உழைப்பால் உயிர்த்தெழுந்த தேசம் ஜப்பான். இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டுகளால் பேரழிவுக்குள்ளான போதும், அதிவேகத்தில் தன்னைப் புதுப்பித்து எழுந்து நின்றது. இப்போது, மீண்டும் சோதனைக்காலம். பூகம்பமும் சுனாமியும் அந்த தேசத்தை கலைத்துப் போட்டுவிட்டன. அதிலிருந்து மூச்சுவிடும் முன்பாகவே அடுத்த அடி. வரிசையாக 4 அணுமின் உலைகள் வெடித்துச்சிதற, மீண்டும் அணுக்கதிர் ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது ஜப்பான். ஜப்பானின் நிலை, அணுமின் நாடுகள் அனைத்தையும் மிரள வைத்திருக்கிறது. இந்தியா அவசர அவசரமாக அணுமின் நிலையங்களின் பாதுகாப்புத்தன்மையை மறுசோதனைக்கு உள்ளாக்கியுள்ளது. உண்மையில், ஜப்பான் எதிர்கொண்ட விபரீதத்தை இந்தியா போன்ற நாடுகள் எதிர்கொள்ள நேருமா?சென்னை பல்கலைக்கழக அணு இயற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் வெ.ரவிச்சந்திரனை கேள்விகளோடு சந்தித்தோம்.
அணுமின் உற்பத்திக்கும் மற்ற மின் உற்பத்தி முறைகளுக்கும் என்ன வேறுபாடு?
‘‘நிலக்கரியை எரித்து அந்த வெப்பத்தின் மூலம் தண்ணீரில் நீராவியை உண்டாக்கி தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம். கிட்டத்தட்ட அதைப்போன்றதுதான் அணு மின்சாரமும். நிலக்கரியை எரித்து வெப்பத்தை உண்டாக்குவதைப் போல, இதில் தோரியம் அல்லது யுரேனியம் அணுக்களைப் பிளந்து வெப்பத்தை உருவாக்குகிறார்கள். நியூட்ரான் எனப்படும் கண்ணுக்குத்தெரியாத அணுத் துகளை குறைந்த வேகத்தில் யுரேனியம் அல்லது தோரியத்தில் மோதச்செய்தால் அணுப்பிளவு ஏற்படும். இப்படி தொடர்ச்சியாக இயங்கும்போது, மிகக்கடுமையான வெப்பமும் கதிரியக்கமும் உண்டாகும். திறந்தவெளியில் இப்படி நடந்தால் அதுதான் அணுகுண்டு வெடிப்பு. இந்த சக்தியைக் கட்டுப்படுத்தி, தேவைக்குத் தகுந்தவாறு வெளியாக்குவதுதான் அணுஉலை. அணுஉலையின் கருவைச்சுற்றி தண்ணீர், கனநீர், உருகிய சோடியம் இவற்றில் ஒன்றைச் சுழலவிட்டு அந்த வெப்பத்தை வெளியேற்றி, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
மற்ற முறைகளோடு ஒப்பிடும்போது இதில் செலவு அதிகம்தான். ஆனால், நிலக்கரி பூமியில் சுரந்துகொண்டே இருக்காது. ஏதேனும் மாற்றுசக்தி தேவை என்ற நிலையில் அணுமின்சாரம் சிறந்த உத்தி. அணுமின் நிலையங்கள் மிகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்படுகின்றன. அணுஉலையின் கருவில்தான் கதிர்வீச்சுப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. கதிர்வீச்சை விழுங்கும் உலோகக் கலவையால் ஆன தடிமனான கூண்டுக்குள் இந்தக்கரு உருவாக்கப்படும். அதைச்சுற்றி கான்கிரீட் சுவர். அதைச்சுற்றியும் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும்.’’
ஜப்பான் அணுஉலை வெடிப்புக்கு என்ன காரணம்?
‘‘அணுஉலை என்பது சாதம் வடிக்கும் குக்கரை போன்றது. அணு பிளவுபட்டு வெப்பம் உருவாக உருவாக அதை உபயோகித்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அழுத்தம் அதிகமாகி குக்கர் வெடிப்பது போல அணுஉலை வெடித்துவிடும். ஜப்பான் அணுஉலை வெடிப்பும் இப்படித்தான் நிகழ்ந்துள்ளது. சுனாமி, பூகம்பம் காரணமாக அணுஉலையின் இயக்கம்
நின்றுபோனது. வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான குளிரூட்டும் இயந்திரங்கள் செயலிழந்துவிட்டன. ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு மூலப்பொருட்கள் எரிந்துகொண்டே இருந்துள்ளன. அதனால் வெப்பம் அதிகமாகியே அணுஉலைகள் வெடித்துள்ளன.’’
