தொல்(லைக்) காப்பியம்



வரிச் சலுகை வயசுக்கு வந்தா என்ன... வராட்டி என்ன!

இவங்க போடுற பட்ஜெட்டை எல்லாம் பார்க்கிறப்ப, பாரத தேசத்தை பணக்கார தேசமாக்க நினைக்கிறாங்களா, இல்லை பணக்காரர்களின் தேசமாக்க நினைக்கிறாங்களான்னே புரிய மாட்டேங்குது.  நாட்டின் மிகப்பெரும்பான்மையான ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நல்லதா ஏதாவது செய்வாங்கன்னு பார்த்தா, வருஷா வருஷம் நம்மளைத்தான் நல்லா செஞ்சு விடுறாங்க. இந்த வெட்டி குரூப்பை திட்டவும் முடியல.

கத்திரிக்கோலை நல்லா புடிக்கிறாரேன்னு முடிய கட்டிங் பண்றவரை கூட்டிக்கிட்டு போய் கட்டி நீக்குற ஆபரேஷன் பண்ண யோசிக்கிறதுதான் இந்த அரசின் லட்சணம்.  ரவிமேஸ்திரியா? இன்னைல இருந்து நீ ரவி சாஸ்திரின்னு, கோழி புடிக்கிறவனை கிரிக்கெட்ல கேட்ச் புடிக்க வடிவேலு கூட்டிக்கிட்டு போற ரேஞ்சுலதான் இவங்களோட மொத்த அமைச்சரவையும் இருக்கு.

அறிவுக்கூர்மையைப் பற்றி பேசுறப்ப, சட்டில இருந்தா ஆப்பைல வரும்னு சொல்வாங்க. சட்டி நிறையா வேணாம், சட்டில கொஞ்சம் ஒட்டி இருந்தாக்கூட ஆப்பைல வரும். ஆனா, இங்க பானையைக் கவுத்துப் போட்டாக் கூட ஒரு பருக்கையும் கிடைக்காது.  இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள் விலை உயருகிற மாதிரியும், அதே இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் விலை குறையுற மாதிரியும், நல்லா போட்டாங்கய்யா ஒரு பட்ஜெட்டு, பாத்ரூம்ல குப்புற கவிழ்த்துன பக்கெட்டு மாதிரி!

நாட்டுல ஆயிரக்கணக்கானவங்க சர்க்கரை நோயால் அவதிப்பட்டுக்கிட்டு இருக்காங்க. அதுக்கான மருந்துக்கு மறந்தும் ஒண்ணும் செய்யல. ஆனா, நாட்டு சர்க்கரை விலையை குறைப்போம்னு சொல்றாய்ங்க. கட்டில், மெத்தை, சோஃபா... அட, மேல சுத்துற சீலிங் ஃபேன்ல ஆரம்பிச்சு, நடுத்தர மக்களோட நடு மண்டைல நங்குன்னு கொட்டுற மாதிரி ஒட்டு மொத்த ஃபர்னிச்சர் அயிட்டங்களும் விலை ஏறப் போகுது. ஆனா, அம்பானியும் அதானியும் பொழுதுபோக்க கோவா கடற்கரைல மீன் புடிக்க வாங்குற தூண்டிலுக்கு விலையைக் குறைச்சு வைச்சிருக்காங்க.

நாட்டுல அவனவன் வருமானத்துக்கே வழியில்லாம இருக்கான்... இதுல வருமான வரி சலுகைய பத்தி வாய் பொளந்து பேசிக்கிட்டு இருக்காங்க.
அடில ஓட்டையான பானைல, அமேசான் நதியோட மொத்த தண்ணியை விட்டாலும், ஒழுகிட்டுதான் போகும். சம்பளம் வாங்கும் மாச வாடகைக்காரன் கொடுக்கிற வாடகையை வச்சு பெற்ற வரிச் சலுகை இனி இருக்காது... இன்ஷூரன்ஸ் பிரீமியம், ஸ்கூல் ஃபீஸ்னு எதுக்குமே இனி வரிச் சலுகை இருக்காது. மெடிக்கல் இன்ஷூரன்ஸுக்கான சலுகையும் இருக்காது.

இவ்வளவு ஏன், கல்விக்கடன் வட்டிக்கான வரிவிலக்கும் இருக்காது. இப்படி இருக்காது இருக்காதுன்னு நம்ம ரெண்டு காதுகள் முழுக்க இருக்காதுன்னே நிரப்பற அளவுக்கு ஓடுற ரயில்ல இருந்து ஒரு சக்கரமும் விடாம கழட்டிட்டாங்க. ஹெர்குலிஸ் சைக்கிள்ல கொண்டு போய் ஏரோபிளேன் சக்கரத்தை பொருத்திட்டாங்க!இதெல்லாம் பார்க்கிறப்ப வரிச் சலுகை வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்னன்னுதான் கேட்கத் தோணுது.

வாழுற குடிசைல விளக்கு வைக்காம, பேய் பங்களாவுக்கு பெயிண்ட் அடிக்கப் போறதுதான் இந்தியாவோட நிதியமைச்சகம். கோடிக்கணக்கில் கடனை வாங்கிட்டு வெளிநாடு ஓடுறவனை எல்லாம் விட்டுடுவாங்க... கடனைக் கொடுத்த வங்கி திவாலானா, எத்தனை கோடி டெபாசிட் போட்டிருந்தாலும், அஞ்சு லட்சம்தான் தருவாங்களாம். அதாவது அரசாங்கம் என்ன சொல்லுதுன்னா... நீ எத்தனை மீட்டர் துணி வாங்கிட்டு வந்தா எனக்கென்னா, நான் உனக்கு டவுசர்தான் தைச்சுத் தருவேன்னு சொல்லுது!

