ரத்த மகுடம்-91பிரமாண்டமான சரித்திரத் தொடர்

எல்லோருமே இருபது வயதுக்கு உட்பட்டவர்கள். ஆண்களின் எண்ணிக்கைக்கு சமமாக பெண்களும் அங்கிருந்தார்கள். இரு பாலினருக்குமே தேகங்கள் வலுவாக இருந்தன. நாள்தவறாமல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பதற்கு அத்தாட்சியாகத் திகழ்ந்தன.உண்மையிலேயே அக்கணத்தில் சிவகாமி வியப்படையத்தான் செய்தாள்.
போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் வீரர்கள் பயிற்சி எடுப்பது புதிதல்ல. ஆனால், தங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில், அதுவும் பகையா நட்பா என என்றுமே உறுதியாகாத ஒரு நாட்டில் சர்வசாதாரணமாக வீரர்கள் பயிற்சி எடுத்து வருவது என்பது அசாத்தியமல்லவா..?

அதைத்தான் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை மாநகருக்குக் கீழே இருந்த நிலவறையில் பல்லவ வீரர்கள் அவள் கண் முன்னால் சாதித்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கங்களில் கெட்டிப்பட்ட மண்ணும், கற்களுமாக சுவர்கள். பொதுவாக நிலவறை என்றால் நீளவாக்கில் பாதை செல்லும். சதுரமாகவோ அகலமாகவோ அறைகள் போல் ஒன்று பாதையின் முடிவிலோ, பாதையின் நடுவிலோ தென்படும்.

ஆனால், மைதானமாக விரிந்த நிலவறையை தன் வாழ்க்கையில் இப்போதுதான் சிவகாமி காண்கிறாள். காற்றுப் புக ஆங்காங்கே துளைகள் இருந்தன. சரியாக அவையும் மேல் கூரையில் செதுக்கப்பட்டிருந்தன. உட்புற வெளிச்சத்துக்கு பகலிலும் தீப்பந்தங்கள்.

எந்த வழியாக இந்த நிலவறை மைதானத்துக்கு எப்போது எப்படி வருவார்கள்... எப்படி வெளியேறுவார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் பல்லவ வீரர்கள் சாமர்த்தியசாலிகள்தான். இல்லையெனில் பாண்டியர்களின் கண்ணில் இப்படி மண்ணைத் தூவிவிட்டு அவர்கள் மண்ணிலேயே பயிற்சி எடுக்க முடியாதே! எத்தனை காலங்களாக இது அரங்கேறி வருகிறதோ!

தாவிக் குதித்தும் ஒருவருக்கொருவர் முட்டி மோதியும் பயிற்சி செய்து வந்தபோதும் ஒருவரும் எவ்வித ஒலியையும் எழுப்பவில்லை. சுவாசத்தின் அளவுகள் மட்டுமே மேற்கொள்ளும் பயிற்சிக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் வேகமாகவும் சீராகவும் இருந்தன; அதுவும் நிசப்தமாக! எழுந்து தாழ்ந்த மார்பகங்கள் மட்டுமே ஒவ்வொரு வீரனின் சுவாசத்தையும் பிரதிபலித்தன!

பயிற்சி பெறுவது பல்லவ வீரர்கள்தான் என்பதில் சிவகாமிக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவள் ஐயப்படக் கூடாது என்பதற்காகவே ரிஷபக் கொடி பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தது!திரைச்சீலை போல் சுவர் உயர்ந்ததையும், தான் அதனுள் நுழைந்ததையும், ஒரு கரம் தன்னை உள்ளே இழுத்ததையும் நினைத்துப் பார்த்தாள். அந்தக் கரம் கரிகாலனுடையதல்ல என்பதை ஸ்பரிசத்தில் இருந்தே உணர்ந்துகொண்டாள்.

