ரைட் ப்ரெயின் கல்வியும், குழந்தை வளர்ச்சியும்!



Right Brain education - வலது மூளைக் கல்வி, குழந்தைகளுக்கு வார்த்தைகளையும், எண்களையும் படங்களாகப் பார்க்கக் கற்றுக்கொடுக்கிறது. வெளிநாட்டில் பிரபலமாக இருக்கும் இந்த கல்வி முறையை இப்போது இந்தியாவிலும் பல அம்மாக்கள் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக கொரோனா ஊரடங்கின் போது ரைட் ப்ரெயின் கல்வி பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வலம்வர ஆரம்பித்தன. இதை முறையாக கற்று, தன் குழந்தைக்கும் பயிற்சியளித்து வரும் நளினியிடம் ரைட் ப்ரெயின் கல்வி பற்றி கேட்டோம்.

அவர், “ரைட் ப்ரெயின் கல்வி என்றால், குழந்தையின் வலதுபக்க மூளைக்கும் வேலைக் கொடுத்து செயல்படுத்த வைப்பது. பொதுவாகவே இடதுபக்க மூளை, திட்டங்கள் மற்றும் பகுப்பாய்வுகள் செய்ய பயன்படும். வலதுபக்க மூளை உணர்வுப்பூர்வமாகவும், கலைநயமுடனும் இருக்க உதவும். குழந்தைகளுக்கு எழுத்துக்கள், எண்களை மனப்பாடம் செய்வதிலேயே பலப் பெற்றோர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். இது இடது பக்க மூளையை ஆக்டிவேட் செய்யும் பயிற்சிகள்.

ஒரு குழந்தை வயிற்றில் உருவாகும் போது, தினமும் அதிகமாக வளர்ச்சி பெறுவது மூளைதான்.  1-2 வயதுக் குழந்தைக்கு இருக்கும் மூளை, ஒரு முழுமையான வளர்ந்த மனிதனின் மூளையைவிட அதிகமாக இருக்கும். அக்குழந்தையின் மூளையில், மில்லியன் நியூரான்கள் ஒவ்வொரு நிமிடமும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது. இரண்டு வயது வரை இந்த நியூரான்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். அதனால்தான் ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள் மிக முக்கியமானதாக கூறுவார்கள். அந்த சமயத்தில், அந்த குழந்தையின் சூழ்நிலை, அனுபவங்கள்தான் அவர்களது வாழ்க்கையையே முடிவு செய்யும்.

ஒரு குழந்தை, ஆரோக்கியமான சந்தோஷமான சூழ்நிலையில் வளரும் போது, அக்குழந்தையின்  வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். முதல் இரண்டு வருடங்கள் குழந்தையின் வலதுபக்க மூளைதான் ஆக்டிவாக இருக்கும். நல்ல கற்பனைத்திறன், கலைநயத்துடன், எதையும் தெரிந்து கொள்ள வேண்டும், பொருட்களைத் தொட வேண்டும் என எப்போதும் ஆர்வமாகவும், ஆக்டிவாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் வளர வளர இடதுப்பக்க மூளை கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும், அவர்கள் பள்ளிக்குச் சென்றதும், மனப்பாடம் செய்து படிப்பார்கள், பிடித்த பொழுதுபோக்கைச் செய்ய முடியாது என இப்படி பல கட்டுப்பாடுகளால் அவர்களது கற்பனைத்திறன், ஆர்வம் எல்லாமே குறைந்துவிடும்.
அதனால் முதல் இரண்டு வருடம் வலதுபக்க மூளையை எவ்வளவு ஆக்டிவேட் செய்கிறோமோ, அது குழந்தைக்கு முழுமையான ஒரு வளர்ச்சியையும், சமமான சிந்திக்கும் திறன், உணர்ச்சி திறன், பரிவு, புத்திசாலித்தனம் என எல்லாமே சேர்ந்து கிடைக்கும்.

இதை முழுமையாக படித்து, முறையான ஆய்வும் செய்து அதை என் குழந்தைக்கு பயிற்சியளித்து வருகிறேன். இந்த ரைட் ப்ரெயின் கல்வி, இணையத்தில் பல வழியில் பல விதமாக இருக்கிறது. இதை பெற்றோர்களுக்கு எளிமையாகவும் முறையாகவும் பயிற்றுவிக்க எவரும் இல்லை. அதனால் நான் என் குழந்தைக்காக கற்றுக்கொண்ட தகவல்களை, வலைத்தளம், இன்ஸ்டா
கிராம் மற்றும் யுடியூப் வாயிலாகவும் Nalini Zinu என்ற பெயரில், பெற்றோர்களுக்குக் கற்றுக்கொடுத்து வருகிறேன்.  

