5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: முன்னேறி வரும் தமிழக கல்வித்துறையை பின்னோக்கி இழுக்கும் முயற்சி!



இந்த 2020 கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு நிச்சயமாக ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும்; அடுத்தாண்டு தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

சிறுவயதிலேயே மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்வதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்று கல்வியாளர்கள், உளவியலாளர்கள், அரசியல் கட்சிகள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் பொதுத் தேர்வு நடத்துவதில் தமிழக அரசு திட்டவட்டமாக இருக்கிறது. 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தினசரி மாலை வேளையில் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது.  

5, 8ம் வகுப்பு மாணவர்கள் தொடக்கக்கல்வி நிலையில் உள்ளனர். தொடக்கக்கல்வி நிலையில் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்கக் கூடாது என கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு எதிராகப் பொதுத் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“உலகின் பல்வேறு நாடுகளில் பழைய முறையிலிருந்து, புது முறைக்கு கல்வியை மாற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்வு வைப்பதன் மூலம், ஒரு நிறுவனமே குழந்தைகள் மீது உளவியல் ரீதியான தாக்குதலை நடத்துகிறது என்பது முக்கிய குற்றச்சாட்டு.  

அதனால் தேர்வுக்கு பதிலாக, செய்முறைக் கல்வி அல்லது ஃபார்மல் டெஸ்ட் போகலாமென்று அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். கியூபா போன்ற நாடுகளில் தேர்வுகளில் புத்தகத்தைப் பார்த்து எழுதுவது போலவே இருக்கிறது. பத்து வயது வரை பல நாடுகளில் தேர்வு முறை இல்லை.
முன்னேறிய நாடுகள் என்று சொல்லக்கூடிய நாடுகளில் கல்வி முறைகள் சிறப்பாக உள்ளன.

குறிப்பாக பின்லாந்து முதலிடம் வகிக்கிறது. குறைவான மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் பாடம் சொல்லித் தருகிறார். இதனால் அந்தக் குழந்தைகளுக்கு என்ன வரும், அவர்களுக்கு என்ன தேவை என்பதைக்கண்டு அதற்கேற்ப கற்றுத் தரப்படுகிறது.  

பின்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நம் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ‘நாங்களும் சிறப்பான கல்வியைக் கொடுப்போம்’ என்று சொல்லிவிட்டே சென்றார். சரி... அங்கிருக்கும் மிகச்சிறந்த கல்வி முறையைப் பார்வையிட்டு, ஆராய்ந்து அதேபோல் தமிழகத்திலும் அமல்படுத்துவார் என்று பார்த்தால்... நேர் எதிராகச் செயல்படுகிறார்...’’ என்று சொல்லும் வழக்கறிஞர் கரீம், தமிழக அரசின் இந்த முடிவுக்குக் காரணம், மத்திய அரசின் 2019ம் ஆண்டின் கல்விக் கொள்கைதான் என்கிறார்.

‘‘அக்கொள்கையை அப்படியே மாநிலங்களில் அமல்படுத்த தமிழக அரசு முயல்கிறது. இத்தனைக்கும் பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இக்கல்விக் கொள்கையை அமல்படுத்தத் தயங்குகிறது. ஆனால், தமிழக அரசு அவசர அவசரமாக இதை நடைமுறைப்படுத்துகின்றது. இது நேர்மையற்ற அணுகுமுறை. கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்கள் பல்வேறு முதல்வர்கள் முன்னெடுத்து தமிழக கல்வித்துறையை முன்னேற்றியுள்ளனர். அவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் செயலில் இப்போதைய தமிழக அரசு செயல்படுகிறது.

இதனால் பல மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள். கல்வி அறிவாற்றல் பரவாமல் தடுக்கப்படும். குறிப்பாக அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீண்டும் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும். அரசுப் பள்ளிகள் மெல்ல மெல்ல மூடப்பட்டு தனியார் பள்ளிகள் அதிகரிக்கும். இதனால் பணம் படைத்தவர்களால் மட்டுமே பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப இயலும்.

