நடிகைகளைவிட இப்ப Digital Influencer க்கு மதிப்பு அதிகம்!
‘அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்...’ மட்டுமல்ல... கூடவே அறிவும் அதிகம் என்பது போல் தெளிவான பேச்சு, சிந்தித்து சொல்லும் பதில்கள் எனக் கவர்கிறார் நாயகி தேஜு அஸ்வினி. பெயருக்கேற்றார் போல் பளிச்சென ஜொலிக்கிறார்.
 மல்டிபிளக்ஸ் செயினில் வேலை... எப்படி சினிமாவில்..?
எனக்கு சினிமா ஐடியாவே இல்ல. ஒரு டான்ஸ் ஸ்டூடியோ சொந்தமா இருந்துச்சு. டான்ஸ் கிளாஸ் எடுப்பேன், ஃபிட்னஸ், பொழுதுபோக்கு, ஆர்வம் எல்லாமே டான்ஸ்தான்.
பிவிஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டர் குரூப்பில் சேல்ஸ் பிரிவில் இருந்தேன்.  ஆனால், நிறைய அலைச்சல் இருக்கும். அதற்கிடையில் மாடலிங், போட்டோ ஷூட் வாய்ப்புகள் வந்துச்சு. 9 மணியில் இருந்து 6 மணி வரை வேலை. அதன்பிறகு மாடலிங். 
மாடலிங் ஷூட்டிங்கிலேயே ஒரு நாளைக்கு ரூ.10000 முதல் ரூ.20000 வரை வர ஆரம்பிச்சது. ஆனால், என்னுடைய வேலையில் எனக்கு மாச சம்பளம். அதுவும் டார்கெட், தினம் கிளையண்ட் மீட்டிங், அலைச்சல் இப்படி நிறைய இருக்கும். ஏன் முழு நேரமா மாடலிங் செய்யக் கூடாதுன்னு நினைச்சேன்.  அப்படிதான் மாடலிங் என்னுடைய ப்ரொஃபஷன் ஆனது. என்னுடைய ஃபிளாட்டில் இருந்த ஃபிரண்ட் மூலமா நடிக்க வாய்ப்பு வந்துச்சு. எனக்கு டான்ஸ் ஆடத் தெரியும், நடிப்பு எப்படினு தயங்கினேன். சரி முயற்சி செய்து பார்ப்போமேன்னு நடிச்சதுதான் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் ஒரு ரோல்.
 தொடர்ந்து ஆடிஷன் மூலமா தேர்வான படம்தான் ‘என்ன சொல்ல போகிறாய்’. அதில் ஹீரோயின். ரொம்ப நல்ல கேரக்டர். என்னுடைய நடிப்புக்கும் பாராட்டு கிடைச்சது.
ஆனால், கொரோனா 2.0 டைம்ல படம் மாட்டிக்கிச்சு.
ஒரு சீட்டு விட்டு ஒரு சீட்டு உட்கார்ந்துதான் படம் பார்க்கக் கூடிய நிலை. இதுக்கிடைல அடுத்தடுத்து ‘மூன்றாம் கண்’, ‘பிளாக் மெயில்’ படங்களில் ஒப்பந்தம் ஆகிட்டேன். ஒரு தெலுங்கு படமும் முடிச்சிட்டேன். அப்பா சினிமாவில் இசைக்கலைஞர்... ஏன் உங்களுக்கு சினிமா ஐடியா இல்லை ?
அப்பா என்னதான் சினிமாவில் இருந்தாலும் அவருக்கான வருமானம் குறைவுதான். அப்பா சத்திய நாராயணன், தெலுங்கில் பிரபல மியூசிக் டைரக்டர் சக்ரவர்த்தி சார்கிட்ட மியூசிக் கலைஞரா இருந்தார். அவருடைய எல்லா படத்திலும் அப்பா இருப்பார். மிடில் கிளாசுக்கும் கீழ இருந்த வாழ்க்கை. எப்படியாவது அப்பா, அம்மாவை நல்லா வெச்சுக்கணும்... அதனால் நல்ல வேலை, நல்ல சம்பளம் என்கிறதுதான் என்னுடைய குறிக்கோள்.
