வாய் சொல்லில் வீரனடி



மஞ்சள் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் மன்னர் மன்னனின் முன் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளின்
ஒலிபெருக்கி உருண்டைகள் துருத்திக் கொண்டிருந்தன.

மன்னர் மன்னனுக்கு வயது 62. சிவந்த நிறம். ஒடிசலான திரேகம். நெற்றியில் கொத்தாய் வந்து விழும் தலைக்கேசம். மெஸ்மரிஸ கண்கள். தாம்பூலம் தரித்த வாய். வேட்டியும் முழுக்கை சட்டையும் உடுத்தியிருந்தார்.

எந்த நேரமும் சண்டை சேவல் போல தலையைச் சிலுப்பிக்கொண்டுதான் ஆங்காரமாகப் பேசுவார்.ஒரு பத்திரிகை செய்தியாளர் கேட்டார்: ‘‘உள்ளாட்சித் தேர்தலில் உங்க மஞ்சள் கட்சி படுதோல்வி அடைஞ்சிருக்கே... அதுக்கு உங்க பதில் என்ன?’’ கேள்வி கேட்டவரை முறைத்தார்: ‘‘தமிழ்நாட்டு மக்கள் ஆண்மை அற்றவர்கள்!’’ ஒட்டுமொத்த மீடியா மக்களும் அதிர்ந்து போயினர்.

‘‘என்ன சார் ஏடாகூடமா பதில் சொல்றீங்க?’’
‘‘நான் மிகச் சரியாத்தான் சொல்லிருக்கேன். என் பதிலில் எந்த மாற்றமும் இல்லை!’’மஞ்சள் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மன்னர் மன்னன் இதுபோன்று சர்ச்சைக்குரிய பேச்சுகளைத்தான் பேசி வருகிறார்.

அவருடைய முந்தைய பதில்களில் சில சாம்பிளுக்கு :‘‘முன்னாள் கவர்ச்சி நடிகைகளை மஞ்சள் கட்சியில் சேர்த்து பொறுப்புகளும் வழங்கி வருகிறீர்களே?’’‘‘எங்க கட்சிக்காரர்களுக்கு கிளுகிளுப்பு வேணாமா?’’

‘‘நீங்கள் தமிழனே இல்லை... வட இந்தியாவைச் சேர்ந்த மார்வாடி என்கிறார்களே?’’
‘‘மஞ்சள் கட்சிக்காரர்களே உண்மையான தமிழர்கள். நான் பச்சைத் தமிழன்!’’‘‘உங்கள் கட்சி ஒரு கார்ப்பரேட் அடிவருடி என ஒரு பத்திரிகை விமர்சித்திருக்கிறதே?’’‘‘மஞ்சள் கட்சியின் கொள்கைகளைத் திரித்து வெளியிடும் பத்திரிகைக்காரர்கள் தேசத்துரோகிகள்!’’‘‘உங்கள் கட்சியைச் சேர்ந்த வடநாட்டுப் பிரமுகர்கள் தொடர்ந்து பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிறார்களே?’’‘‘இந்த உலகத்தில் கடைசி ஆணும் கடைசி பெண்ணும் இருக்கிற வரை பாலியல் வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கும்!’’‘‘எதிர்க்கட்சித் தலைவர் குருச்சேவ் உங்களை மனநிலை சரியில்லாதவர் என்கிறாரே?’’
‘‘அவரின் உண்மையான பெயர் ஜோசப் குருச்சேவ் முகமது.

அதனால் அப்படித்தான் பேசுவார். நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஆதாரம் காட்ட நான் தயார். பிறப்புச் சான்றிதழைக் காட்ட எதிர்க்கட்சி தயாரா?’’‘‘உங்களின் ஆட்சியில் பொருளாதாரம் நசிந்திருக்கிறதே?’’‘‘பொருளாதாரம் நசிந்திருக்கிறது என்று எந்த வெங்காயம் சொன்னான்? சொன்னவன் என் கூந்தலுக்கு சமம்!’’‘‘நீதிமன்றத் தீர்ப்புகள் சில உங்களுக்கு பாதகமாக வருகிறதே! என்ன சொல்கிறீர்கள்?’’
‘‘பாதகமாக வரும் தீர்ப்புகளை காலில் இட்டு நசுக்குவேன்!’’