எனில், யாராக இருக்கும் என திரும்பிப் பார்க்க முற்பட்டபோது தனது நாசியின் மேல் வெண்மை நிற பருத்தித் துணி ஒன்று அழுத்தப்பட்டது.
அதன் பின் இப்போதுதான் கண்விழிக்கிறாள். எத்தனை நாழிகள், தான் மயக்கத்தில் இருந்தோம்..? தெரியவில்லை. எழுந்து அமர்ந்தவளின் பார்வையில் முதியவர் ஒருவர் தென்பட்டார்.

தலைக்குழலும் மீசையும் மட்டுமே நரைத்திருந்தன. இதை வைத்து மட்டுமே அவரை முதியவராக மதிப்பிட முடியும். ஏனெனில் முப்பது வயதுள்ள திடகாத்திரமான ஆண் போலவே காணப்பட்டார். புஜங்களும் கணுக்கால்களும் பாறைகளைப் போல் இறுகியிருந்தன. மார்பு, அகன்று விரிந்திருந்தது. ஆறடி உயரம். அதற்கேற்ற உடல்வாகு.

கண்களாலும் செய்கைகளாலும் மட்டுமே பயிற்சி பெறும் வீரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டி
திருத்திக் கொண்டிருந்தார். மற்றபடி அவரது உதடும் சரி... பயிற்சி பெற்றவர்களின் உதடுகளும் சரி... பிரியவே இல்லை!புருவங்கள் சுருங்க சிவகாமி எழுந்து நின்றாள். யாரோ தோளைத் தொட்டார்கள்.திரும்பினாள்.

இரவின் மூன்றாம் ஜாமத்தில் தன்னுடன் உப்பரிகையில் வாட் போரிட்ட இளமங்கை புன்னகையுடன் நின்றிருந்தாள்! செய்கையால் தன்னைப் பின்தொடரும்படி ஜாடை காட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.உதட்டில் பூத்த புன்னகையுடன் சிவகாமி அவளைத் தொடர்ந்தாள்.
எந்த இடத்தில் மயக்கமாகி சிவகாமி படுத்திருந்தாளோ அந்த இடத்துக்கு எதிர்ப்பக்கமாக இருந்த மைதானத்தில்தான் வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பெண் சிவகாமியை அழைத்துச் சென்றது பின்பக்கமாக. அதாவது மைதானத்துக்கு எதிர்ப்புறமாக.ஒற்றையடிப் பாதை போல் நீண்ட நிலவறையின் பாதையில் எவ்வித உரையாடலும் இன்றி இருவரும் நடந்தார்கள்!‘‘வாருங்கள்... வாருங்கள்...’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் படபடத்தான்: ‘‘சொல்லி அனுப்பியிருந்தால் நான் வந்திருப்பேனே...’’ என்றபடி ராமபுண்ய வல்லபரின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.

‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ சாளுக்கிய போர் அமைச்சர் அவனை ஆசீர்வதித்தார். அவர் கண்களில் அன்பும் பரிவும் வழிந்தது.கைக்குழந்தையாக விநயாதித்தனை தன் கரங்களில் ஏந்தியது முதல் அவனை ஸ்ரீராமபுண்ய வல்லபர் பார்த்துக் கொண்டிருக்கிறார். சாஸ்திரங்கள் முதல் போர்ப் பயிற்சி வரை சகலத்தையும் அவனுக்குக் கற்பித்தது அவர்தான். கற்பிக்கும் நேரத்தில் எவ்வளவு கண்டிப்புடன் இருப்பாரோ அவ்வளவு தோழமையுடன் மற்ற நேரங்களில் பழகுவார்.எனவே, தன் தந்தையைவிட அவரை அதிகமும் விநயாதித்தன் நேசித்தான்.

சாளுக்கிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக தன் தந்தை இருந்ததால் விவரம் தெரிந்த நாள் முதலே ‘அப்பா’ என ஒன்ற முடியாமல் ஒரு படி தள்ளியே நின்றான். மரியாதை இமயமலை அளவுக்கு இருந்தது. அதே அளவுக்கு அன்பு ராமபுண்ய வல்லபரிடம்தான் விநயாதித்தனுக்கு அமைந்தது. 