படித்தவர்களுக்கே வேலை கிடைக்காத நிலையில் கல்வி கற்காத இளைஞர்களின் எதிர்காலம் இனிவரும் காலங்களில் என்னவாகும் என்பதை யோசிக்கவே பயமாக இருக்கிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அழுத்தம் அதிகரிக்கும். 100% ரிசல்ட் காட்ட வேண்டுமென்று மாணவர்களிடம் மூர்க்கத்துடன் நடந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். இதனால் மாணவர் சமுதாயத்தின் உளவியலே பாதிக்கப்படும். இது வருங்கால இந்தியாவை பாதிக்கும்...’’ என்கிறார் வழக்கறிஞர் கரீம்.

இதை ஆமோதித்தபடியே உளவியல் ரீதியாக ஏற்படக் கூடிய சிக்கல்களை விளக்கத் தொடங்கினார் உளவியல் மருத்துவரான ருத்ரன்:
“பொதுவாகவே தேர்வு என்பது மாணவர்களிடையே ஒரு பதட்டத்தை உருவாக்கும். ஆனால், இது தேர்வு ஆரம்பித்தவுடன் சரியாகி விடும். பொதுத் தேர்வு என்பது வழக்கமான இறுதித் தேர்வல்ல. இதன் வீச்சும் தாக்கமும் அதிகம் என்பதை குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோரும் ஆசிரியரும் மனத்தில் பதிய வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

5ம் வகுப்பு குழந்தைகளுக்கு இது ஏன் திடீரென்று இவ்வளவு பெரிய விஷயமாகி இருக்கிறது என்பது புரியாது. அவர்களது பெற்றோரும் திடீரென்று படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து, குழந்தைகளுக்கு ஓர் இறுக்கத்தை உண்டாக்குவார்கள். 10ம், 12ம் வகுப்பில் - பதின் வயதில் உள்ள மாணவர்களுக்கு வீட்டிலும் பள்ளியிலும் ஏற்படும் இறுக்கத்தை வருடந்தோறும் பார்க்கலாம். இது இப்போது விவரம் சரிவர புரியாத குழந்தைகளுக்கும் ஏற்படும்.

பெற்றோர் கண்டிப்பு கூடும். ஆயாசமாகப் பார்க்கும் தொலைக்காட்சி, ஆர்வமாகப் பங்கேற்கும் விளையாட்டு எல்லாமும் குறையும் அல்லது தொலையும். ‘பொதுத் தேர்வு என்பதால் அடுத்த வகுப்பு போக முடியாது என்பதல்ல’ என்று சொல்லும் இந்த அரசு, நீதிமன்றத்தில் அவ்வாறு சொல்லாமல் அதுகுறித்து பின்னர் ஆலோசிக்கப்படும் என்று கூறியிருக்கிறது.

ஆசிரியர்களுக்கும் ‘நல்ல ரிசல்ட்’ என்னும் நிர்ப்பந்தம் உருவாகும். இது குழந்தைகள் மீது ஓர் அழுத்தத்தைக் கூட்டும்.இவ்வளவு இறுக்கத்தை எல்லா குழந்தைகளும் தாங்காது. சிலரின் மனம் பாதிப்படையும்.


மனச்சோர்வு வரும், சலிப்பு வரும். திடீரென்று வாழ்க்கை சுவையற்றதாகவும் தோன்றும். படிப்பின் மீதே எரிச்சல் வரும். படிக்க வற்புறுத்துவோர் மீது வெறுப்பு வளரும்... எல்லாமும் 5ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு!

நடுத்தர வர்க்கத்தினருக் 5ம் வகுப்பிலிருந்தே டியூஷன் செலவு மாதக் கணக்கில் கூடும். ஏழைகளுக்கு, ‘படிப்பு வரலே... வேற ஏதாவது கத்துக்க...’ என்று படிப்பே நின்றுவிடும் ஆபத்தும் வரும்.5ம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயம் தேர்வு அவசியமில்லை. 8ம் வகுப்பில் இதற்காக மாணவர்களைத் தயார் செய்து இன்னும் மூன்றாண்டுகள் கழித்து பரிசோதிக்கலாம். ஆனால், அதுவும் அவசியமில்லை என்பதே உண்மை.

பள்ளியின் மூலம் ஒரு கட்டுப்பாடு, சமூக இணக்கம், நட்பு பகிர்தல்... எனக் கிடைக்கும் பலன்கள் பள்ளியை விட்டு நிற்பதால் தடைபடும். இது மாணவ சமூகத்தின் எதிர்காலத்தையே பாழாக்கும்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் டாக்டர் ருத்ரன்.

அன்னம் அரசு