இரும்பு மனுஷி கௌரி அம்மா!



அண்மையில் முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 99 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி. மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் பினராயி விஜயன். இவரது அமைச்சரவையில், நிபா மற்றும் கொரோனா வைரஸ் தொற்றை திறம்பட கையாண்ட முன்னாள் கேரள சுகாதாரத்துறை அமைச்சராக (2016 - 21) இருந்த ஷைலஜா டீச்சருக்கு அமைச்சராகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது பேசுபொருளாக மாறியது.

ஆனால், “இது எங்கள் கட்சியின் கொள்கை முடிவு. எனவே அந்த முடிவின்படி நானும் விலக முடிவு செய்தேன். எல்லோரும் ஒரு புதிய பொறுப்பு வரும்போது அவர்கள் புதியவர்கள்தான். அவர்கள் பொறுப்பேற்க வருவது வரவேற்கத்தக்க ஒன்று. அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். கடந்த முறை எங்கள் கட்சி என்னை அமைச்சராக தேர்வு செய்தது. அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அதே நேரத்தில் திறம்பட பணியாற்றும் பலர் கட்சியில் உள்ளனர். இது நல்ல முடிவு. நாங்கள் மற்றவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இங்கே எங்கள் கட்சியில் உள்ள பல தொழிலாளர்கள் வாய்ப்பு கிடைத்தால், அவர்களும் கடுமையாக உழைப்பார்கள்” என்று கட்சியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார் ஷைலஜா டீச்சர்.

இந்த சம்பவம் நடந்த அதே வாரத்தில் கேரளத்தின் இடதுசாரி தலைவர்களில் ஒருவரான கௌரி அம்மா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இது எதிர்பாராமல் நடந்த சம்பவம். ஆனால், இந்தத் தருணத்தில் கௌரி அம்மாவுக்கு நிகழ்ந்ததையும் ஷைலஜாவுக்கு நிகழ்ந்ததையும் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியம். கெளரி அம்மா 1957-ல் அமைக்கப்பட்ட இ.எம்.எஸ் அமைச்சரவையில் கேரளாவின் முதல் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர்.

அப்போது இருந்தே படிப்படியாக கேரள அரசியலில் தனிப்பெரும் தலைவராக வளரத் தொடங்கினார். 1987-ஆம் ஆண்டில் கௌரி அம்மா அடுத்த முதல்வராக இருப்பார் என்று கணிக்கப்பட்டது. அதற்கேற்பவே அவரது பெயரை முன்னிறுத்தியே பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருந்து பிரபல வசனம் `கேரள நாட்டை கே.ஆர்.கௌரி பரிக்கட்டே’
என்பதுதான். அதாவது ‘கேரளாவை கௌரி ஆளட்டும்’ என்பது தான் அதன் பொருள்.

பிரச்சாரத்துக்கு நல்ல பலனும் இருந்தது. தேர்தலில் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர். ஆனால் கௌரி அம்மா முதல்வராக மாறவில்லை என்பது மட்டுமல்லாமல், பின்னர் உட்கட்சி பூசல் காரணமாக அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனினும், அவர் வெளியேற்றப்பட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது கேரளத்தில், அமைச்சரவையை மாற்றியமைக்க பலவீனமான சாக்குப்போக்குடன் ஒரு பெண் தலைவர் அமைச்சரவையில் இருந்து விலக்கப்படுவது வரலாறு மீண்டும் ஷைலஜா விவகாரத்தில் நிகழ்ந்துள்ளது. கேரளத்தில் பெண் முதல்வர்கள் இதுவரை வந்ததில்லை என்ற குறை இப்போது வரை இருக்கிறது. முதல்வராவதற்கு தகுதியானவர்களாக வர்ணிக்கப்பட்ட பெண்களில் அன்று கௌரி அம்மாவும், இன்று ஷைலஜா டீச்சரும் தான்.  

யார் இந்த கௌரி அம்மா…?
கேரள மாநிலம், சேர்த்தலா பட்டணங்காடு பகுதியில் 1919 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி பிறந்தவர் கெளரி அம்மா. திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றதன் மூலம் ஈழவ சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றார். ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தனது அண்ணனது செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் இணைந்து, புரட்சிகர நடவடிக்கைகளுக்காக பல முறை சிறை சென்றார். “காவலர்களின் லத்திகளுக்கு உயிர் இருந்திருக்குமானால், எத்தனையோ லத்திகளை பிள்ளைகளாக பெற்றிருப்பேன்” என்று காவல்துறையின் கொடிய சித்திரவதையை படம் பிடித்து காட்டியவர்.

