பெத்தவங்க புரிஞ்சுகிட்டா பிள்ளைகளும் புரிஞ்சுப்பாங்க!



உலகம் முழுவதுமுள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் உணர்வில் நாட்டம் உள்ளவர்கள், திருநங்கை - திருநம்பி ஆகியோரை உள்ளடக்கிய சமூகத்தை, LGBT (Lesbian, Gay, Bisexual, Transgender) என்று அழைக்கின்றனர்.
இந்தியாவில் தன்பாலின உறவு குற்றமில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்த பிறகு LGBT சமூகத்தினரும், அவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களும் கூடுதல் தன்னம்பிக்கையுடன் வலம் வரத் தொடங்கியுள்ளனர். ஏனெனில், இன்னும் பல நாடுகளில் இவை அனைத்தும் குற்றமாகவே பார்க்கப்படுகின்றன.

என்றாலும் சட்டப்படி இந்தியாவில் தன்பாலின உறவு குற்றமில்லை என அறிவிக்கப்பட்டாலும், சமுதாய அளவில் அவர்கள் பல இன்னல்களைச்
சந்தித்தே வருகின்றனர். குடும்பத்திலிருந்து புறக்கணிப்பு, கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிமை மறுப்பு... எனத் தொடரும் துயரங்கள் ஏராளம்.

குறிப்பாக LGBT குறித்த புரிதலும் விழிப்புணர்வும் தன்பாலின காதலர்களிடமே போதுமான அளவு இல்லை என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம். இதுதான் என்பதை புரிந்துகொள்வதற்கும், அதை ஏற்றுக்கொள்வதற்கான மனப்பக்குவமும் அவர்களுக்கு வரவேண்டியிருக்கிறது.

ஆக, இவர்களுக்கே இப்படி உள்ளபோது, அவர்களை மாபெரும் கனவோடு வளர்க்கும் பெற்றோர்களுக்கு உடனே புரிதல் ஏற்படவேண்டும் என எதிர்பார்ப்பது எந்தவகையில் சரி..? இந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் பெற்றோர்களை வழிநடத்தத்தான் மும்பையில் ஒருசிலர் கூட்டாக இணைந்து அமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

இவர்கள் அனைவருமே LGBT சமூகத்தைச் சார்ந்தவர்களின் பெற்றோர்கள் என்பதுதான் ஹைலைட்.யெஸ். LGBT சமூகத்துக்காக இயங்கி வரும் சித்ரா பாலக்குடன் இணைந்து 2017ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இதை உருவாக்கியுள்ளனர். இதற்கு முன் பல குழுக்கள் இருந்தாலும் இதுவே முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு.

‘‘1998ம் ஆண்டு ‘கே பாம்பே’ என்கிற அமைப்பு முதன்முதல்ல ஆரம்பிக்கப்பட்டது. அப்புறம் நிறைய குழுக்கள் ஃபார்மலாகவும் இன்ஃபார்மலாகவும் பல இடங்கள்ல உருவாச்சு. உருவாகியும் வருது. இப்படிப்பட்ட குழுக்கள் எல்லாமே தேவைனுதான் நினைக்கறேன்...’’ என்கிறார் LGBT சமூகத்துக்காக ‘ஓரினம்’ என்கிற அமைப்புடன் தன்னை இணைத்து பணிபுரிந்து வரும் டாக்டர் ராம்கி.

‘‘முக்கியமான பிரச்னை என்னனா பல பெற்றோர்கள் தங்கள் குழந்தை மட்டும்தான் இப்படி இருக்கறதா நினைப்பதுதான். அப்படியில்லனு அவங்ககிட்ட பிரசாரம் செய்யறதை விட, அதுமாதிரியான பெற்றோர்களுடன் அவங்க இணைவது நல்லது. தங்களை மாதிரியே பலரும் இருக்காங்கனு அந்தப் பெற்றோர் நினைக்கறப்பதான் - பரஸ்பரம் கலந்துரையாடறப்பதான் - அவங்களுக்குள்ள தெளிவு பிறக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தோடு 2009ல இருந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்திட்டு வர்றோம். ஏன்னா, எப்படி அந்த குழந்தைக்கு LGBT பத்தி தெரிந்திருக்க வேண்டுமோ அப்படி அவங்க பெற்றோர்களும் தெரிஞ்சுக்கணும். இந்த அடிப்படைலதான் ‘ஓரினம்’ அமைப்பு மாசா மாசம் கூட்டம் நடத்திட்டு வருது...’’ என்று சொல்லும் டாக்டர் ராம்கி, கல்வி கற்ற பெற்றோர்களிடமே போதுமான விழிப்புணர்வும் புரிதலும் இல்லை என்கிறார்.
‘‘நிறையப் பெற்றோர்கள், ‘நாங்க சரியா கவனிக்காததாலதான் எங்க பையன் / பொண்ணு இப்படி இருக்கான்... இதுக்குக் காரணம் என் மனைவி / கணவன்தான்...’னு பரஸ்பரம் புகார் சொல்றாங்க.

உண்மைல குழந்தை வளர்ப்புக்கும் இதுக்கும் தொடர்பில்ல. இயற்கையா நிகழ்ற மாற்றங்கள்தான் இது. படிப்பறிவற்ற பல பெற்றோர் இதை புரிஞ்சிருக்காங்க!’’ என்கிறார் டாக்டர் ராம்கி.கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் எதிரொலிக்கிறார் LGBT சமூகம் குறித்து, ‘கட்டியங்காரி’ என்ற பெயரில் நிறைய நாடகங்கள் நடத்தி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஜித்.    

‘‘இப்ப மெல்ல மெல்ல பொது வெளில இந்த விஷயம் பேசப்பட ஆரம்பிச்சிருக்கு. இதை பாசிடிவ்வா பார்க்கறோம். மாற்றத்துக்கான விதை தூவப்பட்டு வருது. இந்த விதைகள் மரமா வளரும்போது பல தற்கொலைகளும் கொலைகளும் தடுக்கப்படும்.

ஆமா... பாலினம் சார்ந்த புரிதல் இல்லாததாலதான் பல இளைஞர்களும் இளைஞிகளும் தற்கொலை செய்துக்கறாங்க. தங்களைப் பத்தியும், தங்களுக்குள்ள ஏற்படுகிற மாற்றங்கள் பத்தியும் யார்கிட்ட டிஸ்கஸ் பண்றதுனு அவங்களுக்குத் தெரியலை. உள்ளுக்குள்ளயே புழுங்கிப் புழுங்கி தவிக்கறப்ப அது தற்கொலையாவும், கொலையாவும் மாறுது.

LGBT குறித்து ஆரம்பத்தில் பல குழப்பங்கள் இருக்கும். இதற்கு முதல்ல LGBTல இருக்கக்கூடிய ஆட்கள் மூலமா கவுன்சிலிங் தரப்படணும். இதைத்தான் தமிழகத்துல இருக்கற பல குழுக்கள் செய்துட்டு வருது. இது நோயல்ல. இதுவும் இயற்கைதான். இதை சமூகத்துக்கு புரிய வைக்கத்தான் முயற்சி செய்துட்டு இருக்கோம்...’’ என்கிறார் ஜித்.                            

அன்னம் அரசு