மூன்றாம் சாமம் ஆகிவிட்டது. நடத்தி கூட்டிப்போன பூமாரியை இப்போது தோளில் சாத்தியவாறு கைத்தாங்கலாக நடத்தியபடி வனத்தாயும் வெள்ளச்சியும் வீட்டுக்குக் கூட்டிவந்து கிடத்தியபோது கூரையில் அடைந்திருந்த சேவல்கள் கூவ ஆரம்பித்து விட்டன. மாட்டுக்காலில் மிதிப்பட்டு துவண்டு கிடக்கும் வெத்தலைக்கொடியைப் போல கலைந்துகிடக்கும் மகளைப் பார்த்த மருது திடுக்கிட்டார்.
“ஏ வனத்தாயீ’’ என்று அவர் அலறிய அலறலில், அடுப்பில் வெஞ்சனம் வைத்துக்கொண்டிருந்த வனத்தாயீ பதற்றத்தோடு ஓடிவந்தாள். அவளுக்கும் உடம்பும் மனசும் ஆடிக்கொண்டுதான் இருந்தது. இருப்புக்கொள்ளாமல் நெஞ்சு தவித்தது. பெற்ற வயிறு தீப்பந்தமாக எரிந்தது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலும் ஏறிய திகிலில் என்ன நடக்குமோ என்று பயத்தில் உறைந்து போய்த்தான் கிடந்தாள்.
‘‘என்னடி, நான் துடிச்சிப் போயி பேசிக்கிட்டே இருக்கேன். நீ குத்துக்கல்லு கணக்கா பேசாம நிக்கிறே?’’
எச்சிலை மென்று விழுங்கினாள் வனத்தாயீ... ‘‘அ... அ... அது... ஒண்ணுமில்ல! வீட்டுக்கு தூரமாயிட்டாளா அதான்’’ என்றவள் பேச முடியாமல் திணறினாள்.
‘‘என் தங்கமவ பெரிய மனுசியா ஆயி ரெண்டு வருஷமாச்சி. இப்படி புடுங்கிப்போட்ட வாழக்கண்ணு கணக்கா கிடக்கிறத ஒருநாளும் நானு பாக்கலயே’’ என்றவர், மகளிடம் “உனக்கு என்னத்தா செய்யுது?’’ என்று உயிர்த்துடிப்போடும் கலக்கத்தோடும் கேட்க, அய்யாவை நிமிர்ந்து பார்க்க முடியாமல் பார்த்தாள் பூமாரி. பாசம் பொழியும் அய்யாவிடம் என்னவெல்லாமோ பேசத் துடித்தாள். ஆனால், அவளால் பேசவே முடியவில்லை. கடப்பாறையால் இடிப்பது போன்ற வலியை பொறுக்க முடியாமல் துடித்தாள். துவண்டாள். மருது மகளின் வலியை தன்னுள் ஏற்றுக்கொண்டவராக வைத்தியர் வீடு நோக்கி ஓடினார்.
நேரம் ஆக ஆக துடித்துக் கதறினாள் பூமாரி. குப்புறப் புரண்டாள். மகள் அழுது கதறியபோது, ‘உஷ்! சத்தம் போடாத... வெளிய கேட்டுரப் போவுது’ என்று அதட்டிய வனத்தாயீ இப்போது மகளோடு சேர்ந்து அழுதாள்.
பூமாரி தும்பியாகத் துடித்தாள், துவண்டாள், மாடாகக் கதறினாள். அவள் உடலெங்கும் வலி. அவள் கதறல் சத்தம் கேட்ட ஊர்சனம் மொத்தமும் பூமாரியின் வீட்டில் திரண்டு நிற்க, செண்பகம் தலைவிரி கோலமாக ஓடிவந்தாள். பூமாரி கன்னத்தோடு கன்னத்தை வைத்துக் கதறினாள்.
‘‘பூவு, எம்பூவு உம்மொவம் கொராவி(வாடி) கிடந்ததப் பாத்த அன்னைக்கே என்ன வெவரமின்னு கேட்டேனே. நீ ஒண்ணுக்கும் பதில் சொல்லலையே... என்னம்மா செய்யுது?’’ என்று கதற, பூமாரியால் வாய் திறந்து பேச முடியவில்லை. வெறுமையாக பரக்க பரக்கப் பார்த்தாள்.
மருது ஓட்டமும் நடையுமாக வைத்தியரோடு வந்தபோது பூமாரியின் அழுகை மட்டுமல்ல... அவளே அடங்கிப் போயிருந்தாள். மகள் மீது விழுந்து கதறிய பொண்டாட்டியை ஓங்கி காலால் ஒரு எத்து எத்தினார். வனத்தாயி நாலு அடி தள்ளிப் போய் விழுந்தாள்.