‘‘அவசரம்... அதனால்தான் நானே வந்தேன்...’’ நிதானமாகத்தான் ராமபுண்ய வல்லபர் சொன்னார். ஆனால், அதனுள் மறைந்திருந்த பரபரப்பை விநயாதித்தன் உணர்ந்து கொண்டான்:

‘‘சொல்லுங்கள் குருதேவா... நான் என்ன செய்ய வேண்டும்..?’’
‘‘சொல்கிறேன்... காலை உணவை அருந்திவிட்டு வா...’’‘‘நீங்கள் வருவதற்கு முன்தான் உண்டு முடித்தேன்... பாண்டிய நாட்டில் விருந்தோம்பல் பலமென்றுதான் தங்களுக்குத் தெரியுமே...’’‘‘நல்லது...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்: ‘‘கடிகை பாலகனை இறுதியாக எப்போது சந்தித்தீர்கள் இளவரசே..?’’‘‘குருதேவா... இந்த மதுரை விருந்தினர் மாளிகையில் நாம் இருவரும் மட்டும்தான் இருக்கிறோம்... மரியாதை வேண்டாம்... ஒருமையிலேயே தங்கள் சீடனை அழைக்கலாம்...’’

கண்களால் புன்னகைத்தார் சாளுக்கியர்களின் போர் அமைச்சர்: ‘‘சரி... கேட்டதற்கு என்ன பதில்..?’’
‘‘நேற்றிரவு குருதேவா..?’’
‘‘எப்போது..?’’‘‘முதல் ஜாமத்தில்...’’
‘‘அதன் பிறகு கடிகை பாலகன் எங்கு சென்றான்..?’’‘‘தெரியாது குருதேவா... ஏதேனும் பிரச்னையா... வேண்டுமானால் வேளிர்களின் தலைவனை இப்போது இங்கு வரச் சொல்லவா..?’’‘‘வேளிர்களின் தலைவன்...’’ தன் பற்களைக் கடித்தபடி ராமபுண்ய வல்லபர் முணுமுணுத்தார்: ‘‘வரச் சொல்...’’
அவரை புருவம் உயர பார்த்துவிட்டு அகன்ற விநயாதித்தன், அறைக்கு வெளியே நின்றிருந்த சாளுக்கிய வீரனிடம் கடிகை பாலகனை உடனடியாக அழைத்து வரும்படி கட்டளையிட்டுவிட்டு வந்தான்.

எதுவும் பேசாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்த ராமபுண்ய
வல்லபர், சட்டென திரும்பி விநயாதித்தனை உற்றுப் பார்த்தார்.
இமைக்காமல் அவரது பார்வையை சாளுக்கிய இளவரசன் எதிர்கொண்டான்.

‘‘மதுரைக்கு நீ வந்து ஒரு திங்கள் இருக்குமா..?’’
‘‘வரும் பவுர்ணமியுடன் ஒரு திங்களாகிறது குருதேவா...’’
‘‘எத்தனை முறை பாண்டிய மன்னரைச் சந்தித்தாய்..?’’
‘‘ஆறேழு முறை அந்தரங்கமாக... பத்து முறை அமைச்சர் பெருமக்கள் சூழ...’’
‘‘அதாவது இருநாளைக்கு ஒருமுறை அரிகேசரி மாறவர்மரைச் சந்தித்து உரையாடி இருக்கிறாய்... அப்படித்தானே..?’’
‘‘ஆம் குருதேவா...’’

‘‘என்ன சொன்னார்..? நடக்கவிருக்கும் போரில் நம் பக்கம் இருப்பதாக உறுதி அளித்தாரா..?’’‘‘பட்டும் படாமலும்தான் பேசிக்கொண்டிருக்கிறார்...’’
‘‘நினைத்தேன்...’’ ராமபுண்ய வல்லபர் சாளரத்தின் அருகில் சென்று தன் கண்முன்னால் தெரிந்த அரண்மனையைப் பார்த்தார்: ‘‘பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன் உன்னுடன் எப்படிப் பழகுகிறான்..?’’

