தமிழில் குடமுழுக்கு..?



தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்பதே கடந்த வார பரபரப்பு. பின்னர் தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்தக் கட்டுரை வரும் போது தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு இரண்டு மொழிகளிலும் சிறப்பாக முடிந்திருக்கக்கூடும்.

இதுவரை நாம் பரவலாக சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி நடக்கும் குடமுழுக்குப் பற்றியே அறிந்திருப்போம். அதனால், தமிழில் குடமுழுக்கு என்பது புதிதாகத் தோன்றலாம். ஆனால், கோவைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு அது புதிதல்ல.ஏனெனில், அங்கிருந்துதான் முதன்முதலாக தமிழில் குடமுழுக்கு செய்யும் வழக்கம் வந்தது. இதை நடத்தியவர்கள் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளாரும் கௌமார் மடத்தின் சுந்தர சுவாமிகளும்.

இன்றுவரை பேரூர் ஆதீனம் கோயில் குடமுழுக்கு, அர்ச்சனை, திருமணம் உள்ளிட்ட எல்லா சடங்கு, சம்பிரதாயங்களையும் தமிழில்தான் நடத்தி வருகிறது. இதற்காகவே பயிற்சி பெற்றவர்கள் ஏராளம். தமிழ் குடமுழுக்கு பற்றி இப்போதைய ஆதீனம் மருதாசல அடிகளாரிடம் பேசினோம்.
‘‘தமிழ் வழிபாடு என்பது வெளியிலிருந்தோ அல்லது புதிதாகவோ கொண்டுவரப்பட்டதல்ல. இது பாரம்பரியமானது. தமிழ் வழிபாடு என்பது இறைவனுக்கு முன்பு தமிழ்ப்பாடல்களைப் பாடி வழிபாடு செய்வது.

இதனால், இறைவனைத் தொழுவதற்கு இடையில் ஒருவர் வேண்டியதில்லை. நாமே இறைவன் திருமேனிக்கு தண்ணீர்விட்டு, பூ வைத்து வழிபாடு செய்யலாம். அதுதான் பழந்தமிழ் மரபு. திருநாவுக்கரசர், ‘போதொடு நீர் சுமந்தேத்தி புகுவார்…’ எனக் கருவறை உள்ளே சென்று வழிபட்டதை குறிப்பிடுகிறார். இதுதான் நம் வழிபாட்டு முறை. அதில் எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இல்லை. மனிதர்கள் மட்டுமல்ல. யானை, எறும்பு, நாகம், அணில், குரங்கு என விலங்குகள் வழிபட்டதையும் ஒவ்வொரு கோயிலின் புராணங்களும் சொல்கின்றன.  

ஆனால், காலப்போக்கில் தமிழக அரசர்களின் ஆட்சி குறைந்து அயல்நாட்டினரின் தாக்கம் 12, 13ம் நூற்றாண்டுகளில் வந்தபோது அவர்கள் பிறமொழிகளைப் புகுத்திவிட்டனர். அதில் படிப்படியாக நமக்கும் இறைவனுக்கும் உண்டான இடைவெளியைப் பெரிதுபடுத்தினர். இந்தச் சூழலில் எங்கள் மொழியை மட்டும்தான் கடவுள் கேட்பார் என்ற ஒரு உணர்வு வந்துவிட்டது.

20ம் நூற்றாண்டு தொடக்கத்தில் மறைமலையடிகள் ஒரு திருமணத்திற்குப் போனபோது வடமொழியில் சொல்லப்பட்ட மந்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பிறகு ஓர் இயக்கம் ஆரம்பித்து வாழ்வியல் நிகழ்வுகளை எல்லாம் தமிழில் நடத்தினார்.அப்போது ஏன் அருளியல் நிகழ்வுகளையும் தமிழில் நடத்தக்கூடாது என்கிற கேள்வி எழுந்தது. குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் அதை முன்னெடுத்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தனர். நிறைய கோயில்களில் தமிழ் வழிபாட்டையும், அர்ச்சனையையும் கொண்டு வந்தனர்.

நாங்கள், 1953ல் தமிழ்க் கல்லூரி தொடங்கினோம். அப்போது, பேரூர் கோயிலில் குன்றக்குடி அடிகளார், மயிலம் சன்னிதானங்கள், திருவை ஆதீனம், நம்முடைய ஆதீனம் எல்லாம் சேர்ந்து தமிழில் அர்ச்சனை செய்துவிட்டு வந்து கல்லூரியைத் தொடங்கி வைத்தனர்.தமிழ் அர்ச்சனை என்பது, ‘ஈசன் அடி போற்றி எந்தையடி போற்றி’ எனச் சொல்லிச் செய்வது. பிறகு, ஏன் கோயில் குடமுழுக்கைத் தமிழில் செய்யக் கூடாது எனத் தோன்றியது.

