Must Watch



ஜூனியர்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தெலுங்குப்படம், ‘ஜூனியர்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து, பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை பெற்றோர்களின் கண்காணிப்பு வளையத்துக்குள்ளேயே இருந்ததால் ஒருவித சலிப்புக்குள்ளாகிறான், அபினவ். குறிப்பாக தனது அப்பாவிடமிருந்து கொஞ்சம் இடைவெளியை எதிர்பார்க்கிறான். 

இதற்காகவே தூரத்தில் இருக்கும் ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்கிறான். அப்பாவிடமிருந்து விலகியிருப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க, மகிழ்ச்சியில் தத்தளிக்கிறான். புது நண்பர்கள், பேராசிரியர்களுடனான பழக்கம் என அவனது உறவு வட்டம் விரிவடைகிறது. 

பயிற்சிக்காக ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்கிறான் அபினவ். அந்த நிறுவனத்தின் முதலாளியின் மகள் விஜயாவுக்கும், அபினவ்வுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்கிறார் விஜயா. நிறுவனத்தில் நடக்கும் ஊழல்களை அபினவ் கண்டுபிடித்துத்தர, அவனுக்கு நல்ல பெயர் கிடைக்கிறது. தனக்கு ஒரு அக்கா இருந்ததாகவும், தான் பிறப்பதற்கு முன்பே அக்காவைத்த்துக்கொடுத்துவிட்டதாகவும், அந்த அக்காதான் விஜயா என்ற ரகசியமும் அபினவ்வுக்குத் தெரியவர, சூடுபிடிக்கிறது திரைக்கதை. குடும்பத்துடன் கண்டு களிக்க ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராதா கிருஷ்ணா ரெட்டி.

இஃப்

குழந்தைகளுடன் சேர்ந்து கலகலப்பான ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது, ‘இஃப்’.சில வருடங்களுக்கு முன்பு சிறுமி பியாவின் அம்மா இறந்துவிடுகிறார். 

அம்மா சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையிலேயே இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார் அப்பா. இதன் காரணமாக நியூயார்க்கில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு வருகிறாள் பியா. 

ஓர் இரவு பியா பாட்டியின் வீட்டுக்கு நடந்து செல்லும்போது அவளைப் பின்தொடர்ந்து வித்தியாசமான ஜந்து ஒன்று வருகிறது. அடுத்த நாளும் அந்த ஜந்துவைப் பார்க்கிறாள் பியா. கால்வின் என்பவரது வீட்டுக்குள் செல்கிறது ஜந்து. கால்வின் வீட்டில் விதவிதமான ஜந்துக்களைப் பார்த்து, அதிர்ச்சியடைகிறாள். அவன் ஒரு பிரச்னையில் மாட்டியிருப்பதும் பியாவுக்குத் தெரிய வருகிறது. 

அந்த ஜந்துக்களுடன் பியாவுக்கு எப்படி நட்பு ஏற்படுகிறது? கால்வினின் பிரச்னை என்ன? அதை எப்படி பியா தீர்த்து வைக்கிறாள் என்பதற்கு பதில் சொல்லியிருக்கிறது திரைக்கதை. 
இந்த லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் படம் அழகான இன்னொரு உலகத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. இதன் இயக்குநர் ஜான் கிராசின்ஸ்கி. 

தடக் 2

சில வருடங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்த இந்திப்படம், ‘தடக்’. இதன் அடுத்த பாகம்தான் இது. ஆனால், முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல. இந்தப் படம் வேறொரு கதையைப் பேசுகிறது. 

இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இளைஞன், நீல். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் புகழ்பெற்ற சட்டக்கல்லூரியில் படிப்பதற்கான இடம் கிடைக்கிறது. 

நன்றாகப் படித்து, வழக்கறிஞராக வேண்டும் என்பது அவனது கனவு. ஆனால், தன்னுடன் வகுப்பில் படிக்கும் ‘விதி’ என்ற மாணவியைச் சந்தித்தபிறகு எல்லாமே மாறுகிறது. 
‘விதி’க்கும் நீலுக்கும் இடையில் நட்பு ரீதியான பழக்கம் ஏற்படுகிறது. சமூகத்தில் உயர் வகுப்பைச் சேர்ந்த, வசதியான குடும்பத்தில் பிறந்தவள், ‘விதி’. 

நீலுக்கும், விதிக்கும் இடையிலான நட்பு, காதலாக மலர்கிறது. இந்தக் காதல் நீலுக்கு என்ன மாதிரியான பிரச்னைகளைக் கொண்டு வருகிறது என்பதே மீதிக்கதை. 
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்தப் படம். இதன் இயக்குநர் ஷாசியா இக்பால். 

ஹிருதயபூர்வம்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்த மலையாளப்படம், ‘ஹிருதயபூர்வம்’. இப்போது தமிழ் டப்பிங்கில் ‘ஜியோ ஹாட்ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது. இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, உயிர் பிழைக்கிறார் சந்தீப் பாலகிருஷ்ணன். 

புனேவைச் சேர்ந்த கர்னல் ஒருவர் விபத்தில் மரணமடைகிறார். அவருடைய இதயம்தான் சந்தீப்பிற்குப் பொருத்தப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஓய்வில் இருக்கிறார் சந்தீப். அவரை ஜெர்ரி பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் தன்னுடைய அப்பாவின் இதயம் பொருத்தப்பட்ட சந்தீப்பைக் காண வருகிறாள் கர்னலின் மகளான ஹரிதா. 

‘அடுத்த சில நாட்களில் எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. அதற்கு நீங்கள் வந்தால் அப்பா என்னுடன் இருப்பது போல இருக்கும்’ என்று சந்தீப்பிடம் வேண்டுகோள் விடுக்கிறாள் ஹரிதா. 

மறுக்கும் சந்தீப், பிறகு  ஒப்புக்கொள்கிறார். ஹரிதாவின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்வதற்காக ஜெர்ரியுடன் சேர்ந்து புனே செல்கிறார் சந்தீப். 

ஹரிதாவின் வீட்டில் சில நாட்கள் தங்கும் சந்தீப்பின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை நகைச்சுவையாகச் சொல்லிச் செல்கிறது திரைக்கதை.பீல் குட் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப் படம். சந்தீப்பாக கலக்கியிருக்கிறார் மோகன்லால். இப்படத்தின் இயக்குநர் சத்யன் அந்திக்காடு. 

தொகுப்பு: த.சக்திவேல்