட்ட கவுன்சிலிங் வரும்போது ஏன் போலீஸிற்குப் போகல, சட்ட உதவிகள் எடுத்துக்க வேண்டியதுதானேனு கேட்பேன். ஆனா, அதுக்கு அவங்க ரெடியாக இல்ல. காரணம், அதை ஆண், பெண் இருபாலரும் சமூக களங்கமா நினைக்கிறாங்க.
பெண்கள் என்ன நினைக்கிறாங்கனா போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டா, நல்ல பொம்பளை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறது அழகா, குடும்பப் பெண் கோர்ட் ஏறுவாளானு நினைக்கிறாங்க.

பெரும்பாலும் குடும்ப வன்முறையை சந்திக்கிற திருமணங்கள்ல இருபாலருமே Taruma மெமரி என்ற மனநிலைக்குப் போயிடுறாங்க. அதாவது தீரா வடு ஏற்படுத்தக்கூடிய தீவிரமான ஞாபகத்திற்குள் சென்றிடுவாங்க.

இதனால் அவங்களுக்கு மனச்சோர்வும், பதட்ட நோயும் வரும். அவங்க சுயமதிப்பீடும் கீழே போயிடும். அவங்க தற்கொலை செய்துக்கலாம் என்ற நிலைக்குப் போவாங்க. இது பாதிக்கப்பட்டவர்களின் பக்கம்.

 சரி, ஏன் வன்முறையில் ஈடுபடுறாங்கனு பார்த்தால் ஆண்களோ, பெண்களோ அவங்க சின்ன வயசுலயே வன்முறைக்கு ஆளாகியிருப்பாங்க. அப்புறம், எல்லாத்தையும் ஒரு கட்டுப்பாட்டுல கொண்டு வரணும். நான் நினைச்சமாதிரி நடக்கணும்னு ஒரு ஆதிக்க மனப்பான்மையுடன் இருப்பாங்க.

அத்துடன் கோபத்தை சமாளிக்கக்கூடிய ஒரு திறனற்ற நிலையிலும் இருப்பாங்க. இரண்டு பேரின் பக்கங்களிலும் உளவியல் ரீதியாக இந்தப் பிரச்னைகள் இருக்குது.
சமூக ரீதியில் பார்க்கிறப்ப ஆணாதிக்க சமூகம் ஒரு பிரச்னையாக இருக்குது. பாலின சமத்துவமின்மை அடுத்த பிரச்னை. அப்புறம் நம்முடைய கலாசாரமும் வன்முறையை ஆதரிப்பதாக இருக்கு.

உதாரணத்திற்கு புருஷன்தானே... இரண்டு அடி அடிச்சா அது பெரிய விஷயமா... அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்... அடிக்கிறது ஒரு பெரிய பிரச்னை இல்லனு வன்முறையை ஆதரிக்கும் கலாசாரமாகவும் இருக்கு.

ஆனால், சமீபமாக பெண்கள், ஆண்கள் மீது நடத்துகிற வன்முறையை ரொம்ப பூதாகரமாக ஆக்கறாங்க. பெண்கள் எல்லாம் ரொம்ப கெட்டவங்களாக மாறிட்டாங்க. அதனால் குடும்ப அமைப்பே சிதைந்து போகுது. ஆண்கள் எல்லாம் பாவம் என்கிற மாதிரி சித்தரிக்கிறாங்க. இது முழுக்க உண்மை கிடையாது. 

நம்முடைய தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளை எடுத்துப் பார்த்தால் ஆண்களினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புதான் அதிகம்னு புரியும்.  சமீபத்தில் ஒரு கேஸ் பார்த்தேன். மனைவியால் துன்புறுத்தப்பட்ட ஆண், உடலளவில் துன்புறுத்தப்பட்டும் அவர் போலீஸ் ஸ்டேஷன் போகல.

ஏன்னா, என்னை போலீஸ்காரங்க என்ன நினைப்பாங்க. ‘பொம்பளைகிட்ட அடிவாங்குறீயே... நீயெல்லாம் ஆம்பளையா’னு கேவலமாகப் பேசுவாங்க. அது தன் ஆண் தன்மைக்கே இழுக்கு என்பதால் போகலனு சொல்றார். அப்ப ஆண்களிடம், பெண்களிடம் சமூகத்தின் தாக்கத்தைப் பார்க்க முடியுது. பொதுவா, நம்முடைய இந்திய கலாசாரம் கூட்டுக்குடும்பமாக இருந்தது. ஆணாதிக்க சமூகத்தின் ஒரு பிரதிபலிப்பை அந்தக் குடும்பத்துக்குள்ள பார்க்க முடியும்.

இப்ப மேல்நாட்டுக் கலாசாரத்தின் தாக்கம் வந்தபிறகு ஆணும், பெண்ணும் சேர்ந்து வேலை செய்றாங்க. அதனால் இருவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துக்கிறாங்க. இந்தப் பெரிய சமூக, பொருளாதார மாற்றம் குடும்ப அமைப்பிற்குள் தாக்கத்தை ஏற்படுத்துது.

