ஷாட் பை ஷாட் மிஷ்கின் சொல்லிக்கொடுத்து நடிச்சதுதான்! சைக்கோ ராஜ்குமார் பளீர்
‘சைக்கோ’ வெளியாகி அதிரடியாய் கவனம் பெற்றிருக்கிறது.மிஷ்கின், இளையராஜா, தன்வீர், உதயநிதி என அதிதீவிரமாகப் பாய்ச்சல் காட்டியிருந்தாலும் அதையும் மீறி வெளியே வந்தது சைக்கோ கேரக்டர்.
 கொலைக்களத்தில் ஆவேசமும், இறுக்கமும் பதற்றமும் நிறைந்த இடத்தில் அசால்ட்டாக நடித்திருக்கிறார் ராஜ்குமார் பிச்சுமணி. ‘பயமுறுத்திட்டீங்க, நடுங்கிப்போயிட்டோம் சார்’ என அவர் முன் குவியும் டெடிகேட்களே குறையவில்லை. இதோ நம்முன் உட்கார்ந்து சைக்கோ அனுபவங்களை விவரிக்கிறார்: 
சினிமா ரொம்பவும் பிடிச்சுப்போய் கன்னியாகுமரியிலிருந்து வந்திட்டேன். கொஞ்ச நாள் ஐடியில் வேலை பார்த்தேன். கௌதம் மேனனின். ‘நீதானே என் பொன்வசந்தத்’தில் ஜீவாவின் நண்பனாக வந்தேன்.
‘பிரியாணி’ல வந்துட்டுப் போனேன். அப்புறம்தான் ஒருநாள் போட்டோஸ் எடுத்துக்கிட்டு மிஷ்கின் சார் ஆபீஸ் வந்தேன். தட்டிட்டு கதவைத் திறந்தால் நடுநாயகமாக மிஷ்கின் உட்கார்ந்திருக்கார். உடனே கதவை மூடிட்டேன். கூப்பிட்டுப் பேசினார். ‘நான் நடிக்கத்தான் வந்தேன். ஆனால், உங்ககிட்டே உதவியாளராகச் சேரணும்’னு சொன்னேன். பேராசிரியர் சொர்ணவேல் எனக்கு சித்தப்பா. ‘சரி வா. உன்னை குழந்தை மாதிரி பார்த்துக்கிறேன். ஆனால், சொல் பேச்சு கேக்காட்டி உதை விழும்’னு சொன்னார். ‘‘பிசாசு’ படத்தில் ஃப்ரண்ட் ரோல் இருக்கு. பண்றியா’னு கேட்டார். அதிலும் நண்பனாக வந்தேன்.
ஒண்ணுமே தெரியாமல் சினிமா ஆசையில் வந்தேன். ஆனால், எனக்கு ‘பதேர் பாஞ்சாலி’, குரோசவா படங்கள் போட்டுக் காட்டினார் மிஷ்கின். சினிமாங்கிறது கொஞ்சமாக புரிய ஆரம்பிச்சது. இதுக்கு மேலே எந்த இடத்தில் இப்படிக் கிடைக்கும்னு இங்கேயே இருந்திட்டேன்.
நடுவில் கல்யாணம் ஆச்சு. போயிட்டு வந்தேன். ஒரு நாள், ‘டேய், உன் மூஞ்சிக்குன்னு ஒண்ணு எழுதிட்டு இருக்கேன். எப்படி வருதுன்னு பார்ப் போம்’னு சொன்னார்.
மறுநாள் அவரோட நண்பர் ஆண்டன் தாஸ் என்னை படமெடுத்து இவருக்கு அனுப்ப, ‘ஆண்டன், இவனை வெயிட்டிங்கில் வைச்சிருந்தேன். ‘கன்ஃபார்ம்’ பண்ணிட்டிங்க’னு சொன்னார். ஹீரோ மாறினாங்க. புரடியூசர் மாறினாங்க. ஆனால், நான் மாறவேயில்லை!
அவரோட இருந்ததே பெரிய அனுபவம். எப்ப பாத்தாலும் படிச்சிட்டே இருப்பார். நம்மால் படிக்க முடியாது. படிச்சவங்க கூட இருப்போம்னு இருந்திட்டேன். அதனால் எதாவது ஒரு விஷயம் நமக்குள்ளே போகும்னு நினைச்சேன்.
