தந்தை பெரியார் தொடர்ந்து தாக்கப்படுவது ஏன்..?



தந்தை பெரியார் குறித்து ரஜினி பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘துக்ளக்’ இதழின் 50ம் ஆண்டு விழா கடந்த ஜனவரி 14 அன்று சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி, ‘‘1971ல் சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற திராவிட கழகத் தொண்டர்கள், உடை இல்லாத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மற்றும் சீதாவின் பதாகையை ஏந்திச் சென்றார்கள். அந்தப் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து எந்தச் செய்தித்தாளும் எதுவும் எழுதவில்லை. அப்புகைப்படத்தை பிரசுரிக்கவும் இல்லை. ஆனால்  சோ, தனது ‘துக்ளக்’ பத்திரிகையில் இதுகுறித்து படம் வெளியிட்டு கடுமையாக விமர்சித்தார்.இதனால் அப்போதைய திமுக அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. பத்திரிகை பிரதிகளைக் கைப்பற்றினார்கள். உடனே அந்த இதழை, மீண்டும் அச்சடித்து சோ வெளியிட்டார். ‘பிளாக்’கில் விற்றது. அடுத்த இதழிலேயே ‘நம்முடைய பப்ளிசிடி மேனேஜர்’ என கலைஞரைக் குறிப்பிட்டார் சோ...’’

ரஜினியின் இந்தப் பேச்சுதான் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.சேலத்தில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை... ரஜினி தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்... என எட்டு திசைகளில் இருந்தும் குரல் எழ... நடந்தது உண்மை... மன்னிப்பு கேட்க மாட்டேன்... என ரஜினி மறுக்க...
அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறுகின்றன.அன்று உண்மையில் என்ன நடந்தது என்று பழைய திராவிட இயக்கத்தவர்களிடம் கேட்டோம்.

தந்தை பெரியார் தலைமையில் இயங்கிய திராவிடர் கழகம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஒன்றை 1971ம் ஆண்டு ஜனவரி 23 - 24ம் தேதிகளில் சேலம் போஸ் மைதானத்தில் நடத்தியது. தொழிலதிபர் ஜி.டி.நாயுடு அந்த மாநாட்டைத் திறந்து வைத்தார்.மாநாட்டின் இரண்டாவது நாளான ஜனவரி 24 அன்று மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. ராஜேந்திரா சத்திரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் மூடநம்பிக்கையை விளக்கும் வகையிலான காட்சிகளைக் கொண்ட ட்ரக்குகளும் இடம் பெற்றன. இந்துக் கடவுள்களின் படங்களைக் கொண்ட டிரக்கு
களும் இதில் வந்தன.

அப்போதைய ஜனசங்கத்தினர் (இன்றைய பாஜகவின் முன்னோடி) பெரியாருக்கு கறுப்புக் கொடி காட்டினார்கள். அப்போது, அவர்கள் கூட்டத்திலிருந்த ஒருவர் பெரியாரை நோக்கி செருப்பை வீசினார். ஆனால், பெரியாரின் வாகனம் கடந்து சென்றுவிட்டது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த திராவிடர் கழகத் தொண்டர்கள், அதே செருப்பை எடுத்து ஊர்வலத்தில் வந்த ட்ரக் ஒன்றில் இருந்த ராமர் படத்தை அடித்தனர். இதுதான் நடந்தது...’’ என்கிறார்கள்.

தந்தை பெரியார் என்றாலே கடவுளை எதிர்ப்பவர் என்கிற ஒற்றைச் சித்திரத்தை மட்டுமே திரும்பத் திரும்ப பொதுவெளியில் வைப்பதன் மூலம் அவர் மீதான வெறுப்புப் பிரசாரத்தை செய்து வருகின்றனர் சங் பரிவாரத்தினர்.

இதற்கு ரஜினி போன்றவர்களும் பலியாவதுதான் துரதிர்ஷ்டம்.சரி, சங் பரிவாரத்தினர் எனப்படும் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் பிற வலதுசாரிகளுக்கு தந்தை பெரியார் மேல் ஏன் அவ்வளவு வெறுப்பு?இந்தக் கேள்விக்கான பதிலை கண்டடைந்தால் தந்தை பெரியார் யார் என்பது நமக்கு தெளிவாக விளங்கும்.