‘‘ஆத்தா, நானு அப்பவே சொன்னேனே கேட்டியா’’ என்றவாறு வெள்ளச்சி அவளைத் தூக்குவதற்காக குனிந்தபோது, ‘‘சிறுக்கி மவளே, நீயும் இங்கனதான் நிக்கியா?’’ என்று கேட்டுக்கொண்டே இரண்டு எட்டு வைத்துப் பாய்ந்து வந்தவர், ஓங்கி இரண்டு அறை வைத்தார். அவளின் முன்னத்திப்பல் இரண்டு ரத்தத்தோடு தெறித்து வாசல் புழுதியில் விழ, அவள் தலை சுவரில் மோதியது. கோபம் அடங்காத மருது மீண்டும் அவள் தலைமயிரை கொத்தாகப் பிடித்துத் தூக்கினார்.
ஏற்கனவே வாங்கிய மிதியிலும் அடியிலும் துணியாகத் துவண்டு கிடந்த வெள்ளச்சி, ‘‘அய்யா மருமவனே! என்னை விட்டுருங்க... ரெண்டு மாசமா உம்மவ தலைக்கு ஊத்தல. சோதிச்சுப் பாத்ததுல வவுத்துக்குள்ள புள்ள தங்கியிருக்கிற வெவரம் தெரிஞ்சிச்சி. இது ஊருக்குள்ள தெரிஞ்சா குடும்ப மானம் வெளியே போறதோட, பரிசம் போட்ட கல்யாணமும் நின்னு போயிருமேன்னுதான் நானும் உம்பொண்டாட்டி சம்மதத்தோடு பூவுக்கு வைத்தியம் செஞ்சேன். நானு செஞ்சது தப்புன்னா உன் செருப்பக் கொண்டு அடி... நானு வாங்கிக்கிட்டுதேன்’’ என்றாள்.
மருது ஆடிப்போனார். ‘‘எம்மவளா இம்புட்டு பெரிய தப்பு செஞ்சது? ஈண்டு வெளியேறுன பச்ச ஆட்டுக்குட்டி கணக்கா வெள்ளந்தியா துள்ளித் திரிஞ்சிக்கிட்டு இருக்க எம்பொண்ணு இப்படியொரு அசிங்கத்தை செய்யமாட்டா.’’
அவரின் ஆறடி உடல் நடுங்கியது. தன் நெஞ்சிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கதறினார். சுற்றி இருந்தவர்களிடமெல்லாம், ‘‘ஏ... அப்பு! நீங்க சொல்லுங்க... எம்மவ எம்பூவு தப்பா நடக்கக் கூடியவளா?’’ என்று பைத்தியம் போல பிதற்ற ஆரம்பித்தவரை சுப்பையா சமாதானப்படுத்தினார்.
‘‘இந்தா பாரு மருது... இனி நடக்க வேண்டிய காரியத்த பாரு’’ என்றவரை இறுகக் கட்டிக்கொண்டு, ‘‘சுப்பையா, நீ சொன்னா எனக்குப் போதும். என் செல்ல மக அப்படி போறவளா?’’ என்று தன் முகத்தில¢ அறைந்து கொண்டு அவர் கேட்டபோது, ‘இனி இவரை நம்பிப் புண்ணியமில்லை’ என்று நினைத்த சுப்பையா, தானே காரியத்தை எடுத்து நடத்த ஆரம்பித்தார்.
வெள்ளச்சி சொன்னதைக் கேட்டு மருது மட்டும் ஆடிப் போகவில்லை... ஊரே ஆடிப்போனது. சிரித்த கண்ணும் சிரித்த முகமுமாக ஊருக்கே செல்லப்பெண்ணாக பறந்து கொண்டிருந்த பூவா இப்படி ஒரு காரியத்தைச் செய்தாள்? கணேசன்தானே நாளைக்கு தனக்குப் புருஷனாக வரப்போகிறான் என்ற நினைப்பில் கொஞ்சம் தடுமாறி இருப்பாளோ என்று ஊரே திகைத்துத் திகைத்துப் பேசியது.
தூரக்காட்டில் எள்ளுக்காய் அறுத்துக் கொண்டிருந்த விருமாயி கிழவிக்கு பூமாரி செத்துப்போன தகவல் அவள் பேத்தி மூலமாகப் போய்ச் சேர, விருமாயி தன் வயதைக்கூட மறந்தவளாக தலையிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு ஓடிவந்து கொண்டிருந்தாள்.
சோளத்தட்டையை அள்ளி கட்டுக்கட்டாக கட்டிக்கொண்டிருந்த கணேசன் வேலையை நிறுத்திவிட்டு பாதைக்காக ஓடிவந்தான்.
