சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் கடற்பசு காப்பகம்!
‘‘இன்னைக்கு இந்தியாவில் அதிகளவில் கடற்பசுக்கள் உள்ள பகுதி நம்ம தமிழ்நாடுதான். ஒருகாலத்துல அந்தமான், குஜராத் பகுதிகள்ல அதிகமிருந்தது. ஆனா, இப்ப அரிதாகிடுச்சு. குஜராத்துல ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பார்த்ததாக அங்குள்ள மீனவர்கள் சொல்றாங்க. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாசத்திற்கு ஒன்றிரண்டை மீனவர்கள் பார்க்கிறாங்க. அதனால்தான் அதனைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு கடந்த 2022ம் ஆண்டு தஞ்சை-புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் ஜலசந்தி பகுதியை கடற்பசு காப்பகமாக அறிவிச்சது. இப்போ, உலகளவில் இந்தக் காப்பகத்திற்கு அங்கீகாரம் கிடைச்சிருப்பது ரொம்பப் பெருமையா இருக்கு...’’ அத்தனை உற்சாகமாகப் பேசுகிறார் பாலாஜி வேதராஜன்.
கடற்பசுக்களுக்காக மட்டுமே வேலை செய்துவரும் ஓர் ஆச்சரிய இளைஞர் இவர். கடந்த 18 ஆண்டுகளாக இவரின் ஓம்கார் ஃபவுண்டேஷன் மூலம் இந்தப் பணியை முன்னெடுத்து வருகிறார்.
அதுமட்டுமல்ல, இந்த கடற்பசு காப்பகத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க காரணமானவர்களில் பாலாஜி வேதராஜனும் ஒருவர். அதனாலேயே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பதிவில் வனத்துறையுடன், பாலாஜி வேதராஜனின் ஓம்கார் ஃபவுண்டேஷனையும் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார். ‘‘சொந்த ஊர் பட்டுக்கோட்டை. 1998ம் ஆண்டு அதிராம்பட்டினத்தில் பி.எஸ்சி விலங்கியல் படிக்கும்போதே மீனவர்கள் உதவியுடன் கடலுக்கு அடியில் மூழ்கி புகைப்படங்கள் எடுத்தேன்.
காரணம், எங்க கடல் பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் வித்தியாசமாக இருந்ததுதான். அதை மற்றவங்களுக்கு சொல்லணும்னு தோணுச்சு. அந்நேரம் என்னுடைய பேராசிரியர் சிவசுப்ரமணியன் சார், எம்.எஸ்சி மரைன் பயாலஜி படிக்கச் சொன்னார்.
காரணம், கடல்குதிரையைப் பத்தி எம்.எஸ்சி அளவில் செய்ய வேண்டிய ஆய்வை நான் பி.எஸ்சி அளவிலேயே செய்திருந்தேன். அப்புறம் எம்.எஸ்சி, எம்.ஃபில், பிஹெச்.டி எல்லாம் முடிச்சேன். படிக்கும்போதே சுற்றுச்சூழல் சம்பந்தமான நிறுவனங்களில் தன்னார்வலராக வேலைகளும் செய்தேன். அப்படியாக பிஹெச்.டி பண்ணும்போது 2007ம் ஆண்டு இந்த ஓம்கார் ஃபவுண்டேஷனை ஆரம்பிச்சேன். OMCAR என்பதன் விரிவாக்கம் Organisation for Marine Conservation Awareness and Research. அதாவது கடல்வாழ் உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் ஆய்வு அமைப்பு. குறிப்பா, நாங்க ஆவுரியாவை பாதுகாக்கும் வேலைகளைச் செய்றோம். எங்க தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதியில் கடற்பசுவை ‘ஆவுரியா’னுதான் சொல்வாங்க. இதுவே ராமேஸ்வரம் பகுதியில் ‘ஆவுலியா’னு அழைக்கப்படுது.
