வாசகர் பகுதி-தூதுவளையின் மகிமை



கத்திரி குடும்பத்தைச் சேர்ந்தது தூதுவளை. இது மேல் நோக்கி வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. இதற்கு தாவரவியல் பெயர் ‘‘சோலானம் ட்ரிலோபாட்டம்’’ என்பதாகும். இதன் பூக்கள் கத்தரிப்பூ கலரில் இருக்கும்.
இதன் கொடியிலும், இலையின் பின், முன்பக்கத்திலும் கொக்கிபோல முட்கள் இருக்கும். இது ஒரு மிகச்சிறந்த மூலிகை.கிராமங்களில் வேலியின் மேல் படர்ந்திருக்கும். இதற்கு ‘சிங்கவல்லி’ என்ற பெயரும் உண்டு. இதன் இலை, பூ, காய், வேர் அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது.

*கீரையைப் பறித்து எண்ணெய் ஊற்றி வதக்கினால் முட்கள் மசிந்து விடும். இலையை நசுக்கினாலும் முட்கள் நைந்துவிடும். அதன் பிறகு இந்த கீரையினை நம் விருப்பம் போல் சமைத்து சாப்பிடலாம். கீரையுடன், வெங்காயம், பூண்டு வதக்கி வைத்து துவையல் செய்து சாப்பிடலாம்.

*கீரையுடன் பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.

*தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை இருவேளை சாப்பிட, சளி, இருமல், கபம், இளைப்பு நீங்கும். கீரையை அடை மாவில் சேர்த்து அடை செய்தும் சாப்பிடலாம்.

*தூதுவளையில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் எலும்புகள், பற்கள் மற்றும் உடலைப் பலப்படுத்தும். வாதம், பித்தம் கபத்துக்கும் நல்லது.

*இதன் பூவை உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து சாப்பிடலாம்.

*இதன் காயை உப்பு, மோர் சேர்த்து பிசறி வைத்து வெயிலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக்கொண்டு எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். சுண்டை வற்றல்போல் குழம்பு செய்தும் சாப்பிடலாம்.

*பழத்தைப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம். இது நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். மூளை நரம்புகளை பலப்படுத்தும்.

*பித்தம் அதிகரிக்கும்போது ஏற்படும் வாந்தி, தலைவலி, மயக்கம் இருந்தால் இலையைப் பொடி செய்து வைத்துக்கொண்டு, காய்ச்சிய பசும்பாலில் ஒரு டீஸ்பூன் போட்டு குடித்தால் நோய் தீர்ந்துவிடும்.

*தூதுவளை இலையைக் காய வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு எருமை மோரில் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை தீரும். ரத்த அணுக்கள் உடம்பில் அதிகரிக்கும்.

*ேதாட்டத்தில் தேனீ, விஷ வண்டுகள், பூரான் கடித்தால் தூதுவளை இலைப் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால் விஷம் ஏறாது, முறிந்துவிடும்.

*நேரடியாக இதன் இலையைப் பயன்படுத்த முடியாதவர்கள் கடையில் கிடைக்கும் லேகியம், நெய் சூரணம் இவற்றை வாங்கிப் பயன்படுத்தி பலனடையலாம்.

- கே.சாயிநாதன், சென்னை.

நோய் எதிர்ப்பு சக்தியை பெறும் வழிகள்

இனி வரும் காலங்களில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் அன்றாடம் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியமாகிவிடும். அதனை கடைபிடிக்க என்ன வழிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்...

*இஞ்சியை தோலுடன் தட்டிப் போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

*சிறுதானிய உணவுகளை தினசரி சாப்பிடவும். உணவில் உளுந்து, பருப்புகள், முளை கட்டிய தானியங்கள் மற்றும் வெங்காயம், பூண்டு அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தில் உள்ள செலினியம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது.

*நோய் எதிர்ப்பு சக்திக்கு பிரதானமானது வைட்டமின் ‘சி’. சாத்துக்குடி ஜூஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, கிவி, நெல்லிக்காய், காலிஃபிளவர், தக்காளி, குடைமிளகாய், புதினா ஆகியவற்றிலிருந்து இது நமக்குக் கிடைக்கிறது.

*மாங்கனீஸ், வைட்டமின் ‘ஈ’ சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டை தூண்டி விடுபவை. வால்நட், பிஸ்தா, பாதாம்பருப்புகளில் இவை உள்ளதால், அவ்வப்பொழுது சேர்த்துக்கொள்வது அவசியம்.

*வாசனைத் திரவியங்கள் அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவி புரிபவை. ஏலம், கிராம்பு, பட்டை, சோம்பு, சீரகம், கருஞ்சீரகம், மிளகு, கொத்தமல்லி, அன்னாசிப்பூ, கடற்பாசி, பிரியாணி இலை, வால் மிளகு, வெள்ளை மிளகு, மஞ்சள் இவைகளை அன்றாடம் உபயோகிக்க நோயற்று வாழலாம்.

*மஞ்சள், மிளகு, உப்பு போட்டு கொதிக்க வைத்த நீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை அருந்த உற்சாகம் பிறக்கும். தொண்டை பிரச்னைகள் சளி, இருமல் போன்றவை தூர ஓடிவிடும்.
*போதுமான தண்ணீர் அருந்துவது அவசியம்.

*நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு மனம் எப்போதும் ‘நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல்’ இருக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கமும், மனஅழுத்தம் தவிர்க்க ேவண்டும். தூக்கமின்மையால், மன அழுத்தம் ஏற்பட்டு, உடலில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பதால், நோய் எதிர்ப்பு செயல்பாட்டைப் பெரிதும் பாதிக்கும்.

*காபிக்குப் பதிலாக பாலில் இஞ்சி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், துளசி இலை, ஏலம், பனை வெல்லம், வேப்பிலை கொழுந்து போன்றவற்றை போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம்.

*தோட்டத்தில் கிடைக்கும் எந்தவகை கீரையையும் தினசரி பூண்டுடன் சமைத்து சாப்பிடலாம். உப்பின் அளவு குறைவாக இருப்பது நலம்.

*அதிக சோர்வு, அடிக்கடி ஜலதோஷம், ஜுரம், அலர்ஜி, செரிமானமின்மை ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதை உணர்த்தும் குறியீடுகள். இது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான தீர்வை காணவேண்டும்.

- இந்திராணி தங்கவேல், சென்னை.