‘‘ஏ பாட்டி... எதுக்கு இப்ப இப்படி ஒப்பாரி வச்சுக்கிட்டு ஓடுறே? நீ ஓடுறதப் பாத்தா உனக்கே நாளைக்கு ஒப்பாரி வைக்க வேண்டி வந்துரும் போலிருக்கே. பாத்து போ. எங்கனயும் விழுந்து செத்துறப் போறே’’ என்றதும் விருமாயிக்கு கோபம் சண்டாளமாக வந்தது.
கணேசனை தீக்கனலாகப் பார்த்தவள், ‘‘ஏன்டா எடுவட்ட பயலே, உன்னாலதானடா எம்பேத்தி செத்துப் போனா... பூவு பூவுன்னு பூ கணக்கா ஊரு முழுக்க மணத்துக் கொண்டிருந்த எம்மயில கசக்கி எறிஞ்சிட்டு எடக்கு பேச்சாடா பேசுதே? எம்பேத்திய கொன்ன நீ நெடுநாளைக்கு உயிரோட இருக்கமாட்டடா. நீ மட்டுமில்ல... உன் குடும்பமே சேந்து அழிஞ்சிரும்’’ என்று சாபமிட்டவளாக இன்னும் வேகமெடுத்து ஓடினாள்.
கணேசன் அப்படியே இறுகிப் போய் நின்றான். விருமாயி கிழவியின் அழுகை அவன் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க, ‘என்னது... என் பூவு செத்துப் போயிட்டாளா? நேத்துகூட அவளைப் பார்த்தனே? இருக்காது... அப்படியெல்லாம் எதுவுமிருக்காது. இந்த விருமாயி கிழவி வயசான காலத்தில எதையோ உளறிக்கிட்டு போறா’ என்று எண்ணியவனாக அப்படியே நிற்க, காடுகளில் வேலை செய்து கொண்டிருந்த அனைவருமே இப்போது வயது வித்தியாசமில்லாமல், ‘‘பூவு... பூவு... உனக்கு என்னம்மா ஆச்சு’’ என்று கதறிக்கொண்டே ஓட, கணேசன் அத்தனை சக்திகளையும் இழந்தவனாக நின்றான். அவன் உடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் வெடுக் வெடுக்கென துடித்தன. அவன் உடலுக்குள் யாரோ கைவிட்டு, உயிரைத் திருகி திருகிப் பிடுங்கினார்கள். தலைக்குமேல் இருந்த வானத்தின் நீலம் மறைந்து போய், வானம் கறுத்து பாளம் பாளமாகச் சிதறி அவனை நோக்கி இறங்க, ‘பூவு... என் பூவு’ என்று கதறியபடி ஊருக்குள் ஓடினான்.
அவசரமாகக் கட்டிய பாடையில் பூமாரியை படுக்க வைத்திருந்தார்கள். பச்சை நிற பட்டுப்புடவையில், தூங்குவதுபோல அமைதியாகப் படுத்திருந்தாள் பூமாரி. முகம் மட்டும் கொஞ்சமாக வெளுத்திருந்தது. கணேசன் அங்கே போய் நின்றதுமே எல்லோருடைய பார்வையும் தீக்கோட்டையாக அவனைத் தகித்தது. வசவுகளும் சாபங்களும் நெருப்புத்துண்டாக அவன் மீது விழுந்தன.
சுப்பையா அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்... ‘‘ம்! தூக்குங்க. பெத்தவங்களும் உத்தவங்களும் அழுது அழுது பித்துப் புடிச்சி போயிரப் போறாக’’ என்றார்.
தூக்குவதற்காக நாலு பேர் குனிந்தபோது கணேசன் ஓடிவந்து அவர்களைத் தடுத்தான். ‘‘யாரும் அவளைத் தூக்கக்கூடாது’’ என்றதும், பூமாரியின் பெரியப்பா மகனான நாகமுத்து பளீரென அவனை அறைந்தான்.
‘‘என் தங்கச்சிய தூக்கிட்டுப் போகக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடா நாயே?’’
அடிபட்ட கன்னத்தைத் தடவிக்கொண்டே கணேசன் அமைதியாகச் சொன்னான். ‘‘நான் வரும்போதே எல்லா விஷயத்தையும் கேள்விப்பட்டுட்டுத்தான் வாரேன். என்னையும் பூவையும் சேத்து களங்கப்படுத்தியிருக்கீக. எம் பூவு களங்கமில்லாதவள்னு நானு நிரூபிக்கணும்.’’
பெருமாள் அவனிடம் எரிந்து விழுந்தார்... ‘‘ஏலேய்! இப்ப நீ என்னடா செய்யணும்ங்கிறே?’’
‘‘நானோ எம்பூவோ களங்கமில்லாதவங்கன்னு இந்த ஊருக்குத் தெரியணும்.’’
