நெல் வயல் ஓவியம்!



பொதுவாக ஓவியங்களை கேன்வாஸில் வரைவார்கள் அல்லது ஓவியம் வரைவதற்கு என்றிருக்கும் பிரத்யேகமான தாள்களில், சுவர்களில் வரைவார்கள். ஆனால், ஜப்பானில் நெல் வயல்களையே கேன்வாஸாக மாற்றி, அதன் மீது ஓவியம் வரைகின்றனர். இதனை நெல் வயல் ஓவியம் என்று அழைக்கின்றனர். 
ஜப்பானில் உள்ள இனகடேட் எனும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், 1993ம் வருடம் தங்கள் கிராமத்தைப் புதிதாக வடிவமைக்க திட்டமிட்டனர். இதன் பொருட்டு கிராமத்தைப் பற்றிய தொல்லியல் ஆய்வுகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வில்தான் இனகடேட்டில் 2000 வருடங்களுக்கு மேலாக நெல் விவசாயம் செய்யப்பட்டு வருவது தெரியவந்தது.

பல நூறு வருடங்களாக இனகடேட்டின் அடையாளமாக நெல் விவசாயம் இருந்தது அப்போதுதான் தெரிந்தது. இனகடேட்டின் வரலாற்றையும், நெல் விவசாயத்தையும் பிரிக்க முடியாது என்று இனகடேட்டின் மக்கள் உணர்ந்தனர். ஊர் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இனகடேட்டையும், நெல் விவசாயத்தையும் கௌரவிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். இந்த திட்டம்தான், நெல் வயல் ஓவியம்.

இதற்கு முன்பு நெல் வயல் ஓவியத்தை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே ஜப்பானில் நெல் வயல் ஓவியம் இருந்தாலும், இனகடேட்டின் முயற்சியால் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் புத்துயிர் பெற்றிருக்கிறது. நகரத்துக்கு அருகில் இருந்த இனகடேட்டின் பகுதியில் நெல் வயல் ஓவியத்துக்காகவே, புதிதாக நெல் வயல்களை உருவாக்கினார்கள். அதற்கு முன்பு அந்த இடம் விவசாயம் செய்யாமல், காலியாக இருந்தது.

நெல் வயலையே கேன்வாஸாக மாற்றி, அதில் ஓவியம் போல நெல் நாற்றுகளை நட்டனர். இந்த நெல் வயல் ஓவியத்தைப் பார்ப்பதற்காகவே, 22 மீட்டர் உயரத்தில் ஓர் இடத்தை அமைத்தனர். அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்கும்போதுதான் நெல்வயல் ஓவியத்தை முழுமையாகக் காணமுடியும். 

2006ம் வருடம் இன்கடேட்டில் உள்ள நெல் வயல் ஓவியங்களைப் பார்ப்பதற்காக 2 லட்சம் பேர் வந்தனர். அப்போது இனகடேட்டின் மக்கள் தொகையே 5 ஆயிரம்தான். இப்போதும் கூட 7,420தான்.

இனகடேட்டைப் பார்த்து, யோனேசவா, ககுடா ஆகிய கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தங்களின் நெல் வயல்களில் ஓவியங்களை வரைந்தனர். இப்போது பத்துக்கும் மேற்பட்ட ஜப்பானிய கிராமங்களில் நெல் வயல் ஓவியங்கள் வரையப்படுகின்றன. 

ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் கிராமத்தினர் ஒன்றுகூடி என்ன மாதிரியான நெல் வகைகளை விவசாயம் செய்யலாம் என்று திட்டமிடுவார்கள். கம்ப்யூட்டரின் உதவியுடன் நெல் வயலில் எந்த ஓவியத்தை வரையலாம் என்று டிசைன் செய்வார்கள்.

ஓவியத்தை தேர்வு செய்ததும், அதில் என்னென்ன வண்ணங்களைப் பயன்படுத்தலாம என்று முடிவு செய்வார்கள். வெள்ளை, சிவப்பு, நீலம், மஞ்சள் வண்ணத்திலான நெல் நாற்றுகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் இந்த நான்கு வண்ணங்களில் தேவையானதை தேர்ந்தெடுப்பார்கள். 