‘‘தமிழ்நாட்டு மக்கள் ஆண்மையற்றவர்கள்...’’ என்கிற மன்னர்மன்னனின் பேச்சு தமிழகத்தில் புயலைக் கிளப்பியது.மஞ்சள் கட்சியின் இன்னொரு பிரமுகர், ‘‘மன்னர்மன்னனின் கருத்துக்காக வருத்தப்படுகிறேன் அவருடைய கருத்து கட்சியின் கருத்தல்ல!’’ என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் குருச்சேவ், ‘‘ஆக, மன்னர்மன்னன் தன்னை மனநிலை சரியில்லாதவர் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். அவரது கருத்து கண்டனத்துக்குரியது. மன்னர் மன்னனும் அவரது கட்சியும் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்’’ என்றார்.
‘‘வாயடக்கம் இல்லாதவன் தனது நாவாலே வீழ்வான் என்றான் கிரேக்க அறிஞன். இப்பேச்சு ஓர் ஆரிய மமதை. மன்னர் மன்னன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழகம் போர்க்கோலம் பூணும்!’’ என்றார் மெய்கோ.

‘‘வாடா தம்பீ! தமிழனை ஆண்மையற்றவன் எனக் கூறிய உல்லுகபட்டரின் நாவை அரிந்து கழுகுகளுக்குப் போடுவோம்!’’ - கீமான்.
‘‘தமிழகத்தின் எட்டு கோடி ஜனத்தொகையைப் பார்த்துவிட்டா இந்த பதில்? மன்னர் மன்னனின் வாயைத் தைத்து பெரிய திண்டுக்கல் பூட்டு போடவேண்டும்!’’ - சிவப்பு கட்சி.

‘‘காற்று மாசு, ஒலி மாசு, நீர் மாசால் தமிழக மக்களின் ஆண்மை குறைவதாக ஒரு அமெரிக்க ரிப்போர்ட் பார்த்தேன். அதை வைத்து மன்னர் மன்னன் கூறியிருப்பாரோ என்னவோ?’’ - கிப்ரமணி கீமி.‘‘மன்னர் மன்னன் எந்த கான்டெக்ஸ்ட்டில் அப்படி பேசினார் என்பது தெரியவில்லை. கட்சித் தலைமைதான் கருத்து கூற வேண்டும்!’’ - அகிமுக பயக்குமார்.

‘‘மன்னர் மன்னனின் கருத்தை மக்கள் ரீதியாக எதிர்க்கிறோம். கூட்டணி தர்மத்துக்காக ஆதரிக்கிறோம்!’’ - சாமக தலைவர் சோமதாஸ்.
‘‘தமிழக மக்கள் வாயற்றவர்கள் எனக் கூறுவதற்கு பதிலாக நாக்கு வழுக்கி ஆண்மையற்றவர்கள் எனக் கூறிவிட்டார் மன்னர்மன்னன். மக்கள் இதனை பெரிதுபடுத்தக் கூடாது!’’
- சுரேமலதா.

பத்திரிகைகள் மன்னர்மன்னனின் பேச்சைக் கண்டித்து தலையங்கம் தீட்டின. தொலைக்காட்சி அலைவரிசைகள் விவாதமேடைகளில் மன்னர்மன்னன் பேச்சை கிழிகிழி என கிழித்தன. ஒரு பத்திரிகை மன்னர்மன்னனை தவளையாக கார்ட்டூன் வரைந்திருந்தது.‘மன்னர் மன்னனை மஞ்சள் கட்சி மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து கட்சித் தலைமை டிஸ்மிஸ் செய்யவேண்டும். கட்சித்தலைமையும் மன்னர் மன்னனும் தமிழக மக்களிடம்  மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்கிற கோரிக்கை வலுத்தது.தமிழ்நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தன.மன்னர் மன்னன், ‘‘நான் முழுமையாகப் பேசின விஷயத்தை பத்திரிகைகள் எடிட் செய்து வெளியிட்டுவிட்டன. நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்...’’ என விளக்க
மளித்தார்.

ஒரு வாரம் கழித்து கட்சித் தலைமை மன்னர் மன்னனை உடனே தில்லிக்கு வரச்சொல்லி உத்தரவிட்டது. மன்னிப்புக் கடிதமும் ராஜினாமா கடிதமும் எழுதிக்கொண்டு விமானம் ஏறினார் மன்னர்மன்னன். கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு விரைந்தார்.தலைவரின் அறைக்கு வெளியே காத்திருந்தார். போவோர் வருவோர் எல்லாம் மன்னர் மன்னனை துக்கம் விசாரித்தனர்.‘‘நண்பா! கொஞ்சநாளா ரொம்ப ஓவரா பேசுற... உன்னுடைய பேச்சால் கட்சிக்கு பலத்த நெருக்கடி... வேற வழியே இல்லாமதான் உன்னை ராஜினாமா செய்யச் சொல்லப் போறாங்க!’’
‘‘இனி நீ தேசிய அரசியல்ல எழுந்து வர்றது ரொம்ப கஷ்டம்!’’