எங்க தன்னார்வ அமைப்பின் லோகோவும் கடற்பசுதான். கடற்பசு இங்கிருக்குனு எனக்கு அப்போதே தெரியும். ஆனா, பொதுமக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இல்ல. மீனவர்களும் இதனை ஒரு மீனாகவே பார்த்தாங்க. ஒரு கடற்பசுவை பிடிச்சிட்டு வந்தால் அந்த ஊர்ல எல்லோரும் சேர்ந்து கூறு போட்டு வித்து சாப்பிடுவாங்க. ஆனா, வன உயிரின சட்டப்படி இது பாதுகாக்கப்பட்ட உயிரினம்.
அதனால், ஒருபக்கம் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக இருக்குது. இன்னொரு பக்கம் மீனவர்கள் வலையில் மாட்டினால் அவங்க சாப்பிடுறாங்க. அப்போ, முதல்ல நாம் அறிவியல்பூர்வமாக இப்படியொரு உயிரினம் இந்தக் கடல் பகுதியில் நிறைய இருக்குனு அரசுக்கு ஆதாரத்துடன் சொல்லணும்.
அது சாப்பிடக்கூடிய உணவு இந்தப் பகுதியில் அதிகம் விளையுதுனு நிரூபிக்கணும். அப்புறம், வேட்டையாடுவதைத் தடுத்து நிறுத்தணும். இதெல்லாம் சார்ந்து நாங்க வேலைகள் செய்ய ஆரம்பிச்சோம். பிறகு தமிழக வனத்துறையுடனும், மற்ற தன்னார்வ அமைப்புகளுடனும் இணைந்து பள்ளிகள், மீனவ கிராமங்கள்னு போய் ஒவ்வொரு நாளும் விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு வந்தோம்.
2011க்குப் பிறகு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இந்தக் கடலுக்கு அடியில் உள்ள புற்கள் எவ்வளவு இருக்குதுனு அளப்பதற்கு ஒரு புராஜெக்ட் வாங்கினேன்.
அப்போ, இந்த பாக் ஜலசந்தி பகுதியில் மொத்தம் 14 வகையான கடல் புற்கள் இருப்பது தெரிஞ்சது. அதிராம்பட்டினம் டூ தூத்துக்குடி வரை இந்தக் கடல் புற்கள் அப்படியே பரவிக் கிடக்குது. மிகப்பெரிய புல்வெளி இது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இப்படி அதிகளவிலான புல்வெளி கடலுக்கு அடியில் இருக்குது.
இதன் பிறகு 2016ம் ஆண்டு மத்திய அரசின் இந்திய வனவிலங்கு நிறுவனம் வந்தாங்க. அவங்க இந்தியா முழுவதும் இந்தக் கடற்பசு எங்கெங்கு இருக்குனு கண்டுபிடிப்பதும், மக்களிடம் விழிப்புணர்வு செய்றதுமாக இருந்தாங்க. இதனால் கடற்பசு சம்பந்தமான பணிகள் மேலும் வேகமெடுத்தது.
அப்புறம் மீனவர்கள் கடற்பசுவை சாப்பிடுறதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தினாங்க. அவங்க வலையில் மாட்டினதும் எங்கள் மூலமாக வனத்துறைக்குத் தகவல் சொன்னாங்க. நாங்களும் கடற்பசுவை விடுவிப்பதற்கான பணிகளைச் செய்தோம். மீனவர்களிடம் மாற்றங்கள் வர ஆரம்பிச்சது. இதனை சாப்பிடக்கூடாதுனு உணர்ந்தாங்க.
இந்நிலையில் 2021ம் ஆண்டு தமிழ்நாடு வனத்துறை கடற்பசுக்களை பாதுகாக்கணும்னு இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் சேர்ந்து பணியாற்றினாங்க. அப்போ, என்னையும் அதில் இணைத்தனர். இதில் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து எவ்வளவு தூரம் கடற்பசுக்கள் இருக்குதுனு பார்த்தோம்.
