பட்டிமன்றமும் இந்த பாப்பையாவும்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            ழைச்சுட்டுப் போக கார், தங்குறதுக்கு வசதியான அறை, சன்மானம்னு இன்னைக்கு பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு மரியாதை கிடைக்குது. அந்தக் காலத்துல நாங்க சில மைல் தூரம் நடந்து, சைக்கிள்ல பின்னே உக்காந்து, டிராக்டருக்குள்ள அடைஞ்சு, பஸ்ல பல மைல் தூரம் நின்னு போயி பேசிட்டு வந்திருக்கோம். சாப்பாடு கிடைக்காம வெறும் பன்னை டீயில நனைச்சுச் சாப்பிட்டு மேடை ஏறியிருக்கோம். திரும்பி வர வழியில்லாம பள்ளிக்கூடத்திலயும் மரத்தடிகள்லயும் படுத்திருந்து விடிஞ்சபிறகு வீட்டுக்கு வந்திருக்கோம். ஏகப்பட்ட அவமானங்களையும் எதிர்ப்புகளையும் சந்திச்சிருக்கோம்.

இதை ஏன் சொல்றேன்னா, இன்னைக்கு பட்டிமன்றத்துக்கு ஒரு அந்தஸ்தைக் குடுத்திருக்காங்க மக்கள். அதுவும் தொலைக்காட்சிகள் பட்டிமன்றத்தை எடுத்தாண்ட பிறகு, அதோட வீச்சு ரொம்பவே அதிகமாயிடுச்சு. இந்த வளர்ச்சியை எட்டுறதுக்காக பலபேர் தங்களோட வாழ்க்கையைத் தியாகம் செஞ்சுருக்காங்க. அவங்களைப் பத்தியும் தெரிஞ்சுக்கணும்.

பல்வேறு இலக்கியங்கள்ல பட்டிமன்றங்களைப் பத்தின குறிப்புகள் இருந்தாலும், யதார்த்தத்தில அதற்கு ஒரு வடிவத்தை உருவாக்கி, அதை மேடைகளுக்கு எடுத்துக்கிட்டு வந்த பெருமை காரைக்குடி கம்பன் கழகத்தை நிறுவின பெரியவர், அறிஞர் சா.கணேசனைத்தான் சாரும். காரைக்குடி கம்பன் கழகத்தோட தொடர்புடைய பெரியவர் பழ.பழனியப்பன் சொன்ன செய்தி இது.
அறிஞர் சா.கணேசன் வணிகக் குடும்பத்தில பிறந்தவர். தமிழ் இலக்கியங்களைக் கற்ற படிப்பாளி. கம்பன்ல ஆழங்கால் பட்டவர். கல்வெட்டு ஆய்வுலயும் தேர்ச்சி பெற்றவர். கம்ப ராமாயணத்தில பட்டிமண்டபம் பத்தின தகவல்களை படிச்ச சா.கணேசனுக்கு, அதை செயல்படுத்திப் பாக்கணும்னு ஆசை. 1932&ல ரங்கூன்ல வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப்பவே, அவருக்கு இந்த ஆவல் வந்திருக்கு.

அந்தக் காலகட்டத்தில, தமிழ்நாட்டுல ராமாயணத்துக்கு எதிரா ஒரு இயக்கம் நடந்துச்சு. அந்த அலையில இருந்து கம்பனை காப்பாத்தணும்னு பலரும் நினைச்சாங்க. அப்படி நினைச்சவங்கள்ல சா.கணேசன் முக்கியமானவர். கருத்தொத்த நண்பர்களை சேத்துக்கிட்டு 1939ல காரைக்குடியில கம்பன் கழகத்தை உருவாக்கினார்.

கம்பனோட கற்பனை வளத்தையும் ராமாயணத்தில இருந்த கதையின் உயிரோட்டத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் வெளியில கொண்டுவர்ற மாதிரி பல நிகழ்ச்சிகளை கம்பன் கழகம் முன்னெடுத்து நடத்துச்சு. 1941&ம் வருடத்தில நடந்த கம்பன் விழாவில, ‘விவாத அரங்கம்’னு ஒரு நிகழ்ச்சியை நடத்தினாங்க. கிட்டத்தட்ட பட்டிமன்றத்தோட தொடக்க வடிவம் அதுதான். அந்த விவாத அரங்கத்தோட தலைப்பு & ‘கம்பனும் ஒட்டக்கூத்தரும் சமகாலத்தவரா?’ தமிழ்நாட்டோட தலைசிறந்த தமிழ் அறிஞர்கள், பேச்சாளர்கள் எல்லாரும் கலந்துக்கிட்டு விவாதிச்சிருக்காங்க. அந்த அரங்கத்தோட தலைவர், பேராசிரியர் வையாபுரி பிள்ளை.

