சிறு தொழில்-சமூக வலைத்தளத்தில் கொட்டிக் கிடக்கும் தொழில் வாய்ப்பு!தொழில்முனைவோரா... அதெல்லாம் நமக்கு சாத்தியப்படாது என்பதே 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது. அதெல்லாம் பொய்த்துப் போய், காலம் உருவாக்கிய தொழில்நுட்ப மாற்றங்களாலும், கல்வி புரட்சியாலும், நாங்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல என புடவையை வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கி தொழில்முனைவர்களாக இன்று சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனது தொழிலில் உச்சத்தை எட்டியுள்ளார் ஜென்ஸ்லின். ‘‘பெண்கள் துணிந்தால் துக்கமில்லை என்ற வெறியுடன் களமிறங்கினால் வெற்றி எனும் இலக்கு எந்த ஒரு பெண்ணுக்கும் துச்சம் தான்’’ என்று தனது வளர்ச்சி குறித்து பேசத் துவங்கினார் ஜென்ஸ்லின்.

‘‘நாகர்கோவில் பொண்ணு நான். படிப்பில் சுட்டி என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பொறியியல் படிப்பை 2009ல் முடித்த கையோடு ஐ.டி நிறுவனத்தில் வேலை. ஆனா சென்னைக்கு போகணும். அப்பா, அம்மா, தங்கையை இதுவரை பிரிஞ்சதில்ல. குறிப்பா அம்மாவோட சமையல். ஒவ்ெவாரு உணவையும் பார்த்து, பார்த்து செய்வாங்க. அவங்க கைப்பக்குவம், 5 ஸ்டார் ஓட்டல்ல கூட கிடைக்காது. அம்மா கிட்ட இருந்து சமையல் டெக்னிக்குகளை சின்ன வயசுலயே நிறைய கத்துக்கிட்டேன்.

வேலை சென்னை என்பதால், 2010ல் சென்னையில் செட்டில் ஆனேன். இங்க வந்து இரண்டு ஆண்டுகளில் திருமணம். எங்களுக்கு 2 பசங்க. ஐ.டி துறை ஸ்ட்ரெஸ்ஸை மீறி 2 பையன்களையும் வளர்ப்பது பெரிய சவாலாக இருந்தது. அதனால வேலையை ராஜினாமா செய்து இல்லத்தரசியாக மாறினேன். என் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துள்ள உணவினை நானே தயாரித்து கொடுத்தேன். அம்மா தவறிட்டாலும், அவங்க கத்துக்கொடுத்த சமையல் கலை தான் எனக்கு அப்போது கை கொடுத்தது. பசங்களுக்கான சத்து மாவை வீட்டிலேயே தயாரித்தேன். என்னுடைய தாத்தா, நாட்டு வைத்தியர்.

சின்ன வயசில் இருந்தே செயற்கை உணவு சாப்பிட்டு பழகியது இல்லை. எல்லாமே பாரம்பரிய உணவுகள் தான். அதையே என்னுடைய குழந்தைகளுக்கும் பழகினேன். பள்ளியில் அவங்க சாப்பாட்டை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். அதைப் பார்த்து அவங்க பள்ளி தலைமை ஆசிரியர், ‘‘உங்க பசங்க சாப்பாட்டை அடம் பிடிக்காமலும், மிச்சமில்லாமலும் சாப்பிடுறாங்க. என்ன அப்படி சமைச்சு தறீங்க''ன்னு கேட்க.. நான் அவர்களுக்கு சத்து மாவில் சமைத்த சாம்பிள் உணவினை கொடுத்தேன்.

மறுநாள் அவங்க, எனக்காக காத்திருந்து, ‘‘இந்த மாதிரி டேஸ்ட் கொடுத்தா எந்த பிள்ளையும் அடம் பிடிக்காது’’ என எல்லோர் முன்னிலையிலும் பாராட்டினாங்க. அது மட்டுமன்றி, என்னிடம் ஒரு பாக்கெட் வேணும்ன்னு வாங்கிக்கொண்டாங்க. அப்போதுதான், நாம் ஏன் இதையும் ஒரு தொழிலா தொடங்கக்கூடாதுன்னு தோணிச்சு. என் கணவரின் சம்மதத்துடன் என் சேமிப்பில் இருந்த ₹2,000 வச்சி தொடங்கினேன்’’ என்றவர் அதன் பின் தன்னுடைய தொழிலை எவ்வாறு விரிவுபடுத்தினார் என்பதை விளக்கினார்.

‘‘நான் சத்துமாவில் உணவு செய்ய போவதைக் கேட்ட என் கணவர், ‘ஆர்கானிக் ஃபுட்ன்னு ெதருக்கு தெரு கடை இருக்கு. உன்னால் சமாளிக்க முடியுமான்னு’ கேட்க. முதலில் பசங்க படிக்கிற பள்ளியில் உள்ள அம்மாக்கள் கேட்டிருக்காங்க. சின்ன அளவுல தொடங்கலாம். அதன் பிறகு பார்க்கலாம்ன்னு சொன்னேன். ‘ஃபார்ம் டு ஹோம் - ஒரு அன்னையின் உத்தரவாதம்’ (Farm 2 Home - A Mom’s Promise) என்ற பெயரில் என்னுடைய தொழில் பிரசவித்தது.