அம்மாபட்டினத்தில் இருந்து அதிராமபட்டினம் வரைக்கும் மார்க் செய்தோம். தொடர்ந்து இதற்கான வரைவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பிறகு தமிழ்நாடு அரசு 2022ம் ஆண்டு இதனை கடற்பசு காப்பகமாக அறிவிச்சாங்க. இது மொத்தம் 449 சதுர கிலோமீட்டர் கொண்டது...’’ என்கிறவர், கடற்பசு இங்கே அதிகமாக இருக்கக் காரணம் குறித்தும், நன்மைகள் பற்றியும் பேசினார். ‘‘இந்தியாவிறகும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் பகுதி ஆழம் குறைவானது. அலைகள் இல்லாதது. இதனால் சூரிய ஒளி நேரடியாக கடலில் பட்டு அதன்வழியாக நிறைய கடல் தாவரங்கள் வளருது. இப்படி சில கோடி ஆண்டுகளாக வளர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த புற்களை தின்னும் சைவ வகையைச் சேர்ந்த கடற்பசுவும் சுமார் ஐந்து கோடி ஆண்டுகளாக கடலில் இருக்குது. இங்க ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கான கடற்பசுக்கள் நீந்திட்டு இருந்தன.
கடந்த நூறு ஆண்டு காலமாக வேட்டையாடுதல், இயந்திர மீன்பிடி படகுகளின் வருகை போன்றவற்றால் குறைஞ்சு போச்சு. குறிப்பா, நவீன மீன்பிடி படகுகள் வரும்போது அதில் அடிபட்டு இறக்குறதும், மீனவர்கள் வலையில் மாட்டி அதனை இறைச்சியாக உண்பதும் அதிகரிச்சது. இதனால், இதன் எண்ணிக்கை குறைஞ்சது. இப்போ, சுமார் முந்நூறு கடற்பசுக்கள் இருக்கும்னு சொல்றாங்க. இந்தக் கணக்கை இந்திய வனவிலங்கு நிறுவனம் செய்திருக்காங்க. இந்தக் கடற்பசுவால் நமக்கு நிறைய பயன்கள் இருக்குது.
கடற்பசு ஒரு தாவர உண்ணி உயிரினம். இது இந்தப் பகுதியில் உள்ள 14 வகையான புற்களை உண்டு உயிர் வாழ்கிறது. இவை ஒருநாளைக்கு 40 முதல் 50 கிலோ வரை புற்களைச் சாப்பிடும். அப்புறம் அதிகபட்சமாக 600 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும். இதனால் என்ன நன்மைனா இப்போ, காட்டில் உள்ள யானைகள் ஒரு நாளைக்கு 150 கிலோ வரை இலைதழைகளை உண்ணும். அது காட்டிற்குள் அலையும்போது அது போடும் எச்சத்தின் மூலம் நிறைய விதைகளைப் பரப்பி காடுகளை உருவாக்கும்.
அதேபோல் இந்தக் கடற்பசுக்களும் 14 வகையான கடல் புற்களைச் சாப்பிட்டு தொடர்ச்சியாகப் பயணிக்கும்போது அதன் கழிவுகள் மூலமாக விதைகளைப் பரவச் செய்யுது. இதனால், மேலும் கடல் புற்கள் செழிப்பாக வளருது. இந்தக் கடல் புற்களால் என்ன நன்மைனா, இவை கடலுக்கு அடியில் மண் அரிப்பைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
இப்போ சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடல் அரிப்பு பத்தின செய்திகளைப் பார்த்திருப்பீங்க. ஆனா தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளில் இப்படியொரு செய்தி வராது. இதுக்கு முக்கிய காரணம் இந்தப் பகுதியில் கடல் புற்கள் பெரிய அளவில் பரவி இருப்பதுதான். அத்துடன் பவளப் பாறைகளும் நிறைய இருக்குது.
