ரேஷன் கார்டை பறிகொடுத்த தம்பதியரின் படமா இது..?



‘குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற தரமான படைப்புகளால் தமிழ்  சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் இயக்குநர் ராஜு முருகன். இவர் படங்கள் ரசிகர்களுக்கு ஆர்வத்தையும், சினிமா வியாபாரிகளுக்கு வசூலையும் கொடுக்கத் தவறியதில்லை. 
இப்போது சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை இயக்குநர் அனுராக் காஷ்யப் வெளியிட்ட நிலையில், இறுதிக்கட்ட வேலையில் பிஸியாக இருந்த இயக்குநர் ராஜுமுருகனிடம் பேசினோம்.

போஸ்டரில் சசிகுமார், சைத்ரா ஆச்சார், மோட்டார் சைக்கிள், பீடி என பல உருவகங்கள் தெரிகின்றன. இந்தப் பின்னணி என்ன?

கதைக்குள் அதற்கான காரணம் இருக்கும். பொதுவாக என்னுடைய படங்களில் கதைக்கு வெளியே இருக்கும் அம்சங்களை போஸ்டரில் வைக்கமாட்டேன். கதைக்குள் என்ன இருக்கிறதோ அதுதான் போஸ்டரிலும் இடம் பெற்றிருக்கும்.அடுத்து, பெண்கள் பீடி பிடிக்கக் கூடாது என்றெல்லாம் கிடையாது. புகை  பிடிக்கக் கூடாது என்றால் அது எல்லாருக்குமே பொருந்தும். அதுதான் எல்லோருடைய கருத்தாகவும் இருக்கும். படம் பார்க்கும்போது போஸ்டரில் இருக்கக்கூடிய எல்லா அம்சங்களுக்கும் பதில் இருக்கும். 

குடும்ப அட்டையைப் பறிகொடுத்த தம்பதியரின் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தக் கதை அமைந்துள்ளதா?

ஜனநாயக நாட்டில் அரசியல், அதிகாரம், மீடியா எல்லாமே பவர் சென்டராக இருக்கின்றன. இந்த சிஸ்டம் மனிதர்களை எப்படிப் பார்க்கிறது என்றால், அரசியல்வாதிகள் பார்வையில் ஓட்டாகப் பார்க்கப்படுகிறது, ஊடகங்கள் பார்வையில் சந்தாதாரர்களாக பார்க்கப்படுகின்றன, பிசினஸ்மேன்கள் பார்வையில் பிசினஸாக பார்க்கப்படுகிறது. இதுதான் மனிதர்களைப் பற்றிய பொதுவான பார்வையாக உள்ளது.

மனிதனை மனிதனாகவும், உணர்வுபூர்வமாகவும் பார்க்கணும். இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது. ஏஐ டெக்னாலஜி வந்துவிட்டாலும்  மனித உணர்வுகளுக்குத்தான் மதிப்பு அதிகம். ஏஐ என்ற புரோக்ராமை செட் பண்ணுவதும் மனிதன்தான்.ஒவ்வொரு தொழில் புரட்சி நடக்கும்போதும் மனிதனுக்கு இனி வேலை இருக்காது என்ற பேச்சு காதில் கேட்கும். 

மெஷின்கள் வந்த பிறகு மனிதர்களுக்கு வேலை இருக்காது என்று சொன்னார்கள். ஆனாலும் மனிதர்களுக்கான முக்கியத்துவம் குறையவில்லை.எப்போதும் மனிதனுக்குரிய மகத்துவம் குறையவே குறையாது. அதற்குக் காரணம் உணர்வுகள். அந்த வகையில் மனிதன் மனிதனாக பார்க்கப்பட வேண்டும் என்பதுதான் ‘மைலார்ட்’.

ஹீரோ தேர்வு எப்படி நடந்துச்சு? 

