முகம் மறுமுகம்-பத்திரிகை ஆசிரியர் கே.பாக்யராஜ்



திரைக்குப் பின்னால், திரைக்கு முன்னால் என சினிமாவின் டபுள் ட்ராக்கிலும் செம கெத்து காட்டியவர்; காட்டுபவர் இயக்குநர் கே.பாக்யராஜ். திரைக்கதையின் பிதாமகராக கொண்டாடப்படுபவர். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியர், இசையமைப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகமாக ஜொலிப்பவர். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராகவும் அசத்துபவர்.

சினிமாக்காரர்களில் ‘பாக்யா’ என்ற பெயரில் சொந்தமாக பத்திரிகை ஒன்றைத் தொடங்கி, இன்றும் சோர்வடையாமல் நடத்தி வருபவர். இப்போது ‘பாக்யா’விற்கு வயது டபுள் பதினாறு!நுங்கம்பாக்கத்தில் உள்ள பாக்யராஜின் அலுவலகத்தில்தான், ‘பாக்யா’வின் எடிட்டோரியலும் செயல்படுகிறது. உள்ளே லைப்ரரியிலும் பாக்யராஜின் டேபிளிலும் அடுக்கடுக்காக புத்தகங்கள் அணிவகுப்பு.

கையில் பேனாவும், பேப்பருமாக அடுத்த வாரத்திற்கான கேள்வி - பதில் பகுதியின் பிரிண்ட் அவுட்டை பார்த்துக் கொண்டிருந்தார் பாக்யராஜ்:

‘‘மூத்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கலைஞர் அவர்கள்கிட்ட நான் பத்திரிகை ஆரம்பிக்கப் போற எண்ணத்தை சொன்னேன்.

கொஞ்ச நேரம் யோசிச்ச கலைஞர், ‘உங்களுக்கு அறிவுரையா சொல்ல மாட்டேன்... ஆலோசனையா ஒரு விஷயம் சொல்றேன். பத்திரிகை என்னிக்கு கடைக்கு வருதோ, அந்த தேதியை எக்காரணம் கொண்டும் மாத்திடாதீங்க! குறிப்பிட்ட தேதிக்கு மாறாக தாமதமா என்னிக்கு அது கடைக்கு வருதோ, அன்னிக்கு வாசகர்களை இழந்துடுவோம்...னு சொன்னார்.

இப்ப வரை அவர் சொன்னதை கடைப்பிடிச்சுட்டு இருக்கேன்! அந்த டைம்ல கலைஞர்ல இருந்து பலரையும் நானே சந்திச்சு, பேட்டியும் எடுத்துருக்கேன். நடிப்பு, டைரக்‌ஷன்னு பிசியான காலக்கட்டத்துலதான் பத்திரிகை ஆரம்பிச்சேன். மார்க்கெட் உச்சத்துல இருக்கறப்ப தொடங்கினாதான் மதிப்பு இருக்கும். இல்லைனா ‘அவருக்கு சினிமாவுல இப்ப மார்க்கெட் இல்ல. அதான் பத்திரிகை தொடங்கிட்டாரு’னு சொல்லிடுவாங்க. அப்புறம், பத்திரிகையும் எடுபடாமல் போயிடும்.

‘இது நம்ம ஆளு’ ஆகஸ்ட்ல ரிலீஸ் ஆகுது. நான் ஜூன்லயே (ஜூன் 2, 1988) ‘பாக்யா’வை கொண்டு வந்துட்டேன்...’’ மலரும் நினைவுகளுடன் சிலிர்க்கும் கே.பாக்யராஜின் ‘பாக்யா’ பயணம் இன்னும் சுவாரஸ்யமானது.‘‘‘புதிய வார்ப்புகள்’ல ஒர்க் பண்ணும்போதே, சொந்தமா பத்திரிகை ஆரம்பிக்கற ஐடியா வந்துடுச்சு. அதை முன்னெடுக்கும்போது ஏகப்பட்ட எதிர்ப்புகள்.

‘சினிமா ஆட்கள் பத்திரிகை ஆரம்பிச்சா சரியா வருமா’னு பேசினாங்க. அதுக்கு உதாரணமா சறுக்கலை சந்திச்ச சிலரை குறிப்பிட்டுச் சொன்னாங்க. ‘சினிமாக்காரங்க ஆஹா ஓஹோனு ஆரம்பிப்பாங்க. ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே ஸ்பீடு கம்மியாகும், அப்புறம் திடீர்னு பத்திரிகையை ஸ்டாப் பண்ணிடுவாங்க... அப்படிப்பட்ட நிலமை உங்களுக்கு வேணாம். நல்லா யோசிச்சுக்குங்க’னு பலரும் அட்வைஸ் பண்ணினாங்க.

ஆனா, எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. ஏதோ ஒரு ஒளிக்கீற்று தெரிஞ்சது. அந்த நம்பிக்கைல தொடங்கினதுதான் ‘பாக்யா’. ஊர்ல என் நெருங்கிய நண்பர்கள் என்னை ‘பாக்யா’னு கூப்பிடுவாங்க. அந்தப் பெயரையே பத்திரிகைக்கும் வச்சிட்டேன்.