அடுத்து, வயல் வெளியில் ஒவியத்துக்காக ஓர் இடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தில் உள்ள களைகளை எல்லாம் அகற்றுவார்கள். அந்த இடத்தில் ஒரு புல் கூட இருக்கக்கூடாது. வெட்ட வெளியாக இருக்கும் அந்த இடத்தில் ஓவியத்தின் வெளிக் கோடுகளை வரைவார்கள். பிறகு நெல்லை நடவு செய்வதற்காக ஓவியத்தின் மீது உழுவார்கள்.

மழைக்கு முன்பு ஓவியத்தின் மீது நெல் நாற்றுகளை நடவு செய்வார்கள். இந்த நடவின்போது மட்டுமே 500 முதல் 700 பேர் வரை வேலை செய்வார்கள். வழக்கத்தை விட, ஓவியத்தின் மீது நெல் நாற்றுகளை நெருக்கமாக நடவு செய்வார்கள். அப்போதுதான் அதை உயரத்திலிருந்து பார்க்கும்போது ஓவியம் போல காட்சிதரும். தினமும் பலமுறை தண்ணீர் விடுவார்கள். பெரியவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் விருப்பத்துடன் நடவு செய்வதில் ஈடுபடுவார்கள்.

இந்த நெல் வயல் ஓவியம் குழந்தைகளுக்கும் விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கிறது. ஓவியத்தின் மீது உள்ள நெற்பயிர் வளர ஆரம்பித்ததும், அதை உயரத்திலிருந்து கவனிப்பார்கள். ஏதாவது குறைபாடு இருந்தால் அந்த இடத்தில் மீண்டும் நடவு செய்வார்கள். களை இருந்தால் அதுவும் அகற்றப்படும். 

நெற்பயிர் நன்றாக வளர்ந்ததும் ஓவியம் முழுமையடைந்துவிடும். ஊர் மக்கள் எல்லாம் ஒன்றுகூடி உயரத்திலிருந்து ஓவியத்தைப் பார்த்து, எல்லோருக்குமே திருப்தி ஏற்பட்ட பிறகு சுற்றுலாப் பயணிகளும், மற்றவர்களும் பார்க்க அனுமதிதரப்படும்.

பெரும்பாலும் ஓவியங்கள் வரையப்படும் நெல் வயல் யாரோ ஒருவருக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். அவருக்கும், ஓவியம் வரைபவர்களுக்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டு, இந்தக் கலைச் செயல்பாடு நடக்கிறது. தங்களின் வயலில் எவ்வளவு பெரிய ஓவியம் வேண்டுமானாலும் வரைந்துகொள்ளலாம் என்று நிலத்தின் உடைமையாளர்கள் அனுமதி தருவது இதில் சிறப்பு.

இனகடேட்டின் ஒரு வயல் வெளியிலில் மவுண்ட் ஃபுஜியை ஓவியமாக நடவு செய்திருக்கின்றனர். 1,20,000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்த ஓவியம்தான் உலகின் மிகப்பெரிய நெல் வயல் ஓவியம்.

மோனாலிசா, காட்ஜில்லா என ஏராளமான நெல் வயல் ஓவியங்களை வரைந்திருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களில் மட்டுமே நெல் வயல் ஓவியங்களைக் காண முடியும். 

அந்த மாதங்களில்தான் நெல் நாற்றுகள் நன்றாக வளர்கின்றன. இயற்கைக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காத ஒரு கலை இது. வேதிப்போருட்கள், பூச்சிக்கொல்லிகள் என எதையும் பயன்படுத்துவதில்லை. இயற்கைச் சூழலுடன் இணைந்து கலையை ரசிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற சிறந்த இடம் இது.

இப்போது ஓவியஙக்ளைப் பார்ப்பதற்காகவே வயல்களுக்கு அருகிலேயே கோபுரம் போல உயரமான இடத்தை அமைத்திருக்கின்றனர். கட்டணம் செலுத்தி இந்தக் கோபுரத்தில் ஏறி, நெல் வயல் ஓவியங்களைத் தரிசிப்பதற்காகவே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஜப்பானை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

த.சக்திவேல்