சினிமாவுக்கு வரும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஃபேஸ் பண்ணிதான் நடிகையானேன்!



‘‘பட வாய்ப்புக்காக பல வருடங்களாக கோடம்பாக்கம் கதவுகளைத் தட்டித் தட்டி அலுத்துப்போனவர்களில் நானும் ஒருத்தி. சினிமா வேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். சோர்ந்துபோன என்னை உற்சாகப்படுத்தியது என்னுடைய பெற்றோர். அந்த ஊக்கம் கிடைக்காமல் இருந்திருந்தால் என்னால் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்க முடியாது...’’

மகிழ்ச்சி பொங்க பேசுகிறார் ஆத்யா பிரசாத். இவர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் நாயகி. ஒரு காலைப் பொழுதில் அவரிடம் பேசினோம்.
மினி பயோடேட்டா ப்ளீஸ்?சொந்த ஊர் கொச்சின். அடிப்படையில் கிளாசிக்கல் டான்சர். அப்பா, அம்மா இருவருக்கும் துபாயில் வேலை. விஷுவல் எஃபெக்ட்ஸ் படிக்கலாம்னு சென்னை வந்தபோதுதான் சினிமாவில் நடிக்கும் ஆசை துளிர் விட்டுச்சு.

முதல் சான்ஸ் எப்படி கிடைச்சது?

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘13’ படம்தான் என்னுடைய முதல் படம். அந்தப் படத்துக்காக மெட்ராஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்திடமிருந்து ‘வீடியோ எதாவது அனுப்ப முடியுமா’னு

கேட்டார்கள். தமிழ்ப் படம் பண்ணணும் என்பது நீண்ட நாள் ஆசை. 
உடனே நான் நடிக்க, அம்மா ஷூட் பண்ண சுடச்சுட ஒரு வீடியோவை அனுப்பி வெச்சேன். அதைப் பார்த்தபிறகு செலக்ட் பண்ணினார்கள். தொடர்ந்து ‘பன் பட்டர் ஜாம்’, மலையாளத்தில் ‘சுக்ரன்’ என்ற படம், இந்தியில் ஒரு படம் என்று வரிசையாக சில படங்கள் கமிட்டாச்சு.
‘பன் பட்டர் ஜாம்’ல சார்லி, சரண்யா பொன்வண்ணன் போன்ற சீனியர்களுடன் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?

இயக்குநர் ராகவ் மிர்த் கதை சொல்லும்போதே என்னுடைய கேரக்டர் பிடிச்சது. என்னுடைய ரோல் அழுத்தமான ரோல்னு படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். எதைப்பத்தியும் கவலைப்படாம நினைச்சத செய்ய நினைக்கும் சுதந்திரமான பொண்ணு. க்ளைமாக்ஸ்ல மெச்சூர்ட் ஆக்டிங்கை காண்பிக்கணும். இப்படி பல டைமன்ஷனை வெளிப்படுத்தக்கூடிய ரோல். சும்மா வந்து  போகும் ஹீரோயின் ரோல் என்றில்லாமல் பெர்ஃபாமன்ஸ் பண்ணக்கூடிய ரோல்.

அதுமாதிரி ஒரு ரோலில் நடிக்கணும் என்பதுதான் என்னுடைய விருப்பமா இருந்துச்சு. கேரக்டரைப் பொறுத்தவரை சவால் என்றால் நடிக்க வந்த முதல் படத்திலேயே அழுத்தமான வேடம் என்பது சவால். சேலஞ்ச்.இப்போது மலையாளத்தில் நடிக்கும் படத்திலும் மெச்சூர்ட் ரோல். க்யூட் ரோல் பண்ணுவது ஈசி. ஓவர் ஆக்டிங் ரோலும் அப்படிதான்.

நடிப்பைக் காட்டியாகவேண்டும் என்பதற்காகவே பர்பஸாக நடிக்கணும். அப்படி பண்ணும்போது ஃபேக் மாதிரி ஆயிடும். மெச்சூர்ட் ரோல் எனும்போது பாடிலேங்வேஜ், டயலாக் டெலிவரி என பல வித்தியாசத்தை காட்டணும். படம் பார்த்த எல்லோரும் என்னுடைய ஆக்டிங் இயல்பா இருந்துச்சுன்னு சொன்னாங்க.

மலையாள நடிகைகளுக்கு மொழி பிரச்னையாக இருக்குமே?

எனக்கு அந்தப் பிரச்னை வரல. சின்ன வயசுலேர்ந்து தமிழ்ப் படங்கள் பிடிக்கும். தமிழ்சினிமா பார்த்துதான் தமிழ் கத்துக்கிட்டேன். எனக்கு தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியும். சென்னையில் படிக்கணும் என்று முடிவானதும் தமிழ் கத்துக்கிட்டுபோனால் நல்லாயிருக்கும்னு 30 நாளில் தமிழ் கற்பது எப்படி என்ற புத்தகம் வாங்கி தமிழ் ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சேன்.

எனக்கு சரளமா பேசத் தெரியலைன்னாலும் எழுதவும், படிக்கவும் தெரியும். ‘பன் பட்டர் ஜாம்’ படத்துக்கு நான்தான் டப்பிங் பேசுவதாக இருந்தது. அப்போது நான் துபாயில் இருந்ததால் என்னால் பேச முடியவில்லை.

உங்க ஹீரோக்கள் ஜி.வி.பிரகாஷ், ராஜு எப்படி?

