‘‘இந்த ‘அழகர்சாமியின் குதிரை’ டைட்டில் இசையை உங்க கண்களை மூடி, மனசு லயிச்சுக் கேளுங்க. உங்க கண்கள்ல இருந்து ஒரு துளி தண்ணி வரலைன்னா, இனி நான் இசையமைக்கிறதையே விட்டுடறேன்..!’’ என்று சற்றே குரலை உயர்த்திச் சொன்னவர் வேறு யாருமல்ல... இசைஞானிதான். குறிஞ்சி கூட பன்னிரண்டு வருடத்தில் சரியாகப் பூத்துவிடும். ஆனால் தான் இசையமைத்த ஒரு படத்தைப்பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் இளையராஜாவே இப்படி முன்வந்து மனதாரப் புகழ்ந்த நிகழ்வு அரிதானது. சுசீந்திரன் இயக்கத்தில் அமைந்த ‘அழகர்சாமியின் குதிரை’ பிரஸ்மீட் கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் வந்தார் இளையராஜா. வந்தவரிடம் மைக் கொடுத்துப் பேசச் சொன்னார்கள். அப்போதுதான் இப்படி உணர்ச்சிவசப்பட்டார்.
‘‘ஒரு படத்தை முதல்ல பார்க்கிறவன் நான்தான். அப்ப சில விஷயங்கள் தேவையில்லைன்னு சொல்வேன். ஆனா டைரக்டர்களுக்கு ஒரு ஈகோ இருக்கும். அதைச் செய்ய மாட்டாங்க. ரசிகர்கள் சொல்லட்டும்னு விட்டுடுவாங்க. அங்கே டைரக்டர்கள் செய்யாம விட்டுடற விஷயத்தை, தியேட்டர்ல ஆபரேட்டர் செய்வார். அதுக்குப் பிறகு என்கிட்ட வந்து, ‘நீங்க அப்பவே சொன்னீங்க...’ன்னுவாங்க. ரசிகர்கள் வேற, நான் வேற இல்லை. ஒரு படத்தை (பின்னணி இசைக்காக) முதல்ல பார்க்கிற ரசிகன் நான்தான். அப்படி இந்தப்படத்திலும் சில விஷயங்கள் சொன்னேன். சில தேவைகளைக் கேட்டேன். கேட்டதைக் கொடுத்தாங்க. அது நிறைவா வந்திருக்கு...’’ என்று வழக்கத்தைக் காட்டிலும் நெருங்கிவந்து பேசி கவனம் கவர்ந்தார் இளையராஜா.
அவரைத் தொடர்ந்து சுசீந்திரன் பேசியபோது, ‘‘இந்தப் படத்துக்கான கதையை ரெண்டு மணிநேரம் சொன்னேன். கேட்டுட்டு, ‘ஈரானியப் படம் மாதிரி இருக்கு...’ன்னவர் மூணு பாடல்கள் கம்போஸ் பண்ணித் தந்தார். அதில ஒரு திருவிழாப் பாடல் இன்னும் கொஞ்சம் வேற மாதிரியா வரலாம்னு தோணிச்சு. ஆனா அதை அவர்கிட்ட எப்படிக் கேக்கறது..? இருந்தாலும் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு திரும்பவும் போனேன். என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் போல, ‘வாய்யா... அந்த திருவிழா சாங் வழக்கமா இருக்கிற மாதிரி வந்திருக்கு. வேற மாதிரி போடலாமா..?’ன்னார். நான் ஆடிப்போயிட்டேன். என் மனசில இருந்தது அவருக்கு எப்படித் தெரிஞ்சது..?’’ என்று நெகிழ்ந்தார்.
உடனே மீண்டும் மைக் பிடித்த இளையராஜா, ‘‘இந்த அனுபவம் உனக்கு மட்டுமில்ல... உனக்கு முன்னால நூறு டைரக்டர்களுக்கு ஏற்பட்டிருக்கும். ‘சிந்துபைரவி’ கம்போசிங்ல கே.பாலசந்தர் சொன்ன சிச்சுவேஷனுக்கு நான், ‘நானொரு சிந்து... காவடிச்சிந்து...’ன்னு ராகமெடுத்துப் பாட ஆரம்பிக்க, கை காலெல்லாம் ஆடிப்போன பாலசந்தர் அனந்துகிட்ட தன் டைரியை எடுத்து வரச்சொன்னார். அதில அவரே இந்தப்பாடல் இப்படி இருக்கலாம்னு எழுதி வச்சிருந்த வரிகள், ‘நானொரு சிந்து... காவடிச் சிந்து...’ன்னே இருந்தது. ‘எப்படி நடந்தது இது..?’ன்னு ஆச்சரியத்தோட கேட்டார். கேட்டதை மட்டுமே கொடுக்கிறது சரவணபவன். உனக்கு என்ன தேவையோ அதைத் தெரிஞ்சு கொடுக்கிறவள் தாய். நான் அப்படிப்பட்டவன். கேட்டதை மட்டும் கொடுக்க நான் சரவணபவன் இல்லை...’’ என்றார் முகம் மலர்ந்து. ரொம்ப காலமாச்சு இயல்பான ராஜாவை இப்படிப் பார்த்து..! - வேணுஜி