தோல் நோய்களும் ஆயுர்வேதமும்



‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். ஒருவரின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அவர் முகமே காட்டும் என்பதை இந்த
பழமொழியின் மூலம்  அறியமுடியும்..தோல் என்பது மனித உடலின் மிகப்பெரிய உறுப்பாகும். நம் தோலானது நமக்கு அழகை மட்டும் தராமல் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்கி,  உடல் வெப்பத்தை சீர்படுத்தி, உடலுக்குத் தேவையான தண்ணீர், வைட்டமின்கள், கொழுப்பு, அமிலங்கள் போன்றவற்றை சேர்த்து வைத்து கொடுப்பதோடு, உடம்பிற்குத் தேவையில்லாத பலவற்றை வியர்வை மூலமாக நீக்கி, நம் உடலின் ஆரோக்கியத்தை காக்கிறது. ஆயுர்வேதத்தின் படி நம் தோலானது ஏழு அடுக்குகளைக் கொண்டுள்ளது. எனவே தோலில் வரும் நோய்களை நம் உடலில் உள்ள நோய்களின் பிரதிபலிப்பாகவே பார்க்கின்றோம்.

இப்பொழுது தோல் பிரச்சனைக்கான நவீன  மருந்துகள் ‘ஓவர் தி கவுன்டர்’ எனப்படும் மருத்துவரின் குறிப்பேடு எதுவும் இல்லாமல் மருந்து கடைகளில், நாமே வாங்கிக்கொள்ளும் வகையில் மேற்பூச்சு மற்றும் உள்மருந்துகளாக தான் சந்தையில் பெரும்பாலும் கிடைக்கின்றன ,ஆனால் இந்த மருந்துகள்/மேற்பூச்சு மேலோடு இந்த வியாதிகளை தற்காலிகமாக சரிசெய்வதைபோல் தெரிந்தாலும் இவை எந்த ஒரு நிரந்தரத் தீர்வையும்  கொடுப்பதில்லை.
அவை தோலின் ஆழமான அடுக்குகளை ஒருபோதும் அடையாததால் அறிகுறிகளை மட்டும் தற்காலிகமாக மறைத்துவிட அவை உதவக்கூடும் ஆனால்  ஆயுர்வேதத்தில் ‘நோய்நாடி நோய்முதல்நாடி’ என்ற அடிப்படையில்,  இந்தத் தோல் நோய்க்கான காரணங்களை அறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் வேரறுக்கப்படுகின்றது. ஆகவே ஆயுர்வேத சிகிச்சை முறைகள் மூலம் குணமாவது சில நாட்கள் ஆனாலும் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது உறுதி.  

அழகு என்பது பெண்கள் சார்ந்த ஒரு விஷயமாக பார்க்கப்பட்ட காலம் உண்டு ஆனால் இன்றோ ஆண், பெண் இரு பாலருக்கும் வயது வித்தியாசமின்றி பல அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனாலும் பெண்கள் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகளே தான் உலகம் முழுவதும் அதிகமாக விற்கப்படுகின்றது.

பெண்களுக்கு பல்வேறு வயதுகளில் பல்வேறு தோல் நோய்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது, உதாரணமாக குழந்தை பருவத்தில் டயாபர் அரிப்பில் ஆரம்பித்து பூப்படையும் காலத்தில் முகப்பரு, 30-40 வயதுகளில் வேர்க்குரு, சொரியாஸிஸ், அர்டிகேரியா, 40-50 வயதுகளில் எக்ஸிமா, பின்னர் மாதவிடாய் நிற்கும் தருவாயில் படர்தாமரை, பாதவெடிப்பு, வயதான காலத்தில் செனிலே ப்ரூரிடஸ் (Senile Pruritus- பிற மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் அரிப்பு) போன்ற தோல்நோய்கள் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றன.
இதில் எந்த வியாதியாக இருந்தாலும் ஆயுர்வேதத்தில் பிரசித்திபெற்ற பஞ்சகர்மா சிகிச்சைகளான ‘வமனம்’ என்னும் வாந்தி சிகிச்சை, ‘விரேசனம்’ என்னும் பேதி சிகிச்சை, ‘ஜலுகாவசரணம்’ என்னும் அட்டை விடுதல், ஆகியவை நோய்க்கும் நோயாளிக்கும் ஏற்றாற்போல் தேர்ந்தெடுத்து செய்து பின்னர் உள்ளுக்கு மருந்துகளும் மேற்பூச்சு மருந்துகளும் தக்க பத்தியத்துடன் கொடுக்கும்போது நோய் முற்றிலுமாக குணமடையும்.