ஆகமங்கள் இன்று வடமொழியில் இருந்தாலும்கூட அது தமிழர்களுடையதுதான். ஏனெனில், தமிழ்நாட்டிற்கு அப்பால் யாரும் இதை கடைப்பிடிப்பதில்லை. ஒரு பொருள் தமிழ்நாட்டில் இருந்தால் அது தமிழில், தமிழர்களுடையதாகவே இருந்திருக்க வேண்டும், இல்லையா? கா.சு.பிள்ளை, மறைமலையடிகள் போன்றவர்கள், தமிழில் இருந்த ஆகமத்தை மொழிபெயர்த்துவிட்டு அதன் தமிழ் மூலத்தை அழித்துவிட்டதாகச் சொல்கின்றனர்.

அதனால், 1954ல் கோவை கணபதி பகுதியில் இருந்த ஒரு பிள்ளையார் கோயிலில் முதன்முதலாகத் தமிழில் குடமுழுக்கு செய்தோம். பிறகு, படிப்படியாகத் தமிழில் குடமுழுக்கு செய்வது பற்றி நிறைய பேருக்குப் பயிற்சி கொடுத்தோம். தற்போதுவரை ஆயிரத்து முந்நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு கோயில் குடமுழுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறோம். தவிர, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் தமிழில் குடமுழுக்கு செய்திருக்கிறோம்’’ எனப் பெருமைபட குறிப்பிட்டவர் தொடர்ந்தார்:  

‘‘பொதுவாக, ஆகமங்கள் என்பது நெறிமுறைகள் பற்றிச் சொல்வதுதான். அந்த ஆகமங்களின் அடிப்படையில் ஒவ்வொரு செயலுக்கும் வடமொழி ஸ்லோகங்கள் சொல்லப்படுகிறது. அதேபோல நம் திருமுறைகளிலும் மந்திரங்கள் இருக்கிறது. விளக்கு காட்டுவதற்கு, ‘நல்லக விளக்கது நமச்சிவாயவே’ என்றும், தூபம் காட்டும்போது ‘சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்’ என்றும், அமுது படைக்கும்போது, ‘அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலமே’ என்றும் சொல்கிறோம்.திருமணம் செய்துவைக்கும் போது, ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை’ என்கிற பாடலைப் பாடுகிறோம்.

ஆக, இரண்டு பேருமே ஆகம முறைப்படிதான் செய்கிறோம். இதில் வித்தியாசம், தமிழில் செய்யும்போது மக்களுக்கு நன்றாகப் புரியும்.ஆகமம் இந்த மண்ணிலிருந்து தோன்றியது என்பதால் ஆகம வழிபாட்டைத் தமிழில் செய்கிறோம். இதை செய்வதற்கு ஆண், பெண், ஏழை, பணக்காரன், கருப்பு, வெள்ளை என எந்த வேறுபாடும் தேயில்லை.

 இறைவனிடத்தில் அன்புள்ள சமய தீட்சை பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். எங்களிடம் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களும் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் புதுமனை புகுவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் செய்கின்றனர். அவர்களும் குடமுழுக்கு செய்யலாம் என நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். ஒரு குடமுழுக்கு பண்ணும்போது நிறைய செலவாகும். ஆனால், தமிழில் குடமுழுக்கை ரொம்ப சிக்கனமாகச் செய்யலாம்.

சாமியை நீராட்டுதல் எல்லாம் நம்முடைய மரபு. நம்மிடம் இருந்தே வடக்கத்தியர் கற்றனர். நீர்படை, நடுகல், வாழ்த்து எல்லாம் சேரன் செங்குட்டுவன் செய்தது என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். ஆனால், வடக்ேக உள்ளவர்கள் மரபு, நெருப்பில் பொருட்களை இட்டு நன்றி செலுத்துவது.நாம் பொருட்களை வீண் செய்வதில்லை. பால் அபிஷேகம் செய்தாலும் அதை குடித்துவிடுவோம். படையலைக்கூட இறைவனுக்கு அளித்து அமுதூட்டிவிட்டு பிறகு அதை சாப்பிடுவது நம்முடைய மரபு.