‘‘உன்னுடைய போஸ்ட்டுக்கு செம்பு சாதாகிருஷ்ணன், சல முருகேசன், சானதி எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு நிக்கிறாங்க... எந்தப் பிரச்னையும் இல்லாம போஸ்ட்டை அவங்களுக்கு தாரை வார்த்திட்ட!’’‘‘உன்னுடைய அடாவடி பேச்சு தமிழகத்துல மஞ்சள் கட்சிக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் காணாம ஆக்கிடும்!’’‘‘எதிர்க்கட்சித் தலைவர் குருச்சேவ் மாதிரி எழுதி வச்சு பேசுப்பா!’’
‘‘பேசாம தமிழ்நாட்டு அரசியலைவிட்டு விலகி தேசிய நீரோட்டத்தில கலந்திரு!’’‘‘கட்சிப் பதவி போயிடிச்சுன்னா பழையபடி வக்கீல் தொழிலையே பாரு!’’ அறிவுரைகளும் செல்லக் கண்டிப்புகளும் தொடர்ந்தன.

தலைவர் அழைக்க நான்கு மணிநேரம் காத்திருந்தார் மன்னர் மன்னன். தலைவரின் தனிச்செயலாளர் எட்டினார்.
‘‘ஓ நீங்களா? வெயிட் பண்ணுங்க. தலைவர் உங்கமேல செம கோபமா இருக்கார். நாலு அறை அறைஞ்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை!’’
நாற்பத்தியெட்டாவது ஆளாக உள்ளே அழைக்கப்பட்டார் மன்னர்மன்னன்.

இனி உரையாடல் இந்தியில்.‘‘நமஸ்காரம் ஜி!’’‘‘நமஸ்காரமெல்லாம் இருக்கட்டும். தமிழ்நாட்ல என்ன செஞ்சுக்கிட்டு இருக்க?’’
மென்று விழுங்கினார் மன்னர்மன்னன்.‘‘கொஞ்சம் ஓவர் எக்ஸைட்டடா பேசிட்டேன். மன்னிப்புக் கடிதமும் ராஜினாமா கடிதமும் கொண்டு வந்திருக்கேன்!’’காளான் சூப் வந்தது.

‘‘எடுத்துக் குடி மன்னர்மன்னன்!’’ குடித்தார்.‘‘பயந்துட்டியா?’’ மன்னிப்புக் கடிதத்தையும் ராஜினாமா கடிதத்தையும் கிழித்துப் போட்டார் தலைவர்: ‘‘நான் சொன்னதைத் தானேய்யா செஞ்சிக்கிட்டிருக்க? மக்களுக்கு நாப்பது அம்பது வருஷம் சேவை பண்ணி நாகரீகமா பேசி பண்பா பழகி பிரபலமாகிறது அந்தக் காலம். இந்தக் காலத்துல எதிர்மறை பிரபலம்தான் அரசியலில் முன்னேற எளிதான வழி.

 ஆறு வருஷமா நாகரீக அரசியல் பண்ணிக்கிட்டிருந்த உன்னை யாருக்குத் தெரியும்? இப்ப பாரு தமிழ்நாட்டு ஜனம் எட்டு கோடியும் உன்னைத் திட்டிக்கிட்டே உன் புகழ் பாடிக்கிட்டிருக்காங்க. தமிழ்நாட்டு அரசியல்ல தவிர்க்க முடியாத சக்தியா வளந்துட்ட. வடநாட்ல உன்னை மாதிரி பலபேரை வளர்த்து முதலமைச்சராக்கி விட்டிருக்கோம்..!’’‘‘அப்டின்னா மன்னிப்பு?’’‘‘நீயும் பேசாம இரு, நாங்களும் பேசாம இருக்கோம். ஒரு வாரத்தில் தமிழ்நாட்டு மக்களும் மீடியாவும் பேச வேற அரசியல் விஷயம் கிடைச்சிடும்!’’
‘‘இனி என் பேச்சுல கொஞ்சம் காரத்தை குறைச்சிக்கவா?’’