‘‘தோழனாகத்தான் குருதேவா... ஒன்றாக வேட்டைக்குச் செல்கிறோம்... நாள்தோறும் மதியம் அல்லது இரவு சேர்ந்தே உணவருந்துகிறோம்... ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம்...’’
‘‘ஆனால், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை... சரிதானா..?’’
‘‘...’’
‘‘என்ன பதிலைக் காணும்..?’’ கேட்டபடியே ஸ்ரீராமபுண்ய வல்லபர் திரும்பினார்.
விநயாதித்தன் தலைகுனிந்து நின்றான்.அந்தக் கோலத்தில் சாளுக்கிய இளவரசனைப் பார்க்க அவருக்கு என்னவோ போல் இருந்தது.அருகில் வந்து அவன் தோள்களைத் தொட்டார். தாடையைப் பிடித்து அவன் முகத்தை உயர்த்தினார்:

‘‘அரசியல் என்றால் அப்படித்தான் விநயாதித்தா... போகப் போக நீயே புரிந்து கொள்வாய்... விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழர்கள் தங்களைத் தேடி எதிரியே வந்தாலும் வரவேற்று உபசரிப்பார்கள்... ஆனால், வாக்கு கொடுக்க மாட்டார்கள்... தேனாகப் பேசுவார்கள்... ஆனால், உறுதிமொழி வழங்கமாட்டார்கள்... பக்குவமாக அவர்களது கழுத்தை நெரித்தால்தான் நம் வழிக்கு வருவார்கள்...’’

‘‘பாண்டியர்களின் கழுத்தை ‘அன்பாக’ நான் நெரிக்க என்ன செய்ய வேண்டும் குருதேவா..?’’
‘‘இன்றிரவு பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனை விருந்துக்குக் கூப்பிடு!’’
புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக சட்டென விநயாதித்தனின் விழிகள் அகன்றன: ‘‘உத்தரவு குருதேவா...’’ சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு மெல்லக் கேட்டான்: ‘‘வேறு யாராவது விருந்துக்கு வருகிறார்களா..?’’
‘‘ஆம்...’’

‘‘யாரென்று அடியேன் அறியலாமா..?’’
ராமபுண்ய வல்லபர் வாய்விட்டுச் சிரித்தார்: ‘‘உனக்குத் தெரிந்த
வர்தான். சிவகாமி!’’
நிலவறையின் பாதை ஓரிடத்தில் முடிந்தது.
முன்னால் சென்ற பெண் திரும்பி தன் இடுப்பில் இருந்து
கருமை நிற துணி ஒன்றை எடுத்தாள்.

சிவகாமி புரிந்து கொண்டாள். முன்னால் வந்து நின்றாள்.
கையில் இருந்த துணியால் சிவகாமியின் கண்களை இறுகக் கட்டினாள் அந்தப் பெண்.
அதன் பிறகு சிவகாமியின் கைகளைப் பிடித்தபடி அந்தப் பெண்
நடந்தாள். வலது, இடது... என மாறி மாறித் திரும்பினார்கள்.

ஒரு நாழிகை பயணத்துக்குப் பின் தென்றல் தன்னை தழுவுவதை சிவகாமி உணர்ந்தாள். நிலவறையை விட்டு வெளியே வந்திருக்கிறோம்!
அவளது கண்களைக் கட்டியிருந்த கட்டை அப்பெண் அவிழ்த்தாள்.
நந்தவனம் ஒன்றில் தாங்கள் இருப்பதை அறிந்த சிவகாமி, தன்னை அழைத்து வந்த பெண்ணைப் பார்த்தாள்.
முன்னே செல்லும்படி அப்பெண் சைகை செய்தாள்.

