பங்குச் சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

இயற்கை தன்னுடைய பலத்தை இன்னொருமுறை கோரமாக நிரூபித்திருக்கிறது. நில அதிர்வும் அதைத் தொடர்ந்து வந்த ஆழிப்பேரலையும் ஜப்பானை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையுமே உலுக்கிப் போட்டுவிட்டது. அந்தத் துயரத்தின் சுவடுகளாகக் காணக் கிடைக்கும் புகைப்படங்களையும் வீடியோ தொகுப்புகளையும் பார்க்கும்போது நம்மால் என்ன செய்யமுடியும் என்ற கழிவிரக்கம்தான் கவிகிறது.

இந்த இயற்கைச் சீற்றம் நாட்டின் கட்டமைப்பை மட்டுமல்லாமல் அதன் பொருளாதாரத்தையும் சீரழித்துவிட்டது. ஜப்பானில் இருந்து பரவும் கதிர்வீச்சின் அபாயம், ஆசிய நாடுகளை எல்லாம் பாதிக்கும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. புவியியல் பாதிப்புகளை முந்திக் கொண்டு பொருளாதாரப் பாதிப்பு தொடங்கிவிட்டது. அந்த நாளிலேயே ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. அடுத்தடுத்த நாட்களில் கொஞ்சம் நிதானப்பட்டுவிட்டாலும், இன்னமும் ஆசிய சந்தைகள் சரிவுமுகமாகத்தான் இருக்கின்றன. குறிப்பாக இந்தியச் சந்தை தொடர்ந்து சரிவுப் பாதையில்தான் போகிறது.

இதுபோன்ற நேரங்களில் நாம் சந்தையை எப்படி அணுகுவது? ‘ஒரு துயரத்தில் நாடே சிக்கித் தவிக்கும்போது நமக்கு லாபம் தரக் கூடியது எதுவென்று பார்ப்பது சரிதானா’ என்று தோன்றலாம். ஆனால், அப்படிப் பார்க்கத் தேவையில்லை. நாட்டின் மகா துயரத்தை நம்மைப் போன்ற தனிமனிதர்களால் சரிசெய்யமுடியாது. மற்ற நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டி அதற்கான புனரமைப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றன. நாம் இந்தச் சூழ்நிலையில் எப்படிச் செயல்படுவது என்று சிந்திப்பதுதான் சரி.

ஒரு அபார்ட்மென்ட்டில் ஒரு வீட்டில் உள்ள பெரியவருக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட்டது. அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரும் ஓடி வந்து உதவி செய்து, அடித்துப் பிடித்து அவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டனர். இதயக் குழாயில் அடைப்பு இருப்பதாகவும் உடனடியாக பைபாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் டாக்டர் சொல்லிவிட, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர் பெரியவரின் வீட்டில் இருப்பவர்கள். கூடவே வந்திருந்த அந்தப் பெரியவரின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர், அதே ஆஸ்பத்திரியில் பெரியவரைச் சேர்த்திருப்பதைச் சொல்லி, சலுகை கட்டணத்தில் 1000 ரூபாய் செலுத்தி தனக்கு முழுமையாக பாடி செக்கப் செய்துகொண்டார்.

அதோடு, அது எத்தனை லாபகரமாக இருந்தது என்று எல்லா வீட்டினருக்கும் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது சொல்லுங்கள்... அந்தப் பெரியவருக்கு ஆபரேஷன் நடக்கப் போகும் நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் செய்தது சரியா..? பெரியவருக்கு எமர்ஜென்சி என்றபோது உண்மையான அக்கறையோடு ஓடிப் போய் உதவிய பக்கத்து வீட்டுக்காரர், பெரியவரைப் போல நாமும் உள்ளுக்குள் நோயோடு இருப்போமோ என்று அச்சப்பட்டது நியாயமான விழிப்புணர்வுதான். அந்த மருத்துவமனையிலேயே செக்கப்புக்கான வசதிகள் இருந்தபோது, அதைப் பயன்படுத்திக் கொண்டதும் நியாயம்தான். அதனால், பக்கத்து வீட்டுக்காரரைக் குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.

நம்முடைய நிலையும் பக்கத்து வீட்டுக்காரரைப் போலத்தான். ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரழிவு குறித்த முழுக் கவலையும் நமக்கு இருக்கிறது. அவர்களுக்கு நம்மால் என்ன உதவி செய்யமுடியுமோ, அதை செய்யத் தயாராகத்தான் இருப்போம். அதே சமயத்தில் அந்த விளைவுகளால் நமக்கு ஏற்படப் போகும் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது பற்றியும் யோசிப்போம். அதேபோலத்தான் இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில் நம்முடைய முதலீட்டை எங்கே போட்டு வைக்கலாம் என்பது பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் சீரழிவால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது ஆட்டோமொபைல் துறைதான். அந்த நாட்டில் உள்ள பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கின்றன. ஜப்பானின் மிக முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான் நிறுவனம், 2000க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் சேதமடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அதோடு அந்த நிறுவனத்தின் முக்கியமான நான்கு தொழிற்சாலைகளில் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் உதிரிப் பாகமான ரப்பரின் தேவை கவனிக்கப்படவேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் உலகின் மொத்த ரப்பர் பயன்பாட்டில் ஜப்பானின் பங்கு மிகப் பிரதானமானது.

அதேபோல அதிக அளவில் ரப்பர் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இன்னொரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் சீனாவிலும் பல்வேறு காரணங்களால் ரப்பர் பயன்பாடு குறைந்திருக்கிறது. இத்தகைய சூழலில் நம் நாட்டிலும் ரப்பரின் விலை சரிந்திருக்கிறது. அடுத்து நிலைமைகள் சரியாகும்போது ரப்பரின் விலை கிடுகிடுவென்று உயரத் தொடங்கும். அதனால் நம் முதலீட்டை இப்போது ரப்பர் சார்ந்த நிறுவனத்தில் போடுவதுதான் சரியாக இருக்கும்.

ஆட்டோ மொபைலுக்குப் பயன்படும் ரப்பர் என்றால் டயர்தான்! டயர் தயாரிப்பில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் நிறுவனம் அப்போலோ டயர்ஸ். கடந்த 16.03.2011 தேதி நிலவரப்படி 68 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் அப்போலோ டயர்ஸ் நிறுவன பங்குகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. சந்தை தாறுமாறாக சரிந்து கொண்டிருக்கும் நேரத்தில்கூட, மிக நிதானமாக பெரிய அளவில் ஏற்ற இறக்கமில்லாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பங்கு, இந்த நேரத்தில் முதலீடு செய்வதற்கான சரியான பரிந்துரை.
உங்கள் முதலீட்டு ஆலோசகரின் ஆலோசனையோடு முடிவெடுங்கள். ஏனென்றால், அவர்தான் உங்களுடைய தனிப்பட்ட நிதிப் பொறுப்புகளைப் பற்றி முழுமையாக அறிந்தவராக இருப்பார். நான் சொல்வது ஒரு வழிகாட்டுதல் மட்டுமே! வேறொரு சூழல்... வேறொரு நிறுவனம் என்ற பார்வையோடு தொடர்ந்து செல்லலாம். காத்திருங்கள்... சொல்கிறேன். றீசி.முருகேஷ்பாபு