லவ் ஸ் டோரி- எங்கள் வாழ்வின் வற்றாத ஊற்று நீரையே எதிரிகளுக்குப் பருகத் தருகிறோம்!



பவா செல்லத்துரை

நான் அப்போதுதான் ஒரு நீண்ட காதலை இழந்திருந்தேன். கையிலிருந்த குழந்தையை யாரோ என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்ட ஒரு தாயின் பரிதவிப்பு; கையறுநிலை. கையாலாகாத்தனத்தோடு இருந்தேன்.
நான் தனித்துவிட்ட சில மாதங்களில் ஷைலஜா தன் அடர் த்தியான காதலை என் உள்ளங்கை நிறைய நிறைத்த அந்த மாலை எப்பொழுதும் நினைவிருக்கும்.எதாவது ஓர் ஆறுதலான மடிசாய்த்தலுக்கு ஏங்கித் தவித்த நாட்கள் அவை. என் உள்ளங்கை கொள்ளாமல் நிரம்பி வழிந்த அந்த பேரன்பின் கனிகளை நான் அப்படியே அடைகாத்துக் கொண்டேன்.

இப்போது இருபத்தியாறு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு ரயில் ஓசை மாதிரி சடசடத்தும், ஆழ் கடல் பயணம் போல அமைதியாகவும் எங்களிடமிருந்து போய்விட்டன. இப்பவும் எங்கள் அன்பு வற்றிவிடவோ, காய்ந்துவிடவோ செய்யாமல் வாழ்வு தன் அன்பின் கதகதப்பில் எங்களைப் பொத்தி வைத்துக் கொள்கிறது.

எங்கள் காதல் தினங்கள் அன்பினால் நிறையும் மகத்துவம் பற்றி நான் ச.தமிழ்ச்செல்வனுக்கு அப்போது ஒரு கடிதம் எழுதிப்போட்டேன்.
‘‘வாழ்வில் நீங்கள் இருவருமே அன்பற்றவர்களாக, ஈரப்பதமற்ற உலர்ந்த நாட்களில் வாழப்போகும் நாட்களுக்காக, அதை அப்படியே சேமித்து வைத்துக்கொள்ள முடியுமா என முயற்சி செய்...’’ என போஸ்ட் கார்டில் பதில் எழுதினார். விதை தானியத்தை சேகரித்து வைக்கும் எளிய விவசாயி மாதிரி அதை எங்களுக்குள் பத்திரப்படுத்தினோம்.

ஜெயந்தன் ஒரு கதையில் எழுதியிருப்பார். லைலா - மஜ்னு காதல் அக்கதையில் நிறைவேறிவிடும். தான், திருமணம் முடித்து வைத்த லைலா - மஜ்னுவைப் பார்க்க அதை எழுதியவன் அவர்கள் வீட்டிற்குப் போவான். உப்பு, புளி, மிளகாய்க்கான காலைப் பரபரப்பு சண்டையில் அந்த லட்சியத் தம்பதிகள் முழு மூச்சுடன் ஈடுபட்டிருப்பார்கள்.

எங்கள் வாழ்விலும் இதெல்லாம் உண்டு. உப்பு, புளி, மிளகாய் EMI ஆக உருமாறியிருக்கலாம். எல்லாப் பொழுதுகளிலும் காவியம் மாதிரியோ, கவிதை மாதிரியோ எங்கள் வாழ்வும் இல்லை. ஆனால், சராசரி வாழ்விலிருந்து சற்று மேம்பட்டதுதான் எங்கள் வாழ்வு.காதல் வழி எங்கள் வாழ்வைத் தொடங்கும்போதே மனதால் முதிர்ந்திருந்தோம். தினம் இரு கடிதங்கள் பரிமாறி, யாருமற்ற வெளியின் நிச்சயத்தில் திருட்டு முத்தங்களைக் கொடுத்தும் பெற்றும் கொண்ட தினங்களை மிக விரைவில் கடந்து குடும்ப அமைப்புக்குள் வந்து விட்டோம்.

சாதி, மதம், இனம், மொழி, மாநிலம், கலாசாரம் என எல்லாவற்றிலும் நாங்கள் இருவருமே இருவேறு பிரதிநிதிகள். திருமணத்தின் தொடக்கத்தில் பூமியின் எல்லா திசைகளிலிருந்தும் எங்கள் வாழ்விற்கும் மேன்மைக்கும் போதித்தார்கள். என் நண்பர் எழுத்தாளர் ஜெயமோகன் அப்போது தன் வாழ்வின் தொடக்கத்திலிருந்து பெற்ற அனுபவங்களிலிருந்து எங்களுக்கு நாற்பது பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி யிருந்தார். கலாசார ரீதியாக வெவ்வேறு நிலப்பரப்பிலிருந்து வரும் நாங்கள் இருவரும் எப்படி வாழ்வை எதிர்கொள்ளப்போகிறோம் அல்லது எதிர் கொள்ள வேண்டும் என்பதன் அனுபவச்சாறு அது.

அது கசப்பு கலந்ததுதான். இருவரும் அதை ஒரு சுவையான பழச்சாறு போல மிடறு மிடறாக அருந்தினோம். அவர் கடிதத்தில் இருந்தபடி எந்த கலாசார வேறுபாடுகளாலும் எங்கள் கால்கள் இடறி விடாமல் பார்த்துக் கொண்டோம்.இப்படித்தான் இருபத்தியாறு வருடங்கள் அகன்றன. அப்பா காங்கிரஸ்காரர், கறாரான வாத்தியார். அம்மா பேரன்புக்காரி. சக மனிதனுக்கு உணவிடுவதற்கானதே இந்தப் பிறப்பு என நம்பினாள்.

