என்ன செய்வது தோழி? செல்போன் குடும்பங்கள்
அன்புடன் தோழிக்கு,கடந்த சில மாதங்களாக ‘என்ன செய்வது தோழி’க்கு வரும் பெரும்பான்மையான கடிதங்களில், ‘வீட்டில்இருந்து வேலை’, ‘ஆன்லைன் வகுப்புகள்’ காரணமாக, அதிக அளவில் கம்ப்யூட்டர், செல்போன்களை பெரியவர்கள், சிறியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்த பாதிப்பில் இருந்து மீள ஆலோசனைகள் கேட்டுள்ளனர். பலர் ஒரே மாதிரியான பிரச்னைகளை எழுதியிருக்கிறார்கள். அவற்றில் இருந்து சில பிரச்னைகளை மட்டும் கேள்விகளாக தொகுத்து மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்டோம்.

1. நானும், கணவரும் மென்பொருள் பொறியாளர்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஆரம்பித்ததும் எங்களுக்கு வீட்டில் இருந்து வேலை. ஆரம்பத்தில் ‘கொரோனாவிடம் இருந்து தப்பித்து விட்டோம்’ என்று உற்சாகமாக தான் இருந்தது. ஆனால் நாளாக, நாளாக கம்ப்யூட்டர் முன்பே காத்துக் கிடப்பதே வேலையாகி விட்டது. தினமும் அலுவலகம் சென்று வந்த காலத்தில், ‘காலையில் வேலைக்கு போனால் மாலை வீடு வந்து விடுவோம். சனி, ஞாயிறு விடுமுறை. ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆரம்பித்த பிறகு எனக்கு மாதத்திற்கு 2 சனிக்கிழமைகளில் வேலை.
அவருக்கு எல்லா சனிக்கிழமைகளிலும் வேலை. சில நாட்களில் நள்ளிரவிலும் வேலை இருக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து இருக்கிறோம். இடையில் குழந்தைகளுக்கு உணவு, ஆன்லைன் வகுப்புகளையும் கவனிக்க வேண்டும். இத்தனையும் கவனித்துக் கொண்டு மணிக்கணக்கில் வேலை பார்க்க வேண்டியுள்ளது. அதனால் வேலை செய்யவே எரிச்சலாக உள்ளது அதனால் குழந்தைகளிடமும், கணவரிடமும் எரிந்து விழுகிறேன். எப்போதும் படபடப்பாகவே இருக்கிறது. எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கிறது. இயல்பாக இருக்க என்ன செய்வது தோழி? 2. எங்கள் 10 வயது பையனுக்கு ‘ஆன்லைன் வகுப்பு’க்காக செல்போன் வாங்கி கொடுத்தோம். ஆன்லைன் வகுப்புகள் இல்லாத நேரங்களிலும் எப்போதும் செல்போனும் கையுமாகவே இருக்கிறான். சாப்பிடும்போது கூட படங்கள், வீடியோகேம் விளையாடுவதுதான் வேலையாக இருக்கிறது. படிப்பது, சாப்பிடுவது ஏன் விளையாடுவது கூட இரண்டாவது பட்சமாகி விட்டது. செல்ேபானை தேவையில்லாமல் பயன்படுத்தாதே என்று சொன்னால் கோபப்படுகிறான். சண்டை போடுகிறான். அதிகமாக கண்டித்தால் ஏதாவது ஏடாகூடமாக செய்து கொள்வானோ என்று அச்சமாக இருக்கிறது. அவனை எப்படி பழைய நிலைமைக்கு மாற்றுவது தோழி?