‘‘எப்பயும் போல நீ பேசிக்கிட்டே இரு. அரசியல் வியூகங்களை மாத்தி அமைச்சிக்கிட்டே வர்றேன். நீதான் நம்ம கட்சியோட முதலமைச்சர் வேட்பாளர். வர்ற 2021 சட்டசபைத் தேர்தல்ல நம்ம கட்சி தமிழ்நாட்ல ஆட்சிக்கு வரும். வரலைன்னா..?’’
‘‘வரலைன்னா ?’’

‘‘உன்னை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னரா போட்டுர்றோம். அந்த மாநிலத்து முதலமைச்சருக்கு தலைவலியைக் கொடுத்துக்கிட்டே நீ போட்டி முதலமைச்சரா ராஜவாழ்க்கை வாழலாம். இந்திய அரசியலில் நானொரு சாணக்கியன்...’’ பகபகவெனச் சிரித்தார்: ‘‘வெளிய போகும்போது தலைவர் திட்ன மாதிரி முகத்தை சோகமா வச்சிக்க!’’தலையைக் கவிழ்த்துக்கொண்டு சோகமாக வெளியேறினார் மன்னர்மன்னன்!l

தினுசு படானி!

பாலிவுட்டில் தினுசு தினுசாக பரபரக்கிறார் திஷா படானி. சல்மான் கானை வைத்து இந்தியில் பிரபுதேவா இயக்கி வரும் ‘ராதே’, ஏக்தா கபூரின் தயாரிப்பில் ஒரு படம், ‘லண்டன் ட்ரீம்ஸ்’ ஆதித்யா ராஜ் கபூரின் ஜோடியாக ஒரு படம் என வெரைட்டி காட்டுகிறார் திஷா.
இதில் ‘ராதே’வில் ஒரு பாடலுக்கு ஆடப் போவது செக்ஸி பேபி ஜாக்குலினாம்!

ஏஞ்சல்... ஊஞ்சல்...

உற்சாகத்தில் பரபரக்கிறார் பாயல் ராஜ்புத். டோலிவுட்டில் அவர் நடித்த ‘வெங்கி மாமா’ வசூலைக் குவித்திருக்கிறதாம். தவிர சமீபத்தில் ரிலீஸான ரவி தேஜாவின் ‘டிஸ்கோ ராஜா’விலும் பாயலுக்கு ஒரு டன் பொக்கே குவிந்திருக்கிறது. அதில்தான் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார்.
டோலிவுட்டில் பதினாறு அடி பாய்ந்து வரும் பாயல், கோலிவுட்டிலும் சிறகு விரித்திருக்கிறார். உதயநிதியின் ‘ஏஞ்சலி’ல் மாடர்ன் ஊஞ்சல் பாயல்தானாம்.

டாக்டர் பல்லவி!

‘என்ஜிகே’வுக்குப் பிறகு தமிழில் வாய்ப்புகள் தேடி வராததால், டோலிவுட்டில் சலசலக்கிறார் சாய்பல்லவி. ‘‘தமிழ்ல உங்களுக்கு பிடிச்ச படம் எது?’’ என அவரிடம் கேட்டால், கன்னத்து பருக்கள் வெட்கப்படும் அளவிற்கு முகம் சிவக்கிறார். ‘‘நிறைய படங்கள் இருக்கு. அதுல ‘காக்க காக்க’வில் ஜோதிகா மேம் கேரக்டர் பிடிக்கும். என்னோட ஆல்டைம் ஃபேவரிட் படம்னா, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’தான்!’’ என்கிறார். இன்னமும் டாக்டர் பிராக்டீஸ் பண்றீங்களா டாக்டர்?

தில்லி சலோ!

பிரபாஸின் ‘சாஹோ’ ஹீரோயின் ஷ்ரத்தா கபூர், இப்போது பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ‘ஸ்ட்ரீட் டான்ஸர்’ படத்தின் புரொமோஷனுக்காக தில்லி சென்றவர், அங்கே திரண்ட ரசிகர்களின் கூட்டத்தைப் பார்த்து மலைத்திருக்கிறார். அங்கிருந்த ரசிகர்களின் அன்பில் உருகியதுடன் தன் கைகளில் ஹார்ட்டீன் தெறிக்கவிட்டும் குஷியாகி திரும்பியிருக்கிறார் ஷ்ரத்தா. அடுத்து இந்தியில் ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் ஷெராஃபின் ஜோடியாக கமிட் ஆகியிருக்கிறார்.

ஆர்னிகா நாசர்