வீடு தேடி வரும் கொடைக்கானல் இயற்கை தேன்!
கொடைக்கானல் என்றதும் அதன் நீண்ட பனி படர்ந்த மலை மற்றும் பசுமையான இயற்கை சூழல் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் கொடைக்கானலுக்கு மற்றொரு அடையாளம் உள்ளது. அது பழங்குடியினர் தயாரிக்கும் சுத்தமான தேன்.  இவர்களைப் பற்றி ஆவணப் படம் எடுக்க சென்ற இரண்டு பெண்கள் தற்போது, தொழில் முனைவோராக மாறியுள்ளனர். ‘Hoopoe on a Hill’ என்ற பெயரில் இந்தியா முழுதும் இயற்கை தேனை விற்பனை செய்து வரும் நிஷிதா வசந்த் மற்றும் பிரியாஸ்ரீ மணி, தங்களின் பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள்.‘‘நாங்க இருவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள்’’ என்று பேசத் துவங்கினார் நிஷிதா.

இண்டியன் நேஷனல் ட்ரஸ்ட் ஃபார் ஆர்ட் அண்ட் கல்ச்சர் ஹெரிடேஜ் (INTACH) என்கிற அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தோம். எங்க நிறுவனம் சார்பாக 2015ம் ஆண்டு பழனி மலையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசியினரின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்வாதாரம் குறித்து ஒரு ஆவணப்படம் தயாரிக்க சென்றோம்.
 அங்க சென்ற போது தான் அவர்களின் பாரம்பரிய முறையில் தேனினை அறுவடை செய்வதைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைச்சது. அதைப் பற்றி கேட்ட போது ரொம்பவே ஆச்சரியமா இருந்தது. அது தான் எங்களின் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆரம்பிக்க ஒரு காரணமாக அமைந்ததுன்னு சொல்லலாம்’’ என்றவரை தொடர்ந்தார் பிரியாஸ்ரீ. ‘‘பளியர் இனப் பழங்குடியினர் தேன் அறுவடை செய்யும் வரலாறு மிகவும் பழமைவாய்ந்ததாக இருந்தது. அவர்கள் பாரம்பரிய திறன்களைப் பயன்படுத்தி அடர்ந்த காட்டில் இருக்கும் மரங்களில் ஏறி தேன்கூடுகளில் இருந்து தேன் அறுவடை செய்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக இந்தச் சமூகத்தினரின் கலாச்சாரத்தில் தேன் அறுவடையும் ஒன்றாக இருந்து வருகிறது. முன்பு இந்த தேனை பண்ட மாற்று பொருளாக விற்பனை செய்து வந்தனர்.
அதாவது தேனைக் கொடுத்து அதற்கு மாற்றாக துணி, உப்பு, அரிசி போன்ற பொருட்களை வாங்கி வந்தனர். இப்போது அதை காசுக்காக விற்பனை செய்கிறார்கள். இது தான் அங்குள்ள பழங்குடியினரின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அவர்களை பற்றி நாங்க ஆவணப்படம் எடுக்க சென்ற போது, ‘எங்க தேனை வாங்கி பாருங்க நல்லா இருக்கும்’ன்னு சொல்ல, நானும் நிஷிதாவும் முதலில் சிறிய அளவில் அவர்களிடம் இருந்து தேனை வாங்கி என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்தோம். அவர்கள் மீண்டும் கேட்க ஆரம்பித்த போது, இதையே ஏன் ஒரு தொழிலாக மாற்றி செய்யக்கூடாதுன்னு எங்க இருவருக்கும் எண்ணம் ஏற்பட்டது. அதற்கான செயலில் இறங்க ஆரம்பித்தோம்.
கொடைக்கானலில் நாங்க தங்கி இருந்த வீட்டிற்கு அடிக்கடி ஹூப் பறவை வந்து செல்லும். அதனால் எங்க தொழிலுக்கு ‘ஹுப் ஆன் ஹில்ஸ்’ன்னு பெயர் வைத்தோம். முதலில் தேனை வாங்கி தெரிந்தவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்த வந்தோம். அவர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க, ஆன்லைன் முறையில் விற்பனை செய்து வருகிறோம்’’ என்றவர் இதற்காகவே நான்கு மலைவாழ் ெபண்களை வேலைக்காக நியமித்துள்ளனர்.