3. என் மகள் கல்லூரியில் படிக்கிறாள். முதலாண்டு மட்டும்தான் கல்லூரிக்கு போனாள். இப்போது கல்லூரிக்கு போகாமலே படிப்பு முடியப்போகிறது. ஆனால் ‘ஆன்லைன் வகுப்பு’ என்ற செல்போன் பழக்கம் முடிவில்லாமல் தொடர்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே செல்போன் வாங்கி தந்தோம். அப்போது கட்டுப்பாடுகளுடன்தான் செல்போனை பயன்படுத்த அனுமதித்தோம். அவள் அப்பா வீட்டில் இருந்தால் மட்டும் தான் செல்போனை அதிகம் தொட மாட்டாள். இப்போது ‘ஆன்லைன்’ வகுப்புகள் என்ற பெயரிலும், ‘டிஸ்கஷன்’ என்று சாக்கு சொல்லியும் எப்போதும் செல்போனுடன்தான் குடும்பம் நடத்துகிறாள். வயதுக்கு வந்தப் பெண்ணை எப்படி கண்டிப்பது என்று அவளது அப்பாவும் தயங்குகிறார். நான் ஏதாவது கேட்டால், ‘என்னை உனக்கு பிடிக்கவில்லை. அதனால் இப்படி தொல்லை செய்கிறாய்’ என்று அழ ஆரம்பித்து விடுகிறாள். போதாதற்கு ‘ஆன் லைனில்’ அழகு சாதன பொருட்களை வாங்கி குவிக்கிறாள். அவளைப் பார்த்து இரண்டாவது பெண்ணும் செல்போன் வாங்கித் தர சொல்லி அடம்பிடிக்கிறாள். அவள் ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு எனது செல்போனை பயன் படுத்தி வந்தாள். வகுப்பு முடிந்தாலும் செல்போனை தர மறுக்கிறாள். செல்போன்கள் எனது குடும்பத்தையே தீவுகளாக்கி விட்டது. அதனை சரி செய்ய முடியுமா தோழி?
4. எனது கணவர் மத்திய அரசு ஊழியர். கடந்த ஆண்டு ஊரடங்கின் போது வேலைக்கு செல்லும் சூழல் இல்லை. அதனால் பல நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை. ஆனாலும் மொபைல், லேப்டாப் என்று எப்போதும் பரபரப்பாக இருப்பார். இத்தனைக்கும் அவருக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாது. நேரடியாக போய் பணியாற்ற வேண்டிய வேலை. இருந்தும் அவர் லேப் டாப், செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டே இருக்கிறார்.
செல்போனில் சார்ஜ் போய்விட்டால், லேப்டாப்பை தூக்கி வைத்துக் கொள்வார். சாப்பிட கூட கெஞ்ச வேண்டியுள்ளது. எங்களுக்கு 4, 7 வயதுகளில் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுடன் கூட விளையாடுவதில்லை. முன்பெல்லாம் விடுமுறை நாள் என்றால் குழந்தைகளை விட்டு பிரிய மாட்டார். கடைக்கு, நண்பர்களை பார்க்க போனாலும் குழந்தைகளை தூக்கிக் கொண்டு போய் விடுவார். நிறையகதைகள் சொல்வார். எல்லாம் மாறிவிட்டது.
இடையில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். ரயிலில் செல்லும் போதும் செல்போனில் விளையாட்டுதான். நிறையமுறை அடுத்த ரயில்நிலையத்தில் போய் இறங்கியிருக்கிறார். வீடு திரும்பியதும் விளையாட ஆரம்பித்தால், கட்டாயப்படுத்தி, தூங்க வைக்க இரவு ஒரு மணிக்கு மேல் ஆகி விடுகிறது. சிலநேரங்களில் நான் தூங்கிய பிறகு, எழுந்து விடியும் வரை விளையாடுகிறார். போதாதற்கு அலுவலகத்திலும் வீடியோ கேம்ஸ் விளையாடி திட்டு வாங்கியுள்ளார். ஆனாலும் அவர் மாறவில்லை. அவருக்கு வேறு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. அந்த போதைகளை விட மோசமான போதை அவரை ஆக்கிரமித்து இருக்கிறது. விளையாட ஆரம்பித்தால் எதைப்பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. என்னவாகுமோ என்று பயமாக உள்ளது. அவரை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் தோழி?