ஆரம்பத்துல விற்பனை ஏஜெண்டுகள் அமையல. ‘இவர் சினிமாக்காரர் ஆச்சே... செட் ஆவாரா’னு அவங்க யோசிச்சிருக்கலாம். அப்புறம், என் ரசிகர்கள் மன்றத்துல உள்ளவங்களையே ஏஜெண்ட்களாக்கிட்டேன். அவங்களுக்கு புக்குகளை அனுப்பி வச்சு, ‘யாரும் முன்பணம் கட்டத் தேவையில்ல. நீங்க வித்து காசை கொடுங்க’னு சொல்லிட்டேன். என்மேல உள்ள ப்ரியத்துல பரவலா கொண்டு சேர்த்துட்டாங்க.

வாசகர்களுக்கு ‘பாக்யா’வின் கன்டன்ட் பிடிச்சது. நேசிக்க ஆரம்பிச்சாங்க. சரியான டயத்துல பத்திரிகை வருதுனு தெரிஞ்சபிறகுதான் ரெகுலர் ஏஜெண்ட்கள் தேடி வந்தாங்க. சில மாசங்கள்லயே அசுரவேகம் பிடிச்சிடுச்சு. ஒன்றரை வருஷத்துக்குள்ள ஒண்ணேகால் லட்சத்துக்கு மேல சர்க்குலேஷன் ஏறிடுச்சு.

எங்க வேகம், சர்க்குலேஷன் ஏறினதைப் பார்த்து கொஞ்சம் லேட்டா மார்க்கெட்டுக்கு வந்திட்டிருந்த பிரபல வார இதழ்கள் கூட ‘பாக்யா’வுக்கு முன்னாடியே வர்றா மாதிரி தேதிகளை மாத்தினாங்க...’’ ஆச்சரியமானவர், ‘பாக்யா’வின் ஸ்பெஷலான ‘கேள்வி பதில்’ பகுதி குறித்தும் பேசினார்:
‘‘நான் விரும்பிப் படிக்கற விஷயங்கள, படிச்சதுல சுவாரஸ் யமானதைத்தான் ‘பாக்யா’விலும் கொண்டு வந்தேன். நாவல், சிறுகதை, ஜோக்ஸ்னு ரெகுலர் விஷயங்களையும் வச்சேன்.

கேள்வி - பதில் பகுதி ஆரம்பிக்கும்போதுதான் கொஞ்சம் யோசிச்சேன். ‘குமுத’த்துல அரசு பதில்கள், ‘கல்கண்டு’ல லேனா தமிழ்வாணன் கேள்வி பதில்கள் வந்துட்டிருந்தது. அதிலிருந்து வேறுபட்டு பண்ண விரும்பினேன். கொஞ்சம் நீளமான பதில்களா இருந்தாலும் பரவாயில்லைனு ஒவ்வொண்ணுக்கும் குட்டிக்கதைகள் சொல்றா மாதிரி எழுத ஆரம்பிச்சேன்.

அந்த பதில்கள் மேடைப் பேச்சாளர்கள் பலருக்கும் உதவியா இருந்துச்சுனு சொல்வாங்க. தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்னதை நான் பத்திரிகைல எழுதியிருப்பேன். நான் எழுதினதை அவரும் எங்காவது சொல்லுவார். இப்படி ஒவ்வொருத்தரின் பகிர்வுகளையும் பதில்களாக்கினேன். சில நேரங்கள்ல நாம சொன்ன கதை, நமக்கே ரிப்பீட் ஆகும்! சில கதைகள் தமிழக அரசு செய்திப்படங்கள் திரையிடலுக்கு உகந்ததாக் கூட அமைஞ்சிருக்கு.

ஆரம்பத்துல நல்ல டீம் செட் ஆச்சு. எழுத்தாளரான பிரபஞ்சன் கூட இங்க கொஞ்ச நாட்கள் இருந்தார். அப்புறம், ஃப்ரீலான்சரா ஒர்க் பண்ணினார். எழுத்தாளர் தாமரை மணாளன் வந்தார். ‘இதயம் பேசுகிறது’ மணியன்கிட்ட இருந்து வந்தவர். எனக்கு ரொம்பவும் பக்கபலமா இருந்தவர். அவர்கிட்ட ஒரு விஷயத்தை சொன்னா போதும். கடகடனு குறிப்பெடுத்துக்குவார். ‘மானே தேனே பொன்மானே சேர்த்து’ அழகுபடுத்தி அருமையான கட்டுரையாக்கிக் கொண்டு வந்திடுவார்.

