அது என் பேரல்ல என் இமேஜ்! நடிகை ஷகிலா
சோஷியல் மீடியாக்களில் சமீபத்திய டாக் ஆஃப் த டிரெண்ட் நடிகை ஷகிலா. முதல்ல இருந்தே இதுதான் ஷகிலா என பேச ஆரம்பித்தவர், எனக்குன்னு ஒரு முகம் இருக்கு. நடிப்பு என் தொழில் மட்டுமே என்றவரின் பேச்சில் எதார்த்தம் இயல்பாய் வெளிப்பட்டது.
 நான் கவர்ச்சி நடிகை என்றாலும் எனக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. என்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் நான் கவலைப்படவே மாட்டேன். திரைத் துறையை பொறுத்தவரை நான் செக்ஸ் சிம்பல். ஆனால் அது என் பேரல்ல, என் இமேஜ். ஏனென்றால் நடிப்பு என் தொழில். அதுக்காகத்தானே நான் சம்பளம் வாங்குறேன். ஒரு பெண் தன் உடைகளைக் களைந்து பல ஆண்கள் முன்பு கேமராவில் நிற்பது அத்தனை எளிதல்ல. ஆனால் ஏதோ ஒரு தேவை, ஏதோ ஒரு நிர்பந்தம், ஏதோ ஒரு எதிர்பார்ப்பு அவர்களை அந்த இடத்தில் நிறுத்துது இல்லையா என்றவர், இப்படி நான் நடிக்க வந்ததற்காக என்னைக்குமே வருத்தப்பட்டதில்லை என்கிறார் அழுத்தமாய்.
படத்தில் என்னைச் சுற்றி இயக்குநர், கேமரா மேன், லைட் மேன் என எல்லோரும் இருக்க, அது என்னுடைய நடிப்பு மட்டுமே. நாம சீரியசா நடிக்கலாம். சிரிக்க வைக்கலாம். வில்லியா வரலாம். ஆடலாம்.. பாடலாம்.. ஆனால் ஒரு பெண் செக்ஸ் பண்ணி அதுல சந்தோசப்படுவதுபோல் நடிப்பது அத்தனை சுலபமில்ல. அந்த நடிப்பை எல்லோராலும் கொடுத்துடவும் முடியாது. அதுவும் நடிப்பில் திறமைதானே என்றவர், அதை என்னால செய்ய முடிந்தது. அதற்காக ஆண்கள் தோழன் எனச் சொல்லி தோளில் கை போட்டால், கையை முதலில் எடுத்துட்டு என்னிடத்தில் பேசு என முகத்தில் அறைவது மாதிரி பட்டுன்னு சொல்லிடுவேன் என்கிறார்.
நான் ஷூட்டிங் வர்றேன். உன்னை கட்டிப் பிடிக்கிறேன். முத்தம் கொடுக்குறேன். அது என் வேலை. அதுக்குதானே நான் சம்பளம் வாங்குறேன். அது வெறும் நடிப்பு. அதுக்காக நீ என் மீது தவறா கை வச்சா அது எனக்குத் தெரியும். உனக்குத் தொடை இல்லையா. அது மேல உன் கைய வச்சுக்கோ. ஏன் என் தொடை மேல வைக்கிற என சொல்லிடுவேன் என்றவர், என் முன்னாடிக்கூட எந்த ஆணும் அண்ணன், தம்பி வேஷத்தில், எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது. எல்லா பெண்களுக்கும் ஒரு ஆண் தன்னைத் தவறாகத் தொடுகிறான் என்பது, தொடும்போதே தெரியும். குழந்தைக்கு மட்டும்தான் சொல்லத் தெரியாது. சாதாரணமாக ஒரு பெண்ணைத் தொடுவது ஆண்களுக்கு டேக் இட் ஃபார் கிராண்டா என்றவர், உன் வீட்டுப் பெண்ணை இன்னொருத்தன் தொட்டா நீ சும்மா இருப்பியா? என்ற கேள்வியை வைக்கிறார்.
தன் சின்ன வயதில் சிம்மிஸை கனமாக உருட்டி சுருட்டி சேலைக்குள்ள வைத்து சேலை கட்டி விளையாடியதையும், பிறகு பதினான்கு பதினைந்து வயதில் டைட்டா டிரஸ் போட்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்த்ததையும் நினைவுப்படுத்திக் கொண்டவர், டைட்டான குட்டி உடைகளை சினிமாவில் விரும்பியே நான் அணிந்தேன். நான் முதல் படம் பண்ணும்போது செம ஸ்லிம் அண்ட் பிட். நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு தங்கை ரோல் அதில். முதல் படத்தில் எனக்கு கொடுத்த குட்டி டிரஸ் பார்க்க அழகா ஃபிட்டாக இருந்தது என ஒளிவு மறைவற்று அனைத்தையும் ஓப்பனாய் பேசும் நடிகை ஷகிலா, என் நடிப்பு தொடர்பா நீங்க என்னை எந்த மாதிரியான கேள்விகேட்டாலும் அதனால் ஹர்டாகி, அதற்காக எனக்கு கோபம் வராது என்கிறார்.
அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என பெரிய குடும்பம் என்னுடையது. என் அம்மாவுக்கு ஊர் ஆந்திரா. அப்பா தமிழ்நாடு. தெலுங்கு, உருது, ஹிந்தி, தமிழ், மலையாளம், ஆங்கிலம் என அனைத்தும் சரளமாக வந்தாலும், வீட்டில் தெலுங்குதான் பாஷை. குடும்பத்தில் இருந்த கஷ்டத்தை பெற்றோர் பெரிதாக என்னிடம் காட்டிக்கொண்டதில்லை. படிப்பு எனக்கு சரியாக வரலை என்பதே உண்மை. ஆறு ஸ்கூல்வரை மாறி மாறிப் படித்தேன். நான் இறுதியாக பத்தாவது படித்த சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் எப்போதும் ஷூட்டிங் நடந்து கொண்டே இருக்க, நான் சாப்பாட்டுப் பிரியை வேறு. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த வெரைட்டியான சாப்பாடு என்னை ஈர்க்க, சாப்பாட்டுக்காகவே நடிக்கணும்னு நினைத்துக் கொண்டேன் என்கிறார் சிரித்தவாறு.
மை டியர் குட்டிச்சாத்தான் படத்துல குழந்தை நட்சத்திரங்களாக நடித்த சோனியாவும் டிங்குவும் என்னோடு அதே பள்ளியில் படித்தார்கள். ஷூட்டிங் நடிக்க வரும் ஆர்டிஸ்டுகளிடம் இருவருமே இயல்பாகப் போய் உட்கார்ந்து பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பார்த்து எனக்கும் நடிப்பின் மேல் ஆசை துளிர்விட வீட்டில் அப்பாவிடம் கேட்க பயமாக இருந்தது. இந்த நிலையில் நான் பத்தாம் வகுப்பில் பெயிலாக, அப்பா என்னை வீட்டு வாசலில் வைத்தே பிரம்பால் அடித்து துவைத்துவிட்டார். அடின்னா அடி அப்படி ஒரு அடி எனக்கு விழுந்தது. நான் அடிவாங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்த மேக்கப் மேன் உமா சங்கர் என்னை படத்தில் நடிக்கிறியான்னு கேட்டு சினிமாத்துறைக்குள் நுழைத்து விட்டார். இப்படித்தான் சினிமாக் கேரியர் எனக்கு ஸ்டார்ட்டானது.
அந்த வயதில் சினிமா உலகம் பற்றி பெரிதாக எனக்குத் தெரியாது. மேக்கப்ல நிறைய ஆர்வம் இருந்தது அவ்வளவே. மேக்கப் டெஸ்ட் எடுக்காமலே என்னை நடிப்பதற்கு ஓ.கே. பண்ணிட்டாங்க. குடும்ப வறுமை காரணமாக சினிமாவில் நடிக்க அப்பா எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கலை. படிப்புதான் வரலை, நடிக்க ஆசைப்படுறா டிரை பண்ணட்டும்னு விட்டுவிட்டார். ஆனால் படிப்பும் முக்கியம் என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது, நேர்மையாக இருக்கனும் என நல்லவற்றையும் சொல்லிக் கொடுத்தார். உண்மை எப்பவும் கசக்கும் ஆனால் தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் என்பதையும் அடிக்கடி என்னிடத்தில் சொல்லுவார். அப்பா சொல்லி மனதில் பதிந்த பல நல்ல விசயங்கள் இப்பவும் என்னை நியாயமாக நடக்க வைக்கிறதுன்னு நான் நினைக்கிறேன்.
ஓரிரு தமிழ் படங்களில் தலைகாட்டிய நிலையில் மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்பு நிறைய வந்தது. இதுவரை நான் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் கிட்டதட்ட 40க்கும் மேற்பட்ட படங்கள் பாலியல் சார்ந்த படங்கள்தான். எனக்கும் அடுத்தடுத்து லவ் இருந்தாலும் எதையுமே நான் திருமணம் வரை கொண்டு வரலை. காரணம் கல்யாணம் என்கிற அமைப்பின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார்.