5. என் பையன் நன்றாக படிப்பவன். எப்போதும் முதல் ரேங்க்தான். ஊரடங்கு வந்த பின்னர் எல்லாம் மாறிவிட்டது. ஆன்லைன் வகுப்பு என்றாலே எரிச்சலாகிறான். ஆன்லைன் வகுப்பு நடைபெறும் நேரங்களில், ஆன் செய்து விட்டு தூங்கி விடுகிறான். இல்லாவிட்டால் வேறு வேலைகளில் ஈடுபடுகிறான். புத்தகங்களையும் படிப்பதில்லை. டிவி பார்ப்பதிலும், நண்பர்களுடன் வெளியில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதிலும்தான் ஆர்வம் காட்டுகிறான். பள்ளியில் வைத்த தேர்வுகளில் ஒன்றில் கூட தேர்ச்சி பெறவில்லை. அடுத்த ஆண்டு 12ம்வகுப்பு பொதுத் தேர்வு. அதனால்அவன் எதிர்காலத்தை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. என்ன செய்வது என்று புரியவில்லை.
6.கொரோனா, ஊரடங்கு பிரச்னை ஆரம்பித்த பிறகு எல்லோரும் வீட்டில் ஜாலியாக ஓய்வில் இருக்கிறார்கள். என் நிலைமை அப்படியில்லை. கணவருக்கு வீட்டில் இருந்து வேலை. மகன்களுக்கு ஆன்லைன் கல்வி, மாமனார், மாமியார் அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள். வீட்டில் சமையல் நான் தான் என்றாலும் இவர்கள் வேலை மற்றும் கல்லூரிக்கு சென்ற பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இப்போது நாள் முழுவதும் சமையல் வேலை. மூன்று வேளை சமைப்பது போக இடையிடையே ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி காபி, டீ, ஸ்னாக்ஸ் செய்யணும்.
மாமனார், மாமியாரை தவிர எல்லோரும் செல்போன், கம்ப்யூட்டர்களை வைத்துக் கொண்டு இரவு 12 மணிவரை விழித்திருந்து, மறுநாள் காலை தாமதமாகத்தான் எழுவார்கள். நினைத்த நேரத்தில் குளிப்பார்கள். அதற்கு டவல், சோப், ஷாம்பூ கூட நான் தான் எடுத்து வைக்கணும். இதை சொல்லி புலம்பியதால், மூன்று வேளையும் அப்பா, மகன்கள் ஆன்லைனில் சாப்பாடு மற்றும் ஸ்னாக்ஸ் வாங்க ஆரம்பித்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இதுதான் நிலை. விளைவு வயிற்று உபாதை. இவர்களின் செயலால் ஏதாவது பிரச்னை வருமா? தடுக்க முடியுமா தோழி...இப்படிக்கு பெயர் வெளியிட விரும்பாத தோழிகள் நட்புடன் தோழிகளுக்கு, நீங்கள் எழுதியுள்ள பிரச்னைகள் உங்களுக்கு மட்டுமல்ல, சமூக பிரச்னைகளாகி விட்டன. கொரோனாவுக்கு பிறகு செல்போன், கம்ப்யூட்டர், டிவி என எல்லோரும் மின்னணு சாதனங்களையே நம்பி உள்ளனர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய சூழலில் வேலை செய்ய மட்டுமின்றி, வேண்டிய பொருட்களை வாங்கவும் அவற்றைதான் நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அந்த பயன்பாடுகளுடன் நின்றால் பரவாயில்லை. பொழுது போகவில்லை, விளையாடி பார்ப்போம், கொஞ்சநேரம் படம் பார்ப்போம், பாடல் கேட்போம் என்று ஆரம்பித்து அதற்கு முற்றிலும் அடிமையாகி வருகிறார்கள்.
பெண்களுக்கு பொதுவாக வீட்டில் வேலை அதிகமாக இருக்கும். இப்போது வீட்டில் அலுவலக வேலையையும் செய்து கொண்டு, சமையல், குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை பார்த்துக் கொள்வது என்பது உண்மையில் மிகவும் கடினமான விஷயம். கொஞ்சம்கூட ஓய்வின்றி உழைத்துக் கொண்டு இருப்பது கட்டாயம் உடல் நலத்தை மட்டுமல்ல, மனநலத்தையும் பாதிக்கும். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பும் அதிகம். குடும்பம், பொருளாதாரம் என தவிர்க்கமுடியாத பல காரணங்கள் உள்ளன. முதல்நாளே, அடுத்தநாள் வேலைகளை திட்டமிட்டால், உங்க சுமை கொஞ்சம் குறையும். காலை எழுந்தவுடன் மூச்சுப்பயிற்சி, தியானம் செய்ய சில நிமிடங்கள் ஒதுக்குங்கள்.