விவாதத்தில கலந்துக்கிட்டவங்கள்ல ரெண்டுபேரு பெரியவர் மு.ராகவையங்கார், பெரியவர் மு.அருணாசலம். விவாதம்னா, சும்மா பேசிக் கலையுறதில்லே... இலக்கியம் சார்ந்த பல்வேறு கருத்து வேறுபாடுகள்ல ஒருமித்த முடிவெடுக்கிற விவாதங்கள். அந்த முடிவுகள்தான் அந்த விவகாரத்துக்கான இறுதித் தீர்ப்பு. கம்பனும் ஒட்டக்கூத்தரும் சமகாலத்தவராங்கிற அந்த விவாதத்தோட முடிவில, சமகாலத்தவர் இல்லேன்னு தீர்ப்புச் சொல்லியிருக்கார் வையாபுரி பிள்ளை.

இந்த விவாதத் தலைப்புக்கு ஒரு பின்னணி இருக்கு. ராமாயணத்தின் முடிவில ‘உத்தர காண்டம்’னு ஒரு பகுதி இருக்கு. தொடக்கத்திலயே அந்த பகுதி கம்பர் எழுதினது இல்லைன்னு சொல்லி தொகுப்புகள்ல சேக்காம தள்ளி வச்சுட்டாங்க. பெரும்பாலும் யாரும் அதைப் படிச்சிருக்க முடியாது. ராமன் சீதையை மீட்டுட்டு நாட்டுக்கு வந்த பிற்பாடு நடந்த கதை அது. ஒரு சலவைத்தொழிலாளியோட மனைவி ஒரு நாள் ராத்திரி வீட்டுக்கு வரமுடியாம போனதால, வேறு எங்கயோ இருந்துட்டு மறுநாள் வர்றா. சலவைத்தொழிலாளிக்கு சந்தேகம். சேத்துக்க மறுக்கிறாரு. ‘நீ எங்கேயோ இருந்துட்டு வருவே... உன்னை ஏத்துக்கிட்டு குடும்பம் நடத்த நான் என்ன ராமனா’ன்னு அவர் கேட்டுப்புட்டாராம். இந்த செய்தி ராமன் காதுக்குப் போக, அவர் சீதையை மறுபடியும் கொண்டுபோய் காட்டுல விட்டுட்டாரு. இதுதான் உத்தர காண்டம் பற்றிய நாட்டுப்புற சிந்தனை.

நிச்சயமா இதைக் கம்பன் எழுதலே. உத்தர காண்டத்து பாடல்களுக்கும் கம்பனோட மற்ற பாடல்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். இதை ஒட்டக்கூத்தர் எழுதியதா சிலர் சொல்வாங்க. அதுவும் நிரூபிக்கப்படலே.

இதுமாதிரி விவாத அரங்கங்களை ஒவ்வொரு ஆண்டும் கம்பன் விழாக்கள்ல நடத்தினார் சா.கணேசன். 1947 வரைக்கும் இது ரெண்டு கட்சி விவாத அரங்கமாவே இருக்கு. அதுக்குப்பிறகு இதை ‘பட்டிமண்டபம்’ங்கிற பேர்லயே நடத்த ஆரம்பிச்சார்.

‘பட்டிமன்றம்ங்கிறது சரியா, பட்டிமண்டபம்ங்கிறது சரியா’ & இப்படி ஒரு கேள்வி இருக்கு. எல்லா இலக்கியங்கள்லயும் பட்டிமண்டபம்ங்கிற வார்த்தைதான் இருக்கு. பட்டிமன்றம்ங்கிறது திராவிட இயக்கத்தோட தாக்கத்தால முளைச்ச வார்த்தை. பொருளில் மாற்றமில்லே; இந்த வார்த்தை வசீகரமாவும் இருக்கு.

பட்டிமண்டபம்ங்கிறது ஒரு அசையாப் பொருளைக் குறிக்கிற மாதிரி இருக்கதால எல்லோரும் பட்டிமன்றத்தை ஏத்துக்கிட்டாங்க. ரெண்டு வார்த்தையுமே சரியானதுதான்.
தொடக்கத்திலயே பட்டிமன்றத்துக்கு நல்ல வரவேற்பு. காலப்போக்கில தமிழறிஞர்கள் பலரும் அதில பேச ஆசைப்பட்டாங்க. நிறைய பேச்சாளர்கள் தேடிவரத் தொடங்கினபிறகு, ரெண்டு கட்சியை மூணு கட்சியா அமைச்சு விவாதிக்க வைச்சிருக்கார். 1967 வரைக்கும் இந்த மூணு கட்சி விவாதம்தான். அதுக்குப் பிறகு, நாலு கட்சியை எல்லாம்கூட வச்சு நடத்தியிருக்கார்.

1973க்குப் பிறகு பட்டிமன்ற வடிவத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு போனார் சா.க. அது, மேல்முறையீடு. அதாவது, ஒரு தலைப்பை விவாதிச்சு நடுவர் ஒரு தீர்ப்பைச் சொல்லுவார். அந்த தீர்ப்புல திருப்தி இல்லைன்னு சொல்லி மேல்முறையீடு செஞ்சு திரும்பவும் விவாதிப்பாங்க. அந்த நீதிபதி சொல்ற தீர்ப்புதான் இறுதியானது. அதாவது, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில அப்பீல் பண்ற மாதிரி! இந்த மேல்முறையீட்டுப் பட்டிமன்றங்கள்ல நிறைய படிச்சவங்கள்லாம் கலந்துக்கிட்டாங்க. குறிப்பா ஜஸ்டிஸ் மகராஜன், நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் மாதிரி நீதிபதிகள்கூட மேல் முறையீட்டு நடுவர்களா இருந்து தீர்ப்பு சொல்லியிருக்காங்க.