குழந்தையின் மூளையில் உருவாகும் நியூரான்களுக்கு நாம் எவ்வளவு வேலை கொடுக்கிறோமோ அது அவ்வளவு வளர்ச்சியடையும். நாம் உடற்பயிற்சி செய்யும் போது தான், தசைகள் வலுவடைந்து ஆக்டிவாக மாறும். அதே போலத்தான் நம் மூளையும்.மொழி மூளையின் இடதுபக்கம் தொடர்புடையது. குழந்தைகள் சரியாக பேச ஆரம்பிக்கவே இரண்டு வயதாகும். அந்த இரண்டு வயது வரை குழந்தைகள் பெற்றோரிடம் சைகைகள் மூலமாகவோ அல்லது தங்களுக்கு வேண்டிய பொருட்களைச் சுட்டிகாட்டியோ பெரியவர்களுடன் உரையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்போது அவர்களின் வலது பக்க மூளையே அதிகமாக வேலை செய்யும். அந்த சமயத்தில் ரைட் ப்ரெயின் கல்வி மூலம் வலது பக்க மூளையையும் ஆக்டிவாக வைத்திருந்தால், இரண்டு வயதிற்குப் பிறகு குழந்தைக்கு முழுமையான மூளை வளர்ச்சி கிடைத்து அவர்கள் நல்ல சிந்தனையாளர்களாக வளர்வார்கள்.

நம் சமூகத்தை பொறுத்த வரை பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து  தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றே குழந்தைகளை வளர்க்கிறோம். இது இடதுபக்க மூளைக்கு தொடர்புடையது. குழந்தைகளுக்குப் பிடித்த இசை, நடனம், விளையாட்டு போன்றவற்றை பொழுதுபோக்காக மட்டுமே பார்த்து அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த செயல்கள் அனைத்துமே வலது பக்க மூளைக்கு தொடர்புடையவை. எனவே நாம் நம்மை அறியாமலேயே வலதுபக்க மூளையைக் கட்டுப்படுத்தி அதை சரியாகப் பயன்படுத்தாமல் குழந்தையின் வளர்ச்சியைத் தடுக்கிறோம்.

குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்தே இந்த ரைட் ப்ரெயின் பயிற்சியை ஆரம்பிக்கலாம். இது ரைட் ப்ரெயின் பயிற்சி என்று கூறினாலுமே இதில் இடது பக்க மூளைக்கான வளர்ச்சியும் சேர்ந்தே இருக்கும். இந்த பயிற்சிகள் மூலம், குழந்தைகள் வளர்ந்த பின், பள்ளிப் படிப்பு முதல் அனைத்துமே அவர்களுக்குப் பிடித்து விரும்பி செய்யக்கூடியதாக இருக்கும். எதையுமே திணித்து அல்லது கட்டாயத்தின் பெயரில் செய்யவேண்டி இருக்காது. இயல்பாகவே அவர்கள் ஆர்வமுடனும், எளிதாகவும் பயில்வர்.

இந்த பயிற்சி தினமும் பத்து நிமிடம் செய்தாலே போதும். நீங்கள் இதை ஆர்வமுடன் செய்யும் போது முதலில் குழந்தையுடன் நல்ல பிணைப்பு உருவாகும், நாம் எடுக்கும் முடிவுகள்தான் நம் வாழ்க்கையையும், அது செல்லக்கூடிய பாதையையும் தேர்ந்தெடுக்கும். அப்படி சிந்தித்து முடிவெடுக்க வலதுபக்க மூளையின் தேவை மிக முக்கியம். இன்று நாம் பலரும் வேலை என்ற சக்கரத்திற்குள் சுழன்றுகொண்டே இருக்கிறோம். இதனால் அடிப்படையான மனித நேயமும், மற்றவர்களுக்காக சிந்திக்கவும் கூட நமக்கு நேரமில்லை. ஆனால் வலதுப்பக்க மூளை குழந்தையின் வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல், நாளை அக்குழந்தை ஒரு நல்ல மனிதனாய் வாழவும் உதவியாய் இருக்கும்.   

என் 14 மாதக் குழந்தை, ஷ்ரத்தாவுக்கு தினமும் ரைட் ப்ரெயின் பயிற்சி அளித்து வருகிறேன்.  கடந்த ஆண்டு, அவள் பிறந்த பத்தாவது நாள், இந்தியாவில் கடுமையான முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  ஒரு தாயாக எனக்கு இவளின் எதிர்காலம் குறித்து பல கேள்விகளும் பயமும் இருந்தாலும், அந்த சமயம் எனக்கு என் குழந்தையுடன் செலவிடும் அரிய தருணமாக அமைந்தது. நானும் என் கணவரும் பொறியியல் பட்டதாரிகள். இருவருமே வெவ்வேறு ஐ.டி. கம்பெனிகளில் வேலை செய்து வருகிறோம். என் கணவருக்கு விதிமுறைப்படி, குழந்தை பிறக்கும் போது ஒரு வாரம் மட்டுமே விடுப்பு அளிக்கப்படும்.

