மாறுவேடத்தில் ரஜினி ரகசிய விசிட்



ராஜ்பகதூர் என்றால் சூப்பர் ஸ்டாருக்கே சும்மா அதிருதில்ல... அவர் வேறு யாருமல்ல... சிவாஜி ராவாக பெங்களூர் பேருந்து நடத்துனராக ரஜினி விசில் அடித்தபோது, அந்தப் பேருந்தை ஓட்டியவர்தான்! ரஜினியின் ‘வள்ளி’ தொடங்கி ‘படையப்பா’ வரை சில படங்களில் துணை நடிகராகவும் ராஜ்பகதூர் தலைகாட்டியுள்ளார். ‘ரானா’விலும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. சில நாட்களுக்குமுன் பெங்களூரு போன ரஜினி, இவர் உட்பட சில நண்பர்களோடு சேர்ந்து ஜாலி ட்ரிப் அடித்திருக்கிறார். தன் ‘வாடா போடா’ நண்பன் ரஜினியின் ரகசியங்களை, ராஜ்பகதூர் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறார் இங்கே!

‘‘ரஜினி எப்பவும் பெங்களூரு வருவதற்கு முன்பே எனக்கு தொலைபேசி வந்துவிடும். அவரது அண்ணன் சத்ய நாராயணா வீட்டில் உள்ள காரை ஏர்போர்ட்டுக்கு அனுப்பி வைப்பேன். சாம்ராஜ்பேட்டையில் இறங்கி அங்கிருந்து நடந்தே என் வீட்டுக்கு வந்துவிடுவார் ரஜினி. யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு மாறுவேடத்தில் இருப்பார். எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் ஓய்வு. பிறகு மாறுவேடத்திலேயே கவிபுரம் பேங்க் காலனி, சுப்பிரமணிய சாமி கோவில், கவிகங்காதரேஸ்வரா கோவில் என்று சுற்றி வருவோம். சிறுவயது முதல் ரஜினியை அறிந்த கோவில் பூசாரிகளுக்கே வந்திருப்பது சூப்பர்ஸ்டார்தான் என்பது தெரியாதபடி மாறுவேடம் அவ்வளவு கச்சிதமாக இருக்கும். போண்டா வடை பஜ்ஜி கடை, பானிபூரி கடை, டீக்கடைகளுக்கு சென்று விருப்பமானதை வாங்கி, பாதையோரமாகவே உட்கார்ந்தோ நின்றபடியோ சாப்பிடுவோம். மாறுவேடத்திலேயே மந்த்ராலயம், கொக்கே சுப்பிரமணியர் கோவில், தர்மஸ்தலா என்று பிரபலமான கோயில்களுக்கும் சென்று வந்துள்ளோம்.

ஒரு நாளைக்கு 200 கிலோமீட்டருக்கு அதிகமாக பயணம் செய்ய மாட்டோம். வழியில் ஓட்டலில் தங்குவோம். தேவையான அளவு மது, சாப்பிட்டு, அரட்டை என இரவு 12 மணிக்குப் பிறகுதான் தூக்கம். இன்றைக்கு அவர் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டாலும், நான் அவரை ‘சிவாஜி’ என்றே அழைத்து வருகிறேன். ரஜினியின் எளிமைக்கு முக்கியக் காரணம் அவரது இளமையில் மூட்டை தூக்கி, பாதையோரக் கடைகளில் சாப்பிட்ட அனுபவம் தான். அதனால் பணத்தின் மதிப்பறிந்து இன்றும் எளிமையைக் கடைப்பிடிக்கிறார்.
கண்டக்டராக இருந்தபோது அவருக்கு கடுங்கோபம் வரும். இப்போது பெருமளவு குறைந்துவிட்டது. தினம் 40&50 சிகரெட் புகைத்தவர் இப்போது பத்துக்கும் குறைவாகவே புகைக்கிறார். மதுவையும் மிகவும் குறைத்து விட்டார். இந்த மாற்றத்துக்கெல்லாம் காரணமாக இருப்பவர், இமயமலையில் உள்ள ரஜினி வணங்கிப் போற்றும் சச்சிதானந்த சுவாமிதான்.
இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்து தனித்தனியே குடித்தனம் வைத்தபோது, முதலில் மிகவும் வருத்தப்பட்டார். சில காலத்திலேயே அது இயற்கையானது என்பதை உணர்ந்து, தன்னைத் தேற்றிக்கொண்டார்.

சிவாஜி ராவாக இருந்தபோது எச்சமநாயக், குருஷேத்ரா, சர்கொள்ளிராயனா போன்ற நாடகங்களில் அவர்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார். நான் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். ஒருமுறை இயக்குனர் கே.பாலசந்தர் ரஜினியை கூப்பிட்டு, ‘சிவாஜி ராவ்... நீ தமிழ் கற்றுக்கொள்’ என்று மட்டும் கூறிவிட்டுப் போனார். இதுபற்றி ரஜினி என்னிடம் கேட்டபோது, ‘அவர் சொன்னதற்கு ஏதேனும் காரணம் இருக்கும். உடனடியாக தமிழ் கற்றுக்கொள். நீயும் நானும் இனி தமிழில்தான் பேச வேண்டும்’ என்று கூறினேன்.
இதைத் தொடர்ந்து ரஜினி சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தேன். ரஜினியின் நண்பர்களில் பலர் அவரிடம் பல்வேறு காரணங்களுக்காக பணம் உள்பட பல்வேறு உதவிகளை பெற்றுக் கொண்டனர். நான் ஒருவன் மட்டும் ரஜினி பலமுறை வற்புறுத்தியும் கூட எந்த உதவியையும் பெற்றுக் கொள்ளவில்லை. பெற்றுக் கொள்ளவும் மாட்டேன். எனக்கு எனது நண்பனின் நல்ல நட்பு மட்டுமே போதும்.

ரஜினி எந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தாலும் அதன் கதையை கவிபுரம் கவிகங்காதர கோயில் அருகே அமர்ந்து விளக்கிக் கூறிவிடுவார். இது ‘வள்ளி’யில் தொடங்கி, இப்போதைய ‘ரானா’ வரையில் தொடர்கிறது. ரானா படத்தின் கதையை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினி இருவருமே சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். சரித்திரக் கதை. ‘சுல்தான் தி வாரியார்’ படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சிகளும் இதில் இணைக்கப்பட உள்ளன. எங்கள் நட்பு பிரிக்க முடியாதது. ரஜினியின் தூய்மையான நட்புக்கு முன் எத்தனை கோடி கொடுத்தாலும் இணையாகாது’’ என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசுகிற ராஜ்பகதூர் ஓர் தமிழர்! & பெங்களூருவிலிருந்து - ப.மூர்த்தி