எனக்கு கைப்பட எழுதுறதை விட, கிரியேட்டிவா எண்ணி சொல்றது எளிதா வரும். இப்ப வாட்ஸ்அப், மொபைல், ஃபேக்ஸ் எல்லாம் இருக்கு. லேப்டாப்புலயே மேட்டரை பார்த்துக்கலாம்.   அப்ப அப்படியில்ல. ‘பவுனு பவுனுதான்’ ஷூட் கோபிச்செட்டிப்பாளையத்துல போகும். ஸ்பாட்டுல டென்ஷனான வேலை தகதகக்கும். அப்பவும், டிரங்க்கால் போட்டு விசாரிப்பேன். மேட்டர்களை பிரிண்டவுட் எடுத்துட்டு, எடிட்டோரியல்ல இருந்து சோமுவும், மதனும் படப்பிடிப்பு நடக்கற இடத்துக்கு வருவாங்க. கம்ப்ளீட்டா படிச்சு சரிபார்த்து கொடுத்தனுப்புவேன்.

கேள்வி - பதில் பகுதியை ஸ்பாட்டுல உட்கார்ந்து எழுதின காலமும் உண்டு. ‘பாக்யா’ அட்டைப்படங்களுக்கு தனிகவனம் கிடைச்சது. அப்ப, ஆர்ட்டிஸ்ட் ஜானி எனக்கு பக்கபலமா இருந்தார். இப்ப ஞானினு ஒருத்தர் லேஅவுட் பண்றார்...’’ என சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது மார்க்கெட்டில் உள்ள பாக்யா ஒன்றை நமக்குக் காட்டிவிட்டு, ‘‘ஆரம்பத்துல சின்ன சைஸ்ல வந்துச்சு. இப்ப, சைஸ் கொஞ்சம் பெரிசாகிடுச்சு. ‘பாக்யா’ வளர்ந்துட்டா!’’ என கலகலத்தவர், தொடர்ந்தார்:

‘‘ஒரு கட்டத்துக்குப் பிறகு, கடைகளுக்கு புக் போகுது. ஆனா, என் கைகளுக்கு காசு கைக்கு வரல. நிர்வாகச் சிக்கல். சிலரை நம்பினேன். சொதப்பலாகிடுச்சு. மெல்ல மெல்ல எழுந்து நிமிர்ந்து நிற்க ஆரம்பிச்சேன். எவ்ளோ வேலைகள் இருந்தாலும் ‘பாக்யா’வுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஷூட்டிங், ஆக்ட்டிங், மீட்டிங்னு எவ்ளோ உச்சத்துல இருந்தாலும், நான் படிச்சுப் பார்த்த பிறகுதான் அச்சுக்கு அனுப்புவேன்.

சில வருஷங்களுக்கு முன்னாடிவரை ‘பாக்யா’ல வேலைக்கு சேர்ந்தா சுலபமா சினிமால நுழைஞ்சிடலாம் என்கிற எண்ணம் பரவலா இருந்தது. பலரும் அப்படி வந்தாங்க. ‘மன்னவா’ வெங்கடேஷ், ‘ஆயுதபூஜை’ சிவகுமார், பாண்டிராஜ், சோமு, நடிகர் குடவாசல் சிவகுமார்னு ஒரு லிஸ்ட்டே இருக்கு!
பத்திரிகை ரொம்பவும் பிரஷ்ஷரான ஒர்க். ஆனா, இஷ்டப்பட்ட வேலையாச்சே! சிரமமா ஒருநாளும் நினைச்சதில்ல. பத்திரிகையை சாக்கா வைச்சு நானும் நிறையப் படிக்கறேன். இப்ப டிவி வந்தபிறகும் பத்திரிகைகள் விற்பனை பாதிக்கப்படல. ஆனா, இப்ப வாசகர்கள் மனநிலை மாறியிருக்கு. படிச்சு தெரிஞ்சுக்கறதை விட, பார்த்து தெரிஞ்சுக்கணும்னு விரும்பறாங்க.

பத்திரிகையை ஒரு தொழிலா நான் பண்ணல. என் ஆத்ம திருப்திக்காகவும் ‘பாக்யா’வை நம்பும் வாசகர்களுக்காகவும் தொடர்ந்து நடத்தறேன்...’’ நெகிழும் பாக்யராஜ், தனது வாரிசுகளின் பத்திரிகை ஆர்வம் குறித்தும் பேசினார்:‘‘என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் சினிமால இல்ல. ஆனா, நான் சினிமாவை செலக்ட் பண்ணினேன். ஏன் சினிமாவுக்கு வந்தேன், எதுக்கு வந்தேன்னு இப்பவும் காரணம் தெரியாது.

அதுபோல என் பசங்களுக்கு சினிமா இன்ட்ரஸ்ட்தான் இருக்கு. பொண்ணுக்கும் பையனுக்கும் தனித்தனி டேலன்ட் இருக்கு. ஆனா, பத்திரிகை நடத்தற ஆர்வம் அவங்களுக்கு இல்ல. அதுல கொஞ்சமும் எனக்கு வருத்தமும் இல்ல.

அடுத்து இதே ‘பாக்யா’ பெயர்ல யூ டியூப் சேனல் ஒண்ணு தொடங்கப் போறேன். அதுலயேயும் நிறைய சுவாரஸ்யங்கள் பண்ணப் போறேன். ஜஸ்ட் வெயிட்!’’ மலர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நம்பிக்கை குறையாமலும் சொல்கிறார் கே.பாக்யராஜ்  

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்