பகலில் குறைந்தது ஒன்றிரண்டு தடவையாவது, தனியறையில் பத்து நிமிடங்கள் இதமான இசையில் பாடல்களை கேளுங்கள். நீங்கள் சூப்பர் அம்மாவாக எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சரியாக செய்ய முடியாத, முடிக்க முடியாத வேலைகளை இழத்து போட்டுக் கொள்ளாதீர்கள். யாரிடமும் கோபப்படாதீர்கள். உங்க கணவரை வீட்டு வேலை, குழந்தைகளை கவனிப்பதில் உதவச் சொல்லலாம். குழந்தைகளையும் அவர்களால் முடிந்த வேலைகளை செய்யச் சொல்லுங்கள். இந்த பிரச்னைகள் தற்காலிகமானவை. எல்லாம் சரியாகும். கவலைப்படுவதை விடுத்து, புன்சிரிப்புடன் கடந்து செல்லுங்கள் தோழி.
இரண்டாவது கடிதம் எழுதியிருக்கும் தோழிக்கு இருக்கும் பிரச்னைகள் இன்று பல பெற்றோர்கள் சந்திப்பது. நாம் இப்போது புதிய உலகில் இருக்கிறோம். வீட்டுக்குள் அடங்கியிருந்த அனுபவம் நாம் கண்டதில்லை. குழந்தைகளால் ஓடியாடி விளையாட முடியாத சூழல் காரணமாக மின்னணு சாதனங்களில் மூழ்குகிறார்கள். தவிர்க்க நினைத்தாலும் ‘ஆன்லைன்’ வகுப்புகள் மூலமாக அவை குழந்தைகளிடம் சேர்ந்து விடுகிறது.
அவர்களை குறை சொல்ல முடியாது. அவர்களுடன் இணக்கமாக பேசுங்கள். செல்போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை பயன்படுத்துவதால் என்னென்ன உடல்நல, மனநலகேடுகள் வருகின்றன என்பதை விளக்குங்கள். அவர்களை வேறு விஷயங்களில் ஈடுபடுத்துங்கள். வீட்டுக்குள்ளேயே விளையாடும் கேரம், செஸ் விளையாட்டை பழகுங்கள். வயதிற்கு ஏற்ப தையல், சமையல் என புதிய விஷயங்களை ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள். அவர்கள் செய்யும் போது பாராட்டுங்கள். முக்கியமாக புத்தகங்களை படிக்கும் பழக்கங்களை ஏற்படுத்துங்கள்.
அவற்றின் மூலம் புதிய உலகத்தை அவர்கள் காண்பார்கள். ‘செல்போனை தொடாதே’ என்று விரட்டிக் கொண்டே இருக்காதீர்கள். அதேசமயம் வீட்டில் உள்ள பெரியவர்களும் செல்போன், கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவிடுவதை தவிருங்கள். எல்லாரும் யோகா, தியானம் செய்யுங்கள். இவை உங்கள் பிள்ளைகளை இயல்பாக மாற்றும் தோழி.
ஊரடங்கால் பெரியவர்களை விட சிறியவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இளமைக்கான இயல்புகளை வெளிப்படுத்த முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிகிடப்பது கொடுமையானது. அந்த நிலையை கையாள கஷ்டப்படுகின்றனர். விளைவு செல்போனுக்கு அடிமையாகியுள்ளனர். இந்த புதிய அனுபவம், வாழ்க்கையை எப்படி சமநிலைப்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கிறோம். இரண்டாவது கடிதம் எழுதிய தோழிக்கு சொன்னது தான் உங்களுக்கும் பொருந்தும். உங்க பெரிய மகள் கல்லூரியில் படிக்கிறார் என்பதால் அவரிடம் பேசி இதனால் ஏற்படும் பாதிப்பினை புரிய வையுங்கள். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த அனுமதியுங்கள்.