ஒரு கிண்ணம் மாவுங்கிற நிதியை எடுத்து சின்னதாவும் இல்லாம, பெருசாவும் இல்லாம பொதுவா ஒரு ரவுண்டை ஊத்தி... அதுல நாலஞ்சு நல்ல திட்டங்கள் என்கிற வெங்கா யத்தை அள்ளி பூ பூவா தூவி விட்டு... ஒரு பதினாறு கரண்டி நலத்திட்டங்கள் நெய்ய எடுத்து விளாவி விட்டு... இட்லிப் பொடியென்னும் உண்மையா உதவும் வரிச் சலுகைகளை மழைச் சாரல் மாதிரி தூவி விட்டு... பதமா வேக விட்டுன்னு மக்கள் ஆர்டர் சொல்றதுக்கு முன்னாலயே ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்’னு போயிடுறீங்களேய்யா!

கிணத்தை தூர் வாரவே துப்பில்லையாம்... இதுல ஏர்ல பூட்ட எருமை வேணும்னு ஏற்காடு போக வழி கேட்டானாங்கிற கதையா ஏற்கனவே அரசாங்கத்துக்கு வருமானத்தைக் கொண்டு வர ஏர் இந்தியாவை விற்க ஏலம் போட்டுக்கிட்டு இருக்கிறப்ப... இப்ப எல்ஐசில இருக்கிற அரசாங்கத்தோட பங்குகளையும் விற்க ரெடியாயிட்டாங்கன்னு நிதியமைச்சரே சொல்லிட்டாங்க!

சிவப்பு காயின் முன்னால போனா பின்னால கருப்பு காயினும் போயாகணுமே... எல்ஐசில பங்குகளை வித்தா கூடவே ஐடிபிஐ வங்கியோடதும் பின்னாலயே விற்கப்படும்!ஆக, இந்த அரசாங்கம் வருமானத்தைப் பெருக்காம, மக்களோட வயித்தெரிச்சலைத்தான் பெருக்கிக்கிட்டு இருக்கு.
நல்லா வாழ்ந்த ஜமீன்தாரு, கடைசி காலத்துல வீட்டுல இருக்கிற சாமான்களை வித்துத் தின்ன நிலைமைக்குதான் நாமளும்
வந்துட்டோமோன்னு நினைக்க வைக்குது அரசாங்கத்தோட ஐடியாக்கள்.

இப்படி நிறுவனங்களை விக்கிறதுக்கு பதிலா நான் சொல்ல வர ஐடியா என்னன்னா... பேசாம அரசாங்கம் ரியல் எஸ்டேட் பிசினஸ்ல இறங்கிடலாம். முதல்ல தாஜ்மகால்ல இருந்து ஆரம்பிக்கலாம். குட்டிங்களோட ஜட்டியோட சுத்துன சாமியாருங்க கூட தனி தீவு வாங்கி பால் காய்ச்சுறாங்க. அவ்வளவு காசு புழங்குற உலகத்துல முழுசா பளிங்கு கல்லுல கிரானைட்டை விக்கிறதுக்கு ஒண்ணும் சிரமம் இருக்காது.

ரூஃப் டாப்ல ஒரு நீச்சல் குளமும், தாஜ்மகாலுக்கு பின்னாடி ஒரு கோல்ஃப் விளையாடுற களமும் போட்டுட்டா எதிர்பார்த்த விலைக்கு மேல 20% லாபத்தோட வித்திடலாம். ரெண்டாவதா இருக்கு தார் பாலைவனம். ஒட்டுமொத்த ராஜஸ்தானே இப்ப பாலைவனமாதான் காட்சியளிக்குது, இதுல ராஜஸ்தான்ல தனியா எதுக்கு ஒரு பாலைவனம்? பாவம் அரபுக்காரங்க ஒட்டக புத்துணர்வு முகாம் நடத்தியோ இல்ல ஐரோப்பியாகாரங்க சோலார் எனர்ஜி செஞ்சோ பஞ்சம் பொழைச்சுக்கட்டும்.

அடுத்ததா, இருக்கவே இருக்கு இமயமலை. இமயமலைல ஒரு பக்கத்தை மினரல் வாட்டர் தயாரிப்பாளர் சங்கத்திடமும், இன்னொரு பக்கத்தை யுனிவர்சல் ஸ்டூடியோ, டிஸ்னின்னு பெரிய தீம் பார்க் நடத்துறவங்ககிட்ட யும் மொத்தமா வித்திடலாம்.

மிச்சம் சொச்சம் இடம் இருந்தா அடிக்கடி பார்டர் க்ராஸ் பண்ற பாகிஸ்தான்காரங்ககிட்ட டிரெயினிங் எடுக்க வாடகைக்கு விட்டுடலாம்.
இப்படி ஒவ்வொண்ணா விற்க சலிப்பா இருந்துச்சுன்னா மொத்தமா இந்தியாவையே வித்திடலாம். வியாபாரம் பண்ணணும்னு முடிவு செஞ்ச பிறகு ரீடெயிலா செஞ்சா என்ன, ஹோல்சேலா செஞ்சா என்ன?!l

தோட்டா ஜெகன்