‘‘பருவநிலை, பூக்கள், தேன் உற்பத்தி செய்யும் தேனீ... இவற்றைப் பொறுத்து தான் தேனினை சேமிப்பார்கள். இரண்டு பருவமழைக் காலம் இருக்கும் என்பதால் இரண்டு முறை தேன் அறுவடை செய்யப்படும். அதற்காக அடர்ந்த காட்டுக்குள் பயணிப்பார்கள். மர உச்சியில் தான் தேன் கூடு இருக்கும். அந்த மரத்தில் ஏறுவதற்காகவே பயிற்சி பெற்றவர்கள் இருப்பாங்க. அவங்க ஏறி புகைப் போட்டு தேனீக்களை அகற்றி கூட்டினை மட்டும் சேமிப்பார்கள். அதன் பிறகு அதில் இருந்த தேன் தனியாக பிரிக்கப்படும். இவர்கள் தேனுக்காக தேனிக்களை கொல்வதில்லை. மாறாக அவற்றை விரட்டி விட்டு தான் தேன் கூட்டினை சேகரிக்கிறார்கள்.
அதிலும் அதன் வேர் பகுதியினை அவர்கள் அப்படியே விட்டுவிடுவார்கள். இதன் மூலம் தேனீக்கள் அங்கு வந்து மறுபடியும் தேன் கூட்டினை கட்ட ஆரம்பிக்கும். சேமிக்கப்பட்ட தேனில் உள்ள அசுத்தங்கள் மஸ்லின் துணியில் மூன்று முதல் நான்கு முறை வடிகட்டப்படும். பிறகு பெரிய கேன்களில் சேமிக்கப்பட்டு கண்ணாடி பாட்டில்களில் மாற்றப்படுகிறது.
500 கிராம் தேன் 450 ரூபாய்க்கும் 300 கிராம் தேன் 290 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. குறிப்பாக சீசன் காலத்தில் நிறைய தேன்களை அறுவடை செய்யும் இவர்கள் அதை விற்பதன் மூலம் கணிசமான தொகையினை பெறுகிறார்கள். அதைக் கொண்டு குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், கடன் மற்றும் கல்யாணம் போன்றவற்றுக்கு செலவு செய்கிறார்கள்’’ என்று கூறும் இவர்கள் இருவரும் இப்போது கொடைக்கானலில் செட்டிலாகிவிட்டனர். ‘‘தேன்கள் சேகரிக்கப்பட்டு அதன் மெழுகினை என்ன செய்வதுன்னு தெரியல. காஸ்மெட்டிக் சந்தையில் தேன் மெழுகின் பயன்பாடு அதிக அளவில் இருப்பதால், எங்களுக்கு அதில் குதிக்க விருப்பமில்லை. என்ன செய்யலாம்ன்னு யோசித்த போது, எங்களின் நண்பர் கனடாவில் இருந்து தேன் மெழுகு ராப்பர்களை அனுப்பி வைத்தார். அதன் பிறகு மீதமுள்ள தேன் மெழுகினை உணவுப் பொருட்களை மடிக்கும் காகிதமாக மாற்றி அமைத்தோம். இதன் மூலம் உணவுகள் அதிக நேரம் கெடாமலும் ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கும்.
இந்த காகிதம் இயற்கையானது என்பதால் எளிதில் மக்கக்கூடியது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாது. இதனை தொடர்ந்து குழந்தைகள் பயன்படுத்தும் கேராயான்ஸ் தயாரிக்கிறோம். இதில் இயற்கை சாயங்கள் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது. பெண்களுக்கு பனிக்காலத்தில் உதடு வெடிக்காமல் இருக்க லிப் பாமும் உற்பத்தி செய்கிறோம். இந்தியா முழுதும் போஸ்டலில் பார்சல் முறையில் ஆர்டரின் பேரில் அனுப்பி வைக்கிறோம். எங்களின் நோக்கம் அதிக பெண்களை பணியில் அமர்த்தி அதிக தயாரிப்புகளையும் இணைத்து வருங்காலத்தில் இதனை மேலும் வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பது தான்’’ என்றனர் தோழிகள் இருவரும் கோரசாக.
ஷம்ரிதி
|