ஷைலஜா மனைவி என்ற புது அந்தஸ்தோடு வீட்டிற்குள் வந்தபோது தன் அதிகாரம் பறிபோய்விடும் என அம்மா அஞ்சினாள். ஆனால், ஷைலஜா அம்மாவிடமிருந்த அகப்பையைத் தன் கைக்கு மாற்றி, அம்மாவின் தொடர்ச்சியான போது அம்மா ஒரு புன்னகையோடு கால மாற்றத்தைக் கடந்தாள்.
காதலித்தபோது இருவர் வீட்டிலும் பெரிய எதிர்ப்பில்லை. தாய்மாமன் அரவணைப்பிலிருந்த ஷைலஜா வீட்டில் பெரும் புறக்கணிப்பு. அது எதிர்ப்பை விட கொடுமையானது.

இந்த 19, டி.எம். சாரோன் வீடு எப்படி இருக்க வேண்டுமென எனக்கொரு கனவிருந்ததோ அதைவிட பல மடங்கு மேலாக இப்போது மாறியிருக்கிறது.
சாதாரணமானவர்கள், அசாதாரணமானவர்கள் என எந்த பாரபட்சமுமின்றி எங்கள் உணவு மேஜை எல்லோரையும் தன்னுள் இருத்திக் கொள்கிறது.
நான் எப்போதாவது எழுதுபவன். நிலமே என் வாழ்வின் ஆதார ஸ்ருதி. அதிலேயே அமிழ்ந்து போக விரும்புவேன்.

ஷைலஜாவும் அப்படித்தான். ஆனால், அவள் முதல் தேர்வு வாசிப்பும், மொழிபெயர்த்தலும், புத்தக பதிப்பும்தான். காதலிக்கும்போதிருந்த பேரன்பு கொஞ்சம் லௌகீக மழையில் கரைந்திருந்தது. எங்கள் இருவரின் அன்பின் அடர்த்தியை குழந்தைகள் தங்களுக்கென யாசித்துப் பெற்றிருக்கிறார்கள்.

பின்னிரவிலும், அதிகாலையிலும் ஷைலஜாவிற்கும், மகன் வம்சிக்கும் இடையே நீளும்  நீண்ட அலைபேசி உரையாடல்கள் இலக்கியம், தத்துவம், பயணங்கள் சார்ந்தவை மட்டுமே. அதில் பங்கு பெற நானில்லையா என்ற ஏக்கத்தை மகள் மானசியின் பரிவுமிக்க பார்வையில், உரையாடலில், பராமரிப்பில் கரைத்துக் கொள்வேன். நாங்கள் இருவருமே அகங்காரத்தை மனதிலிருந்து எழாமல் பார்த்துக் கொள்கிறோம்.

காதலித்த காலங்களில் எங்களைப் புறந்தள்ளியவர்கள், அதை சிதைக்க முயன்றவர்கள், அங்கீகரிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டவர்கள் என எல்லோர் முன்பும் எங்கள் நிகழ்கால வாழ்வையே முன்னிருத்துகிறோம்.இதுதான் நாங்கள் வாழ விரும்பிய வாழ்வு. அதற்கான தொடக்கம்தான் எங்கள் காதல் நாட்கள். அன்பற்றவர்களாக வாழ விரும்பாத இருவரின் இணைந்த உலகம் இது என இன்றைய எங்கள் வாழ்வின் வற்றாத ஊற்று நீரையே எங்கள் எதிரிகளுக்கு பருகத் தருகிறோம்.

குழந்தைகளை இப்படி ஆக்கிவிட வேண்டுமென்றோ மாற்றி விட வேண்டுமென்றோ ஒரு நாளும் நினைத்ததில்லை. காடு தன்னுள் செழித்து வளரும் மரங்களை தன் விருப்பப்படி வளைப்பதில்லையே! அது மண் வளத்தையும் நீரின் பிரவாகத்தையும் காற்றின் அசைவையும் கை காட்டிவிட்டு அமைதி காக்கிறது. நாங்களும் அவ்விதமே இருக்கிறோம்.

அவர்கள் கற்க வேண்டிய கல்வியை, பள்ளியை, கல்லூரியை, அவர்களின் ஆசான்களை, வாசிக்க வேண்டிய நூல்களை அவர்களே தேர்வு செய்கிறார்கள். அல்லது என் வயதையொத்த என் நண்பர்கள் அவர்களின் தோழர்களாக அவர்களை வழி நடத்துகிறார்கள்.

இந்த வீட்டிற்கு தினம் தினம் பல திசைகளிலிருந்து மனிதப் பறவைகள் வந்து கூடடைகின்றன. புதிய தரிசனங்களோடு எங்கள் அதிகாலைகள் விழிப்படைகின்றன. அது குழந்தைகளைக் குதூகலப்படுத்துகிறது.

எங்கள் காதல் காலங்களிலிருந்து சேமிப்புகள் அவர்களுக்கானவைகள். அவர்கள் என்பது என் நண்பர்களையும் சேர்த்துதான். குடும்பம் என சுருங்கிவிடலாகாது என்பதை என் எழுத்தாள முன்னோடிகளிலிருந்து பெற்றுக்கொண்டேன். அதை பூமியின் பரப்பளவுக்கு விரிவு படுத்த முடியுமா என்ற முயற்சியே இப்போதைய வாழ்வு!

நா.கதிர்வேலன்