பொதுவாக நவீன மருத்துவம் போலில்லாமல் பஞ்சகர்மா சிகிச்சைகள் செய்து முடித்து அக்னி பலம் பெற்ற பின்னரே உள்ளுக்கு மருந்துகளும் மேலுக்கு எண்ணெய்களும் ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. தோல் நோய்களுக்கான பத்தியம்எது எப்படியாக இருந்தாலும் பத்தியம் என்பது நோய் குணமாக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

பத்தியம் இருந்தால் மருந்தேதற்கு...
பத்தியம் இல்லாவிடில் மருந்தேதற்கு...

என்ற ஆயுர்வேதத்தின் கூற்றுபடி எல்லா வியாதிகளுக்கும் பத்தியம் முக்கியமானது. அதுபோல் தோல் நோய்களுக்கு சிகிச்சை முற்படும் போது பத்தியம் மிகவும் முக்கியமானது.
உணவில் கத்தரிக்காய், தக்காளி, புளிப்பு சார்ந்த உணவுகள், சிட்ரஸ் பழங்கள், நிலக்கடலை எண்ணெய், நிலக்கடலை மற்றும் முட்டை, கோழி, கருவாடு போன்ற இறைச்சிகள் எண்ணெயில் பொரித்தவை, வறுத்தவை, சாஸ், ஜாம், அஜினோமோட்டோ, கலர், பதப்பொருட்கள் ஆகியவை  தவிர்க்க வேண்டும்.

தினசரி ஒருவேளையாவது இளஞ்சூடான நீரில் குளித்தல், இருவேளை முகம் கை கால் கழுவுதல், வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து கடலை மாவு, பச்சைப்பயிறு  தேய்த்து குளித்தல், அறு சுவை உள்ள, வீட்டிலேயே சமைத்த காய்கறிகள், கீரை, மஞ்சள், இஞ்சி, சீரகம், சுக்கு அடங்கிய உணவு, பழங்கள், குறைந்தது 3 லிட்டர் தண்ணீர், 7 மணி நேர உறக்கம் ஆகியவை தோல்நோய்கள் மட்டுமில்லாமல் மற்ற நோய்கள் வராமலும் தடுக்கும்.

மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்தகத்தில் இருந்து தோல் சம்பந்தப்பட்ட மருந்துகளை பயன்படுத்த கூடாது. ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.வீட்டில் செல்லப் பிராணிகள் மூலமாகவும் தோல் மற்றும் சுவாசத்தில் அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை.நைலான்(Nylon)  ஆடைகள் அலர்ஜி ஏற்படுத்தலாம், முடிந்த அளவு கதர் ஆடைகளையே பயன்படுத்துவது நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றதாகும். இப்போது சில நோய்கள் பற்றியும் அதன் ஆயுர்வேத சிகிச்சை பற்றியும் பார்ப்போம்.

இவை அனைத்திற்கும் மேற்கூறிய பஞ்சகர்ம சிகிச்சை மற்றும் பத்தியம் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.  மருந்துகளை ஒரு தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைபெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டும்.முகப்பரு: பொதுவாக பெண்களுக்கு 15 வயது பருவ வயதில் முகத்தில் வரக்கூடிய சரும நோய். இந்நோய் முகத்தில் மட்டுமல்லாமல் சிலருக்கு முதுகு, மார்பு போன்ற இடங்களிலும் காணப்படும்.

