தீபாவளி சிரிப்பு பட்டாசு!
‘‘இயக்குநர்களுக்கு யாருக்கு படம் செய்கிறோம், அவர்களுடைய ஆடியன்ஸ் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்ற பல்ஸ் தெரிஞ்சிருக்கணும். அடுத்து அவர் இயக்குநரா, ரைட்டரா என்ற புரிதல் இருக்க வேண்டும். ஏனெனில், ரைட்டர் எது வேண்டுமானாலும் கற்பனையில் எழுத முடியும். இயக்குநர் பட்ஜெட்டை மனசுல வெச்சு கதை எழுதணும். அப்போதுதான் படம் மக்களிடம் சென்றடையும். இயக்குநர் சரியாக இருந்தால் சினிமா சரியாக இருக்கும்...’’ என்கிறார் அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி. இவர் நட்டி நடராஜன் ஹீரோவாக நடித்துள்ள ‘கம்பி கட்ன கதை’ படத்தை இயக்கியுள்ளார். தீபாவளி வெளியீடாக வரவுள்ள படம் குறித்து நம்மிடம் பேசினார்.  தீபாவளிக்கு பெரிய ஹீரோ படங்கள் ரிலீஸ் இல்லை என்பதால் தைரியமாக வெளியிடுகிறீர்களா?
அதுவும் ஒரு காரணம். ரொம்ப நாளாக ஃபெஸ்டிவலுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணி பார்க்கும் படம் வரவில்லை. அந்தக் குறையை எங்கள் படம் தீர்த்து வைக்கும். சமீபத்தில் படம் பார்த்துவிட்டு விநியோகஸ்தர் ஹரி உத்ரா சார் ‘இது தீபாவளி பட்டாசு’ என்று சொன்னார்.
காமெடி படத்துல கதையை எதிர்பார்க்க முடியாது... அப்படித்தானே?
இது முழுக்க முழுக்க காமெடி படம். லாஜிக் யோசிக்காமல் வந்தால் மேஜிக் நடக்கும். சீரியஸ் விஷயம் எதையும் நாங்கள் பேசவில்லை. ஹீரோ கதாபாத்திரத்துடைய டிராவல்தான் படம். நட்டி சாரின் வழக்கமான ஃபார்மூலா என்றும் சொல்லலாம். லூட்டி அடிச்சுட்டு எஸ்கேப் ஆகும் கதை. ‘சதுரங்க வேட்டை’ ஸ்டைல் மாதிரி தெரியலாம். அப்படி நெனைச்சு எழுதல. எழுதி முடிச்சதும் அப்படி வந்துச்சு. இதையும் மறக்காம எழுதிடுங்க.
என்ன சொல்கிறார் உங்கள் ஹீரோ?
கதை எழுதி முடிச்சதும் மனசுக்குள் நட்டி சார்தான் தெரிந்தார். நட்டி சாருக்கு தினமும் பல கதைகள் வருகின்றன. ஃபில்டர் பண்ணிதான் படங்கள் செய்கிறார். புது இயக்குநர்களுக்கு நிறைய வாய்ப்பு தருகிறார்.
ஹீரோ என்பதால் கதையை மாத்துற வேலையெல்லாம் பண்ணமாட்டார். ஃபுல் சப்போர்ட் பண்ணுவார். சின்ன சஜஷன் சொல்வதாக இருந்தாலும் டைரக்டர் பர்மிஷன் கேட்டு செய்வார். நான் கவனிச்சவரை பெரிய கேமராமேன், பெரிய நடிகர் என்ற கெத்துடன் எப்பவும் அவர் நடந்துகிட்டதில்ல.
இயக்குநர் வெற்றி அடையணும், தயாரிப்பாளர் லாபம் அடையணும்... அதுதான் அவர் கண் முன் தெரியும். அதுக்காக கடுமையாக உழைக்கிறார். ‘காசேதான் கடவுளடா’ படத்துல தேங்காய் சீனிவாசன் சார் ஆக்டிங் எப்படி இருந்துச்சோ அதுமாதிரி நட்டி சார் இதுல மிரட்டியிருக்கிறார்.
அவர் ஏற்றுள்ள அறிவானந்தா கேரக்டர் சிரிக்க வைக்கும். நட்டி சாருக்கு ஜோடியாக ஸ்ரீரஞ்சனி. மலையாள நடிகை. ‘கஸ்ஸார் கோல்ட்’ படத்துல அவர் ஆக்டிங் பிரமாதமா இருந்துச்சு. மொழி தெரியலைன்னாலும் பெர்ஃபாமன்ஸுல அடிச்சு நொறுக்கியிருக்கார். இவர்களுடன் முருகானந்தம், சிங்கம்புலி, சாம்ஸ், கோதண்டம் இருக்கிறார்கள். சதீஷ் செல்வம் மியூசிக்ல பாடல்கள் வைரலாகுமளவுக்கு பிரமாதமாக வந்துள்ளன. ஒளிப்பதிவு ஜெய்சுரேஷ். பாலிவுட் படங்கள் செய்தவர். டெக்னிக்கல் நாலெட்ஜ் உள்ளவர். திரைக்கதை, வசனம் முருகானந்தம். தயாரிப்பு ‘மங்காத்தா மூவிஸ்’ ரவி.
காமெடி படங்களில் டபுள் மீனிங் டயலாக் தவிர்க்க முடியாதே?
‘இல்லை’னு சொல்லமாட்டேன். லைட்டா இருக்கு. சென்சார்ல ‘நல்ல காமெடி படம் பண்ணியிருக்கீங்க. கொஞ்சம் டபுள் மீனிங் இருக்கு. ஆனால், யாரையும் காயப்படுத்தவில்லை’னு சொல்லிட்டாங்க. ஃபேமிலி ஆடியன்ஸுக்கு ப்ரீவியூ ஷோ போட்டோம். லேடீஸ், குழந்தைகள் எல்லோரும் சிரிச்சுட்டாங்க.
எஸ்.ராஜா
|