இதுதவிர இந்தக் கடல் புற்களுக்குள் நண்டு, சிறிய மீன், இறால், கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்ட சிறிய உயிரினங்கள் வாழும். இவை பெரிய மீன்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இப்படி புற்செடிகளுக்குள் மறைந்திருக்கும்.இந்தப் புற்களின் இலையின் அடிப்பகுதியில் கணவாய் மீன்கள் முட்டையிடும்.
அதனால் கடல் புற்கள் நன்றாக இருந்தால் அங்கே மீன்களும், நண்டுகளும், இறால்களும் நிறைய உற்பத்தியாகும். எங்க பகுதியில் கணவாய், கொடுவா மீன்கள் நிறைய கிடைக்கும். அதேபோல் நீலக்கால் நண்டு, ஃப்ளவர் ஷ்ரிம்ப்னு சொல்லப்படுற ‘வெள்ளை இறால்’ ஆகியவை இந்தப் பகுதியில் இருந்து நிறைய ஏற்றுமதி ஆகுது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் கடல் புற்கள்தான். இதனை கடற்பசு சாப்பிடும்போது இன்னும் நிறைய வளரச் செய்யுது. அதனால், மீனவர்களுக்கு நல்ல வருமானம் வருவதற்கு கடற்பசு காரணமாக இருக்குது. அத்துடன் கடல் அரிப்பைத் தடுத்து சுற்றுச்சூழலுக்கும் உதவுது...’’ என்கிறவர், உலக அளவிலான அங்கீகாரம் குறித்து தொடர்ந்தார். ‘‘உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு முக்கியமான ஓர் அமைப்பு ஐயுசிஎன்னு சொல்லப்படுற சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம். இவங்க நம் கடற்பசு காப்பகத்தை அங்கீகரித்தால் அது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும்.
இந்த ஐயுசிஎன் அமைப்பில் 2012ம் ஆண்டிலிருந்து ஓம்கார் நிறுவனம் உறுப்பினராக உள்ளது. அப்படியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஐயுசிஎன் மாநாட்டில் பங்கேற்று வந்தேன். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 1400 உறுப்பினர்கள் கலந்துப்பாங்க. இந்த அங்கீகாரத்திற்கு ஐயுசிஎன் உறுப்பினர்கள் எல்லோரும் ஒத்திசைவாக சரினு சொல்லணும். அதனால் மாநாட்டிற்கு முன்பாக தமிழ்நாடு வனத்துறையினர் ஒத்துழைப்புடன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தோம்.
‘இந்தமாதிரி எங்கள் பகுதியில் கடற்பசு காப்பகம் இருக்குது. அதற்கான பல்வேறு நடவடிக்கைகள் செய்திட்டு வர்றோம். ஐயுசிஎன் அங்கீகரிக்க எங்களுக்கு வாக்களியுங்கள்’னு கேன்வாஸ் செய்தோம். இதற்கான ஓட்டெடுப்பு ஆன்லைன் மூலம் நடந்தது. நாம் நினைச்ச மாதிரி எல்லோரும் ஆதரிச்சாங்க. அதனால் சமீபத்தில் ஐயுசிஎன் நம் கடற்பசு காப்பகத்தை அங்கீகரித்து இருக்காங்க.
சர்வதேச அளவிலான இந்த அங்கீகாரம் ரொம்ப முக்கியமானது. இன்னைக்கு சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கடற்பசுவை முற்றிலுமாக அழிய விட்டுட்டாங்க. ஆனா, நாம் பாதுகாத்திட்டு வர்றோம். அது பெருமையான விஷயமாக மாறியிருக்கு. அப்புறம், இந்த அங்கீகாரத்தால் நம் பகுதியில் சர்வதேச அளவில் நிறைய ஆராய்ச்சிகள் நடக்கும். அந்தவகையில் தமிழகம் இந்திய அளவிலும் உலக அளவிலும் இன்னும் முக்கியத்துவமான பகுதியாக மாறும்...’’ என மகிழ்ச்சியுடன் சொல்கிறார் பாலாஜி வேதராஜன்.
பேராச்சி கண்ணன்
|