கோடீஸ்வர மாமியாரின் கொட்டம் அடக்கும் தனுஷ்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

‘‘தமிழ் சினிமா ரசிகனுக்கு ‘மாப்பிள்ளை’ன்னதும் ரெண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒண்ணு ரஜினி படம் ‘மாப்பிள்ளை’. இன்னொண்ணு ரஜினியோட மாப்பிள்ளை. ஆக அந்த டைட்டில்ல நடிக்க தனுஷ்தான் மிகச்சரியான சாய்ஸ்..!’’ என்று ஆரம்பித்தார் ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் வழங்கும் ‘மாப்பிள்ளை’ பட இயக்குநர் சுராஜ்.

சன் பிக்சர்ஸுடனும், தனுஷுடனும் இரண்டாவது படம் தொடர்ந்து இயக்கும் வாய்ப்புப் பெற்ற முதல் இயக்குநர் என்கிற பெருமிதம் மின்னுகிறது சுராஜின் பேச்சில். அந்த வாய்ப்பு கனிந்த அனுபவங்களைத் தொடர்ந்தார் அவர்.

‘‘ஏற்கனவே ‘படிக்காதவன்’ முடிச்ச கையோட தனுஷோட அடுத்த படத்தையும் நானே டைரக்ட் பண்ண முடிவெடுத்ததும் நானும், தனுஷும் எப்படிப்பட்ட படம் பண்ணலாம்னு பேசினோம். அவருக்கு அடுத்து ரிலீஸாக இருந்த ‘உத்தமபுத்திரன்’ ஃபேமிலி என்டர்டெயினர். ‘ஆடுகளம்’ கொஞ்சம் வேற மாதிரி சீரியஸ் ஜேனர் முயற்சி. அதனால அதுக்கடுத்து ரிலீசாகப் போற படம் கம்ப்ளீட்டா மாஸ் என்டர்டெயின்மென்ட்டோட இருக்க வேண்டிய அவசியம் புரிஞ்சது. சட்டுன்னு ‘மாப்பிள்ளை’ டைட்டில் சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. அதுக்கடுத்த விவாதங்கள்ல ரஜினியோட ‘மாப்பிள்ளை’ பட லைனை மட்டும் எடுத்துக்க முடிவாச்சு. அதில இன்றைய காலகட்டத்துக்கும், தனுஷோட இமேஜுக்கும் ஏற்ற சுவாரஸ்யங்களோட ட்ரீட்மென்ட் இருக்கணும்னு முடிவெடுத்தேன். அதனால இது அப்படியே மாப்பிள்ளையோட ரீமேக்னு நினைச்சுட வேண்டாம்.

நிறைய ஆற்றல்களோட பொறுப்பில்லாம இருக்கிற இளைஞனா தனுஷுக்கு ஒரு இமேஜ் இருக்கு. இதுலயும் ‘வெட்டி ஆபீஸரா’தான் வர்றார் தனுஷ். அவரோட நண்பன் விவேக்கும் அவரும் பத்தாம் வகுப்பை கிராஸ் பண்ணிடணும்னு ஆனாலும் முயற்சி பண்றாங்க. அவங்களால ஈஸியா முடியற ஒரே விஷயம், சைட் அடிக்கிறது. படிக்கிறது வாய்க்கலைன்னாலும், பார்க்கிறது வாய்ச்சு... கோடீஸ்வர வீட்டுப்பெண் ஹன்சிகா மோத்வானியோட காதல் அரும்பி, அவங்க வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா போறார் தனுஷ். கோடீஸ்வர மாமியாருக்கும், ரோஷக்கார மாப்பிள்ளைக்கும் ஆரம்பத்திலேயே பனிப்போர் பத்திக்க, இவரை அவரும் அவரை இவரும் ஓவர்டேக் பண்றாங்க. கடைசியில எப்படி மாமியாரோட கோபத்தையும் கொட்டத்தையும் மாப்பிள்ளை தனுஷ் அடக்கறார்ங்கிறது கிளைமாக்ஸ்.

அதனால இதில மாமியாருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர். அதுக்கு ஸ்ரீதேவிலேர்ந்து மீனா வரைக்கும் ஒரு லிஸ்ட் எடுத்து முயற்சி பண்ணினோம். கடைசியா மனீஷா கொய்ராலா பொருத்தமா அமைஞ்சாங்க. கடைசியா ஹீரோயினா பார்த்த மனீஷாவை மாமியாரா பார்க்கிறதுக்கு ரசிகர்கள் தயாராகிற விதத்தில, அவங்களை மாடர்னான மாமியாராதான் காட்டியிருக்கோம். அதில மனீஷாவுக்கு இருந்த தயக்கமும் பயமும் கூட போயிடுச்சு.

கோடீஸ்வர வீட்டுப்பெண்ணுக்கு ஹன்சிகாவோட நிறமும், அழகும், வாளிப்பும் அப்படிப் பொருந்திப்போச்சு. கேரக்டரைப்போலவே ஹன்சிகா தனுஷுக்கும் பொருத்தமா இருந்தாங்க. படம் முழுக்க விரவிக்கிடக்கிற காமெடிக்கு யாரும் விதிவிலக்கில்லை. தனுஷுக்கு ஹன்சிகா கிடைக்கிற சீனே அப்படி ஒரு காமெடி பீஸ்தான். ரொட்டித்துண்டு ஃபிகர்களைப் பார்த்தாலே அலையற பசங்களுக்கு அல்வாத்துண்டு கண்ணில பட்டா விடுவாங்களா..? அப்படி பாதாம் அல்வா போல ஹன்சிகா விவேக் கண்ணில சிக்க, அதை பிக்கப் பண்ண ஒரு லெட்டர் ரெடி பண்றார். ஆனா அதைக்கொண்டுபோய் கொடுக்கிற வேலையை உற்ற நண்பனான தனுஷ்கிட்ட கொடுக்க, காதல் இடம் மாற... தனுஷும் தடம் மாற... அவர் கைல சிக்கிடுது ஹன்சிகா பட்சி. அந்தக் கவலைல காதலே வேண்டாம்னு முடிவெடுக்கிறார் ‘சைல்ட் சின்னா’ விவேக்.

‘பேராண்மை’க்கு ஒளிப்பதிவு செய்த சதீஷ்குமார் இதில கமர்ஷியல் லைனுக்கு வந்து கலக்கியிருக்கார். மணிசர்மா இசைல அமைஞ்ச அஞ்சு பாடல்கள்ல ரஜினியோட ‘மாப்பிள்ளை’ல வந்த ‘என்னோட ராசி நல்ல ராசி...’ ரீமிக்ஸ் அமர்க்களமா இருக்கும். கோடியில் ஒரு பாடலான அதை திருநெல்வேலில 200 டிராக்டர்கள், 400 மாட்டு வண்டிகள், 20, 30 சாமி சிலைகள், 1000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள்னு வச்சு ஒரு கோடி ரூபாய்க்கு எடுத்தோம். இத்தனை பிரமாண்டமா செலவு செய்ய சன் பிக்சர்ஸாலதான் முடியும். அதோட அதைக் கொண்டுபோய் மக்கள்கிட்ட சேர்க்கிற வித்தையும் அவங்ககிட்ட இருக்கிறதால அழகா மாப்பிள்ளையை அலங்கரிச்சுக் கூட்டிவரவிருக்கேன்..!’’ வாங்க மாப்பிள்ளைகளா... வாங்க..! - வேணுஜி