பெரிய மாற்றம் ஏற்படுத்தியதை எண்ணிப் பெருமைப்படுகிறேன்!



‘Humans of Bombay’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் சமூகத்தில் கவனிக்கப்படுவோர் மட்டுமல்லாமல் கவனிக்காமலேயே நாம் கடந்து சென்று கொண்டிருக்கும் பலரின் கதைகள்

பதிவிடப்படுகின்றன. இவை அனைத்தும் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவங்கள் மட்டுமே. இந்த கதைகளில் சோகம், சந்தோஷம், துக்கம், வெறுப்பு,  சிரிப்பு, அழுகை போன்ற அனைத்து உணர்வுகளும் கொட்டிக்கிடக்கின்றன.
இந்த கதைகள் மூலம் நாம் உலகில் உள்ள பலரின் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்மட்டுமல்லாமல், அவர்களுக்கு உதவி செய்யவும் பல கரங்கள் முன்வந்துள்ளன. இந்த பக்கம் ஒருவரின் ஆறுதல் தளமாக ஆரம்பிக்கப்பட்டாலும், அது தற்போது உதவி செய்யக்கூடிய தளமாகவும் மாறி வருகிறது. அதில், ஒரு பெண் தன் வாழ்க்கை அனுபவத்தை அழகாகக் காட்சிப்படுத்தியதை உங்களோடு பகிர்கிறோம்...

“என் பெற்றோருடன் வாழ்ந்த காலகட்டம் என் நினைவில் இல்லை. நான் பிறந்த காலகட்டத்தில், பெண் குழந்தைகளை சுமையாகக் கருதியது இந்த சமூகம். 11 வயதிலேயே எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். அப்போது என் கணவருக்கு வயது 14. திருமணம் நடந்தது எல்லாம் எனக்குப் பெரிதாக நினைவில் இல்லை.

அன்றைய தினம் எனக்குப் பிடித்த தின்பண்டங்கள் நிறைய சாப்பிட்டதுதான் நினைவில் இருக்கிறது. அன்றைய தினத்திலிருந்து என் பெற்றோருக்குப் பதில் அந்த இடத்தை என் கணவர் குடும்பத்தினர் பிடித்துக் கொண்டனர். என்னைப் பள்ளியில் சேர்த்தனர். அதற்கு முன் நான் பள்ளிக்குச் சென்றதில்லை. எனக்கு புது புத்தகங்களையும், பேனா மற்றும் சிலேட் போன்றவற்றை வாங்கி கொடுத்தனர்.

அதை பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன். நானும் என் கணவரும் சேர்ந்தே பள்ளிக்குச் சென்றோம். பள்ளியை விட்டு நாங்கள் திரும்பியதும், என் மாமியார் எங்கள் இருவருக்கும் உணவை ஊட்டி விடுவார். இரவில் தூங்கும் போது மாமனார் எங்களுக்கு கதை சொல்வார். என் பிறந்த வீட்டில் இருந்ததை விட என் கணவர் வீட்டில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தேன். எனது 15வது வயதில் எல்லாமே தலைகீழாக மாறியது. என் மாமனார் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். இந்த இழப்பை என் மாமியாரால் தாங்க முடியவில்லை. குடும்பமே முடங்கிப் போனது.

எங்கள் உலகம் முற்றிலும் மாறிப்போனது. அப்போது நாங்கள் 2 பேருமே குழந்தைகள். திடீரென குடும்பச் சுமை எங்கள் தோள்களில் ஏறியது.  உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வளர்ச்சியடைவதற்காக நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம். முதல் கட்டமாக எங்கள் படிப்பை நிறுத்தினோம். ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் போனது.
என் கணவர் பக்கத்தில் உள்ள பண்னையில் வேலை பார்த்தார்.

விவசாயப் பணியில் அவருக்கு அனுபவம் இல்லை. மாதச் சம்பளம் ரூ.1500 மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் வீட்டின் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டது. மாமியாரின் மருத்துவச் செலவும் அதிகரித்தது. நானும் வேலைக்கு வருகிறேன் என்றேன். மற்ற பழைமைவாத ஆண்களைப் போல் வேண்டாம் என்று சொல்வார் என நினைத்தேன். ஆனால், ‘வா போகலாம்...’ என்றார். இதைக் கேட்டுத் திகைத்துப் போனேன்.

மறுநாள் என் கணவருடன் சேர்ந்து நானும் பண்ணைக்கு வேலைக்குப் போனேன். என் மாமியாரை அக்கம்பக்கத்தினர் பார்த்துக் கொண்டனர். நான் வேலைக்குச் சென்ற பண்ணையில் ஒரு பெண் தொழிலாளர் கூட இல்லை. அங்கு பணியாற்றி கொண்டிருந்த ஆண்கள், நான் ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்து குதித்ததைப் போல் ஆச்சரியமாகப் பார்த்தனர். ‘நாளையிலிருந்து நாமும் காதில் தோடு போட்டுக் கொண்டு வரவேண்டியதுதான்’ என்று என் காதுபட கிண்டல் செய்தனர். அவர்கள் பேச்சு என்னைக் காயப்படுத்தியது. தொடர்ந்து என்னைக் கேலி செய்வதை தாங்காமல், அவர்களுடன் என் கணவர் சண்டைக்குப் போனார். எனினும், எங்கள் முதலாளி நல்ல மனிதர். என்னை தவறாக பேசியவர்களை எல்லாம் வேலையை விட்டு நீக்கினார்.‘இங்கு பணி செய்யும் பெண்ணுக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால், வெளியேறிவிடலாம்’ என்றும் எச்சரித்தார். அப்போதுதான் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

அந்த மாதச் சம்பளமாக இருவருக்கும் ரூ.3 ஆயிரம் கிடைத்தது. அதன்பின் எங்கள் குடும்பம் வளர்ச்சியை நோக்கிச் சென்றது. எங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு யோகிதா என்று பெயர் சூட்டினோம். எங்கள் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் கொண்டாடிய போது, ‘நீ ஒரு நாள் பெரிய அதிகாரியாக வருவாய்...’ என மகளை வாழ்த்தினர்.உண்மையிலேயே, எங்கள் மகளைப் பெரிய அதிகாரியாக்குவதற்காகவே நாங்கள் இருவரும் தினமும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் போல் மகள் படிப்பும் பாதியில் நின்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

நான் பண்ணைக்கு வேலைக்குச் சென்ற போது என்னை பார்த்து கேலி செய்த பெண்களில் 12 பேர், இன்றைக்கு அதே பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்களுடன் சேர்ந்து வேலை பார்க்கும் பெண்கள், அவர்களுக்கு இணையாகச் சம்பாதிக்கிறார்கள். இதன் மூலம் எங்கள் கிராமத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. எனக்குப் படிப்பறிவு இல்லையென்றாலும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதை எண்ணிப் பெருமைப்படுகிறேன்” என்று அந்த பெண் தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அன்னம் அரசு