102 வயது மலையேற்ற வீரர்!
ஜப்பானுடைய மூன்று புனித மலைகளில் ஒன்று, மவுண்ட் ஃபுஜி. இதுவொரு சுழல் வடிவ எரிமலை. ஜப்பானின் உயரமான மலையும் இதுவே. இதன் உயரம்,3776 மீட்டர். அதாவது, 12,388 அடி. டோக்கியோவிலிருந்து தென்மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஃபுஜி. 300 வருடங்களுக்கு முன்பு இந்த எரிமலை வெடித்திருக்கிறது. அதற்குப் பிறகு வெடிக்கவே இல்லை. வருடத்துக்கு ஐந்து மாதங்கள் பனியால் சூழ்ந்திருக்கும். இப்படிப்பட்ட ஃபுஜி எரிமலையின் மீது மலையேற்றம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
 இந்நிலையில் கோகிச்சி அகுசவா என்பவர் ஃபுஜியின் மீது மலையேற்றம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது வயது 102. ஆம்; ஃபுஜியின் மீது மலையேற்றம் செய்த அதிக வயதானவர் கோகிச்சிதான். இதற்கு முன்பு 96 வயதிலேயே ஃபுஜியின் சிகரத்தைத் தொட்டு ஜப்பானையே திரும்பிப் பார்க்க வைத்தவர் கோகிச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் படைத்த சாதனையை அவரே முறியடித்திருக்கிறார் என்பதுதான் இதில் ஹைலைட்.
எழுபது வயதான மகள், பேத்தி மற்றும் பேத்தியின் கணவர், உள்ளூர் மலையேற்ற கிளப்பைச் சேர்ந்த நான்கு மலையேற்ற வீரர்களின் துணையுடன் மலையேற்றம் செய்து, ஃபுஜியின் உச்சியை அடைந்தார் கோகிச்சி. உச்சியை அடைவதற்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டது. இரண்டு இரவுகள் மலையின் மீதே முகாமிட்டு தங்கிக்கொண்டனர். 1500 மீட்டர் உயரத்துக்கு ஏறிய பிறகு, கோகிச்சியின் உடல்நிலை வலுவிழந்தது.
நம்பிக்கையிழந்த அவர், “வீட்டுக்குத் திரும்பிவிடலாம்...” என்று சொல்லியிருக்கிறார்.“உங்களால் முடியும்...” என்று உடன் வந்தவர்கள் நம்பிக்கையளிக்க, இரண்டு மணி நேரம் ஓர் இடத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு, திரும்பவும் மலையேற ஆரம்பித்தார் கோகிச்சி. உச்சியை அடையும் வரை அவர் உற்சாகத்துடன் மலையேறியதாக உடன் வந்தவர்கள் சொல்கின்றனர்.
கோகிச்சி அடிப்படையில் ஓர் ஓவியர். முதியோர் இல்லங்களுக்குத் தன்னார்வலராகச் சென்று, இலவசமாக ஓவியப் பயிற்சி கொடுத்து வருகிறார். முன்பே பலமுறை ஃபுஜி மலையைப் பார்த்திருந்தாலும், 102 வயதில் ஃபுஜி மலையில் கிடைத்த அனுபவங்களை ஓவியமாக வரையப்போகிறார் கோகிச்சி.
தொகுப்பு: த.சக்திவேல்
|