தீபாவளிக்கு மாமியார், மாமனார், வர்றாங்க!



-என்னாங்க...
- ம்ம்...
- எங்க அப்பாவும் அம்மாவும் ஊர்லருந்து வர்றாங்க...
- என்னவாம்..?
- பேரப் பிள்ளைகளை பாக்கத்தான்...
- இப்ப என்ன அவசரம்..?
- ஏங்க... அவங்க போன தீபாவளிக்கு வந்துட்டு போனாங்க. நடுவுல  வரமுடியல. இப்ப பிரியப்பட்டு வர்றாங்க. எங்க அப்பா, அம்மா மேல என்னாங்க காண்டு? இவ்ளோ கடுப்புல பேசுறீங்க..? அவங்க உங்கள எவ்ளோ உயரத்துல வச்சிருக்காங்க தெரியுமா..?

- யாரு... உங்க அப்பா அம்மாவா..? உங்க அம்மா இருக்கே உங்கொம்மா... ஊருக்குப் போனா ‘காப்பித் தண்ணி சாப்பிடுங்க மாப்ள’ன்னு ஒரு தண்ணிக் காப்பிய கொண்டு வந்து கொடுக்கும். இந்தக் காப்பியையெல்லாம் பாத்தா ரயில்ல காபி விக்கிறவன் தூக்குல தொங்கிடுவான். ஏண்டி... நூறு மில்லி பால்ல பத்து பேருக்கா காபி போடுவாங்க..?
இதாவது பரவாயில்ல... உங்கொப்பா இருக்காரே ங்கொப்பா... வாங்க மாப்பிள்ளனு வாயத் தெறந்தா குப்புன்னு ஒரே பீடி நாத்தம். அவரோட மடிச்சிக் கட்டுன வேட்டிக்கட்டும் வெளிய தெரியிற பட்டாபட்டியும்... ஆளும் மீசையும்... அந்த நரைச்ச மீசைக்கு மட்டும் தினமும் 100 மில்லி தேங்காயெண்ணய போட்டு நீவி விடுவார் போல... கல்யாணத்துக்கு பத்து பவுன் போடுறேன்னு சொல்லிட்டு 6 பவுன் போட்டவருதானே அவரு...

- ஏங்க... இப்ப வேணும்னா நீங்க காரு, வீடு, தோட்டம், தொர வுன்னு வசதியா இருக்கலாம். ஆனா, 12 வருஷத்து முன்ன என்னய பொண்ணு கேட்டு வந்தப்ப நீங்க ஒண்ணுமில்லாத ஓட்டாண்டிதானே? அந்த ஓட்டாண்டிக்கு 6 பவுனே ஜாஸ்தி... அதுவுமில்லாம அதுக்கு முன்னாடியே அம்மா இல்ல... அப்பா குடிகாரன்... உன்ன நம்பி எப்படி பொண்ணு கொடுக்கிறதுன்னு 13 இடத்துல முடியாதுனு சொன்ன ஜாதகம்தானே உங்க ஜாதகம்..?
- சரி பழச ஏன் கிண்டிட்டு... கூட உன் தம்பியும் வர்றானா..?
- இல்ல...

- அதானே... எப்படி வருவான்? அவன் என்கிட்ட எவ்ளோ கடன் வாங்குனான்னு எனக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது. ஊருக்குப் போகும்போதெல்லாம் ஒப்புக்கு ‘வாங்க மாமா’னுட்டு போய் பொண்டாட்டி பின்னால ஒளிஞ்சிக்குவான். இல்ல தலைய தொங்கப் போட்டுக்குவான்...
- இப்ப என்னான்றீங்க..? அப்பா, அம்மா வர்றேங்கிறாங்க... வரச்சொல்லட்டுமா வேணாமா..?
- வரச்சொல்லு... வரச்சொல்லு... வயசானவங்க ஏன் வீணா அலைஞ்சிட்டு இருப்பானேன்னுதான்...
- ஐய்யோ... பாசம் அப்படியே கொப்பளிக்குது...

- சரிம்மா... அவங்க வந்தாங்கன்னா அந்த ஏசி ரூம்லயே தங்கிக்கச் சொல்லு. ஆனா, உங்கப்பாவ மட்டும் அட்டாச்சிடு டாய்லெட்டுக்குள்ள பீடிய இழுக்க வேணாம்னு சொல்லு. ரூம்குள்ள கப்புன்னு பொண நாத்தம் அடிக்கும். அப்புறம் உங்கம்மா பொடி போடுற பழக்கத்த விடச் சொல்லு. என்னாலலாம் பொடி வாங்கித் தர
முடியாது. கடைல கேக்கவே ஷைய்யா இருக்கும்...

- கண்டிஷன் இவ்ளோதானா... இன்னமும் இருக்கா..?
- இப்போதைக்கு அவ்ளோதான். சரி... சரி... அவங்க என்னைக்கு கெளம்புறாங்க..?
-இன்னைக்கு நைட்டு பாண்டியன்ல... நாளைக்கு காலைல 5 மணிக்கு தாம்பரம் வந்துடுவாங்க. ஏன் கேக்குறீங்க..?
- இதெ ன்ன கேள்வி... கார் எடுத்துட்டுப் போய் அவங்கள ரிசீவ் பண்ண வேணாமா..?
- அப்ப... இவ்ளோ நேரம் கரிச்சிக் கொட்டுனீங்களே..?
- அது மாப்பிள்ளை மிடுக்கு...

- சரி... இப்ப மட்டும் அவங்கள ஏன்  கூப்பிட்டு வரப் போறீங்க..?
- அது ... எம்மேல உங்கப்பா வச்ச நம்பிக்கை. வெறும்பய... அம்மா கெடையாது... அப்பா தண்ணி வண்டி. 

சரியான தொழில் கிடையாதுன்னு பலர் என்ன ரிஜெக்ட் பண்ணாலும்... ‘இத்தன கஷ்டத்துலயும் கூடப் பொறந்த தங்கச்சிய பொறுப்பா கல்யாணம் பண்ணிக் கொடுத்த அந்த ஒண்ணே போதும் உங்களுக்கு என் பொண்ண கொடுக்க’னு எனக்கு உன்ன கொடுத்தாரு பாரு... அதுக்காகவே அவர பீடி வாடை அடிச்சாலும் பரவாயில்லனு தலைக்கு மேல தூக்கி வச்சி கொண்டாடுவேன். போறியா அங்குட்டு...l

பொம்மையா முருகன்