சீதா தேவியின் ஆட்டோ ஆக்சிஜன்



தினமும் மக்கள் ஆக்சிஜனும், மருத்துவமனை படுக்கைகளையும் தேடிவரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த சீதா தேவி என்ற தன்னார்வலர், ஒரு ஆட்டோவையே அவசர ஆக்சிஜன் ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார்.சீதா தேவி, ஸ்ட்ரீட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த மாதம் மே 1 அன்று சீதாதேவியின் தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, படுக்கை கிடைக்காமல் அவர் உயிருக்குப் போராடிய நிலையில் குடும்பமே தவித்துள்ளனர்.
மருத்துவமனையின் வெளியே பல மணி நேரம் ஆக்சிஜன் படுக்கைக்காகக் காத்துக்கிடந்துள்ளனர். ‘‘என் அம்மாவிற்கு என்னையும் சேர்த்து ஆறு பிள்ளைகள். இத்தனை பேர் இருந்தும் என் அம்மாவைத் தனியாக மருத்துவமனையின் வாசலில் இறக்கவிடக்கூடாது என நானும் என் சகோதர, சகோதரிகளும் சேர்ந்து என் அம்மாவிற்காக ஒரு படுக்கை கிடைக்க போராடினோம். கடைசியாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி கிடைத்தும், உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால், படுக்கை கிடைத்த ஐந்தே மணி நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.

அரசாங்கமும், அரசு அதிகாரிகளும் பல முயற்சிகள் செய்தாலும், இந்த பெருந்தொற்று அனைவரையும் மிஞ்சுமளவு பயங்கரமானது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இதைக் கட்டுப்படுத்த மக்கள் அனைவரது ஒத்துழைப்பும் உதவியும் தேவை என்றும், என் அம்மாவைப் போல படுக்கையில்லாமல் பாடுபடும் பலரை காக்க வேண்டும் என, நானே என் தொண்டு நிறுவனம் மூலம், ஒரு ஆட்டோவில் ஆக்சிஜன் பொருத்தி, அதில் நோயாளிகளை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வருவது, படுக்கை கிடைக்காத நோயாளிகளை அதில் தங்க வைப்பது என எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம்” என்றார்.

மருத்துவர்களும், நோயாளிகளை ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற இவரது உதவியை நாடி வருகின்றனர். ‘‘வண்டியில் ஆக்ஸிமீட்டருடன் நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை பரிசோதித்து அதற்கு தகுந்த விதத்தில் ஆக்சிஜன் கொடுக்கவும் முறையான பயிற்சி எடுத்துள்ளோம். இதுவரை 300க்கும் அதிகமான நோயாளிகளை காப்பாற்றியுள்ளோம். என் அம்மா காத்திருந்த அதே இடத்தில், இப்போது எங்களது ஆட்டோ நோயாளியுடன் அவர்களை காப்பாற்றி வருகிறது.

ஆட்டோ ஓட்டுனருக்கு பி.பி.இ. கிட் வழங்கப்பட்டு பாதுகாப்பான முறையில் கொரோனா நோயாளிகளை கையாள்கிறோம். ஒவ்வொரு முறை நோயாளிகள் மாறும் போதும், ஆட்டோ முழுமையாக சுத்தமாக்கப்படும். அவர்களுக்கு வைக்கும் ஆக்சிஜன் மாஸ்க்கும் ஒவ்வொரு முறை மாற்றப்படும். அதன் விலை மட்டுமே 250 ரூபாய். இதையெல்லாமே இலவசமாக செய்து வருகிறோம். ஒரு நாளைக்கு 15 முதல் 40 நோயாளிகள் வரை எங்கள் ஆட்டோவில் அழைத்து வந்து உதவியுள்ளோம்” என்றார்.

சீதா தேவியின் அம்மா, அப்பா, தெருவில் வாழ்ந்தவர்கள், சீதா தேவியும் கூட அங்குதான் வளர்ந்தார். இதனால் சாலைகளில் வசிக்கும் கஷ்டங்களை இவர் நன்கு உணர்ந்தவர். அவரது தந்தை ரயில்நிலையத்தில் போர்டராக வேலை செய்தவர். அவரது அம்மாதான், ஆறு குழந்தைகளையும் கவனித்து வந்தார். அப்பா காலை முதல் இரவு வரை சம்பாதிக்கும் பணத்தில்தான் அன்றைக்கான இரவு உணவு கிடைக்கும். இப்படி ஒரு வேலை உணவுடன் மட்டும் வளர்ந்தாலும், கல்விதான் தன்னைக் காப்பாற்றும் என்பதை உணர்ந்து சீதா தேவி எப்படியோ படித்து பட்டம் பெற்றார்.

2002ல், Street Vision Social Charitable Trust என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம், வீடில்லாமல் தெருவில் வசிக்கும் குழந்தைகளுக்குக் கல்வி கிடைப்பதில் தொடங்கி அவர்களை வளர்ச்சி நோக்கிய பாதையில் அழைத்துச்செல்லவும் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. அப்படியே படிப்படியாக, தொழுநோய் ஒழிக்கும் திட்டம், அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் 10 இடங்களில் இலவச கல்வி வகுப்புகள், எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கியும், மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றனர். இது தவிர, மனிதம் நேசிப்போம் என்ற திட்டத்தின் கீழ், ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரித்தும், மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கான உதவிகளையும் செய்துள்ளனர்.

தன் சமூக சேவையில் திருமணம், குடும்பம் போன்ற பொறுப்புகள் இருக்கக் கூடாது என திருமணமே செய்து கொள்ளாமல், இந்த சமூகப் பணிக்காக தன்னையே அர்ப்
பணித்துள்ளார். தொடர்ந்து இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சேவையுடன் இலவச உணவும் வழங்கி பல ஆயிரம் மக்களுக்கு உதவியாய் சீதா தேவியின் ஸ்ட்ரீட் விஷன் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மேலும், ஆதரவற்ற முதியவர்களுக்கான பராமரிப்பு, உதவிகளுடன், கல்வி படிப்பைக் கைவிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெய்லரிங் பயிற்சியும் இவர்கள் வழங்கி வருகின்றனர்.   தெருவில் வசிக்கும் குழந்தைகளுடன் தொடர்ந்து பணிபுரிந்து வந்ததில், அவர்களை முழுமையாக புரிந்துகொண்டு கையாள, சைல்ட் சைக்காலஜியும்
பயின்றுள்ளார்.இவரை 9444038410, 9840038410, 044-25551254 - என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.                                     

ஸ்வேதா கண்ணன்