1948 திருவிதாங்கூர் - கொச்சி சட்டசபைத் தேர்தலில் சேர்த்தலா தாலுகாவில், துறவூர் தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். 1952 மற்றும் 1954 தேர்தல்களில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சட்டசபைக்குள் நுழைந்தார். ஒன்றிணைந்த கேரள மாநிலத்தில் 1957-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். கேரள மாநிலத்தின் ‘முதல் வருவாய்த்துறை அமைச்சரான’ கௌரி அம்மா, ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற அடிப்படையில் ‘நில சீர்த்திருத்த மசோதாவை’ அமல்படுத்தினார். இது கேரள நிலமற்ற உழவர்களுக்கு வாழ்க்கை தந்தது.

திருவிதாங்கூர் மன்னருக்கு எதிராக பொதுவுடைமையாளர்கள் நடத்திய புன்னப்பரா-வயலார் போராட்டத்தின் கதாநாயகனாகத் திகழ்ந்தவர் டி.வி தாமஸ். அந்த போராட்டத்தில் நிகழ்ந்த சந்திப்பு பின்னர் காதலாக மாறியது. 1957ஆம் ஆண்டு இருவருமே கேரளத்தின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்றபோது அவர்கள் இருவரும் கொடுத்திருந்த முகவரிகள் அருகருகே இருந்தது. இதனையடுத்து இவர்களுக்கிடையேயான உறவு கட்சியினருக்கு தெரியவே, இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், அந்த பந்தம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தது.

1964ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரிந்த போது, கௌரி அம்மா புதிதாக தொடங்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவரது கணவர் டி.வி. தாமஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தொடர்ந்தார். 1967ஆம் ஆண்டு அமைச்சரவையில் பங்கேற்பதற்காக ஆலப்புழாவிலிருந்து திருவனந்தபுரத்துக்கு இருவருமே சேர்ந்தே சென்றனர். ஆனால், அப்போதுதான் இரு கட்சிகளுக்கிடையேயான உரசல் அதிகரித்தது.

அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமண உறவிலிருந்தும் இருவரும் பிரிந்தனர்.1967 முதல் 1976வரை, கட்சி தலைமையிலான கேரள மகளிர் சங்கத் தலைவர். 1976-1987 வரை கட்சி தலைமையிலான கேரள மகளிர் சங்கச் செயலாளர். 1980ம் ஆண்டு, ஈ.கே.நாயனாரின் முதல் அமைச்சரவையில், அமைச்சர் என்று அரசியலில் அடுத்தடுத்த தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்த கௌரி அம்மா 1994ல் சிபிஎம் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். வெளியே வந்தவர், ‘ஜனாதிபத்திய சம்ரக்‌ஷ சமிதி’ என்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அமைப்பை, கட்சியை 1994 லேயே உருவாக்கினார்.

அந்த கட்சி, சிபிஎம் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான,  ‘ஐக்கிய ஜனநாயக முன்னணி’ யில் கூட்டணியாக சேர்ந்து, தேர்தல் களம் கண்டது. அதன் விளைவாக, 2001 ல் ஏ.கே.அந்தோணி முதல் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமரும்போது, கெளரி அதில் ஒரு அமைச்சரானார். 2004ல்அந்தோணி திடீர் ராஜினாமா செய்ய, உம்மன் சாண்டி முதல்வரானார். 2001-2006 வரை கெளரி அந்த அமைச்சரவையில், அமைச்சராக இருந்தார்.

13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஆறு முறை அமைச்சராகவும் பங்காற்றிய கௌரி அம்மா, கேரள மாநில அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் இரும்பு மனுஷியாகவே இருந்திருக்கிறார். அதனால் தான் 2019 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் தனது கணவர் டி.வி. தாமஸைப் பற்றி கூறுகையில், “புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஒரு முறை சென்று டி.வி.யை சந்தித்தேன்.

என்னை கண்டதும் அவர் உடைந்துபோய் அழுதார். ஆனால் நான் அழவில்லை. அதன் பிறகு அவரை பிணமாகத்தான் பார்த்தேன். மனதின் ஆழத்தில் அதிக வலி இருந்தாலும் அப்போதும் நான் அழவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். 102 வயது வரை இரும்பு மனுஷியாகவே வாழ்ந்த கௌரி அம்மா, கடந்த மே 11 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

அன்னம் அரசு