நீங்க உண்மையிலே குட் குக்கா என்ற கேள்விக்கு? சாப்பாட்டுக்கு எப்பவுமே நான் எக்ஸ்ட்ரா பிரிபெரன்ஸ் கொடுப்பேன். நமக்கு பிடிச்ச மாதிரி சாப்பிடனும்னா நாமதானே சமைக்கனும் என்றவர், சமையல் எனக்கு நல்லாவே வரும். சமைப்பதில் எனக்கு இன்ட்ரெஸ்ட் உண்டு. சமைக்கும்போது வரும் வாசத்திலே உப்புக் காரத்தை கண்டுபிடித்துவிடுவேன். சுவை பார்க்காமல் சமைக்க என் அம்மாவிடம் கற்றுக் கொண்டேன்.
தொடர்ந்து தன் வளர்ப்பு மகளான மிளா குறித்து பேசியவர், 20 வயதில் மிளாவை ஒரு பையனாகப் பார்த்தேன். 25 வயதில் பெண்ணாகப் பார்க்கிறேன் என்றவர், ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் மட்டும்தான் தங்களுக்கு வேணும் என்றால், இந்த மாதிரிப் பிறக்கும் குழந்தைகள் என்ன செய்வார்கள். எங்கே போவார்கள். பெற்றவர்களே தங்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்ளாமல் துரத்தினால் அவர்கள் எங்குதான் செல்லமுடியும். ஒருவிதத்தில் இவர்களும் மாற்றுத்திறனாளிகள்தானே.
ஆனால் இவர்களின் ஊனம் வெளியே தெரிவதில்லை. கடந்த பல வருடங்களாக நான் என் வாழ்க்கையில் பல்வேறு மாற்றுப் பாலினத்தவர்களோடுதான் பயணிக்கிறேன். மிளாவுக்கு முன்பே தங்கம், ஷில்பா, அர்ச்சனா என பலர் என்னோடு இருந்திருக்கிறார்கள். எல்லாருமே என்னை மம்மி என்றுதான் அழைப்பார்கள். இதில் தங்கம் மற்றும் மிளாவை என் மகள்களாகத் தத்து எடுத்துள்ளேன். கடந்த ஐந்தாண்டுகளாக மிளா என்னுடனே தங்கி இருக்கிறாள். எனக்கு கிருபா என ஒரு அம்மாவும் உண்டு. இன்றைக்கு என் மகள் மிளா ஒரு டிசைனர். வலைத்தள சேனல் ஒன்றில் ஹோஸ்டா இன்டர்வியூ எடுக்குறா. பலருக்கு இன்டர்வியூ கொடுக்குறா. அவளுக்குன்னு நிறைய ஃபாலோவர்ஸ் இருக்காங்க. நானும் அவளுக்கென ஒரு அடையாளத்தைக் கொடுத்திருக்கேன். இல்லைன்னா எல்லோரும் செய்வதைத்தான் அவளும் செய்திருப்பாள். மிளா மட்டுமில்ல இன்னும் பத்து பேர் வந்தாலும் என்னால அவர்களுக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியும் என்கிறார் கர்வத்துடன் நிமிர்ந்து பார்த்து.
பிறருக்கு உதவுறது எனக்கு இயல்பிலே உண்டு. இது மண்ணுக்கு போகிற உடம்பு. இந்த உடம்பால் ஒரு பயனும் இல்லை. என் பேரு எதாவது ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படணும் என்பதற்காகவே, எனக்கு கிடைக்கிற புகழை நான் சேரிட்டிக்கு பயன்படுத்துறேன். அது 1994-95ம் வருடம். யு டி.யில் நான் ஒரு சீரியல் நடித்தேன். அப்ப எனக்கு 2000 சம்பளம் கிடைத்தது. வீட்டில் 1500 என சொல்லிவிட்டு மீதி இருக்கும் ஐநூறு ரூபாயினை சேரிட்டிக்கு கொடுப்பேன். அப்பவே ஆர்பனேஜ் ஒன்றில் வளர்ந்த ஒரு அனாதைக் குழந்தைக்கு செலவு செய்து +2 வரை படிக்க உதவினேன்.
என்னால் நிறைய பேரு நல்லா வாழ்ந்திருக்காங்க. சாப்பிட்டிருக்காங்க.. சந்தோசமாக இருந்துருக்காங்க என்றவர், நான் எப்பவுமே எதையும் எனக்குன்னு எடுத்து வைக்க மாட்டேன். எனக்கென வரும் பரிசுப் பொருட்களையும் செக்யூரிட்டி, டிரைவர்ன்னு அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்புவேன். அவர்களும் என்னைப் பார்த்ததுமே என் மீது அதீத மரியாதையும் அன்பையும் காட்டுவார்கள். நாம அன்பு செலுத்துனாத்தான அந்த அன்பு நமக்கு திரும்பவும் கிடைக்கும்.எப்பவும் மனிதர்களை சம்பாதிங்க என விடைபெற்றார்.
மகேஸ்வரி நாகராஜன்
|