சினிமா வாய்ப்புகள்தான் எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியுமே... அதனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லாமல் எம்.ஏ (ஹெச்.ஆர்) படிச்சு முடிச்சுட்டு வேலைக்குதான் டார்கெட் செய்தேன். ஆனால், காலம் நமக்கு வேற ஒண்ணு யோசிச்சு வச்சிருக்கு.
முன்பு போல் ஹீரோயின்களுக்கான மவுசு இப்போது இல்லையே?
ஹீரோயின்களுக்கு மட்டுமா? சினிமா நடிகர்கள், கலைஞர்களுக்கான முக்கியத்துவம் ரொம்ப குறைஞ்சிடுச்சு. முன்பெல்லாம் மாடலிங், சினிமாத்துறை இரண்டுக்கும் நடுவில்தான் போட்டியிருந்துச்சு.
ஆனா, இன்னைக்கு சினிமா கலைஞர்களுக்கு என்ன முக்கியத்துவம் கிடைக்கிறதோ அதைவிட அதிகமா இம்ப்ளூயன்சர்களுக்கு கிடைக்குது. உண்மையாவே திறமையா வீடியோக்கள் போடுகிற மக்களை நான் குறை சொல்லலை. ஆனால், ஆரோக்கியம் இல்லாமல் வெறுமனே கிளாமர் காண்பிச்சு 30 செகண்ட் வீடியோ போடுகிற நபர்களுக்கும் அதே அளவு பிரபலம் கிடைக்கிறதுதான் என்னவிதமான மனநிலைனு தெரியல.
ஒவ்வொரு பட வாய்ப்பு கிடைக்கிறதுக்கு பின்னாடியும் அவ்வளவு கடின உழைப்பும் தேடலும் இருக்கு. நடிகைகளுக்கு இந்த நிலைமைனா... நடிகர்கள், டெக்னீசியன்கள் நிலமையெல்லாம் யோசிச்சு பாருங்க.
ஆனால், ஓகே... இதுதான் எதிர்காலம்... இதுக்கு நாம ரெடி ஆகணும். அதேநேரம் இதே டிஜிட்டலில் நல்லதும் இருக்கு. இதை நாம மறக்கக் கூடாது. நம்ம வேலைக்கும் நம்ம திறமைக்கும் உடனுக்குடன் பாராட்டும் விமர்சனமும் கிடைச்சிடுது. ஈஸியா நாமும் நம்மை அப்டேட் செய்துக்கலாம். எல்லாமே இன்னைக்கு வெளிப்படையாய் இருக்கிறதும் நல்லதுதானே! ‘பிளாக் மெயில்’..?
மு.மாறன் சார் டைரக்ஷன்ல ஜி.வி.பிரகாஷ் சார் நடிக்கிற படம். மாறன் சார் டைரக்ஷன்ல வந்த படங்கள் எல்லாமே பயங்கர திரில்லர் படங்கள்தான். இந்தப்படமும் அப்படித்தான். ஹீரோயின் கேரக்டர் கூட சும்மா ரொமான்ஸ், டூயட் இப்படி இருக்காது.
இதற்கு முன்னாடி ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ படங்கள் எல்லாம் பக்கா திரில் ஸ்க்ரீன்ப்ளே. இந்தப் படமும் அப்படிதான். எனக்கு கேர்ள் நெக்ஸ்ட் டோர் கேரக்டர். நான் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிற பொண்ணு. அவ்வளவுதான் இப்போதைக்கு சொல்ல முடியும். தெலுங்கில் அறிமுகம்... அந்தப் படம் எப்படி வந்திருக்கு ?
2024ம் வருடம்தான் பூஜை எல்லாம் முடிஞ்சு படப்பிடிப்பு நடந்துச்சு. அந்தப் படமும் தயாராகிட்டு இருக்கு. எனக்கு தாய்மொழி தெலுங்கு. அதில் அறிமுகம். சந்தோஷமா இருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. சாத் கான் டைரக்ஷன். அடுத்து ‘மூன்றாம் கண்’. கலையரசன் சார் ஹீரோ. இப்ப ‘பிளாக்மெயில்’ பட ரிலீசுக்கு காத்திருக்கேன். சப்போர்ட் பண்ணுங்க.
ஷாலினி நியூட்டன்
|