முதல்வருக்கு சீட் தர மறுத்த கம்யூனிஸ்ட்கள்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

தமிழகத்தில் கூட்டணிக் குழப்பங்கள் எப்போதும் இல்லாத உச்சத்தில்! கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் அடிதடியில் தற்போதைய முதல்வர் அச்சுதானந்தனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்து அவமானப்பட்டது ஆளுங்கட்சி. 87 வயது அச்சுதானந்தனுக்கு சீட் தருவதில்லை என மாநிலத் தலைமை முடிவெடுக்க, இதை எதிர்த்து பல மாவட்டங்களில் போராட்டம் வெடித்தது. எதிர்ப்புகளுக்குப் பணிந்து மீண்டும் அவரை மலம்புழாவில் போட்டியிட அனுமதித்தார்கள். போன தடவையும் இப்படிச் செய்து, தொண்டர்களின் எதிர்ப்புகளுக்குப் பணிந்தே அவருக்கு சீட் கொடுத்து முதல்வர் ஆக்கியது கட்சியின் தேசியத் தலைமை. ஏன் இந்த சோதனை அவருக்கு?

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயனுக்கும் முதல்வர் அச்சுதானந்தனுக்குமான மோதல் உலகம் அறிந்தது. ஆனால் இருவருமே ஒருகாலத்தில் நெருங்கிய தோழர்கள் என்பதுதான் விநோதம்! கேரளாவின் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஈ.கே.நாயனாரின் அரசியல் வாரிசுகள்தான் இவர்கள் இருவரும். ஆலப்புழாவில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறிய வயதிலேயே அடுத்தடுத்து தாய் தந்தையை பறிகொடுத்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர் அச்சுதானந்தன்.

கண்ணூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, மாணவர் இயக்கத்தின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர் பினராய் விஜயன். தொழிற்சங்க போராட்டங்களில் கொடி கட்டிப் பறந்த அச்சுதானந்தனுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கும், கட்சித் தோழர்களிடம் அவர் பழகும் பாங்கும் பினராய் விஜயனைக் கவர, அச்சுதானந்தனின் சீடராகவே அரசியலில் வலம் வந்தார் பினராய். வயதில் தன்னை விட இளையவரான விஜயனை அச்சுதானந்தன் சமமாக நடத்தினார். ஒரு கட்டத்தில் மார்க்சிஸ்ட் தலைவரான ஈ.கே.நாயனாரின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக இருவருமே வலம் வந்தார்கள்.

1967&ல் கேரள சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் அச்சுதானந்தன். மூன்று ஆண்டுகள் கழித்து சட்டமன்றம் சென்ற பினராய் விஜயனை 1996ல் மின்துறை அமைச்சர் ஆக்கினார் நாயனார். ஆனால் இரண்டே வருடங்களில் பினராய் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. 2004&ல் நாயனார் மறைந்தபோது, அடுத்து கட்சிக்கு யார் தலைமையேற்பது என்ற கேள்வி வந்தது. அச்சுதானந்தனுக்கும் பினராய் விஜயனுக்கும் அப்போது வந்தது மோதல். அதுவரை நண்பர்களாகப் பழகிய இருவரும் 2006 தேர்தலில் ஒருவர் காலை இன்னொருவர் வாரி மத்தியக் குழுவுக்கு கடிதம் எழுத, கட்சி இரு கோஷ்டிகளாக பிளவுபட்டது.

கடுப்பான மேலிடம் அச்சு தானந்தனுக்கு தேர்தலில் சீட்டே வழங்கப் போவதில்லை என முடிவெடுக்க, பெருவாரியான தொண்டர்களும் கீழ் மட்டத் தலைவர்களும் மக்களும் அச்சுதானந்தன் பக்கம் நிற்க, மார்க்சிஸ்ட் கட்சியின் மேலிடத் தலைமை வேறு வழியில்லாமல் அச்சுதானந்தனை மலம்புழா தொகுதியில் வேட்பாளராக்கி, வென்றபின் முதல்வரும் ஆக்கியது. ஆனாலும் இருவருக்குமான மோதல் தொடர்ந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு பலத்த அடி கிடைக்க, சலம்பிக் கொண்டிருந்த இருவரையுமே பொலிட் பீரோவிலிருந்து விலக்கி வைத்தது கட்சி.

இந்த நிலையில்தான் கேரள தேர்தலில் வேட்பாளர்களை முடிவுசெய்யும் பொறுப்பில் இருக்கும் பினராய் விஜயன், எப்படியாவது அச்சுதானந்தனை ஓரங்கட்டத் துடித்தார். கேரள கம்யூனிஸ்ட்களை சுற்றிவளைக்கும் லாட்டரி ஊழல் விவகாரத்தில் அச்சுதானந்தன் ஆர்வம் காட்டுவதுதான் மேலிடத் தலைவர்களை எரிச்சலுக்கு ஆளாக்கியதாக சொல்லப்படுகிறது. ஊழலில் ஈடுபடுபவர்கள்மீது தயவு தாட்சண்யம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உறுதியில் இருப்பவர் அச்சுதானந்தன். லாட்டரி ஊழல் விவகாரம் பெரிதாக வெடித்ததும், இதில் தனது அமைச்சர்கள் சிலருக்கே தொடர்பு இருப்பதை அறிந்து கொதித்தார் அவர். 'இதற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும்’ என அவரே பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

இது மேலிடத் தலைவர்களுக்கு அதிர்ச்சி தந்தது. ‘அமைச்சரவை சகாக்களைக் கட்டுப்படுத்தும், காயப்படுத்தும் வேலைகளைச் செய்ய வேண்டாம். கொள்கை முடிவுகள் எதுவாக இருந்தாலும் கட்சியை ஆலோசித்து எடுங்கள்’ என்று மேலிடத் தலைவர்கள் அவரிடம் கண்டிப்பு காட்டினர். ஆனால், ‘முதல்வர் என்கிறரீதியில் அரசியல் சட்டரீதியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு நான் ஏன் கட்சியைக் கேட்க வேண்டும்?’ என்று அச்சுதானந்தன் பிடிவாதமாகக் கேட்டார். இந்தக் கேள்விதான் அவருக்கு வேட்டு வைக்க காரணமாக இருந்தது. ஆனாலும் தொண்டர்களின் போராட்டம் அவருக்கு சீட் வாங்கித் தந்துவிட்டது. இனி என்ன ஆகும்?   - டி.அருள் எழிலன்