குறிகுணங்கள் : இப்பருவினுள் ஒரு வகை கொழுப்பு பொருளானது, முளை  போன்று இருக்கும். இதை அமுக்கி வெளியேற்றுவதால் ஒரு வித வீக்கமும், வலியும், எரிச்சலும் ஏற்படும். முகத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள் வந்து சருமத்தின்  அழகை கெடுக்கும். மருத்துவம்:குடுச்சி கஷாயம், கதிரரிஷ்டம் போன்ற மருந்துகள் உள்ளுக்கு கொடுக்க நற்பலனை தரும்.. வெளிப்பூச்சாக கும்குமாதி  லேபம், சந்திரகலா லேபம் போன்றவை பயன்படுத்தலாம்.

கரப்பான்: இது  தோலில்  வீக்கம், தடிப்பு, புண் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தி படைகளை உண்டாக்கும். இது தோலை சுரசுரப்பாக்கி தோலின் இயற்கை நிறத்தை மாறுபடுத்தும்.
குறிகுணம்: தோளில் நமைச்சல், தடிப்பு, வறட்சி, வெடிப்பு, புண், எரிச்சல், நீர்க்கசிவு போன்றவை உண்டாகும். கசிந்த ஊனீர், உறைந்து பக்கு கட்டுதல், தோலில் புலால் நாற்றம் வீசும், தோல் கருமை நிறம் அடையும்.
மருத்துவம்: கந்தக ரசாயனம், அமிர்த குக்குலு, நிம்பாதி கசாயம் போன்றவை உள் மருந்தாக வழங்கலாம்.

திரிபலா கசாயம், திநெஷவல்யதி கேரம், துர்துரபற்றாடாதி கேரம் வெளிமருந்தாக இந்நோய் தீவரத்தை குறைக்க வழங்கலாம்.
சோரியாசிஸ்: இந்நோயால் ஆண்களைவிட 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இது பரம்பரையாக மூன்றில் ஒருவருக்கு வரக்கூடிய நோய் ஆகும்.
குறிகுணம்: செந்நிற பருக்கள், தடிப்புகள் உண்டாகும், பார்ப்பதற்கு பளபளப்பு உடைய செதில்களால் மூடப்பட்டிருக்கும், இவை தலை மற்றும் முகத்திலும் கூட வரலாம், நாட்பட்டுவிட்டால் செதில்கள் முழங்கை , முழங்கால்களில் காணப்படும். பெண்களுக்கு அக்குள், தொடை மடிப்பு, தொப்புள் இவ்விடங்களில் பாதிப்பை
உண்டாக்கும் .

மருத்துவம் : மஞ்சிஷ்டாதி கசாயம் , மஹாதிக்தகம் நெய், குக்குலு திக்டக நெய் போன்றவை உள்மருந்தாகவும், குடச ஆதித்யபாக தைலம், தூர்வாதி தைலம் போன்ற  
வெளிமருந்துகள் நற்பலனை தரும். காணாக்கடி (அர்டிகேரியா): இந்நோய் ஒவ்வாப்பொருட்களினால் உடலில் தடிப்புகளை உண்டாக்கும். அது உணவாகவோ, மருந்தாகவோ கூட இருக்கலாம்
குறிகுணம்: கை கால் அல்லது உடலில் வெவ்வேறு பகுதிகளில் அரிப்பு, தடிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். பின்னர் தானே சிலநேரங்களில் மறைந்துவிடும்.
மருத்துவம்: வில்வாதி குடிக்கா, பட்டோல  மூலாதி கஷாயம், பரங்கி ரசாயனம் போன்ற மருந்துகள் வழங்கலாம். வெளிப்பூச்சாக தூர்வாதி தைலம், திரிபலாச் சூரணம் போன்ற மருந்துகள் கொடுக்க தீரும்.