அதனால், அது சிறந்ததா... இது சிறந்ததா... என்பது கிடையாது. எங்கள் இறைவனை எங்களுக்குப் புரிந்த மொழியில் வழிபாடு செய்கிறோம் என்பதே எங்கள் கொள்கை...’’ என்கிறார் மருதாசல அடிகளார்.இதுகுறித்து கோயில் ஆய்வாளர் ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசினார்: ‘‘கோயில்கள் கட்டுமானம் பல்லவர் காலத்தில் இருந்து தொடங்குகிறது. அப்போதே கோயில்கள் எல்லாம் ஆகம விதிப்படிதான் வகுக்கப்பட்டன. அதனால், வடமொழியில்தான் குடமுழுக்கு நடந்திருக்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள சிவாலயங்களில் அந்தந்த மாநில மொழிகள் வேறாக இருந்தாலும் கோயில் வழிபாட்டு மொழி சமஸ்கிருதம்தான். அது ஆராதனைக்கென உள்ள மொழி. அது பேச்சுமொழி கிடையாது. யாருடைய தாய்மொழியும் கிடையாது. வழிபாட்டுக்குரிய மொழி.

அவ்வளவுதான்.இறைவனுக்கு எந்த பேதமும் கிடையாது. நீங்கள் தமிழில் வழிபட்டாலும், ஆங்கிலத்தில் வழிபட்டாலும் ஒன்றுதான். ஆனால், பூஜைக்கென்று சில வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது. அது இதுவரை தமிழில் வகுக்கப்படவில்லை.

இவர்கள் தேவாரத்தைச் சொல்லி குடமுழுக்கு பண்ணச் சொல்கிறார்கள். ஆனால், ேதவாரம் என்பது பூஜைக்கு முன்பு ஓர் அங்கமாக பாடக்கூடிய பாடல்கள். அது இறைவனுடன் ஒன்ற வைக்கும் தன்மையுடையது. அதை கிரியைகளுக்குப் பயன்படுத்த முடியாது.

இப்போது பேசுகிறவர்கள் யாராவது இதுவரை கோயில்களில் தேவாரத்தை வளர்த்தார்களா? யாருக்காவது தேவாரப் பாடல்களை பண் இசையுடன் பாடத் தெரியுமா? எல்லாவற்றையும் ஒழித்துக்கட்டிவிட்டனர். இன்று பண் இசையுடன் தேவாரம் ெதரிந்த ஓதுவார்கள் ஐந்து சதவீதம்கூட இல்லை.
ஒவ்வொரு தேவாரப் பாடலுக்கும் பண் இருக்கிறது. அந்தப் பண் இசை தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பண் இசையை குரு-சிஷ்ய பாரம்பரியத்தில்தான் கற்றுக்கொள்ள முடியும்.

பக்திபூர்வமாக இறைவனுக்கு விண்ணப்பம் செய்வதுதான் தேவாரப் பாடல்கள். அது திருப்பதிக விண்ணப்பம். அது கிரியைகள் முடிந்தபிறகு பாடப்பட வேண்டும். அப்போது 12 திருமுறைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பாடல்களை பண்ணிசையுடன் பாடுவார்கள். பிறகு, பஞ்ச அடுக்கு தீபாராதனை நடக்கும்.

இதுதான் மரபு. ஆக, எப்போதும் சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லப்பட்டும், தமிழில் திருமுறைகள் பாடியும் குடமுழுக்கு நடத்தப்பட்டு வந்திருக்கிறது.
அதுபோலவே, ஆகமம் எப்போது உருவாக்கப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால், சிவபெருமானின் வடிவமே ஆகமம் என மாணிக்கவாசகர் சொல்கிறார். ‘ஆகமமாய் நின்றாய்’ என அவர் உருகுகிறார். இந்தக் கருத்தையே திருநாவுக்கரசரும், ஞானசம்பந்தரும், சுந்தரரும் சொல்லியிருக்கின்றனர். இவர்கள், சிவபெருமானுக்கு தமிழும், சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் எனச் சுட்டுகின்றனர்.

பொதுவாக, எந்திர ஸ்தாபனம் செய்து, கடவுளை கருவறையில் பிரதிஷ்டை செய்யும் போது பீஜாட்ஷர மந்திரங்கள் சொல்வார்கள். அதை திரும்பத் திரும்பச் சொல்லி வழிபடும் போதுதான் அந்த எந்திரத் தகட்டிற்கு தெய்வத் தன்மை வருவதாக நம்புகின்றனர்.அந்த மந்திரங்கள் அனைத்தும் சமஸ்கிருத சொற்கள்தான். அது தமிழில் கிடையாது. ஒலி அடிப்படையில்தான் மந்திரங்கள். ஆக, மந்திரத்தை நம்ப ஆரம்பித்தால் நம்ப வேண்டும். எதுவும் வேண்டாம் என்றால் எதுவுமே தேவையில்ல.

வீட்டு பூஜை அறையில் சாமியை ஆத்மார்த்தமாக வணங்கினாலே போதும். உள்ளன்போடு கும்பிடும்போது கடவுள் நிச்சயம் இறங்கி வருவார்...’’ என்கிறார் அந்த கோயில் ஆய்வாளர்!    

பேராச்சி கண்ணன்