ஆளுமைப் பெண்கள்! மகப்பேறியல் நிபுணர் பத்மபிரியா விவேக்



கொட்டித் தீர்த்த பேய் மழையில் சென்னை நகரை 2015ம் ஆண்டு வரலாறு காணாத வெள்ளம் முற்றுகையிட்டது. மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போனது. மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்து மக்கள் நரக வேதனை அனுபவித்தனர். தார் சாலைகளில் படகுகள் உதவியுடன் பேரிடர் மீட்புப் படையினர் பெரும் போராட்டம் என உலகம் முழுவதும் மீடியாவில் செய்திகள் மேலும் புயலை கிளப்பியது.

போதாக்குறைக்கு, தங்களது பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பல வீடியோக்களை பதிவேற்றியதில் அனைவரும் திகிலில் உறைந்தனர். இத்தனை களேபரத்துக்கும் மத்தியில் 35 வயது பெண் ஒருவர் சத்தமே இல்லாமல் சாதனையை படைத்துள்ளார். அவர் ஆற்றிய சேவைக்கு அவர் பணி சார்ந்த துறை பாராட்டி கவுரவித்தது. அதைத் தொடர்ந்து தலை சிறந்த நிபுணர் எனும் விருதையும் கடந்த ஆண்டு பெற்றுள்ளார். யாரிவர்? அப்படி அவர் செய்ததுதான் என்ன?

டாக்டர் பத்மபிரியா, பன்னிரெண்டாயிரம் தாய்மார்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்திருக்கும் மகப்பேறு நிபுணர். மேடவாக்கம் அடுத்துள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகப்பேறியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். ‘‘கர்நாடக மாநிலம் தவணகெரேவில் உள்ள ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஜே.ஜே.எம் மருத்துவக் கல்லூரியில் 2002ல் டாக்டர் பட்டம் பெற்றேன்.
அதனைத் தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கத்தில் டாக்டராக முறைப்படி பதிவு செய்து கொண்டேன். அடுத்து மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் சார்ந்த துறையில் 2006ல் மேலாண்மை பட்டமும் முடிச்சேன். தொழிலில் நான் என்னை முழு வீச்சில் ஈடுபடுத்திக் கொண்டாலும், ஜெர்மனியின் பிரபல பல்கலைக் கழகத்தில் இனப்பெருக்க மருத்துவம் மற்றும் கருவியல் மருத்துவ படிப்பினை 2016ம் ஆண்டு முடித்து பட்டமும் பெற்றேன். இதனிடையே, எனக்கு திருமணமும் முடிந்தது.

பிரசவித்தல் என்பது பெண்களுக்கு இறைவன் அளித்த மிகப்பெரும் வரப்பிரசாதம். மருத்துவம் பிரபலம் அடையாத சில, பல ஆண்டுகளுக்கு முன், கிராமங்களில் மூத்த பெண்களே பிரசவம் பார்த்தனர். அவை எல்லாமே சுகப்பிரசவம் என்பதை அனைவரும் கற்றும், கேட்டும் அறிந்துள்ளோம். அதற்கு முக்கிய காரணம், கருவுற்ற முதல் மாதம் தொடங்கி அடுத்த ஒன்பது மாதங்களுக்கும், கருச்சிதைவு ஏற்பட்டு விடக்கூடாது எனும் அக்கறையுடன் முதல் நான்கு மாதங்கள் எந்த வேலை வாங்காமலும், ஊட்டச்சத்து கொடுத்தும், இடுப்பு எலும்பு வளைந்து கொடுக்க வேண்டும் என்பதற்காக உளுந்து களித்தும், அதைத் தொடர்ந்து கருவின் வளர்ச்சி உறுதியானதை அனுபவத்தால் உணர்ந்து வந்தனர்.

நான்கு மாதத்திற்கு பிறகு கரு நன்றாக வளர்ச்சி அடைந்திருப்பதை உறுதி செய்த பிறகு குனிந்து வளைந்து வீடு பெருக்குதல், கோலம் இடுதல், கால்களை அகல விரித்து அமர்ந்து பாத்திரம் கழுவுதல் என அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பிப்பார்கள். இது போன்ற வேலைகள் செய்யும் போது, தசைகள் தளர்வடைந்து விரியும். 7வது மாதத்தில் சீமந்தம் எனும் வளைகாப்பு நடத்தி அதில் கலந்து கொள்ளும் அனைவரின் ஆசிர்வாதத்தால், அச்சம் நீங்கி மனதளவில் பிரசவத்தை எதிர் கொள்ளும் துணிச்சலை ஏற்படுத்தி ஒவ்வொரு கருவுற்ற பெண்ணையும் பிரசவத்துக்கு தயார் செய்தனர்.

அந்தக் காலம் மாறி, சோஷியல் டிஸ்டன்ஸ், சானிடைசர் எனும் தற்காப்பு கவசத்துடன் வாழும் இந்தக் காலத்தில், பாட்டிமார்களின் அதே வழிமுறைகள் தான் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் மருத்துவ சாதனங்களுடன் கர்ப்பிணிகள் பழகுகின்றனர். எனினும் ஊட்டச்சத்து குறைவாக பெரும்பாலான பெண்கள் சுகப்பிரசவத்துக்கு தயார் ஆவதில்லை என்பதும் கவலையாகவும், வருத்தமாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது.