படர்தாமரை: இது கோடைகாலங்களில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் சரும நோயாகும். இந்நோய் தோலில் தொடை இடுப்பு,  பிறப்புறுப்பு, மார்பகத்தின் அடிப்
பகுதி  போன்ற இடங்களில் ஏற்படும். இது உடல் தூய்மை இன்மை, சுத்தமில்லாத ஆடைகளை அணிவதன் மூலமாகவும் வரக்கூடிய நோய். இது தோலில் அதிக நமைச்சல், நோய் கண்ட இடத்தில அரிப்பு, எரிச்சல் உண்டாகும். தோலின் நிறம் சிவந்து பின்பு கருமை நிறமாக மாற்றமடையும். சில படைகள் பனைமரத்தை போல் காணும்.
மருத்துவம்: பரங்கி ரசாயனம், கதிராதி கஷாயம் போன்ற மருந்துகள் உள்ளுக்கு கொடுத்தும், வெளிப்புறமாக சதடவுத நெய் மற்றும் அருகன் தைலம் வழங்கலாம்.

பாத வெடிப்பு: பாதங்களின் அடிபாகத்தில் வெடிப்பு. இதனால்  பாதத்தில் வலி, சில நேரம் ரத்த கசிவு, நடக்க இயலாமை ஏற்படும்.
மருத்துவம்: குக்குலுதிக்தக நெய் உள்ளுக்கு கொடுத்து, வெளிப்புறமாக சிந்துராதி லேபம், ஜீவந்தியாதி யாமகம் போன்றவை வழங்கலாம், இதனுடன் பாதம் தூய்மையாக வைத்துக் கொள்வதன்மூலம் இந்நோயை தவிர்க்கலாம்.

வயது காரணமாக வரும் தீராத அரிப்பு (Senile Pruritus): 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது. இது தோலில் அரிப்பை உண்டாக்கும் . எந்த மருத்துவத்திற்கும் உடனே அடங்காது.நாட்பட்ட நோயில் தோல் தடிப்பு, சொறி, தூக்கமின்மை, உடல் சோர்வு, தோல் நிறமாற்றம், பசியின்மை உண்டாகும்.திக்தக்க நெய், மதுசினுஹி ரசாயனம், காமதூகரசா போன்ற மருந்துகள் உள்ளுக்கு கொடுக்கலாம், வெளிப் பிரயோகமாக தூர்வாதி தைலம், நால்பாமராதி கசாயம் வழங்கலாம்.வேர்க்குரு: கோடைக்காலத்தில் வியர்வை அதிகம் காணும் ஒரு சிலருக்கு வேர்க்குரு வரும். இதனால் நமைச்சல், சிறுசிறு குருக்கள் ஏற்பட்டு சொறியை உண்டாக்கும்.

நன்னாரி மணப்பாகு, திராட்ச்சாடி பாணியம், பரவலா பிஸ்டி உள்மருந்தாக உபயோகிக்கலாம் மற்றும் தூர்வாதி கேரம், சததௌத நெய் வெளி மருந்தாக தரலாம்.
டயாபர் அரிப்பு (Diaper Rash): இது குழந்தைகள், வயது முதிர்ந்தோர் குறிப்பாக பெண்களுக்கு diaper பயன்படுத்துவதால் தோலில் வரும் பாதிப்பு. சிறுநீர், மலம்  போன்றவற்றில் உள்ள நச்சுத்தன்மை வெளியாவதால் அது தோலில் உறிஞ்சப்பட்டு தோலில் புஞ்சை பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வாமையாலும் இது ஏற்படும்.கொப்புளம், சொறி, வறட்சி, அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படும். மேலும் சீழ் கோர்த்தல், படை, எரிச்சல், உண்டாகும். பெண்களுக்கு இதனால் பிறப்புறுப்புகளில் கட்டி, வீக்கம்  ஆகியன உண்டாக
வாய்ப்புண்டு.படோலதி கசாயம், கதிராதி கசாயம் திரிபலா கசாயம், நால்பமராதி கசாயம்  உட்கொள்ளலாம், மற்றும்  ஜாத்யாதி நெய் வெளிப்புறமாக பயன்படுத்தலாம்.

உஷா நாராயணன்