ஸ்மார்ட் நம்பர் 1 புரட்சி!



மருத்துவ உலகில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்வு இது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஹோம் வரிசையில் புதிதாக ஸ்மார்ட் 

சிறுநீர் கழிப்பிடம் வந்திருப்பதுதான் அந்த நிகழ்வு. 
இப்படியொரு சிறுநீர் கழிப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர். ‘டாய்லெட் புரட்சி’ என்று இதனைப் பாராட்டுகின்றனர். 

அப்படி அந்த சிறுநீர் கழிப்பிடம் எங்கிருக்கிறது? அதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?

சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகர்களில் உள்ள பொதுக் கழிப்பிடங்களில் இந்த ஸ்மார்ட் சிறுநீர் கழிப்பிடங்களை நிறுவியிருக்கிறது சீன அரசு. இந்தக் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க, 20 சீன யுவான்களைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

இந்திய மதிப்பில் 250 ரூபாய்.வாடிக்கையாளர் தனது அலைபேசி எண் உட்பட தனிப்பட்ட தகவல்களைக் கழிப்பிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் பதிவு செய்தபிறகே சிறுநீர் கழிக்க வேண்டும். வாடிக்கையாளர் சிறுநீரைக் கழிக்கும்போதே, அதில் சிறு பகுதியைக் கழிப்பிடத்திலுள்ள ஏஐ ஸ்கேன் கருவிகள் எடுத்துக்கொண்டுவிடும். 

சிறுநீரை ஸ்கேன் செய்து அதிலுள்ள இரத்த சர்க்கரையின் அளவு, சிறுநீரக ஆரோக்கியம், இரத்த வெள்ளை அணுக்களின் அளவு, சிறுநீர்த் தொற்று, புரத வெளியேற்றம், வைட்டமின் சி குறைபாடு உள்ளிட்ட பல மருத்துவ தகவல்களை ஒரு சில நிமிடங்களிலேயே கொடுத்துவிடும். 

இந்த ரிப்போர்ட் கழிப்பிடத்தின் டிஜிட்டல் திரையில் தோன்றும்; வாடிக்கையாளரின் போனுக்கும் அனுப்பி வைக்கப்படும். 90 நொடிகளிலேயே தங்களுக்கு ரிப்போர்ட் கிடைத்ததாக சிலர் சொல்கின்றனர். 

பொதுவாக மருத்துவமனைகளில் சிறுநீர் பரிசோதனைகள் செய்வதற்குக் கட்டணம் அதிகம். ரிப்போர்ட் கிடைக்க சில மணி நேரம் ஆகும். ஆனால், குறைந்த செலவில் சில நிமிடங்களிலேயே சிறுநீர் பரிசோதனைகளின் ரிப்போர்ட் கிடைப்பதால் சீன மக்களின் மத்தியில் ஸ்மார்ட் சிறுநீர் கழிப்பிடத்துக்கு நல்ல வரவேற்பு.

மட்டுமல்ல, ஆரம்ப நிலையிலேயே உடலின் பிரச்னைகளைத் தெரிந்துகொள்வதற்கு இந்தக் கழிப்பிடம் உதவுகிறது. அதனால் சீனாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் ஸ்மார்ட் சிறுநீர் கழிப்பிடம் வரப்போகிறது.