சத்துமாவு தொடங்கி அடுத்ததா ஊட்டசத்து பானங்களில் கவனம் திரும்பியது. குறிப்பா சிறுவர்கள் அதிகம் விரும்பும் ரோஸ் மில்க் என் கவனத்தை ஈர்த்தது. ரோஸ் மில்க்ல ஒரு சொட்டு கையில் தெறித்தாலும் அப்படியே அந்த கலர் தோலில் ஒட்டிக்கும். அந்தளவுக்கு அதுல ரசாயனம் சேர்க்கிறாங்க. பன்னீர் ரோஜாவின் இதழ்களை நிழலில் உலர்த்தி, பதப்படுத்தி பின்னர் பொடியாக்கி அதனுடன் பீட்ரூட் சாறு சேர்த்து, ரோஸ்பீட் சிரப்பினை அறிமுகம் செய்தேன். முதலில் இந்த காம்பினேஷன் சரியா வரல. ஆனால் நான் மனம் தளரவில்லை. இரண்டு மாதம் கிட்டத்தட்ட 22 முறை அதையே தயாரித்து, 23வது முறையாக நூறு சதவீத வெற்றி அடைந்தேன்.

இப்படித்தான் என்னுடைய ஒவ்வொரு உணவும் பல ஆய்வுகள் மற்றும் டிரயலில் முழு உருவம் பெற்றது. என்னைப் பொறுத்தவரை வியாபாரம் முக்கியம் அதே சமயம் நான் தயாரிக்கும் ஒவ்வொரு பொருட்களில் உள்ள சத்துக்கள் குறையாமல் அப்படியே கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். அது தான் என்னுடைய வெற்றிக்கு காரணம்’’ என்றவர் நியூட்ரீஷியன் மற்றும் ஃபுட் அலர்ஜி தொடர்பான சான்று படிப்புகளை படித்துள்ளார்.

‘‘தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட அம்மாவின் சமையல் கலை காரணமாக இருந்தாலும், வியாபார ரீதியில நான் சக்சஸ் செய்ய என் பசங்க

பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்ெறாரு காரணம். அவங்க போட்ட ஒரு விதை தான் இன்று ஆலமரமா கிளை விட்டிருக்கு. பிறந்த குழந்தை தொடங்கி வயதானவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் என பலருக்கான பிரத்யேக உணவுகள், தேக ஆரோக்கிய பராமரிப்பு பொருட்கள், மூலிகை பொடிகள்,

ஆரோக்கியமான காலை உணவுகள், ஸ்னாக்ஸ், இயற்கை முறையில் தயாரான தேன், சுத்தமான நெய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள். ஆரோக்கிய பானங்கள், மசாலா பொடிகள் என 235 வகை பொருட்கள் தயாரிக்கிறேன். ரசாயனமோ அல்லது சுவையூட்டிகளோ கலக்காமல் முழுக்கமுழுக்க இயற்கை முறையில் தயாரிக்கிறேன். புதிதாக தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்வதால், சத்து, தரம் மற்றும் சுவைக்கு 100% உத்தரவாதம். இந்த தாரக மந்திரங்களே 25,000க்கும் அதிக கஸ்டமர்களை ஈட்டித் தந்துள்ளது.

என்னுடைய வீட்டிலேயே தயாரிப்பதால், எனக்கு உதவியாக ஆறு பெண்களை நியமித்து இருக்கேன். மேலும் இயற்கை காய்கறிகளும், பருப்பு வகைகளும் நாகர்
கோயில் சுற்றுவட்டாரத்தில் தரமானவையாக கிடைப்பதால் அங்கும் ஆறு பெண்களை பணிக்கு அமர்த்தி உள்ளேன். ஊட்டியில் இருந்து ஃப்ரெஷ்ஷான காய்கறிகளை  வரவழைக்கிறேன்.

எனது தயாரிப்புகள் அனைத்தும் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் சான்று பெற்று விற்கப்படுகிறது. ஆண்டு வருவாய் இப்போது ஒரு கோடியை தாண்டி இருந்தும், எனது பொருட்களை இதுவரை வணிக சந்தையில் அறிமுகம் செய்யவில்லை என்பது தான் ஹைலைட். வாட்ஸ்அப் குரூப், ஃபேஸ்புக் பேஜ் என சமூக வலைத்தளங்களிலேயே எனது வியாபாரம் கோலோச்சி உள்ளது.

எந்த ஒரு நோய்க்குமே உணவு தான் மருந்து. வாட்ஸப் குரூப்பில் ஒரு தாய், தனது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும். கீமோதெரபி சிகிச்சை காரணமாக எந்த உணவையும் எடுத்துக் கொள்வதில்லை என்று என்னை அணுகினார். சிறுவனுக்கு வழங்க வேண்டிய உணவுகள் குறித்து விவரம் அறிந்து, அதற்கு ஈடான இயற்கை உணவை அனுப்பி வைத்தேன்.

மகன் நல்ல முன்னேற்றம் காண்பதாக கண்ணீர் மல்க அந்த அன்னையிடம் இருந்து செய்தி வந்ததை பார்த்து நான் ரொம்பவே நெகிழ்ந்து போனேன்’’ என்றவர் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், ஐயர்லாந்து, அரபு நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறார். ‘‘முயற்சித் திருவினையாக்கும்... விடாமுயற்சியும், தொழில் பற்றும் ஒவ்வொரு பெண் தொழில் முனைவோரும் கடைப்பிடித்தால் கண்டிப்பாக அவர்களும் பல சாதனைகளை புரியலாம்’’ என்று முடித்துக் கொண்டார் ஜென்ஸ்லின்.

இந்திராணி