மகாத்மா காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை!
ஆம். இத்தனைக்கும் அது ஆயில் பெயிண்டிங். என்றாலும் அதில் வரையப்பட்டது மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் என்ற பெருமை இந்த ஓவியத்துக்கு உண்டு. எனவேதான் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.இந்த உருவப்படம் லண்டனில் உள்ள பாரம்பரிய பொருள்களை ஏலம் விடுவதற்கான போன்ஹாம்ஸ் இல்லம் மூலம் சில நாட்களுக்கு முன் இணைய வழியில் ஏலம் விடப்பட்டது. இதன் ஆரம்ப விலை ரூ.57 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா மற்றும் ஆய்வுகள் பிரிவில் ரூ1.7 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
1931ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்க லண்டனுக்கு மகாத்மா காந்தி சென்றார்.
அப்பொழுது அங்கு புகழ்பெற்ற ஓவியரான கிளேர் லெய்டன் அறிமுகமானார். மகாத்மா காந்தியின் தோற்றத்தாலும் பழகும் முறையாலும் தெளிவான பேச்சாலும் ஈர்க்கப்பட்ட கிளேர் லெய்டன், ‘உங்களை ஓவியமாக வரைய விரும்புகிறேன். இதற்கு உங்கள் அனுமதி வேண்டும்...’ என வேண்டுகோள் வைத்திருக்கிறார். புன்னகையுடன் மகாத்மா காந்தியும் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். அப்படி வரையப்பட்ட ஓவியம்தான் இன்று இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயிருக்கிறது. இதுகுறித்து போன்ஹாம்ஸ் விற்பனையகத்தின் தலைமை அதிகாரி ரியொனன் டெமிரி, நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட தகவல், இணையத்தில் வைரலாகியுள்ளது.‘ஆயில் பெயிண்டிங்கில் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் ஒரேயொரு ஓவியமாக இது கருதப்படுகிறது. இதற்கு மதிப்பு மட்டுமல்ல... மரியாதையும் அதிகம்.
ஓவியா் கிளேர் லெய்டனால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் இந்த உருவப்படம் உலகளவில் பல்வேறு தரப்பு மக்களை அவா் சந்தித்து ஆதரவளித்ததை பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணமாக உள்ளது...’ என்கிறாா் ரியொனன் டெமிரி.ஓவியா் கிளோ் லெய்டன், 1989ல் காலமானாா். அதன்பிறகு அவரிடமிருந்த இந்த உருவப்படம் போன்ஹாம்ஸுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
என்.ஆனந்தி
|