ஆனால் ஊரடங்கு அறிவித்ததில் அவர் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கும் குழந்தையைப் பிரிந்து எப்படி வேலைக்குச் செல்லப் போகிறோம் என்ற பயத்தை இந்த வர்க் ஃப்ரம் ஹோம் போக்கியது. இருவருமே தொடர்ந்து வேலை செய்து வந்தாலும், எங்களுக்கு குழந்தையுடன் அதிக நேரம் செலவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சமயத்தில் ரைட் ப்ரெயின் கல்விக்கான பயிற்சியிலும் என்னால் ஈடுபட முடிந்தது.

ரைட் ப்ரெயின் பயிற்சியில் முக்கிய ஆக்டிவிடி ஃப்ளாஷ் கார்டுகள்தான். அதாவது அவை படங்களுடன் இருக்கும். உங்கள் குழந்தைக்கும் பூ+னை = பூனை என வெறும் வார்த்தையாக மனப்பாடம் செய்யாமல், பூனையின் படத்தைக் காட்டி கற்றுக்கொடுக்கப்படும். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதும், வார்த்தைகளையும் வாய்ப்பாட்டையும் நிச்சயமாக கற்றுக்கொள்ளப்
போகிறார்கள். அதற்கு முன், அவர்களது காட்சி திறம் மற்றும் நியாபக சக்தியை அதிகரிக்க ஃப்ளாஷ் கார்டு பயிற்சி உதவும்.

இந்த ஃப்ளாஷ் கார்டுகளில் புகைப்படங்கள் இருக்கும். பெற்றோர் வேகமாக ஃப்ளாஷ் கார்டுகளை குழந்தைகளுக்கு காட்டி அதன் பெயரையும் சத்தமாக சொல்ல வேண்டும். இந்த பயிற்சியை வேகமாக செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் குழந்தைக்கு அனைத்து ஃப்ளாஷ் கார்டுகளும் மனப்பாடம் ஆகாவிட்டாலும், அது மனதில் பதிந்துவிடும். வேகமாக ஒரு விஷயத்தை செய்யும் போது அது வலதுப்பக்க மூளையை ஆக்டிவேட் செய்யும். பொறுமையுடன் இந்த பயிற்சியை சில நாட்கள் செய்யும் போது நிச்சயம் பலன் தெரியும்.

பல பெற்றோர்கள் குழந்தைக்கு அதிகச் செலவில் விதவிதமாக பொம்மைகள் வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகள் பொதுவாகவே நம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் பொருட்களைத்தான் விரும்புவார்கள். அவர்கள் பெற்றோர்களை கவனித்து அவர்கள் பயன்படுத்தும் பொருட்களுடன்தான் விளையாட நினைப்பார்கள். எனவே, நாம் குழந்தைக்கு ஒன்றை சொல்லிக்கொடுக்கும் போது, நாம் அதை முதலில் குழந்தையின் முன் செய்ய வேண்டும்.

குழந்தை சாப்பிட வேண்டும் என்பதற்காக மொபைல் போன் அல்லது விளையாட்டுக்காட்டி சாப்பிட வைப்பதை விட, குழந்தை திடமான உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது, தானாக சாப்பிட பயிற்சியளிக்க வேண்டும். குழந்தைக்கு எனத் தனி தட்டு, ஸ்பூன், க்ளாஸ் என எல்லாமே கொடுத்து, உங்களுடன் சேர்ந்து சாப்பிட பழக்குங்கள். சில நாட்கள் குழந்தை சாப்பிடாமல் வெறும் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தும். ஆனாலும் மனம் தளராமல் குழந்தையே சுயமாக உணவை எடுத்து சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கினால், வளர்ந்தும் குழந்தைகள் தங்களுக்கு வேண்டிய உணவை முறையாகச் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

குழந்தையிடம் ஒவ்வொரு விஷயத்தையும் பேசுங்கள். குழந்தைக்கு என்ன புரியப் போகிறது என வெறும் அதட்டி மட்டும் வளர்க்க முடியாது. குழந்தையுடன் உரையாடினால்தான், நம்பிக்கை அதிகரிக்கும்” எனக்கூறும் நளினி குழந்தை உளவியல் கல்வியாளர் பயிற்சி பெற்றுள்ளார். ரைட் ப்ரெயின் கல்வி, அதன் செயல்முறைகள், சந்தேகங்கள் குறித்த பல வீடியோக்களை அவரது சமூக வலைத்தளத்தில் பார்க்க முடியும்.

ஸ்வேதா கண்ணன்