கடந்த இரு நூற்றாண்டுகள் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவை. இந்திய சமூகம் இன்றைய நவீன வாழ்வை எட்டுவதற்கான அடித்தளங்கள் இந்த நூற்றாண்டுகளில்தான் வலுவாக உருவாகின. அதாவது, நாம் நவீனமடைந்த நூற்றாண்டுகள் என்று இதனைச் சொல்லலாம்.

இந்தியா நவீனமடைந்தது வெறும் பொருளாதார வாழ்வில் மட்டுமல்ல. சமூக - பண்பாட்டு வெளியிலும் நாம் நவீனமடைந்தது இந்த நூற்றாண்டுகளில்தான்.

அதற்கு முன்பு இந்த நிலத்தில் குழந்தைத் திருமணம் வழக்கத்தில் இருந்தது. விதவை மறுமணம் மறுக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம் என்ற நிலை இருந்தது. சாதியால், பிறப்பால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இப்போதைவிட பல மடங்கு கொடூரமாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோயில் நுழைவு மறுக்கப்பட்டிருந்தது. இப்படி, பல பிற்போக்குத்தனமான மனநிலைகள் வழக்கத்தில் இருந்தன.

கடந்த இரு நூற்றாண்டுகளில் இந்தியாவில் ராஜாராம் மோகன் ராய் தொடங்கி எத்தனையோ சமூக - பண்பாட்டு சீர்திருத்தவாதத் தலைவர்கள் உருவாகிக் கொண்டே இருந்தார்கள். அவர்களில் பிரதானமானவர்தான் தந்தை பெரியார். இதெல்லாம் கிட்டத்தட்ட பலருக்கும் தெரிந்தவைதான்.

ஆனால், இத்தனை தலைவர்களுக்கு இல்லாத எதிர்ப்பும் கண்டனமும் தந்தை பெரியாருக்கு மட்டும் ஏன் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது..? ஏன் தந்தை பெரியாரின் திரு உருவச் சிலைகள் அடிக்கடி சேதப்படுத்தப்படுகின்றன..? அவர் மீது மட்டும் ஏன் இத்தனை வன்மம்..?
தந்தை பெரியார் கடவுளை மறுத்தார் என்பது பொதுவாக வெளியில் காட்டப்படும் பிம்பம்.

அவர் கடவுளை மறுத்தவர்தான். ஆனால், தீவிரமான ஆன்மிகப் பெரியவர்களான கைவல்யம் முதல் பலருடன் நல்ல நட்பில் இருந்தார். தந்தை பெரியார் தூய ஆன்மிகத்துக்கு எதிரானவர் இல்லை என குன்றக்குடி அடிகளார் பேசியிருக்கிறார். அப்படியானால் தந்தை பெரியார் யாருக்கு எதிரானவர்..? சாதியவாதிகளுக்கு எதிரானவர்.

மதவாதிகளுக்கு எதிரானவர். எல்லா அடிப்படைவாதங்களுக்கும் எதிரானவர். பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட பிற்போக்குக் கருத்துகளுக்கு எதிரானவர். மதத்தின் பெயரால் அரங்கேறும் அனைத்து மூடநம்பிக்கைகளையும் முற்றிலுமாக ஒழிக்க அரும்பாடுபட்டவர்.

அதனால்தான் சாதிப் படிநிலைகளை ஆதரிக்கும் மதவாதிகளும் அடிப்படை வாதங்களுக்குத் துணைபோகும் வலதுசாரிகளும் பெண்ணடிமைத்தனத்தை அமல்படுத்தும் ஆணாதிக்கவாதிகளும் அவரை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்! ஏனெனில் தந்தை பெரியாரின் கொள்கைகள் இவர்களை நோக்கித்தான் தீவிரமாகப் பேசுகின்றன. ஆர்எஸ்எஸ் மற்றும் அதில் முக்கியமான அதிகாரப் பதவியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து பெரியார் அன்றே தொடர்ந்து விமர்சித்தார்.

ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற பாஜக இன்று அதிகாரப் பதவிக்கு வந்ததும் அவர்களின் பரம எதிரியான தந்தை பெரியாரை மூர்க்கத்துடன் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் திரும்பத் திரும்ப. இதற்காக இவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் ‘பெரியார் இந்துக் கடவுள்களை அவமதிப்பவர்’ என்ற பிரசாரம்!

தந்தை பெரியாரின் முக்கியமான கருத்துக்கள் அனைத்தையும் மத அடிப்படைவாதிகளால் பொதுவில் பேசி தங்கள் தரப்பை முன்வைக்க முடியாது. அப்படிச் செய்தால் இன்றைய நவீன யுகத்தில் வாழும் மக்கள் அனைவரும் மத அடிப்படைவாதிகளை ஓரம் கட்டிவிடுவார்கள். தந்தை பெரியாரை ஆதரிக்கத் தொடங்கி விடுவார்கள்! பின்னே... பெண்ணடிமைத்தனம், சாதிய ஏற்றத் தாழ்வு, மூடநம்பிக்கைகள் ஆகியவற்றில் இருந்தெல்லாம் பெருமளவு மீண்டிருக்கும் தலைமுறை அல்லவா இந்தத் தலைமுறை!

இப்படிப்பட்ட நாகரீகம் அடைந்த சமூகமாக இன்று நாம் விளங்கக் காரணம், தந்தை பெரியாரின் அயராத பிரசாரம்தான் என்பது இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்ல... இனிவரும் தலைமுறைக்கும் தெரியக் கூடாது என்பதற்காகத்தான் அவர் - தந்தை பெரியார் - இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தினார்... மற்ற மத கடவுள்களைக் குறித்து ஒரு வார்த்தையும் தன் வாழ்நாளில் சொன்னதில்லை... என திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள்.   

உண்மையில் முன் எப்போதைவிடவும் தந்தை பெரியாரும் அவரது சிந்தனைகளும் இப்போதுதான் அதிகம் தேவை என்பதை சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் மறைமுகமாகச் சொல்கின்றன. கேரளாவின் சபரி மலை விவகாரத்தில் ஆளும் பாஜக அரசு அரசியல் செய்தபோது திராவிட தேசம் என்ற பேச்சு அங்கு எழுந்தது. இப்போது, சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பாக நாடு முழுதும் நிகழ்ந்த தொடர் எதிர்ப்புப் போராட்டங்களில் வட இந்தியாவில் தந்தை பெரியார் படம் ஏந்திய பதாகைகள் இடம் பெற்றன.

கர்நாடகாவின் அரசியல்வாதி ஒருவர் ‘திராவிட தேசம் இது’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.இப்படி நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்களும், ஆளும் தரப்புக்கு எதிரான போராட்டத்தில் தந்தை பெரியாரின் பெயரும் திரு உருவப் படமும் இடம்பெற்று வருவதும் முக்கியமான உண்மையை அறிவிக்கின்றன.

அது, தந்தை பெரியார் தமிழகத் தலைவர் மட்டுமல்ல... இந்தியா முழுதும் தேவைப்படும் தலைவராக உயர்ந்து கொண்டிருக்கிறார்!

சமீபத்தில் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தந்தை பெரியாரின் நூல்கள் விற்பனையில் சாதனைபடைத்து வருவது இதைத்தான் உணர்த்துகிறது.
சிந்தனையாளர்களுக்கு, சீர்திருத்தவாதிகளுக்கு மரணம் என்பது எப்போதும் இல்லை. கால வெள்ளத்தில் அவர்கள் சிந்தனை சில சமயங்களில் பொதுத் தளத்தில் இருந்து மறைந்துபோகக் கூடும். ஆனால், இன்னொரு காலம் வந்தால் அவர்கள் மீண்டும் வீச்சுடன் எழுவார்கள். சாக்ரடீஸ் முதல் தந்தை பெரியார் வரை எல்லோருக்குமே இந்த விதி பொருந்தும்!

இளங்கோ கிருஷ்ணன்