‘‘அதான் ஒரு உசுரு அநியாயத்துக்குப் போயிருச்சில்ல... இனி ஊருக்குத் தெரிய வச்சி என்ன செய்யப் போறே? அப்படியே நீ என்ன செஞ்சாலும் போன உயிரு திரும்பி வந்துருமா?’’
‘‘யோவ், அவன்கிட்ட என்னத்துக்கு வெட்டியா பேசிக்கிட்டு இருக்கீக? அவன அந்தப் பக்கமா எத்திவிட்டுட்டு பிணத்த தூக்குங்க’’ என்று ஆளாளுக்கு சத்தம் போட, கணேசன் சீறினான்.
‘‘எம் பூவை தூக்கணுமின்னு யாராவது ஒரு எட்டு நகந்தாலும், இப்ப இங்கன ஒரு கொலை விழும்!’’
கூட்டம் வெறி பிடித்தாற்போல கத்தியது... ‘‘ஏ... யாரப்பா அங்க! போயி போலீச கூட்டிட்டு வாங்க. நொறுங்க அடிச்சாதான் இவனுக்கெல்லாம் புத்தி வரும்.’’
‘‘போங்க! போய் கூட்டிட்டு வாங்க. எனக்கு வேண்டியதும் அதுதான். எம் பூவு தன் சாவா சாவல. அவள மருந்து வச்சி கொன்னு இருக்காக. போலீசு வரட்டும்... இந்த அநியாயத்த கேக்கட்டும். எம் பூவ இப்படி கொன்னவகள புடிச்சிட்டுப் போயி ஜெயில்ல போடட்டும்’’ என்று கணேசன் ஆக்ரோஷமாகக் கத்த, எல்லோரும் திகைத்து நின்றார்கள்.
சுப்பையா கேட்டார். ‘‘இப்ப நீ என்ன சொல்றே?’’
‘‘எம் பூவோட வவுத்தக் கிழிச்சி அவ களங்கமில்லாதவள்னு நிரூபிக்கணும்’’ என்றதும் ஆளாளுக்கு கூச்சல் போட்டார்கள்.
விருமாயி கிழவி முன்னுக்கு வந்தாள்... ‘‘நானு சொல்லறத கொஞ்சம் கேளுங்க. போலீசு கீலிசுன்னு போனா, என் பேத்திய அறுத்து கிழிச்சி நாசக்காடா ஆக்கிருவாக. நம்மளயும் டேசனுக்கும் வீட்டுக்குமா இழுத்து அடிச்சிருவாக. எப்பவுமே வவுத்துப் புள்ளக்காரிய அப்படியே புதைக்க மாட்டாக. வவுத்துச்சுமையோட அவ ஆயுசு முடியிற வரைக்கும் அலைவாள்னு, சுமைய வெளியேத்திட்டுதான் புதைப்பாங்க. அதனால பூவும் வவுத்து சுமையோட போக வேண்டாம். கணேசன் சொன்னமாதிரியே அவ சுமைய இறக்கிட்டுப் போவட்டும்.’’
விருமாயி சொன்னதைக் கேட்டதும் சுப்பையா, ‘‘இங்க யாரும் அதை செய்யமாட்டாக. ஏகாலிய இல்ல கூப்பிடணும்’’ என்றார் பொத்தாம் பொதுவாக.
‘‘நிறை மாசமா இருந்தாத்தான் அவன் வேணும். இதுக்கெல்லாம் அவன் தேவையில்ல. எம்பேத்தி வவுத்த நானே கிழிக்கிறேன்’’என்ற விருமாயி, யாரோ கொண்டு வந்து கொடுத்த ஈக்கியை வாங்கினாள். பூமாரியின் இளவயிற்றை கிழித்தாள். ஊர் ஜனங்கள் மொத்தமும் இமையை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கே இரவு நேர சாமத்தின் அமைதி நிலவியிருந்தது. வயிற்றை கிழித்த விருமாயி, ‘‘என் தங்கமே’’ என்று அலறினாள்.
பூமாரியின் வயிற்றினுள் அவளின் கர்ப்பப்பையை அடைத்தவாறு பெரிய கட்டி ஒன்று ரத்த கோளமாகத் திரண்டு இருக்க, ஊரே அழுகையில் கரைந்தது. மகளின் வயிற்றில் கட்டியைப் பார்த்த உடனே வனத்தாயி, ‘‘பூவு! நானே என்கையால உன்ன கொன்னு போட்டேனே’’ என்று மகள் மேலே விழுந்தாள். கணேசன் பிணமாகக் கிடந்த பூவின் அருகில் வந்தான் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். பிறகு யாரிடமும் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். அவனைத் தொடர்ந்து அழுகைச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
(முற்றும்)
பாரததேவி