அவர்கள் அடம் பிடித்தால் மென்மையாக கையாளுங்கள். ஆனால் முடிவில் உறுதியாக இருங்கள். அதற்கு முன் கணவருடன் பேசி, வேறு என்ன மாற்றம் ெசய்யலாம்னு யோசியுங்கள். அப்படியும் சரி செய்ய முடியவில்லை என்றால், மனநல மருத்துவரை அணுகுங்கள்.
இந்த ஊரடங்கு ஏராளமானவர்களை ‘வீடியோ கேம்’ வலையில் சிக்க வைத்துள்ளது. அதில் ஒருவர்தான் உங்கள் கணவர். ஆரம்பத்தில் ஏற்படும் ஆர்வம், அதிகமாகி போதையாகி விடுகிறது. உங்கள் கணவரின் போதையால் அவர் மட்டுமில்லை, உங்க குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. அவருடன் பேசி நிலைமையை புரிய வையுங்கள். அதனால் அலுவலகம் வரை பெயர்கெட்டு போய் இருப்பதை விளக்குங்கள். குழந்தைகள் அவரின் அன்புக்கு ஏங்கிப் போயிருப்பதை சொல்லி செல்போன் பயன்பாட்டை குறையுங்கள். இல்லாவிட்டால், குழந்தைகளை அவரிடம் விட்டுவிட்டு, செல்போனை வாங்கிக் கொள்ளுங்கள். உங்களால் முடியாவிட்டால், மனநலமருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.
அடுத்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதப்போகும் மகனின் தாய் நீங்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தில் எப்போதும் கவனமாக இருக்கணும். குழந்தைகள்அனைவருமே தனித்துவமானவர்கள். ஒவ்வொருவரையும் அதற்கேற்ற முறையில் கையாள வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் ‘ஆன்லைன்’ கல்வி தவிர்க்க முடியாதது. ஆசிரியர்களாலேயே குழந்தைகளை ஆன்லைனில் கட்டுப்படுத்த முடியவில்லை. பலர் வீடியோவை அணைத்து விட்டு வேறு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
அடிப்படையில் உங்கள் பையன் புத்திசாலி என்று தெரிகிறது. அவனிடம் தன்மையாக பேசி, நிலவரத்தை விளக்குங்கள். வரும் கல்வியாண்டு உங்கள் பையனின் எதிர் காலத்தை முடிவு செய்யுமாண்டு. அவனுக்கு ஆன்லைன் கல்வியில் ஆர்வமில்லை. அதனால் அவனுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் (பிரைவேட் டியூஷன்) அளிக்கலாம். இந்த ஊரடங்கு காலத்தில் அது சாத்தியப்படுமா என்று பாருங்கள். வீட்டில் படித்தவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் பாடம் நடத்தலாம். தேர்வுகள் எழுத செய்யலாம். அவனிடம் கெடுபிடிகள் காட்டாதீர்கள். பேசினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
‘ஞாயிறு, பெண்களுக்கு கூடுதல் வேலை நாள்’ என்று சொற்றொடர் உண்டு. ஊரடங்கில் எல்லா நாட்களுக்கும் பொருந்தும். பெண்களுக்கு கூடுதல் வேலைகள் என்பது அவர்களின் வாழ்க்கை நடைமுறையாகிவிட்டது. அவர்களில் ஒருவர் நீங்கள். உங்கள் பிரச்னையை வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள். வெளியே சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை புரிய வையுங்கள். உங்கள் சோர்வை போக்க, சுமையை குறைக்க கணவர், குழந்தைகளிடம் உதவி கேட்பது தவறல்ல. வேலையை பகிர்ந்து கொள்ள மாற்று வழி உண்டா என்றும் யோசியுங்கள். மோதல் வேண்டாம். பேசினால் எல்லாம் சரியாகும்.
தொகுப்பு: ஜெயா பிள்ளை
என்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி
‘என்ன செய்வது தோழி?’ குங்குமம் தோழி, தபால் பெட்டி எண்: 2924 எண்: 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004
வாசகிகள் கவனத்துக்கு,பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...
|