பன்ச் பாவையர்



உலக நாடுகள் இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் பங்களிப்பு என்றும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக இருக்கும். தடகளப் போட்டியாக இருந்தாலும் சரி, உயிரைப் பணயம் வைத்து வெல்லும் குத்துச்சண்டையாக இருந்தாலும் சரி இவர்களின் பங்களிப்பை யாரும் மறுப்பதற்கு இல்லை. அந்த வகையில் பி.டி.உஷா, ஷைனி வில்சன், பாபி அஞ்சு ஜார்ஜ், சானியா மிர்சா, மேரி கோம் தொடங்கி அடுத்தாண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிற்கு தேர்வாகி உள்ள வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி போன்றோர் குறிப்பிடத்தகுந்த நபர்களாக திகழ்கின்றனர்.

அவ்வரிசையில், கடந்த மாதம் போலாந்தின் கியெல்ஸ் நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் மகளிர் குத்துச் சண்டை போட்டியில் அரியானாவைச் சேர்ந்த ஜித்திகா(48 கிலோ), பூனம் காத்ரி (57 கிலோ), மணிப்பூரை சேர்ந்த நாரோம் பேபிரோஜிசனாசானு(51 கிலோ) மற்றும் 60 கிலோ எடைப்பிரிவில் வின்கா ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.இந்த ‘தங்க’ மங்கையர் கடந்த மாதம் நடைபெற்ற உலக ஜூனியர் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பலம் வாய்ந்த ஐரோப்பிய வீராங்கனைகளை எதிர்கொண்டு தங்கம் வென்றதை பற்றி காண்போம். அதற்கு முன்னதாகஇவர்களின் ஆரம்பகால பயணத்தைப்பற்றி அறிந்து கொள்வோம்.

ஜித்திகா (48 கிேலா பிரிவு)

அரியானாவின் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜித்திகா. குத்துச் சண்டை மீது கொண்ட தீராத ஆர்வத்தால் ஏழ்மையையும் பல தடைகளையும் தாண்டி சாதித்த இளம் வீராங்கனை. இவர் தனது அபாரமான ‘பன்ச்’களால் இந்திய மகளிர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தார். தனது தொடக்க சுற்று போட்டியில் இரண்டு முறை ஐரோப்பிய சாம்பியனான இரிக்கா பிரிஸ்தியான்ட்ரோவை (இத்தாலி) தோற்கடித்தார். இறுதிச் சுற்றில் உள்ளூர் வீராங்கனையான நாதாலியா குக்ரிஸ்தாவை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் ‘நாக்டவுன்’ செய்து இந்திய அணிக்கு முதல் கோல்டு மெடலை தனது பங்களிப்பாக பெற்றுத் தந்தார்.

பூனம் காத்ரி (57 கிலோ பிரிவு)

அரியானா சொய்தா கிராமத்தைச் சேர்ந்த இவர் தனது பள்ளிப்பருவத்திலேயே விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் கபடி மற்றும் கோகோ விளையாட்டுக்களில் பங்கேற்ற இவர், தனது 15 வயது முதல் வூஷூ (Wushu) என்ற தற்காப்பு கலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 2019-ம் ஆண்டில் உலக வூஷூ சாம்பியன் ஷிப், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்று, 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். பின்னர் குத்துச் சண்டையில் பங்கேற்க ஆரம்பித்த இவர் நேஷனல் லெவல் போட்டிகளில் பத்து முறை தங்கம் வென்றார்.

அதைத் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டார். கடந்த மாதம் உலக ஜூனியர் மகளிர் குத்துச்சண்டையில் பங்கேற்ற இவர் தொடக்க சுற்றில் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த சிட்ரோ துர்சிபெக்கோவாவை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் பிரான்சை சேர்ந்த சித்திலீன் கோரோசியை
தோற்கடித்து தங்கம் வென்றார்.

வின்கா (60 கிலோ பிரிவு)

இந்திய மகளிர் குத்துச் சண்டை  அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் வீராங்கனைகளில் இவரும் ஒருவர். ஜூனியர் நேஷனல்ஸ், யூத் நேஷனல் பாக்சிங் சாம்பியன்ஷிப், ஸ்கூல் நேஷனல் கேம்ஸ் எனப் பல தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.2018-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் இன்று வரை ஆரம்பத்தில் கொண்டிருந்த அதே உற்சாகத்துடன் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களைத் தொடர்ந்து வென்று வருகிறார்.

அந்த வரிசையில், கடந்த ஏப்ரல் மாதம் போலந்தில் நடைபெற்ற உலக ஜூனியர் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடக்க சுற்றில் செக்கோஸ்லோவாகியாவைச் சேர்ந்த வெரோனிகா கஜ்தோவாவை 4-1 என்ற பாயிண்ட்சில் வீழ்த்தி பைனல்சுக்கு முன்னேறினார். அதில் பலம் வாய்ந்த கஜகஸ்தான் வீராங்கனையான சுல்தியஸ் ஷாயாகிம் இட்டோவாவை எளிதாக வென்று தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

நாரோம் பேபிரோஜிசனாசானு (51 கிலோ பிரிவு)

மணிப்பூரைச் சேர்ந்த இவர் தனது ஆரம்ப காலக்கட்டங்களில் மேரிகோம் அகாடமியில், தீவிர பயிற்சி பெற்று தனது திறமைகளை வளர்த்துக் கொண்ட வீராங்கனை. முறையான பயிற்சி முறைகளால் எதிர் வீராங்கனைகளுடனான போட்டிகளில் எந்தவித தவறுகளும் நிகழாமல் பார்த்துக் கொள்வதில் தனித்திறமை பெற்றிருந்தார். இதன் காரணமாக தொடக்க சுற்றுகளில் மகளிர் குத்துச் சண்டையில் கோலோச்சும் ரஷ்ய வீராங்கனைகளை எளிதாக வீழ்த்தி பைனல்சுக்கு முன்னேறினார். இறுதிச் சுற்றிலும் ரஷ்யாவின் வாலெரியா வின்கோவாவை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வீழ்த்தி, இந்தியாவின் பதக்கப் பட்டியலை அதிகரிக்க செய்தார்.

பாலு விஜயன்