அங்கு கரிகாலன் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தான்!
‘‘வா இரணதீரா...’’ தன் மைந்தனை அன்போடு அழைத்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.
வந்த பாண்டிய இளவரசன், தன் தந்தையின் கால்களைத் தொட்டு வணங்கினான்: ‘‘சொல்லுங்கள் தந்தையே...’’
‘‘இன்று விநயாதித்தனுடன் வேட்டைக்குச் செல்லவில்லையா..?’’
‘‘நாளைதான் செல்கிறோம் தந்தையே...’’
‘‘இன்று என்ன திட்டம்..?’’
‘‘மாலை தன் மாளிகைக்கு சாளுக்கிய இளவரசர் அழைத்திருக்கிறார்...’’
‘‘எதற்கு..?’’

‘‘ஏதோ விருந்து என்றார்...’’
‘‘நல்லது... இந்தா...’’ என்றபடி முத்திரையிடப்பட்ட ஓலைக்குழல்
ஒன்றை கோச்சடையன் இரணதீரனிடம் கொடுத்தார்.
‘‘விருந்துக்கு சிவகாமியும் வருவாள். அவளிடம் இதைக் கொடுத்துவிடு!’’

‘‘ஏன் கடிகை பாலகனை வெளியிலேயே நிறுத்தி விட்டாய்... அவனை உள்ளே அனுப்பு...’’ தன்னை வணங்கிய சாளுக்கிய வீரனிடம் விநயாதித்தன் சொன்னான்.வீரன் தயங்கினான்.‘‘என்ன..?’’
‘‘அவர் தன் இருப்பிடத்தில் இல்லை...’’
‘‘எங்கு சென்றானாம்..?’’

‘‘அங்கிருக்கும் நம் வீரர்களுக்கு எதுவும் தெரியவில்லை...’’
‘‘எப்போது சென்றானாம்..?’’
‘‘நேற்றிரவு தங்களைப் பார்க்க வந்ததுதானாம்... அதன் பிறகு திரும்பவில்லை என்கிறார்கள்...’’

‘‘சரி... நீ செல்...’’ அதுவரை அமைதியாக இருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் கட்டளையிட்டார்.இருவரையும் மீண்டும் வணங்கிவிட்டு வீரன் அகன்றான்.‘‘குருதேவா... என்ன இது..?’’‘‘அரசியல் சதுரங்க விளையாட்டு விநயாதித்தா!’’ ஆழ்ந்த சிந்தனையுடன் பதிலளித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்: ‘‘என் கணிப்பு சரியென்றால் ‘வேளிர்களின் தலைவன்’ இப்போது சிறையில் இருக்கிறான்...’’‘‘பாண்டியர்களின் சிறையிலா குருதேவா..?’’

‘‘இல்லை... கரிகாலனின் தனிப்பட்ட சிறையில்!’’
தன்னை நோக்கி வந்த சிவகாமியை இழுத்து அணைத்தான் கரிகாலன்.
‘‘ச்சூ... என்ன இது...’’ சிவகாமி திமிறினாள்: ‘‘அந்தப் பெண் அங்கு நிற்கிறாள்...’’
‘‘எந்தப் பெண்..?’’ கேட்டபடி அவள் கழுத்தில் தன் இதழ்களைப் பதித்தான்.
‘‘என்னை அழைத்து வந்தவள்...’’

‘‘அவள் அப்பொழுதே அகன்றுவிட்டாள்...’’‘‘உங்களுக்கு வசதியாக!’’‘‘ஆம்...’’ என்றபடி ஆலிலை போல் அகன்றிருந்த அவள் வயிற்றை இறுக்கி, நாபிக் கமலத்தில் தன் ஆள்காட்டி விரலை நுழைத்தான்.‘‘ம்...’’ முணுமுணுத்த சிவகாமி அவன் மார்பில் அப்படியே சாய்ந்தாள்.

‘‘சிவகாமி...’’‘‘என்ன...’’கரிகாலன் குனிந்தான். அவன் சுவாசம் அனலாக சிவகாமியின் செவிகளை வருடியது: ‘‘அதங்கோட்டாசான் உயிருடன் இருப்பதை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரிடம் தெரிவித்து விட்டாயா..?’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்