இதனால் இந்தியாவுக்கு பாதிப்புண்டா?
‘‘இந்தியாவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், ஜப்பான் இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்று தெரியவில்லை. அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற நிலை. இப்போது 4 அணு உலைகள் வெடித்துள்ளன. அதிலிருந்து கதிரியக்கம் பரவிவருகிறது. இதை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் ஜப்பான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். காற்று, நீர், உணவு என பல வழிகளில் மனித உடலுக்குள் கதிரியக்க அணுக்கள் புகக்கூடும். அதனால் உடலின் இயக்கத்தில் பல குளறுபடிகள் ஏற்படலாம். மரபணுக்களை பாதித்தால் தலைமுறையே பாதிக்கப்படலாம். கதிர்வீச்சு காற்றின் வழியாக பரவும்போது அதன் விளைவுகளை வரையறுக்கமுடியாது. கதிரியக்கத்தை உள்வாங்கிய நீரை கடலில் விட்டால் கடல்வாழ் உயிரிகள் பாதிக்கப்படலாம். அதை உண்பவர்களும் பாதிக்கப்படலாம்.
கதிர்வீச்சு எல்லா இடங்களிலும் உண்டு. இப்போது காய்கறிகள், பழங்களை அழுகாமல் பாதுகாக்கக்கூட கதிரியக்கத்தை பயன்படுத்துகிறார்கள். அளவுக்கு மீறும்போதுதான் பாதிப்பு. கதிர்வீச்சின் அளவை ‘மில்லி சேவர்ட்’ என்ற அலகால் அளவிடுவார்கள். சாதாரணமாக எக்ஸ்ரே எடுக்கும்போது .2 மில்லி சேவர்ட் கதிரியக்கம் வெளிப்படுகிறது. ஆனால், 100 மில்லி சேவர்ட் கதிரியக்கமே மனிதனைப் பாதிக்கும். அணுஉலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஆண்டுக்கு சுமார் 20 மில்லி சேவர்ட் அளவுக்கு கதிரியக்கத் தாக்குதலுக்கு உட்படுவார்கள். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. குறுகிய காலத்தில் 100 மில்லி சேவர்ட் கதிரியக்கத்துக்கு ஆளானால் மட்டுமே மோசமான விளைவுகள் ஏற்படும்.’’
இவ்வளவு ஆபத்தான ஒரு திட்டம் தேவைதானா?
‘‘உலகில் 400க்கும் அதிக அணுமின் நிலையங்கள் இயங்குகின்றன. பிரான்சில் 80 சதவிகித மின்சாரம் அணுமின்சாரம்தான். ஜப்பானின் தேவையில் மூன்றில் ஒரு பங¢கு அணுமின்சாரம். அங்கு 55 அணுமின் நிலையங்கள் இயங்குகின்றன. அணுமின் நிலையங்கள் எல்லாமே ஆபத்தானவை என்று சொல்லமுடியாது. ஜப்பானில் இப்போது பாதிக்கப்பட்டுள்ள அணுஉலைகள் மிகவும் பழையவை. இதன் நிர்வாகம் எப்படி இருந்தது என்பதை இங்கிருந்து கணிக்கமுடியாது. எங்கேயோ தவறு நிகழ்ந்திருக்கலாம்.
இந்தியாவில் 8 அணுமின் நிலையங்களில் சுமார் 25 உலைகள் உள்ளன. இதில் இரண்டு மட்டுமே ஜப்பானில் இப்போது விபத்துக்குள்ளானது போன்ற வாட்டர் பாய்லிங் டைப். மற்றதெல்லாம் நவீன தொழில்நுட்பத்தில் உருவானவை. மிக வலுவாக வடிவமைக்கப்பட்டவை. சென்னையில் சுனாமி தாக்கியபோது கூட கல்பாக்கத்தில் எல்லா அணுமின் உலைகளும் இயங்கிக்கொண்டுதான் இருந்தன. ஜப்பான் விபத்தை வைத்து அணுமின் நிலையங்களே கூடாது என்று சொல்லக்கூடாது. ஆனால், நாம் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யவேண்டும். மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும், சந்தேகங்களையும் போக்க வேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது.’’ - வெ.நீலகண்டன்