பல அரசியல் கட்சிக்காரர்கள் பட்டிமன்றங்கள்ல பங்கேற்று பேசியிருக்காங்க. அறிஞர் ஜீவானந்தம், கி.வா.ஜகந்நாதன், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கம், பேராசிரியர் அ.சீனிவாசராகவன் மாதிரி பெரும் தமிழறிஞர்கள் கலந்துக்கிட்டுப் பேசியிருக்காங்க. பெரியவர் சா.கணேசன் ஒரு வேள்வி மாதிரி தமிழகம் முழுமைக்கும் இந்த வடிவத்தைக் கொண்டுபோய் சேர்த்தார். தமிழுக்கு எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

மூன்று நாள் நிகழ்வா நடத்தப்பட்ட கம்பன் விழா பட்டிமன்றங்களுக்கு தமிழ்நாடு முழுதும் இருந்து மக்கள் வருவாங்க. உலகெங்கும் இருந்த நகரத்தார் சிலரும் பிறரும் இந்த மக்களுக்கு உணவும், தங்க இடமும் தந்து உபசரிக்க நன்கொடை அனுப்புவாங்க.

பெரியவர் சா.கணேசன் பட்டிமன்றத்துக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்த தகப்பன்னா, அதை மக்கள் மத்தியில கொண்டு போய் சேத்தவர் குன்றக்குடி சாமி. அவர் உள்ளே வந்த பிறகு பட்டிமன்றத்தை ஒரு தலைகீழ் மாற்றத்துக்கு உள்ளாக்கினார்.

சா.கணேசன் காலத்தில பட்டிமன்றம்ங்கிறது படிச்சவங்களுக்கும் மேட்டுக்குடி மக்களுக்குமான ரசனையா மட்டும்தான் இருந்துச்சு. அதுவும், கம்பனைப் பற்றி மட்டும்தான் பேசப்பட்டுச்சு. குன்றக்குடி சாமிக்கு இதில சின்ன சங்கடம். கம்ப ராமாயணத்தைத் தாண்டி தமிழ்ல இருக்கிற மற்ற இலக்கியங்களை மக்கள்கிட்ட கொண்டு போக வேண்டாமா? திருக்குறள் இருக்கு... சிலப்பதிகாரம் இருக்கு... பெரியபுராணம் இருக்கு... எல்லாத்தையும் பேசணுமில்ல? இயல்பாவே சாமிக்கு இன்னொரு எண்ணம் இருந்திருக்கு. சைவ இலக்கியங்களும் பேசப்படணுமேன்னு யோசிக்கிறார்.

அதுவரை அரங்கத்துக்குள்ள படித்தவர்கள் மத்தியில பேசப்பட்டு வந்த பட்டிமன்றத்தை வீதிக்கு எடுத்துக்கிட்டு வந்தார் குன்றக்குடி சாமி. பட்டிமன்றத்தோட அடுத்த கட்டம் இதுதான். சா.கணேசன் இல்லேன்னா பட்டிமன்றம் உருவாகியிருக்காது. குன்றக்குடி சாமி இல்லேன்னா பட்டிமன்றம் வீதிகளுக்கு வந்திருக்காது. உயிரோடும் இருந்திருக்காது.   
குன்றக்குடி அடிகளார் தமிழ்நாட்டோட மிகச்சிறந்த பேச்சாளர்கள்ல ஒருத்தர். அவர் பட்டிமன்ற மேடைக்கு வந்தது தமிழுக்கு மட்டுமில்லாம, தமிழ்ப் புலவர்களுக்கும் நல்வரவாவே இருந்துச்சு. ஏன்னா, அவரோட வார்த்தைகளுக்கு மக்கள் மத்தியில மிகுந்த மரியாதை இருந்துச்சு. நிறைய புலவர்களை அவர் மேடைகள்ல முன்னிலைப்படுத்தினார். நல்லா பேசக்கூடியவங்களை தட்டிக் குடுத்து உற்சாகப்படுத்தினார்.

அவரு மேடைக்கு வந்தார்னா அத்தனைபேரும் அமைதியாயிடுவாங்க. கம்பீரமா பேசுவாரு. தமிழ் அவர்கிட்ட இருந்து மழையா பொழியும். பட்டிமன்ற மேடைப் பேச்சுக்கலைக்கு சரியான தோரண வாயிலை அமைச்சவர் அவர்தான். அதை ஒழுங்குபடுத்தி இலக்கணம் அமைச்சவர் அவர்தான். இத்தனை பேரு பேசணும், இவ்வளவு நேரம் பேசணும், இப்படித்தான் பேசணும்னு திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

இந்த படிப்படியான வளர்ச்சி நிலைகள்ல என்னோட பங்களிப்பும் உண்டோ?
அடுத்த வாரம் சந்திப்போமா!
சாலமன் பாப்பையா