அதனால் பிரச்னையைச் சந்திக்கிறாங்க.கிட்டத்தட்ட 60 சதவீத ஆண்கள் அவங்க பார்ட்னர்கிட்ட இருந்து வாழ்நாள்ல ஒருதடவையாவது வன்முறைைய சந்திக்கிறாங்கனு சொல்லப்படுது. உண்மைல ஆண் மற்றும் பெண்களுக்கு நடக்கிற வன்முறையில் சரியான எண்ணிக்கை இல்லை என்பதுதான் நிஜம். இந்த வன்முறை திருமணமானவர்களிடம் மட்டுமல்ல,கேர்ள் ஃப்ரண்ட்ஸ், லிவிங் பார்ட்னர்ஸ்னு எல்லோர்கிட்டயும் இருக்கு. எல்லோருமே அடிச்சிக்கிறாங்க. அதனால் பொருளாதாரக் கோணத்திலும், சமூக ரீதியாகவும் இதைப் பார்க்கணும்.

என்னுடைய அனுபவத்தில் பார்க்கும்போது அவங்க ஒரு மனஅழுத்தப் பிரச்னையை அனுபவிச்சிருக்காங்க. அடிக்கிறவனின் வரலாறை எடுத்தாலும் அதேதான் இருக்கு...’’ என்கிறவரிடம் என்னதான் தீர்வு என்றோம். ‘‘ஒரு தனிநபர் மனநல பிரச்னைக்கு சொல்ற மாதிரி இதுக்குத் தீர்வு சொல்லமுடியாது. எல்லோருக்கும் கவுன்சிலிங் கொடுப்போம். எல்லோரின் மனஅழுத்தத்தையும் குறைப்போம்னு சொல்றது சிரமம்.

இதுல ஒரு பரந்துபட்ட பார்வை வேணும். முதல்ல நமக்கு தரவுகள் தேவை. ஆனா, கிடைத்துள்ள தரவுகள் குறைவு. அப்படியே குறைவாக இருந்தாலும் அது சரியானு தெரியல. இப்ப இருக்கிற விஷயங்களைப் பார்க்கிறப்ப திருமணத்தைத்தாண்டிய உறவும், பாலியல் பிரச்னையும்தான் காரணங்களாக இருக்குது. ஆனா, குடும்பமே சேர்ந்து வன்முறை செய்றது, வரதட்சணை கொடுமை பண்றது, திருமணம் செய்துகிட்டால் அவளுடன் செக்ஸ் வைச்சிருப்பது என்னுடைய உரிமைனு வன்புணர்வு பண்றதுனு சில விஷயங்களும் இதைத்தாண்டி உண்டு.

இது கண்ணுக்குத் தெரியாத சிக்கல்கள். இந்தியா முழுக்க மட்டுமல்ல, உலகளாவிய பெண்களும் இந்த வன்முறைக்கு ஆளாகுறாங்க. அதனால்தான் தனித்தனியான கவுன்சிலிங் தீர்வாகாது. இதற்கு பள்ளிப் பருவத்தில் இருந்தே மனித உரிமைகள் பத்தின விழிப்புணர்வைச் சொல்லித் தரணும். மனித உரிமை குறித்த கல்வியை பள்ளிப் பாடத்திலேயே கொண்டு வரணும்.

ரெண்டாவது, பள்ளிப் பருவத்திலேயே அவர்களின் உணர்ச்சிகளைக் கையாளும் திறன்களை சொல்லிக் கொடுக்கணும். இதனை பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக வைக்கணும்.
அப்புறம் தனிநபர் சார்ந்து நாம் செய்ய வேண்டியது... உங்க கோபத்தை உங்களால் சமாளிக்க முடியல, சிக்கல் ஆகுதுனா ஆரம்பக்காலத்திலேயே அதற்கான மனநல ஆலோசகரிடம் போய்  அதுக்கான வழிகளை எடுத்துக்கணும். அடிதடிக்குச் சென்று கவுன்சிலிங் போறதைவிட்டுட்டு ஆரம்பத்திலேயே பிரச்னையைத் தீர்க்க முன்வரணும்.

இன்னைக்கு ஒருவரின் வன்முறையைப் பார்த்து வளர்கிற குழந்தை நாளைக்கு இன்னொரு வன்முறையாளராக மாறலாம். அதனால் பள்ளி, சமூக அமைப்பு, நீதி அமைப்புனு
எல்லாம் ஒருங்கிணைந்து ஒரு திட்டத்தை வகுத்து கூட்டாக வேலை செய்யணும்...’’ என்கிறார் உளவியல் நிபுணரான சுனில்குமார்.

பேராச்சி கண்ணன்