நீண்ட நாட்களாகவே சசிகுமார் சாரும் நானும் சேர்ந்து படம் செய்யலாம் என்று பேசிவந்தோம். ‘ஜிப்ஸி’ வெளிவந்த சமயத்தில் சசி சார், சமுத்திரக்கனி சார் இருவரையும் சேர்த்து படம் பண்ணுவதற்கு பேசியிருந்தேன். ‘நந்தன்’  இரா.சரவணன் வழியாக சசி சாருடன் நல்ல நட்பு ஏற்பட்டுச்சு. சசி சாருக்கு கதை பிடிச்சு இருந்ததால் உடனே ஆரம்பிச்சுட்டோம். சசி சார் அடிப்படையில் இயக்குநர் என்பதால் அவருடன் வேலை செய்வது மிகவும் சுலபம். 

இயல்பாகவே சசிகுமார் சார் மனித நேயம் உள்ளவர் என்ற பார்வை மக்கள் மத்தியில் இருக்கிறது. அது நடிகர் என்பதைத் தாண்டி மனிதாபிமானம் உள்ளவர் என்ற பார்வை. அதனால்தான் அவரால் ‘அயோத்தி’, ‘நந்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களைச் செய்ய முடிந்தது. இதில் முத்து சிற்பி என்ற கதாபாத்திரத்தில் வர்றார். 

நாயகியாக கன்னட நடிகை சைத்ரா ஆச்சாரை அறிமுகம் செய்கிறோம். ‘சைடு ஏ சைடு பி’, ‘டோபி’ போன்ற படங்களில் அவருடைய நடிப்பு மிரட்டலாக இருந்துச்சு. பெங்களூருவில் ஒரு காபி ஷாப்பில் சந்திச்சு கதை சொன்னேன். கதை அவருக்கு பிடிச்சிருந்தது. 

பிஸி ஷெட்யூலில் இருந்ததால் அவரால் உடனே கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. ஆனால், ‘இந்தப் படத்தை மிஸ் பண்ண மாட்டேன். எப்படியாவது நான் கால்ஷீட் தருவேன்’ என விரும்பி வந்தார்.

சுசீலா என்ற கதாபாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தப் படத்துக்காகவே தமிழ் கற்றுக் கொண்டார். அடிப்படையில் பாடகி என்பதால் மொழியை உடனடியாக அப்சர்வ் பண்ணினார். இளையராஜா சார் பாடல்களைப் பாடிப் பாடி தமிழ் கற்றுக் கொண்டார்‌ என்று கூட சொல்லலாம். 

குரு சோமசுந்தரம் முக்கியமான கேரக்டரில் வருகிறார். ‘ஜோக்கர்’ பண்ணியதால் அவருக்கும் எனக்குமான புரிதல் எப்போதும் உண்டு. அதுமட்டுமல்ல, நட்பை விட்டுவிடாமல் தொடர்ந்து பயணம் செய்து வருகிறோம். 

ஷூட்டிங் தொடங்குவதற்கு இரண்டு நாள் முன்புதான் கமிட் செய்தோம். உடனடியாக அந்த கேரக்டராகவே மாறினார். அவருடைய ஒவ்வொரு படத்திலும் அவருடைய அடையாளத்தைக் கண்டுபிடிக்க முடியாது. அது மாதிரிதான் இதிலும் இருக்கும். 

ஆஷா சரத் மையமான கதாபாத்திரத்தில் வர்றார். ‘பாபநாசம்’ படத்துல அவருடைய லுக், ஃபீல் பிடிச்சிருந்தது. அவர் இருந்தால் நல்லா இருக்கும்னு தோணுச்சு. துபாயில் வசித்து வருகிறார். கதை பிடிச்சு வந்தார்.இயக்குநர் கோபி நயினார் இருக்கிறார்.

மொத்த கதையில் கொஞ்ச நேரம் வந்தாலும் முக்கியமான கேரக்டர். ஜெயப்பிரகாஷ் சாருக்கு வித்தியாசமான வேடம்.நீரவ்ஷா பெரும்பாலும் பிரம்மாண்டமான படங்களில் மட்டுமே பணியாற்றும் ஒளிப்பதிவாளர். அவர் எப்படி இணைந்தார்?

