உலகின் முதல் கைகள் இல்லாத வில்வித்தை வீராங்கனை இவர்தான்!
சமீபத்தில் தென்கொரியாவில் உள்ள குவாங்சூ நகரில் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் 47 நாடுகளைச் சேர்ந்த, 239 பாரா வில்வித்தை வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த பாரா வில்வித்தை வீராங்கனையான சீத்தல் தேவியும் போட்டியிட்டு, வரலாறு படைத்திருக்கிறார். ஆம்; தனி நபர் பிரிவில் தங்கம் வென்று உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தன்வசப்படுத்தியிருக்கிறார் சீத்தல். இதுபோக இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும், கலப்பு அணியில் வெண்கலப்பதக்கத்தையும் வென்று அசத்தியிருக்கிறார்.
 உலகின் முதல் கைகள் இல்லாத வில்வித்தை வீராங்கனையும் இவர்தான். உலக பாரா வில்வித்தை சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனையும் இவரே. யார் இந்த சீத்தல் தேவி?
 ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஸ்ட்வார் மாவட்டத்தில் அமைந்திருக்கும் லோய்தர் எனும் ஊரில் பிறந்தவர், சீத்தல் தேவி. பிறக்கும்போதே ‘போக்கோமெலியா’ என்ற அரிய மருத்துவப் பிரச்னையுடன் பிறந்தார்.
அதாவது, சீத்தல் பிறக்கும்போதே அவருக்கு இரண்டு கைகளும் இல்லை. இந்த உடல் ரீதியான குறைபாட்டைத் தகர்த்து, பாரா வில்வித்தையில் பல சாதனைகளைப் படைத்து, வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு ரோல் மாடலாகத் திகழ்கிறார், சீத்தல்.
கடந்த 2019ம் வருடம் கிஸ்ட்வாரில் இந்திய இராணுவம் இளைஞர்களுக்காக ஒரு நிகழ்வை நடத்தியது. அந்த நிகழ்வில் பார்வையாளராக கலந்துகொண்டு, இராணுவத்தின் கவனத்தை ஈர்த்தார்.
சீத்தலின் கல்விக்கும், மருத்துவத்துக்கும் இராணுவமே உதவ முன்வந்தது. முதலில் ப்ராஸ்தடிக்ஸ் கைகளைப் பொருத்துவதற்காக மருத்துவர்களைச் சந்தித்தனர். சீத்தலின் மருத்துவப்பிரச்னை காரணமாக ப்ராஸ்தடிக்ஸ் கைகளைப் பொருத்த முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஆனாலும் தனது நம்பிக்கையை இழக்காமல், உற்சாகத்துடன் இருந்தார் சீத்தல்.
கால்களைப் பயன்படுத்தி மரத்தில் ஏறுகின்ற சீத்தலின் திறமையைப் பார்த்து இராணுவ அதிகாரிகள் ஆச்சர்யத்தில் உறைந்துபோனார்கள். கால்கள் மூலமாக சீத்தலுக்கு என்ன மாதிரியான பயிற்சிகளைக் கொடுக்கலாமோ, அதையெல்லாம் அந்த இராணுவ அதிகாரிகள் கொடுத்தனர். பிறகு வில்வித்தைப் பயிற்சியைச் சீத்தலுக்குக் கொடுக்கலாம் என்று பயிற்சியாளர்களை நியமித்தனர்.
ஆனால், அந்தப் பயிற்சியாளர்களுக்குக் கைகள் இல்லாத ஒருவருக்கு வில்வித்தைப் பயிற்சி கொடுத்த அனுபவம் இல்லை. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மேட் ஸ்டட்ஸ்மேன் என்ற பாரா வில்வித்தை வீரரின் அனுபவங்கள் சீத்தலுக்குப் பயிற்சி கொடுக்க உதவியது.
ஆம்; சீத்தலைப் போலவே கைகள் இல்லாத வில்வித்தை வீரர், மேட். கடந்த வருடம் நடந்த கோடைகால பாரா ஒலிம்பிக் போட்டியில் பாரா வில்வித்தையில் தங்கப்பதக்கம் வென்றவர் மேட். இதுபோக, ஏராளமான பதக்கங்களை வென்றிருக்கிறார்.
வில்வித்தை மட்டுமல்லாமல் தனது வாழ்க்கையின் அனைத்து செயல்களையும் கால்களின் துணையுடன் மட்டுமே செய்கிறார். இவர் வில்வித்தைப் பயிற்சி செய்யும் விதம், நுணுக்கங்கள் என அனைத்தையும் அறிந்துகொண்டு, சீத்தலுக்குப் பயிற்சியளித்தனர் அந்தப் பயிற்சியாளர்கள். 11 மாதங்களிலேயே கால்களைக் கொண்டு, வில்வித்தை செய்வதை சிறப்பாக கற்றுக்கொண்டார் சீத்தல்.
பாராஒலிம்பிக் நீச்சல் வீரரான சரத் கயக்வாட்டும், இந்தியாவின் பார்வையற்ற கிரிக்கெட் வீரரான சேகர் நாயக்கும்தான் சீத்தலுக்கு ரோல்மாடல்கள்.
இவர்களைப் போலவே தன்னாலும் விளையாட்டில் சாதிக்க முடியும் என்று நம்பினார் சீத்தல். முழுக்கவனத்தையும் வில்வித்தையில் செலுத்தினார். கடந்த 2022ம் வருடம் கோவாவில் மாற்றுத்திறனாளி வில்வித்தை வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் கலந்துகொண்ட சீத்தல் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதே வருடம் சீனாவில் நடந்த ஆசியன் பாரா விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் பாரா வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்று, இந்தியாவுக்காக தனிநபர் மற்றும் கலப்பு அணி பிரிவில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார். இதுபோக இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினார். இதன் மூலம் உலகளவிலான தலைசிறந்த பெண்கள் பாரா வில்வித்தை வீரர்களின் பட்டியலிலும் இடம்பிடித்தார் சீத்தல். அப்போது அவருக்கு வயது 15தான்.
இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்குக் கொடுக்கப்படும் விருதுகளில், இரண்டாவது மிகப்பெரிய விருது, அர்ஜுனா விருது. 2023ம் வருடத்துக்குரிய கௌரவம் மிக்க அர்ஜுனா விருதை தன்வசப்படுத்தினார் சீத்தல். 2023ல் பாங்காக்கில் நடந்த ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட சீத்தல், கலப்பு அணி பிரிவில் தங்கமும், தனி நபர் பிரிவில் வெள்ளியும் வென்றார்.
இதே வருடத்தில் செக் குடியரசில் பாரா வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் தனி நபர் பிரிவில் பங்கேற்ற சீத்தல், வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். தவிர, 2024ம் வருடம் பாரிஸில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார். இதன் மூலம் சிறிய வயதில் பாரா ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வில்வித்தை வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். மட்டுமல்ல, இந்த ஒலிம்பிக் போட்டியில் கலப்பு அணி பிரிவில் பங்கேற்ற சீத்தல், வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
மட்டுமல்ல, ‘2023ம் வருடத்தின் சிறந்த இளம் தடகள வீராங்கனை’ என்ற சர்வதேச விருதை ஆசியன் பாராஒலிம்பிக் கமிட்டியும், ‘2023ம் வருடத்தின் சிறந்த பெண் பாரா வில்வித்தை வீராங்கனை’ என்ற விருதை உலக வில்வித்தைக் கழகமும் சீத்தலுக்கு வழங்கி, அவரை கௌரவித்துள்ளனர். இப்போது சீத்தலின் வயது 18 தான்.
த.சக்திவேல்
|