நகரங்கள் விரிவாகி, கிராமங்கள் சுருங்கிப் போன நிலையில், மருத்துவ முன்னேற்றங்களிலும், மருத்துவ கட்டுப்பாட்டு விதிகள் அறிமுகம் ஆன பின்னரும், கர்ப்பிணிகளுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தடை செய்யப்பட்டது. அதே சமயம் மருத்துவமனைகளில், சுகப் பிரசவம் என்பது அரிதாகவும், சிசேரியன் (அறுவை சிகிச்சை) முறையில் வயிற்றை கிழித்தும், பிரசவம் நடைபெறுகிறது. இதனால் பிரசவத்துக்குப் பின் உடல் ரீதியில் தாய் பல்வேறு உபாதைகளை சந்திக்கிறாள். இது என்னை ரொம்பவே பாதித்தது. ஒரு உயிரை உலகிற்கு அறிமுகம் செய்யும் பெண், சிசேரியனுக்குப் பின்னர் ஏன் இந்த நரக வேதனை அனுபவிக்க வேண்டும் என வேதனைப்பட்டேன்.

எனவே தான், பணிபுரிவது தனியார் மருத்துவமனையாக இருந்தாலும், கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் நடைபெற வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அதில் 90 சதவீதம் வெற்றியும் கண்டுள்ளேன். துல்லியமாக கணக்கு வைக்கவில்லை என்றாலும், தோராயமாக 13,000 பிரசவங்களில் இதுவரை ஈடுபட்டுள்ளேன். அதில் 90 சதவீதம் சுகப்பிரசவம் ஆகும். நூறு சதவீதம் சுகப்பிரசவம் என்பதே எனது இலக்கு. அதற்காக விடாமல் உழைக்கிறேன்.

மகளிர் மருத்துவத்தில் மட்டுமே அதி தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். மழலைச் செல்வம் இல்லையே என ஏங்கும் மணமான தம்பதிக்கு, செயற்கை கருவூட்டல் ஆலோசனை, இயற்கையில் கருவுறும் பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், மருந்து, மாத்திரை பரிந்துரைத்தல், கருவுற்ற 9 மாதங்களிலும், வேதனை என்பது என்ன என்று தெரியாத வகையில் கர்ப்பிணிக்கு பராமரிப்பு, உடற்பயிற்சி உள்பட கருவுற்ற காலங்களில் எந்தெந்த வேளைகளில் என்னென்ன செய்ய வேண்டும் என விளக்கம் அளித்து வருகிறேன்.

மேலும் நான் மகளிர் தொடர்பான அனைத்து மருத்துவ சிகிச்சைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் என்னுடைய பேஷன்ட்டான அனைத்து பெண்களுக்கும் சுகப்பிரசவம் ஏற்படச் செய்ய முடிகிறது. மேலும் கருப்பை நீர்க்கட்டி, நார்த்திசு கட்டிகள், அடிவயிற்றில் ஏற்படும் இனம் புரியாத கடுமையான வலி மற்றும் இடுப்பு எலும்பை வலுப்படுத்தக்கூடிய ஆலோசனைகளும் அளித்து அவர்களை கவனித்து வருகிறேன்.

பிரசவம் குறித்து அச்சம் ஏற்படாமல் இருக்க தனி கவனம் செலுத்தி வருகிறேன்.  அதற்காக பிரத்யேக கவுன்சிலிங் அளிக்கிறேன். மேலும் பருவ வயதில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் குறித்தும் அதனால் ஏற்படக்கூடிய உடல் ரீதியிலான மாற்றங்கள், அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு குறித்தும் ஆலோசனை வழங்குகிறேன். கருவுற்ற பெண்கள், கருவுற ஏங்கும் தம்பதி மற்றும் மகளிர் நல ஆரோக்கியம் குறித்து என்னை தொடர்பு கொள்ள விரும்பும் அனைவருக்கும் ஞாயிறு தவிர்த்து மற்ற வார நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நேரம் ஒதுக்கி உள்ளேன்’’ என்றவர் 2015 வெள்ளத்தில் சென்னையே தத்தளித்துக் கொண்டு இருந்த போது 17 பெண்களுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

‘‘எங்கும் தண்ணீர். வீட்டைவிட்டு வெளியே வர முடியவில்லை. உணவுக்கு வழியின்றி இயற்ைக தன் கோரத்தாண்டவத்தை ஆடிக் கொண்டு இருந்தது. இந்த நேரத்திலும் என் மீது நம்பிக்கை வைத்து எனக்காக பிரசவத்திற்காக காத்திருந்தனர். டாக்டர் வருவாரா... பிரசவம் நடக்குமா... இல்ல பூமியை பார்க்காமலே செத்துப் போகப்போற சிசுவோட நம்ம உசுரும் போயிடுமோ என்று அச்சத்துடன் இருந்த நிறைமாத கர்ப்பிணிகளை அமைதியாக இருக்க வைத்து, பிரசவ அறையை விட்டு அகலாமல் 90 மணி நேரம் தீவிர அர்ப்பணிப்பு செலுத்தி 17 சிசுக்களை ஜனிக்கச் செய்தேன். அந்த வருடம் என் வாழ்க்கையில் எனது தொழிலில் எனக்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பமாகவும், வாய்ப்பாகவும்தான் நான் கருதுகிறேன்.

என்னுடைய பணியை பாராட்டி உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவம் சார்ந்த வல்லுநர்கள் பாராட்டிய போது, நான் பெற்ற சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அடுத்த ஆண்டு, வர்தா புயல், அந்த சமயத்தில் என்னால் இயன்ற பண உதவி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை கொடுத்து உதவினேன்’’ என்றவர் மருத்துவ துறை சார்ந்த தேசிய மற்றும் உலகளாவிய மாநாடுகளில் பங்கேற்று ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து, அதற்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.

தி.ஜெனிஃபா