மனசு டவுன் ஆனா நாலு கதையை எடுத்துச் சொல்வார். அவரைப் பார்த்துக்கிட்டே இருப்பேன். அவ்வளவு சர்ப்ரைஸ் பண்ணுவார். நானும் நண்பர்கள்கிட்ட இங்கே கேட்டதிலிருந்து எடுத்து விடுவேன். என்னை ரொம்ப விவரம் தெரிஞ்சவன்னு நினைச்சிடுவாங்க. நம்ம சரக்கு எங்கேயிருந்து கிடைக்குதுன்னு அவங்களுக்குத் தெரியாது!
சினிமாவை விடுங்க, வாழ்க்கையை கத்துக் கொடுத்தார். ஒரு கோடி ரூபாய் வைச்சிருப்பார். பத்தாவது நாள் 100 ரூபாய் கூட பர்ஸில் இருக்காது. காசு இருக்கிறபோதும், இல்லாதபோதும் வித்தியாசமே தெரியாது.
வாழத்தெரிஞ்ச மனுஷன். நம்ம கூடவே இருக்கும்போது ‘என்ன... நம்மளை மாதிரி ஆள்தானே’னு திடீரென்று தோணும். அந்த இடத்திலிருந்து மறுநாள் ஒண்ணு பண்ணுவார். மறுபடியும் ‘அடேங்கப்பா, பெரிய ஆளு’ன்னு நினைக்க வைச்சிடுவார். எனக்கும் கம்பெனி குடுப்பார். மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை வந்தாலும் மொழி, மார்க்சியம்னு நாலு மணி நேரம் பேசுவார். ஷாட் பை ஷாட் அவர் சொல்லிக் கொடுத்து நடிச்சதுதான். ஸ்பாட்ல அரட்டை அடிச்சுக்கிட்டு, தம் அடிச்சுக்கிட்டு, நடிகைகளோடு பேசிட்டு அவரை தொந்தரவு பண்ணவே மாட்டேன். அதிதிக்கு சத்தம் போடாமல் ஒரு ‘ஹாய்’ சொல்றதோட சரி. எங்க அக்கா படம் பார்த்திட்டு ‘தம்பி நீயுமாடா நடிக்கிற’னு முதலில் சிரிச்சாங்க. படம் முடிஞ்ச பிறகு, ‘நீ வேற மாதிரி இருக்கடா தம்பி’னு கலங்கிட்டாங்க.
என் மனைவி சாய்லட்சுமி அழுதிட்டாங்க. தன் புருஷனுக்கு இப்படியெல்லாம் நடிக்கத் தெரியுமான்னு ஆச்சர்யப்பட்டு, அதை மக்கள் கொண்டாடுறதைப் பார்த்திட்டு அவங்களுக்கு அது கண்ணீரா உருமாறிப் போச்சு. ஒண்ணும் சாதிக்கலை. நான் மிஷ்கின் சார்கிட்டேதான் இருந்துகிட்டே இருக்கணும்னு நினைக்கிறேன். ‘டேய், நான் உன்னை பூமராங்கா விட்டுட்டேன்.
ஒரு சுற்றுப் போயிட்டு வா. குழந்தையா என்னையே சுத்திக்கிட்டு இருக்காதே. ஒரு நாள் உக்காந்து அடுத்த திட்டத்தைப் பேசுவோம். உனக்கு ஓர் அடையாளம் கொடுத்தாச்சே. புதுப்பயணமா புறப்படு’னு சொன்னார். ஒண்ணு தெரியுமா உங்களுக்கு.... அவர்கிட்டே இருந்து நான் கத்துக்கிட்டது குருகுல வாசம்தான். அவர் முழிச்சிட்டு இருக்கும்போது முழிச்சிட்டே இருப்பேன். அவர் தூங்குறபோது தான் தூங்குவேன். அவருக்கு கார் ஓட்டுறது, சாப்பாடு வைக்கிறது, அவர் நிம்மதியாக தூங்க பெட் ரெடி பண்ணி வைக்கிறது கூட இங்க இருந்தால் நான்தான் செய்வேன். 20 பேர் இருந்தாலும் இதைச் செய்வேன்.
அவர் காசு, பணம் எதிர்பார்க்கிறவர் கிடையாது. சங்கீதத்தில் பிரதானமாக பின்னாடி ரசிக்கப்பட்டவங்க எல்லாமே இப்படி பெரிய வித்வான்கிட்டே குருகுல வாசத்துல இருந்தவங்கதான். இனிமேல்தான் என் பயணத்தைத் தொடங்கணும். சார் மாதிரி நல்ல இயக்குநர்களின் பார்வை கிடைச்சாலே போதும். எனக்கு சாரோட guidance கிடைக்கும்கிற நம்பிக்கையில ஓடிட்டு இருக்கேன்!
நா.கதிர்வேலன்
ஆண்டன் தாஸ்
|