பெரிய படங்கள் பண்ணியவர் என்ற மைண்ட் செட்  எனக்கும் இருந்துச்சு. ஏற்கனவே ‘மாடர்ன் லவ் ஸ்டோரி’ ஆந்தாலஜி எனக்கு பண்ணியிருந்தார். அதிலிருந்து நட்பு‌ உருவாச்சு. 
என்ன பட்ஜெட் என்பதைத் தாண்டி சினிமாவை ஆர்ட்டாக பார்க்கிறார். அவருக்கு என்னுடைய ஸ்கிரிப்ட் பிடிச்சிருந்தது. நீரவ் ஷா மாதிரி ஒளிப்பதிவு மேதைகள் ஒர்க் பண்ணும்போது அவர்களுடைய பார்வை, அவர்கள் தரும் வண்ணம் படத்தை அடுத்த தளத்துக்கு அழைத்துச் செல்லும். 

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிசியாக இருந்தாலும் இந்தப் படத்துக்காக தேதி ஒதுக்கி அர்ப்பணிப்போடு வேலை செய்தார்.  ஷான் ரோல்டன் இசையில் ‘ஜோக்கர்’, ‘மாடர்ன் லவ்’ ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவது முறையா கைகோர்த்திருக்கேன். ரசிகர்கள் கொண்டாடுமளவுக்கு பிரமாதமான பாடல்கள்  கொடுத்துள்ளார். 

எடிட்டிங் சத்யராஜ்.‘ஜிப்ஸி’க்குப் பிறகு ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது படம் செய்கிறேன். தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் பிரம்மாண்ட படைப்பாக உருவாக முழுச் சுதந்திரம் கொடுத்தார். ‘இட்லி கடை’யில் தனுஷுக்காக பாட்டு எழுதினீங்க. அவருக்காக எப்போது கதை எழுதப் போறீங்க?

தனுஷ் சாருக்கு ‘ஜோக்கர்’ படம் பிடிக்கும். நல்ல கலைஞர்களைப் பாராட்டுவது அவருடைய குணம். சினிமா ரீதியாக அவருடன் நல்ல நட்பு உண்டு. ஏற்கனவே ‘பவர் பாண்டி’ படத்தில் ஒரு பாடல் எழுதினேன். ‘இட்லி கடை’யில் பாடல் எழுத கூப்பிட்டார். அவரை வெச்சு  படம் பண்ணுவது விருப்பமான விஷயம் . ஏனெனில் தனுஷ் சார் ஆகச்சிறந்த கலைஞன். கதையும், அவரிடமிருந்து வாய்ப்பும் உருவாகும்போது அது நடக்கும்.

உங்கள் படங்களில் மக்களுக்கான கருத்துக்களை நுட்பமாக சொல்வீர்கள். அது மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளதா... மக்களிடம் கருத்துக்கள் சேராத போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? 

நான் அதில் தெளிவாக இருக்கிறேன். சினிமா என்னும் கிராஃப்ட்டை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லும் போதுதான் மக்கள் அதை எடுத்துக் கொள்வார்கள். இல்லையென்றால் அது பிரசாரமாக மாறிவிடும். ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அது மக்கள் தவறும் கிடையாது.  சினிமா என்பது பொழுது போக்குத்தளம். அந்த பொழுதுபோக்கு சாதனத்துக்குள் அழகான விஷயங்களைச் சொல்ல வேண்டும்.

சில விஷயங்கள் குறைவாகப் போய்ச் சேரும், சில விஷயங்கள் அதிகமாகப் போய்ச் சேரும். குறைவாக ஏன் போய் சேருகிறது என்றுதான் பார்க்க வேண்டும். ஃபிலிம் மேக்கிங்கில் என்ன குறை என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

கருத்துகளுக்கும், ஆடியன்ஸுக்கான பொழுதுபோக்கு ரசனைக்குமான கலவை சரிசமமாக இருக்க வேண்டும். இயக்குநராக சமூகத்துக்கான கருத்தையும் சொல்ல வேண்டும், அதேசமயம் பார்வையாளர்களை திருப்திப் படுத்தவும் வேண்டும்.

ஏனெனில் என்னுடைய தயாரிப்பாளருக்கு லாபம் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் இயக்குநராக எனது கவனத்தில் இருக்கும். அந்த வகையில் ‘மை லார்ட்’ ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும், தயாரிப்பாளருக்கு லாபத்தையும் தரும் என்ற நம்பிக்கை 
இருக்கு. 

எஸ்.ராஜா