‘பன் பட்டர் ஜாம்’ ஃபன் என்றால் ‘13’ படம் சீரியஸ், ஹாரர் கதை. அந்தப் படத்துக்காக நிறைய சிரமங்கள் இருந்துச்சு. நைட் ஷூட், காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு என ரிஸ்க் இருந்துச்சு.
ஜி.வி.பிரகாஷ் சப்போர்ட்டிவ்வான ஆர்ட்டிஸ்ட். ஃப்ரெண்ட்லியா பழகுவார். சகஜமா பேசுவார்.ராஜு ரொம்ப ஜாலியான பெர்சன். செட் முழுவதுமே காலேஜ் மாதிரி ஃபன்னா இருக்கும். படப்பிடிப்பு மாதிரி தெரியாது. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து டூர் போன மாதிரி இருந்துச்சு.

இந்தியிலும் அடியெடுத்து வெச்சுட்டீங்க..?

‘நாக் பூமி’ என்ற அந்தப் படம் ஹீரோயின் ஓரியன்ட்டட் சப்ஜெக்ட். அதுல நாக தேவதையா பண்ணினேன். இந்தியில் மட்டும் ரிலீஸ் ஆச்சு. தமிழில் இன்னும் ரிலீஸாகவில்லை.
மலையாளம் - தமிழ் படங்களிடையே என்ன ஒற்றுமை, வித்தியாசம்  இருப்பதாக பார்க்கிறீங்க?

வித்தியாசம் இருக்கிற மாதிரி தெரியலை. மலையாளத்தில் ரியலிஸ்ட்டிக்கா இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. தமிழிலும் இப்போது ரியலிஸ்டிக்கான படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக நினைக்கிறேன். நடிகையாக ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வாய்ப்பு வந்தால் தமிழ்ப் படம்தான் செலக்ட் பண்ணுவேன். 

ஏனெனில், நடிகைக்கான வரவேற்பு தமிழில் கிடைப்பதுபோல் மலையாளத்தில் கிடைக்காது. மலையாளம் என்றில்லாமல் வேறு எந்த மொழியிலும் தமிழ் மொழிபோல் ஆடியன்ஸ் ஏத்துப்பாங்களான்னு தெரியாது.

அதைத்தான் வித்தியாசமாகப் பார்க்கிறேன். புதுமுகமா, பெரிய நடிகையா என்றெல்லாம் பார்க்காமல் ஏத்துக்கிறாங்க. அது பிடிச்சிருக்கு.

சினிமாவில் என்ன கத்துக்கிட்டீங்க?

இந்த ப்ரொஃபஷனை செலக்ட் பண்ணும்போது சொந்தங்கள், நண்பர்கள் எல்லோருமே சினிமா வேண்டாம்னு சொன்னாங்க. பெற்றோர் மட்டுமே என்கரேஜ் பண்ணினார்கள். மத்தபடி யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. சினிமா தப்பான இண்டஸ்ட்ரி என்று பயம் காட்டினாங்க. அப்போது அப்பா, அம்மாதான் என்கூட இருந்தாங்க. எல்லாத் துறைகளிலும் நல்லவங்க, கெட்டவங்க இருப்பாங்க. அதுபோல்தான் சினிமாவிலும்.

ஆனால், ஆரம்பத்தில் என்னை டிஸ்கரேஜ் பண்ணியது மனசுக்கு வருத்தமா இருந்துச்சு. அந்த காயங்களைத் தாண்டிதான் இப்போது உங்கள் முன் பேசுமளவுக்கு வந்திருக்கிறேன். சிலர் இன்னும் நான் புகழ் பெறாத நடிகை என்றுதான் நினைக்கிறார்கள். 

சினிமாவில் என்னை வழிநடத்த யாரும் கிடையாது. பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் நடிகையாக மாறினேன்.

இப்போது தைரியமா எந்தவொரு விஷயத்தையும் ஃபேஸ் பண்ண முடியும் என்ற கான்ஃபிடன்ஸ் வந்திருக்கு. ஸ்கூல், ஆபீஸ் என்று வரும்போது ஒரே மாதிரியான ஆட்களுடன்தான் பழக முடியும்.

சினிமா அப்படி அல்ல. வித்தியாசமான மனிதர்களிடம் பழக வேண்டும். ஆரம்பத்தில் பெண்ணாக சினிமாவுக்கு வரும்போது எல்லோரும் எதிர்கொண்ட பிரச்னைகளை நானும் ஃபேஸ் பண்ணியிருக்கிறேன். 

அந்தமாதிரி சமயத்தில் இண்டஸ்ட்ரி நமக்கு செட் ஆகாது என்ற மைண்ட்செட்டுக்கு கூட போனேன்.அதனாலேயே நிறைய வாய்ப்புகளை மிஸ் பண்ணினேன். எனக்கு டீசண்ட் ரோல் போதும்னு நினைச்சேன். அப்போது ‘உனக்கான டைம் வரும். டிரை பண்ணு’னு வீட்ல என்கரேஜ் பண்ணினாங்க. என்னுடைய பயணம் அவ்வளவு ஈஸி இல்லை. மிகவும் கடினமா இருந்துச்சு.

எந்த மாதிரி ரோல் பண்ண ஆர்வமா இருக்கீங்க?

பெர்ஃபாம் பண்ணக்கூடிய ரோல். கலர் கலர் டிரஸ்ல வந்துபோகாமல் ஒரு சீன் என்றாலும் பெர்ஃபாம் பண்ணணும். சவாலான ரோல் பண்ணணும். ‘பருத்திவீரன்’ ப்ரியாமணி மேடம் மாதிரி வில்லேஜ் ரோல் பண்ணணும்னு ஆசை.

எஸ்.ராஜா